அகழ்வாராய்ச்சி அடிப்படையில் தமிழகத்தின் வரலாற்றுக் காலம் எப்பொழுது தொடங்குகிறது? – பகுதி- 2
தேமொழிNov 26, 2022
சிவகளை அகழாய்வு (கி.மு. 1155):
சிவகளை, தூத்துக்குடி மாவட்டம் —
சிவகளை பொருநை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. ஆதிச்சநல்லூருக்கும் சிவகளைக்கும் இடையேயான தொலைவு 13 கி.மீ. சிவகளை பகுதி ஈமக்காடு 500 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு வெள்ளை வண்ணம் தீட்டப்பட்ட கருப்பு-சிவப்பு நிற கிண்ணம், முதுமக்கள் தாழிகள், உயர் ரக வெண்கலப் பாத்திரங்கள் (High tin bronze), இரும்பு உளி, ஈமத்தாழிக்குள் நெல்மணிகள் ஆகியன கிடைக்கப்பெற்றன.
ஈமத்தாழிக்குள் கிடைத்த நெல்மணிகளை அறிவியல் முறைப்படி கரிமக் காலக் கணிப்பு செய்ததில், நெல்மணிகளின் காலம் கி.மு. 1155 என்று அறியப்பட்டுள்ளது. சிவகளை காலக்கணிப்பின் அடிப்படையில் ஆதிச்சநல்லூருக்கும் முற்பட்டதாக இருப்பதை அறிய முடிகிறது.
கொற்கை அகழாய்வு (கி.மு. 785):
கொற்கை, தூத்துக்குடி மாவட்டம் —
கொற்கை இடைச் சங்க காலத்தில் பாண்டியர்களின் தலைநகரமாகவும் துறைமுகமாகவும் விளங்கியது. வெண்டேர்ச் செழியன் முதலாக, முடத்திருமாறன் ஈறாக, 79 பாண்டியர்கள் ஆட்சி கொற்கையில் நடைபெற்றுள்ளது. கொற்கை கோமான், கொற்கைக் கோன், கொற்கை பொருநன், கொற்கை வேந்தன் போன்ற பெயர்களின் மூலம் கொற்கையின் வரலாற்றுச் சிறப்பை அறிய முடிகிறது. தாலமி, பிளினி, மெகஸ்தனிஸ் போன்ற அயல் நாட்டவர்கள் எழுதிய குறிப்புகளில் ‘கொல்சிஸ்’, ‘கொல்காய்’ என்று கொற்கையைக் குறிப்பிட்டுள்ளனர்.
கி.மு. 5-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய வழுவழுப்பான வடக்கத்திய கருப்புநிற மட்கல ஓடுகள்(Northern Black Polished ware), மற்றும் கருப்பு பூச்சுப்பெற்ற மட்கல ஓடுகள் (Black slipped Ware), வட இந்தியக் கருப்புப் பூச்சுப் பெற்ற பானை ஓடு, 9 அடுக்கு கொண்ட துளையிடப்பட்ட குழாய்கள், சங்கு வளையல்கள், வளையல் செய்ய அறுக்கப்பட்ட சங்குகள், அவற்றின் சில்லுகள் ஆகியன கொற்கை அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கி.மு. 6-ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே தென்னிந்தியா இந்தியாவின் பல்வேறு பகுதிகளுடன் வணிகம் மூலம் நன்கு இணைக்கப்பட்டிருந்தது என்பதை இச்சான்றுகள் தெளிவாகக்காட்டுகின்றன. கரிமப் பகுப்பாய்வு மூலம் கொற்கை கி.மு. 785 என்று காலக்கணக்கீடு பெறப்பட்டுள்ளது.
