ஏப்ரல் 10, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

அகிம்சை

முனைவர் மு.பழனியப்பன்

Mar 21, 2020

siragu agimsai3

காந்தியடிகளின் தலையாய கொள்கைகளில் ஒன்று அகிம்சையாகும். அகிம்சை என்பதற்குக் காந்தியடிகள் உலகளாவிய அன்பு என்று பொருள் கொள்ளுகிறார் காந்தியடிகள்.

ஹிம்சை என்பது துன்புறுத்துதல் என்று பொருள்படும். அஹிம்சை என்றால் துன்புறுத்தாது இருத்தல் என்று சாதாரணமாகப் பொருள் கொள்ளலாம். என்றாலும் அகிம்சை என்பதை எதிர்மறை நிலையில் பொருள் உடையது என்று கொள்ளவேண்டாம் என்பது காந்தியடிகளின் கருத்தாகும். அகிம்சை என்பது தீங்கு செய்வருக்கும் கூட நன்மை செய்வது ஆகும்.

அகிம்சை என்பது தீங்கு செய்பவருக்கும் நன்மை செய்வது என்றால் தீங்கு செய்பவன் தீங்கு செய்து கொண்டே இருக்கலாமா என்று ஒரு கேள்வி எழும். அதற்கும் பதில் தருகிறார் காந்தியடிகள்.

தீங்கு செய்பவனைத் தொடர்ந்து அந்தத் தீங்கினைச் செய்து செய்யச் சொல்வதோ, அல்லது அதைப் பொறுத்துக் கொள்வதோ மட்டும் அகிம்சை அல்ல. அதற்கு மாறாக அன்பு என்கிற அகிம்சையின் செய்வினை வடிவம் உன்னைத் தவறு செய்கிறவர்களிடம் இருந்து விலகச் செய்யும். அதனால் அவனுக்கு உடல் ரீதியாகப் பாதிப்போ காயமோ ஏற்பட்டாலும் பரவாயில்லை. இதுவே அகிம்சை

ஒரு மகனுக்கும் தந்தைக்கும் கூட இந்நிலையில் முரண்பாடுகள் எழலாம். தீமைகளின் வழிப்பட்டு நிற்கிறான் மகன் என்பதை ஒரு தந்தை அறிந்து கொள்கிறார். இந்நிலையில் அவனை எப்படி அகிம்சை வழியில் திருத்துவது?

ஒரு நல்ல தந்தை என்பவர் முதலில் தன் மகன் எவ்வழி செல்கிறான் என்பதை அறியவேண்டும். அவ்வாறு அறிந்து கொள்ள முற்படும் அவன் தீய வழியில் செல்கிறான் என்பதை உணர்ந்து கொண்டால், அவனை அவ்வழியிலேயே வாழ்ந்து வரச் செய்யக் கூடாது. அவன் மீது ஒரு தந்தை கொண்ட அன்பின் காரணமாக அவன் தீய வழிக்குச் செல்லும் நிலையில் அவனுக்கு அவனின் தந்தை தரும் ஆதரவுகளை மெல்ல நிறுத்த வேண்டும். அந்த ஆதரவுகளைத் திரும்பப் பெறவேண்டும். ஆதரவுகள் நிறுத்தப்பட்ட நிலையில் அவன் திருந்த வாய்ப்பு வரும். அவ்வாறு திருந்தாமல் அவன் தீமை வழி செல்லும் நிலையில் அவன் இறப்பை எட்டப் போகிறான் என்றாலும் ஒரு நல்ல தந்தை அவனுக்கு எவ்விதத்திலும் ஆதரவு தந்துவிடக் கூடாது.

என்றாலும் அந்த மகன் தன் தீமைச் செயல்பாடுகளை அறிந்து மனம் திருந்த முற்படும் நிலையில் அவனை ஏற்றுக் கொள்ளவேண்டும். இருந்தாலும் ஒரு தந்தை என்பவர் தன் மகனைத் திருத்த எந்தவிதமான வன்முறை வழிகளிலும் ஈடுபடுதல் கூடாது.

