நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

அகிம்சையின் வெற்றி

முனைவர் மு.பழனியப்பன்

Apr 11, 2020

 siragu agimsai1

அண்ணல் காந்தியடிகளின் மிக முக்கியமான வாழ்வியல் கோட்பாடு அகிம்சையாகும். இதனை உணர்த்த, இதன் வலிமையை உணர்த்த அவர் பல பக்கங்கள் எழுதியுள்ளார், பேசியுள்ளார், அனுபவித்துள்ளார். அகிம்சை  வெற்றிக்கான வழி என்கிறார் காந்தியடிகள். அந்த வெற்றிக்கான வழியைப் பெற பெற சில நிபந்தனைகளையும் அவர் முன்வைக்கிறார். அகிம்சையே மானிட வர்க்கத்தின் நியதி. அகிம்சையே மிருக பலத்தைக் காட்டிலும் கணக்கிலடங்காச் சிறப்பும் உன்னதமும் வாய்ந்தது.

அகிம்சை ஒருவரின் தன்மான உணர்விற்கும், சுயமரியாதைக்கும் பாதுகாப்பு தருவது. சொத்துகளை, செல்வங்களை ஆட்கள் வைத்துப் பாதுகாப்பதை விட அகிம்சையைப் பின்பற்றினால் அதுவே மிகப் பெரிய பாதுகாப்பாக இருக்கும். தவறான வழிகளில் சேர்த்த பொருள்களுக்கும், ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளுக்கும் ஒருபோதும் அகிம்சை துணை நிற்காது. ஒரு நாட்டைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தன்மைக்கு எதிரானது அகிம்சை.

அன்புடைய எவரும் அகிம்சை வழி நிற்கலாம். அதற்கு இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என்ற பாகுபாடு கிடையாது. அன்பிற்கு என்ன வேறுபாடுகள்.

      “ வாழ்க்கைச் செயல்கள் முழுவதும் அகிம்சையில் அமையவேண்டும்.

      இது தனிநபர் நியதி அதே நேரத்தில் திரளான மக்களுக்கும் உரியது.“

என்று அகிம்சைக்கான சில நிபந்தனைகளை அவர் முன்வைக்கிறார். இந்த நிபந்தனைகளைக் கடைபிடிக்கும் நிலையில் அகிம்சை வெற்றி பெறும். உலகம் நன்மைபெறும்.

அகிம்சையைக் கடைபிடிப்பவர்கள் உலகின் பலசாலிகள் ஆவர். அகிம்சை ஒப்பற்ற ஆற்றல் மிக்க அன்பு ஆயுதம். வாழ்க்கையின் இலக்கு. அஞ்சா நெஞ்சனின் இயற்பண்பு. இது உணர்வு மிக்க கோட்பாடு. வளமையான கோட்பாடு. உலக உயிர்களை வாழ்விக்கிற சக்தி. அகிம்சை தலையாய தர்மம். வன்முறைக்கு எதிரானது அகிம்சை. வன்முறை அதாவது ஒருவரைத் தாக்குதல் என்பதற்குப் பயிற்சிகள் தரப்பெறுகின்றன. அதே முறையில் அகிம்சை முறையில் வாழ்வதற்கும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். வன்முறைக்கான பயிற்சிகளைக் காட்டிலும் அகிம்சையைக் கைக்கொள்ள மிகவும் கடினமான பயிற்சிகள் தேவை. பயிற்சியின் முதல் நிலை. கடவுள் மீது நம்பிக்கை கொள்ளல். கடவுள் என்ற அன்பின் மீது பற்று கொண்டவன் வாள்  போன்ற கொலைக்கருவிகள் மீது பற்றுடையவனாக ஆகமாட்டான்.