கொற்கை – ஆழ்கடல் ஆய்வு: தற்பொழுது கொற்கை கடலிலிருந்து உட்புறம் சுமார் 7 கிமீ தொலைவில் இருப்பதால், சங்க காலப் பாண்டியர்களின் கொற்கை துறைமுகத்தை அடையாளம் காண இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (IMU) மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) ஆகியவற்றுடன் இணைந்து முதற்கட்ட முன்கள ஆய்வு 02.09.2021 முதல் 09.02.2022 வரை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
2,500 ஆண்டுகள் பழமையான அழகன்குளம் நாகரிகம்
அழகன்குளம் அகழாய்வு (கி.மு. 465):
அழகன்குளம், இராமநாதபுரம் மாவட்டம் —
சங்க கால பாண்டியர்களின் துறைமுகங்களில் அழகன்குளம் துறைமுகமும் ஒன்று. வைகை ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அழகன்குளம் அமைந்துள்ளது. இங்கு நடந்த அகழாய்வில் கிடைக்கப்பெற்ற ரோம் நாட்டுக் காசுகள், ரோம் நாட்டு அம்ஃபோரா மதுசாடிகள் (amphorae), ரோம் நாட்டுப் பானை ஓடுகள், ரோம் நாட்டு மட்பாண்டங்கள், வெள்ளி முத்திரைக் காசுகள் ரோம் நாட்டுடன் அழகன்குளம் கொண்டிருந்த வணிகத் தொடர்புக்கான சான்றுகளாக அமைகின்றன. மேலும், அழகன்குளத்தில் இருந்த தொன்மக் கால சங்கு வளையல் தொழிற்கூடம், கல்மணிகள், கங்கைச் சமவெளி பானை ஓடுகள் போன்ற சான்றுகள் இந்தியாவின் பிற பகுதிகளுடனும் இருந்த வணிகத் தொடர்புக்குச் சான்றாக அமைகின்றன.
2,500 ஆண்டுகள் பழமையான கொடுமணல் நாகரிகம்
கொடுமணல் அகழாய்வு:
கொடுமணல், ஈரோடு மாவட்டம் —
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் நொய்யல் ஆற்றின் வடகரையில் கொடுமணல் அமைந்துள்ளது. சங்ககாலத்தில் கொடுமணம் என்று அழைக்கப்பட்ட இவ்வூர் இன்று கொடுமணல் என வழங்கி வருகிறது. “கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம் பந்தர் பயந்த பலர் புகழ் முத்தம்” (பதிற்றுப்பத்து, 74:5-6) என்னும் சங்க இலக்கியக் குறிப்புகளிலிருந்து இப்பகுதி சங்ககாலத்தில் பல்வேறு வெளிநாட்டினர் வந்து சென்ற சிறப்புப் பெற்ற பன்னாட்டு வணிகத் தலமாக கொடுமணல் இருந்துள்ளதை அறிய முடிகிறது. கொடுமணல் இரும்புக் காலம் (Iron Age), வரலாற்றுக் காலத்தின் தொடக்கக் காலம் (Early Historic period), சங்ககாலம் (Sangam Age) என வழங்கப்படும் காலகட்டங்களில் மக்கள் வாழ்ந்த பகுதியாகும்.
கொடுமணலின் தொல்லியல் சிறப்பு அதன் தமிழி எழுத்துப் பொறிப்புக் கொண்ட பானை ஓடுகளும், அரியவகை வகை மணிகளும் ஆகும். இதுகாறும் தமிழ்நாட்டில் மேற்கொண்ட அகழாய்வுகளில் கிடைக்கப்பெற்ற தமிழி எழுத்துப்பொறிப்புக் கொண்ட பானை ஓடுகள் மொத்தம் 1532.இவற்றில் கொடுமணலில் மட்டுமே கிடைக்கப்பெற்ற தமிழி எழுத்துப்பொறிப்புக் கொண்ட பானை ஓடுகளின் எண்ணிக்கை 1146 என்பது கொடுமணல் அகழாய்வின் முக்கியத்துவத்தை உணர்த்தும். கொடுமணலில் கற்பதுக்கைகளும் கண்டறியப்பட்டுள்ளன.
தமிழியில் “ஆதன்” என்று பொறிக்கப்பட்ட பானையோடு, தமிழி எழுத்துக்களில் “ள் அகுர (வன்)” என்று பொறிக்கப்பட்ட பானையோடு ஆகியன இங்குக் கண்டெடுக்கப்பட்டது.மேலும் பண்டைய நாட்களில் கொடுமணல் தொழிற்கூடங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது என்பதற்குச் சான்றுகளாக இரும்பு உலை தொழிற்கூடம், மணிகள் தொழிற்கூடம் இருந்த தடயங்களும் கிடைத்துள்ளன.
பலவகை பளிங்குக் கற்கள் மணிகள் இங்குக் கிடைத்துள்ளன. அத்துடன் இங்குக் கிடைத்த கார்னீலியன்(சூதுபவளம்), அகேட் வகை கல் மணிகள் (மூலக்கற்கள்) மராட்டியம், குஜராத் பகுதிகளில் கிடைப்பவை. இவை கொடுமணல் பகுதிக்கு மூலப் பொருட்களாகக் கொண்டுவரப்பட்டு பட்டை தீட்டப்பட்டு, மெருகேற்றப்பட்டு, துளையிடப்பட்டு அணிகலன்கள் செய்யும் மணிகளாக மாற்றும் தொழில் கொடுமணலின் மணிகள் தொழிற்கூடத்தில் நடைபெற்று இந்தமையைக் கிடைக்கப் பெற்ற மணிகளின் மூலம் அறிய முடிகிறது. இது பழங்கால வணிக நடவடிக்கைகளுக்குச் சான்றாகவும் அமைகிறது. இவ்வாறு மணிகள் தயாரிக்கும் தொழில் இன்றுவரை இப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுவருவதும் தொன்மையைப் பறைசாற்றும் சிறப்பு.
