அக்டோபர் 1, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

அங்கத எழுத்தாளர் சித்திரபுத்திரன்

தேமொழி

Sep 17, 2016

siragu-nayyaandi1

அங்கதம் என்பதன் பொருள் நையாண்டி எனப்படும். யாரேனும் ஒருவரையோ, ஒரு கருத்தாக்கத்தையோ அல்லது ஒரு நிகழ்வையோ பழித்து, பகடி செய்து, கிண்டல், கேலி செய்து எழுதுவது அங்கதம் எனப்படும். இந்த அங்கதம் என்னும் இலக்கிய முறை, தொன்று தொட்டு அனைத்து மொழியிலும், அனைத்துப் பண்பாட்டிலும், உலகம் முழுவதும் எல்லோராலும் விரும்பப்படும் ஓர் நகைச்சுவை மிகுத்த இலக்கிய எழுத்து நடை. மேலும், அங்கதம் இலக்கியத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. சமுதாயத்தில் வேரூன்றி, நிலைபெற்று, நடைமுறையாகிவிட்ட ஒரு அதிகாரக்கட்டமைப்பை நிலைகுலையச் செய்யும் நோக்கிலும் அங்கதம் பயன்படுத்தப்படும். அதுபோன்றே, புரையோடிப்போன ஒரு அரசியலமைப்பை, ஆதிக்கவர்கத்தை அசைத்துப் பார்க்கும் நோக்கிலும் அங்கதம் துணிவுமிக்க எழுத்தாளர்களால் பயன்படுத்தப்படும்.

இந்த இலக்கியமுறை சிரிக்க… சிந்திக்க… என பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும். எதைத்தாக்கி நகைச்சுவையாக எழுதுவது என்ற வரையறை அங்கத எழுத்தாளர்களுக்குக் கிடையாது. சமயம், சாதி, கடவுள், அரசாங்கம், பிரபலங்கள், அரசியல்வாதிகள் என யாரையும், எந்த ஒரு கருத்தையும் அங்கத எழுத்தாளர்கள் விட்டுவைப்பதுமில்லை. அதற்கு அந்த எழுத்தாளர்களுக்கு உரிமை இருக்கிறது என்பது பலகாலமாக உலக வழக்காகவும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. அங்கதம் இந்நாளைய திரைப்படங்களிலும் ஊடுருவி இருக்கிறது. ‘அரசியல்நெடி’ வீசும் வசனங்களையும், பாடல்களையும் விரும்பாத இரசிகர்களும் குறைவே. அரசியல் அங்கதங்கள் பல அரசியல் கருத்துப் படங்களாகவும் வெளிவரும். நையாண்டி செய்யப்படுபவரை நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பது அங்கதத்தின் முறை. இத்தகைய எழுத்துமுறை பெரும்பாலும் மறைமுகமாகத் தாக்குவது போல அமைந்துவிடுவதால் அங்கத எழுத்தாளரைத் தண்டனைக்கு உட்படுத்துவதும் அதிகாரம் உள்ளவர்களால் இயலாது போகும். அங்கத எழுத்தாளரின் நோக்கம் மக்களுக்கு நகைச்சுவை கலந்த இலக்கியம் வழியாகச் சமுதாயம் மற்றும் அரசியல் விழிப்புணர்வு கொண்டு வருவது.

தமிழிலும் அங்கதம் தொன்று தொட்டுக் கையாளப்பட்டது என்பதற்குத் தொல்காப்பியர் எழுதிய நூலிலேயே அதற்கு இலக்கண சூத்திரம் வரையறுக்கப்பட்டிருப்பதும் ஒரு சான்று. செய்யுள் இயற்றுங்கால், மரபுக்கவிதைக்காகக் கூறப்படும் இலக்கணம் பற்றி விவரிக்கும் பொழுது,

“எழுத்தொடும் சொல்லொடும் புணரா தாகிப்

பொருட்புறத் ததுவே குறிப்புமொழி என்ப”

என அங்கதம் குறித்து தொல்காப்பியம் கூறுகிறது.