இவ்வாறு நன்னிலை திரும்பிய மகன் கெட்டழிந்து மீண்ட மகன் என்ற நிலையில் ஏற்கப்படுவான். இவ்வாறு ஒரு கதை போல அகிம்சையை விளக்குகிறார் காந்தியடிகள்.

siragu agimsai2

ஆக்கரீதியான அன்பு என்பதே அகிம்சையாகும். அகிம்சையைக் கடைபிடிக்கும் ஒருவன் தன் விரோதிகளையும் நேசிக்கக் கற்றுக் கொண்டவனாக இருக்க வேண்டும். ஒரு தந்தை தன் மகனைத் திருத்த எந்த அன்பு வழியில் இறங்குவாரோ அதே வழியில் அகிம்சை உள்ளவன் தன் விரோதிகளிடத்திலும் அகிம்சையை மேற்கொள்ள வேண்டும். முன்பின் தெரியாதவர்கள், மற்றவர்கள் அனைவரையும் தந்தை அன்புடன் அணுகவேண்டும். இதுவே அகிம்சை வாழ்க்கைமுறை.

அகிம்சை என்பது சத்தியம், அச்சமின்மை ஆகியவற்றை உள்ளடக்கியது. நம்மிடம் அன்பு செலுத்துபவர்களிடம் திரும்ப அன்பு செலுத்துவது என்பது ஒருநிலை. இது இயல்பான நிலை. நம்மை வெறுப்பவர்களிடத்தும் அன்பு செய்வது என்பதே அகிம்சையாகும். இது எவ்வளவு கடினமானது என்பது எல்லாருக்கும் தெரியும். எல்லா நன்மைகளுமே ஒருவகையில் கடினமான கடைப்பிடிப்புகள் தானே. எனவே அகிம்சை என்பது: கடினமாக நல்ல ஒன்றுதான்.

இந்த அகிம்சை வழியில் நடப்பது என்பது கம்பி மேல் நடப்பது போன்றதுதான். அப்பக்கம் இப்பக்கம் சாய்ந்துவிடாமல் வாளின் மேல் நடப்பது போன்றது அகிம்சையைக் கைக்கொள்வது.

ஒரு திருடன் திருடுவதையே தொழிலாகக் கொண்டவன். எங்கு எப்படி விடுவிட்டாலும் திருடுவது அவன் இயல்பு. அவனை எப்படித் திருத்துவது. அவன் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை. அவனையும் திருந்தச் செய்யவேண்டும். அவனும் மனிதன். அவனால் துன்பப்படுபவர்களும் மனிதர்கள். அவனைச் சகித்துக் கொண்டு இருந்தால் திருடுதான் அதிகமாகும். அவனால் எல்லா மனிதர்களும் பாதிப்படைவார்கள். இந்நிலையில் அகிம்சையை எவ்வாறு கையாள்வது?

திருடர்களையும் நம் உறவினர்களுள் ஒருவராகப் பாவித்து அவர்களைத் திருந்தும் நல்வழிக்குக் கொண்டுவரவேண்டும். அதிகத் துன்பங்கள், அளவில்லாப் பொறுமை இவை இரண்டும் இந்த நிலையில் தேவைப்படும். இவை இரண்டும் எந்தத் தீமையாளனையும் திருத்திவிடும்.

      அகிம்சை என்பது

      அனாவசியமான அவசரம்,

      கெட்ட எண்ணம்

      பொய் சொல்லல்

      பிறருக்குத் தீமை விளைவித்தல்

      போன்றவற்றால் பாதிப்பு அடையக் கூடும்.

அகிம்சை இல்லாது சத்தியத்தை அடையமுடியாது. இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலந்தவை. இவற்றைப் பிரிக்க முடியாது. அகிம்சை என்பது வழி. சத்தியம் என்பது குறிக்கோள். அகிம்சா வாழ்க்கைமுறையைக் கடைபிடித்துவிட்டால் சத்தியத்தினை அடைந்துவிட முடியும் அதுவே இன்றைக்குத் தேவை.

மற்றவர்கள் மீதும் உலகின் மீதும் தன் உறவினர்கள் போல அன்பு செய்வதே அகிம்சையாகும்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அகிம்சை”

அதிகம் படித்தது