2600 ஆண்டுகள் பழமையான வைகை ஆற்றங்கரை நாகரிகம்
கீழடி அகழாய்வு(கி.மு. 580):
கீழடி, சிவகங்கை மாவட்டம் —
அகழாய்வு குறித்துக் கூறினால் அதைக் கீழடி அகழாய்வுடன் இணைத்துக் குறிப்பிடும் அளவிற்கு இன்றைய நாட்களில் கீழடி அகழாய்வு குறித்த தகவல்கள் பரவலாக மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது. அதற்குக் காரணம் தமிழர் நாகரிகத்தின் தொன்மை குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கொண்டிருந்த கருத்துகளை மீள்பார்வை செய்ய வைத்தது கீழடி அகழாய்வு வெளிக்கொணர்ந்த கண்டுபிடிப்புகள்.
கீழடி அகழாய்வு முடிவுகளுக்கு முன்னர் இந்திய வரலாற்று ஆசிரியர்களின் கருதுகோள்களாக இருந்தவை:
தென்னிந்தியாவில் நகர நாகரிகம் இருந்ததில்லை, சிந்துவெளிக்குப் பிறகு இரண்டாவது நகர நாகரிகம் கங்கைச் சமவெளியில் தான் தோன்றியது. தமிழகத்திற்கு எழுத்தறிவு வட இந்தியாவில் இருந்துதான் வந்தது. சங்ககால தமிழகத்தில் கிராமப்புறப் பொருளாதாரம் நிலவவில்லை, சங்ககால தமிழகத்தில் அரசுருவாக்கம் கிடையாது என்பது போன்ற பல கருதுகோள்கள். இக்கருதுகோள்களை முறியடிக்க அறிவியல் வழியில் கீழடி அகழாய்வுச் சான்றுகள் உதவின. மேலும், சங்க இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் உண்மையே, அவை அக்காலப் புலவர்களின் கற்பனை அல்ல என்று மெய்ப்பிக்கும் வகையில் பல செய்யுள்களின் வரிகளை அகழாய்வுச் சான்றுகளுடன் பொருத்திப் பார்க்கும் வண்ணமும் கீழடியின் தொல்லியல் சான்றுகள் உதவின.
கரிமப் பகுப்பாய்வின் மூலம் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகரிகம் என்று உறுதி செய்யப்படும் கீழடி நாகரிகத்தின் மக்கள் கட்டுமான அமைப்புகள் மற்றும் தொழில் நுட்பத்தில் கொண்ட முதிர்ச்சி பெற்ற நாகரிகமாகவும், எளிய மக்களும் எழுத்தறிவு பெற்ற சமூகமாகவும், கைவினைத் தொழில்களில் சிறந்த தொழில்நுட்பம் அறிந்தவர்களாகவும், பொருளாதாரத்தில் வளமையான சமூகத்தினராகவும், திறமையை வளர்த்துக்கொள்ளும் வகையில் விளையாட்டுகள் பொழுது போக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களாகவும், உள்நாடு மற்றும் வெளிநாட்டு வணிகர்களுடன் வணிகத் தொடர்பு கொண்டவர்களாகவும் இருந்ததற்குச் சான்றுகள் பல கிடைத்துள்ளன.
கரிம பகுப்பாய்வு (AMS Dating) முறைப்படி கீழடி கி.மு. 580 ஆண்டுக் கால பழமையானது என்று அறியப்பட்டுள்ளது. செங்கல் கட்டுமானங்கள் கீழடியின் தனிச்சிறப்பு. கட்டிடங்கள், சுடுமண் குழாய், கழிவுநீர் தொகுதிகள், உறை கிணறுகள், செங்கற்சுவர்கள், மண்பாண்டங்கள், தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், குறியீடுகள் கொண்ட மட்பாண்ட ஓடுகள், சிந்துவெளி எழுத்துக்களை ஒத்திருக்கும் குறியீடுகள் வரிவடிவங்கள் சில கொண்ட பானை ஓடுகள், தங்கத்தில் செய்யப்பட்ட அணிகலன்கள், இரும்பாலான அம்பு முனைகள், எழுத்தாணி, சுடுமண் முத்திரை கட்டைகள், தந்தத்தால் ஆன தாயக் கட்டைகள், சுடுமண் உருவ பொம்மைகள் உட்பட்ட பல்வேறு அரிய தொல்பொருட்கள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.