siragu-nayyaandi2‘வசையொடும் நகையொடும் பொருந்திவரும்’ என்பது தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணரின் விளக்கம். ஒருவரை வசைபாடுவது போல புகழ்ந்து பேசும் முறையை ‘செம்பொருள் அங்கதம்’ என்றும்; மாறாகப் புகழ்வது போல பழித்துரைப்பதை ‘பழிகரப்பு அங்கதம்’ என்றும் தொல்காப்பியம் வரையறுக்கிறது. இக்காலக் கவிதைகளில் வரும் அங்கதங்களை, ‘தனி மனித அங்கதம்’, ‘சமுதாய அங்கதம்’, ‘அரசியல் அங்கதம்’ எனவும் வகைப்படுத்தும் முறையும் உள்ளது. ஆகையினால், அங்கதம் என்பது நகைச்சுவையும், புலமை நுட்பமும், திறனாய்வு நோக்கும் கொண்ட ஓர் இலக்கிய உத்தி. இது மக்கட் சமுதாய மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. தீங்கையும், அறிவின்மையையும் கண்டனம் செய்வது; மனிதகுலக் குற்றம் கண்டு சினங்கொண்டு சிரிப்பது என விளக்குகிறார் தமிழ் இணைய கல்விக் கழகத்தின் ஆசிரியர் திரு.கி. சிவகுமார்.

இவ்வாறாக, தீமையையும் அறியாமையையும் எடுத்துக்கூற முற்படும்பொழுது, அதை நகைச்சுவையுடன் சுட்டிக்காட்ட விரும்பும் அங்கதம் என்னும் நையாண்டி முறையை ஆங்கிலத்தில் ‘Satire’ எனக் குறிப்பிடுவோம். மக்களின் சமுதாய மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என்பது அடிப்படை நோக்கமாக இருப்பதால், அங்கத இலக்கியங்களில் கண்டனத்திற்குரிய கசப்பான கருத்துகள், இனிப்பு நகைச்சுவையில் தோய்த்து வழங்கப்படும் முயற்சி மக்களின் கவனத்தைக் கவரும் நோக்கில்தான் கையாளப்படுகிறது.

சமுதாயக் குறைபாடுகளைச் சாடும் அங்கத படைப்புகளும் (social satire), அரசியல் மற்றும் அரசாங்க நடவடிக்கைகளைச் சாடும் ‘அரசியல் நையாண்டி’களும் (political satire) இக்கால தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றிருந்தாலும் அவற்றைக் குறித்து நாம் அக்கறை காட்டி, அவை மக்கள் நலனை முன்னேற்றும் வகையில் பங்காற்றியதை பாராட்டுவது வழக்கமில்லாது இருக்கிறது. மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், குறுங்கதைகள், சிறுகதைகள், சீர்திருத்த இலக்கியங்கள், புதினங்கள் எனத் தமிழ் இலக்கியப்படைப்புகளை வகை வகையாக வகைப்படுத்தும் பொழுது, அங்கத இலக்கியப்படைப்புகள் குறித்தும், அங்கத எழுத்தாளர்கள் குறித்தும் நாம் முக்கியத்துவம் கொடுத்துப் பாராட்டுவதில்லை.

(I) சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் பெரியார்:

siragu-nayyaandi3தமிழ் எழுத்தாளர்களில் ஒரு சிறந்த அங்கத எழுத்தாளராக, தனது நையாண்டி எழுத்துக்களால் சமூகக் குறைபாடுகளை, அரசியல் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டும் படைப்புகளை மக்கள் முன் கொண்டு சென்றவர் என சித்திரபுத்திரன் அவர்களைக் குறிப்பிடலாம். சித்திரபுத்திரன் என்பது பெரியார் ஈ. வெ. ராமசாமியின் புனை பெயர்களில் ஒன்று. தனது சாதி ஒழிப்பு நோக்கம், அதற்குக் காரணமான சமயத்தையும், கடவுளையும் மறுக்கும் நடவடிக்கைகளுக்கு சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில், தான் நடத்திய ‘குடியரசு’ இதழில் கட்டுரைகளையும், உரையாடல்களையும் எழுதுவதைப் பெரியார் வழக்கமாகக் கொண்டிருந்தார்.   இதனை “தந்தை பெரியார் சிந்தனைகள்” என்ற தனது நூலில் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் அவர்கள், “மூட நம்பிக்கைக்கு மூலாதாரம் கடவுள் என்பது அவர் (பெரியார்) கருத்தாதலால் இறைமறுப்புக் கொள்கை அவரது பேச்சாகவும் அமைகின்றது; மூச்சாகவும் இருந்து வந்தது. அவர்தம் வாழ்நாளெல்லாம் இறைமறுப்புக் கொள்கையை நிலை நிறுத்துவதற்காக ஆயிரக்கணக்கான கூட்டங்களில் பேசிவந்தார்; குடியரசு இதழ்களில் ‘சித்திரபுத்திரன்’ என்ற புனைபெயரால் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதிவந்தார்” எனக் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு உரையாடல் பாணியில் குடியரசு இதழில் வெளியான “சித்திரபுத்திரன் – உரையாடல்கள்”,   “சித்திரபுத்திரன் – விவாதங்கள்” அல்லது “சித்திரபுத்திரன் – சம்பாஷணைகள்” பல தொகுக்கப் பெற்று இருநூல்கள் வெளியிடப்பட்டுள்ளன:

(1) “சித்திரபுத்திரன் விவாதங்கள்” என்று பெரும்பாலும் மதங்கள் பற்றிய விளக்கம் எதிர்பார்க்கும் 12 அங்கத உரையாடல்கள் தொகுக்கப்பட்டு திராவிடர் விடுதலைக் கழகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

(2) “மதுவிலக்கு சம்பாஷணை” என்னும் பெரியார் கருவூலம் – 1943 என்ற நூலும் வெளியிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட இந்த இருநூல்களுமே மின்னூல் வடிவில் இணையத்தில் கிடைக்கின்றன.

இவற்றுடன், பெரியார் கொள்கையை ஆதரிக்கும் பெரியாரியல் ஆர்வலர்களில் பலரும் தத்தமக்கு விருப்பமான ஓரிரு உரைகளை தங்கள் இணையதளங்களில் பதிவேற்றி உள்ளார்கள். சித்திரபுத்திரன் உரையாடல்கள் குறித்த தொகுப்பு கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

ஓர் எடுத்துக்காட்டு கொடுக்க வேண்டுமானால்; கீழ்வரும் அவரது கருத்தின் வழியாகப் பெரியாரின் கடவுள் குறித்த அவரது சிந்தனையின் ஓட்டத்தைப் புரிந்து கொள்ளலாம்.

“சர்வ வல்லமையுடைய கடவுள் ஒருவர் இருந்தால் மனிதனுடைய தேவைக்கும் ஆசைக்கும் தகுந்தபடி நடந்துகொண்டு இருப்பார். அல்லது, கடவுளுக்குப் பிடிக்காத விடயங்களைப் பற்றி மனிதனுக்குத் தேவையில்லாமலாவது, ஆசையில்லாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்திருப்பார்.

உதாரணமாக, மனிதன் தனக்கு முகத்தில் மயிர் வேண்டியதில்லை என்று கருதி தினம் தினம் சவரம் செய்துகொள்வதைப் பார்க்கிறோம். ஆனால், கடவுள் கிருபையால் அது தினம் தவறாமல் முளைத்துக் கொண்டே வருவதையும் பார்க்கின்றோம்.

இது என்ன, கடவுளுடன் மனிதன் ஏறுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகின்றானா? அல்லது, மனிதனுடன் கடவுள் ஏறுக்கு மாறாக நடந்து போட்டி போடுகின்றாரா? அல்லது, ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் அவரவர் காரியத்தை அவரவர்கள் பார்க்கின்றார்களா?

(- சித்திரபுத்திரன் கட்டுரை, ‘குடிஅரசு’, 6-12-1947)

siragu-nayyaandi4இது போன்ற பெரியாரின் அங்கதங்கள் தமிழர் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்திய அறிகுறிகள், இந்நாளில் நமக்குத் தெரியாது இருக்கலாம். ஆனால், பெரியாரின் அங்கத உரைகளைக் கேட்க அவர்காலத்திய ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் கூடினார்கள் என்பதையும், அவரது பார்ப்பனீய எதிர்ப்பு கொண்ட நையாண்டிகளைக் கேட்க பார்ப்பனர்களும் ஆர்வத்துடன் அவர் கூட்டத்திற்கு வந்துள்ளார்கள் என்றும் தமது நூலில் குறிப்பிடுகிறார் பேராசிரியர் ‘பாலா ரிச்மேன்’ (Paula Richman). “E.V.R.’s style of argumentation derives from oral presentation. His speeches were unforgettable events. Respectable women (who would not think of mingling directly with those they perceived as the “common riffraff” who frequented such events) would crowd onto nearby verandas and listen to his speeches over loudspeakers. Even Brahmins—often the subject of his attack—attended his speeches to hear his cutting yet ‘humorous satire’.”

அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக் கழகத்தின் ‘தெற்காசிய சமயங்கள்’ துறையின் ஆய்வாளர்களில் ஒருவர் பேராசிரியர் ‘பாலா ரிச்மேன்’ அவர்கள். இவர் தனது ஆய்விற்காக இராமாயணத்தைத் தேர்வு செய்து ஆய்வைத் தொடக்கினார். அப்பொழுது பெரியார் இராமாயணத்தைத் தாக்கி ஆற்றிய உரைகளைப் பற்றி இவர் அறிய நேர்ந்தது. ஒரு நாத்திகரை இந்த அளவு இராமாயணக் கதை கவர்ந்தது என்றால், பலவகை வேறுபாடுகளுடன் வழங்கப்படும் இராமாயணக் கதைகளையும் ஆராய வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு ஏற்பட்டது. பல இராமாயணக்கதைகளை ஆய்வு செய்து, ‘Many Ramayanas: The Diversity of a Narrative Tradition in South Asia’ மற்றும் ‘Questioning Ramayanas, a South Asian Tradition’ என்ற இரு கட்டுரைத் தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். இதில் Many Ramayanas என்ற நூலில் ஒன்பதாம் அத்தியாயத்தில் “E. V. Ramasami’s Reading of the Ramayana” என்ற தலைப்பின் கீழ் பெரியார் தனது சமயமறுப்புக் கொள்கையைப் பரப்ப இராமாயணத்தைக் கையாண்ட முறையைப் பற்றி விளக்குகிறார்.