சண்டைகளைத் தடுத்து நிறுத்தும் பயிற்சியும் அகிம்சைப் பயிற்சியின் அங்கமே ஆகும். இருவர் சண்டை போடுவதைப் பார்த்துவிட்டு அங்கிருந்து விலகிச் செல்பவன் அகிம்சாவாதியாக மாட்டான். மாறாக அந்தச் சண்டையைத் தடுத்து நிறுத்தும் நெஞ்சுரம் மிக்கவன்தான் அகிம்சாவாதியாவான். வன்முறையாளனின் ஆயுதம் கத்தி, கபடா, துப்பாக்கி, அணுகுண்டு. போன்ற எதுவுமாக இருக்கலாம். ஆனால் அகிம்சாவாதி இவற்றை எதிர்கொள்ள ஒரே கேடயம் தான் வைத்திருக்கிறான். அன்பு என்பதே அக்கேடயம். அவ்வன்பிற்குத் துணை நிற்பது கடவுள் கருணை.

அகிம்சை என்பது குடும்பத்தில் இருந்தே கற்றுக்கொள்ளக் கூடியது.இதனைக் கற்கத் தனிப் பள்ளி தேவையில்லை. குடும்பமே கற்றுத்  தருகிறது. குழந்தைக்கு வன்முறை தெரியுமா. தடி எடுத்துச் சுழற்றத் தெரியுமா. அதனால் அது அகிம்சாவாதியாகாது. அக்குழந்தைக்குள் அன்பும் பேதமில்லாத் தன்மையும் இருக்கவேண்டும். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அகிம்சையைக் கடைபிடிக்கவேண்டுமானால்  ஓர் உறுதி மொழியை எடுத்துக்கொள்ளவேண்டும். “எது நேரிடினும் சரி, கோபத்திற்கு இடம் கொடுக்கமாட்டேன். குடும்பத்தினரை என் இஷ்டத்திற்கு ஆட்டி வைக்கமாட்டேன். அவர்கள் மீது அதிகாரம் செலுத்த மாட்டேன்” என்ற உறுதிமொழியை ஏற்கும் நிலையில் குடும்பம் அகிம்சையின் பயிற்சிப்பள்ளியாகின்றது.

குடும்பத்தில் நிலவும் இந்த அமைதி, அகிம்சை மெல்லச் சமுதாயத்திற்கும் பரவும். சமுதாயத்தில் பெருவாரியாகச் சண்டை இல்லாமல்தான் அனைத்தும் நடைபெற்று வருகின்றன. இதனை நாள்தோறும், நாடுகள் அளவிலும் உலக அளவிலும் கொண்டு செல்லும் முறைமையே இன்றைக்குத் தேவை. இந்தப் பயிற்சியே அகிம்சையின் மேலான பயிற்சி. இதனைப் பயின்று உலகம் அமைதியில் திளைக்க ஒவ்வொரு தனிமனிதனும் பாடுபடவேண்டும். ஒரு கோட்டைக்குள் நுழையும் வாயிலில்  ஒரு வாசகம் வைக்கப்பட்டிருந்தது. பூமியில் சொர்க்கம் இருப்பின் அது இங்கேதான் அது இங்கேதான் என்பது அந்த வாசகம்.. இந்த வாசகம் எல்லா நாடுகளின் எல்லைக் கதவுகளில் எழுதப்பட வேண்டும்..

இத்தகைய அமைதி ஏற்படும் உலகில் நாடுகளில்  ஏற்றத்தாழ்வுகள் இருக்காது. போதைப் பொருட்கள் இருக்காது. மதுபானங்கள் இருக்காது. ஆண், பெண் இருவருக்குமான  புனிதத்தன்மை பாதுகாப்புடன் இருக்கும். எல்லாப் பெண்களையும் ஆண்கள் தம் வயதிற்கு ஏற்பத் தாயாகவோ, சகோதரியாகவோ, மகளாகவோ ஏற்று நிற்பர். எல்லா மதங்களும் கண்ணியத்துடன் போற்றப்படும். பெருமிதம், மகிழ்ச்சி பெருகும். உடலுழைப்பு பெருகும்..


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அகிம்சையின் வெற்றி”

அதிகம் படித்தது