கீழடி கட்டுமானங்கள் காட்டும் கட்டடத் தொழில்நுட்பம், “செம்பு இயன்றன்ன நெடுஞ்சுவர்” (மதுரைக் காஞ்சி – 455), “நூல் அறி புலவர் நுண்ணிதின கயிறு” (நெடுநல்வாடை- 74) போன்ற அரண்மனையை உருவாக்கிய முறையைக் கூறும் பாடல் வரிகளுக்கு ஒப்ப அமைந்துள்ளன.
எலும்பினாலான கூர்முனைப் பகுதிகள் (Bone Points), தக்களிகள் (Spindle Whorls) போன்ற நெசவுத் தொழில் கருவிகளும்:
மட்பாண்டங்கள், குடுவைகள், கிண்ணங்கள், பானைகள், அரவைக் கல், காட்டுப்பன்றியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள சூதுபவளம் மணி (கார்னீலியன்), கண்ணாடி மணிகள், போன்றவை பண்டைய மக்களின் கைவினைத் தொழில்களுக்குச் சான்றாகவும் கிடைத்துள்ளன.
வேளாண் சமூகம் மற்றும் கால்நடை வளர்ப்பு அவர்களின் வாழ்வியல் பகுதியாக இருந்ததைக் காட்டும் வகையில் சிந்துவெளிப் பண்பாட்டை ஒத்திருந்த திமிலுள்ள காளை, பசு, எருமை, ஆடு ஆகியவை வேளாண்மைக்கு உறுதுணை செய்யும் வகையில் கால்நடைகளாக வளர்க்கப்பட்ட சான்றுகளும் கிடைத்துள்ளன.
வளமையை வெளிப்படுத்தும் தங்க அணிகலன்கள், சுடுமண்ணைக் கொண்டு வட்டவடிவில் தட்டையாகக் காது துளையில் பொருத்தும் காதணிகள் பண்டைய மக்களின் வாழ்க்கை முறையில் இருந்ததையும்,
திறமையை வளர்த்துக்கொள்ளும் வகையில் பகடைக்காய் விளையாட்டுகள், வட்டச் சில்லுகள், ஆட்டக் காய்கள் விளையாட்டு மற்றும் பொழுது போக்குகள் இருந்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.
கங்கைச் சமவெளி சார்ந்த கி.மு.5-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய வெள்ளி முத்திரை நாணயம், பல்வேறு அளவுகளில் கற்களால் ஆன எடைக்கற்கள், ஆமை உருவம் பொறிக்கப்பட்ட சுடுமண் முத்திரைகள், ரோம் நாட்டு ரௌலட்டட் மட்கலன், இந்தியாவின் பிற பகுதிகளில் கிடைக்கக் கூடிய அகேட் மற்றும் கார்னீலியன் மணிகள் உள்நாட்டு அயல்நாட்டு வணிகத் தொடர்புகளுக்கான சான்றுகளாகக் கிடைத்துள்ளன.
கீழடி பகுதிக்கு அண்மையில் அகழாய்வு நடத்தப்படும் கொந்தகையில் ஈமத்தாழிகள், படையல் பொருட்கள் (பெரும்படை) ஆகியன கிடைத்துள்ளன.
அகழாய்வு சான்றுகளின் காலக்கணிப்பின் அடிப்படையில் மக்கள் வாழ்ந்த காலத்தையும், நாகரிகத்தையும் காலக்கோட்டில் அறிந்து கொள்வதே வரலாற்றை அறிவதன் தொடக்கப் புள்ளி. காலத்தில் பின்னோக்கி வரலாற்றை அறிவதன் மூலம் நாம் எங்கிருந்து இந்த நிலையை எட்டியுள்ளோம் என்று புரிந்து கொண்டாலே நம் எதிர்கால முன்னேற்றம் குறித்துத் தெளிவாகச் சிந்திக்க இயலும்.
நன்றி: தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை நவம்பர் 15, 2022 அன்று ஏற்பாடு செய்திருந்த டாக்டர் பழனி ஜி பெரியசாமி அறக்கட்டளை உரையில், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் “பின்நகரும் தமிழக தொல்லியல் ஆய்வுகளை முன்வைத்து” என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் குறிப்பிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
தேமொழி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “அகழ்வாராய்ச்சி அடிப்படையில் தமிழகத்தின் வரலாற்றுக் காலம் எப்பொழுது தொடங்குகிறது? – பகுதி- 2”