(II) சித்திரபுத்திரனின் உரையாடல்கள் சில:

siragu-nayyaandi5சித்திரபுத்திரன் உரையாடல்கள் இருவர் விவாதங்களாகவே அமைந்திருக்கும். சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தின் சமுதாய நிலை, அரசியல் நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வரலாற்று ஆவணங்களாக சித்திரபுத்திரன் – உரையாடல்களைக் கொள்ளலாம். உரையாடுபவர்களில் ஒருவர் விளக்கம் கேட்க, மற்றொருவர் அதற்கு பதில் சொல்வதன் மூலம் அன்றைய நிகழ்வுகளை, அந்த நிகழ்வுகளுக்கான காரணங்களை, அவை ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தை மக்களுக்குக் கொண்டு செல்லும் வழியில் உரையாடல்களின் போக்கு அமையும். மேலோட்டமாகக் காணும்பொழுது புரிந்து கொள்ள முடியாத செய்திகள், நிகழ்வுகளின் அடிப்படை நோக்கம், ஆதிக்கவட்டத்தின் மறைமுக ஊழல்கள், சதிச்செயல்கள் ஆகியவற்றை அம்பலப்படுத்தும் நோக்கிலும் உரையாடல்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

(1) பார்ப்பனீய சம்பாஷணை (குடி அரசு – உரையாடல் – 19.12.1926): என்ற உரையாடலில், மணி மற்றும் சேஷன் என்ற காங்கிரஸ் ஆதரவாளர்களான இரு பார்ப்பனர்கள் அந்த ஆண்டு நடந்த தேர்தலில் பனகல் அரசர் ‘பனங்கன்டி ராமராயநிங்கார்’ தோற்றுவிட்டதால் மகிழ்கிறார்கள். 1921 ஆம் ஆண்டில் நீதிக்கட்சியின் சார்பில் முதல்வராகப் பதவியேற்ற பனகல் அரசர்’ அரசுப் பணிகளில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை’ (Communal Government Order – Communal G. O. No. 613) யைப் பிறப்பித்தார். ஒடுக்கப்பட்டவர்களை “பறையர்” என்று குறிக்கப்படாமல் “ஆதி திராவிடர்” என்று குறிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தார். இந்து ஆலயங்களின் நிர்வாகத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக இந்து அறநிலையச் சட்டத்தை இயற்றினார். இவையாவும் அக்கால உயர்குடிப்பிறப்புகள் என்று கூறிக்கொள்பவர்களுக்கு வெறுப்பை அளித்தது. அவர்கள் ஆதிக்கம் குறைவதற்குக் காரணமாகவும் இருந்தது. இதனால் அவர்கள் பனகல் அரசர் தோற்றதில் மகிழ்கிறார்கள். அத்துடன், புதிய அமைச்சரவையில் மூன்று பார்ப்பனரல்லாதவர் அமைச்சர் பதவி பெற்றது ஒரு விரும்பத்தகாத நிகழ்வாக இருப்பினும், அதுவும் ஒரு வகையில் நன்மையே என நினைக்கிறார்கள்.

1925-ல் காஞ்சிபுரத்தில் திரு.வி.க. தலைமையில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில், “வகுப்பு வாரி பிரதிநிதித்துவ உரிமை வேண்டும்” என்று பெரியார் எழுப்பிய கோரிக்கையை பார்ப்பனரல்லாத திரு.வி.க. தலைவர் பதவியில் இருந்ததால் அவரைக் கொண்டே காங்கிரசு தலைவர்கள் வெகு சுலபத்தில் அத்தீர்மானத்தை விவாதத்திற்குக் கூட கொண்டு வராமல் தள்ளுபடி செய்ய முடிந்தது. அதே சமயம் பழி பார்ப்பனர் மீதும் விழவில்லை. இது போன்று அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள, அமைச்சர் பதவி பெற்றிருக்கும் மூவரையும் பயன்படுத்திக் கொள்ள நமக்கு வசதியாக இருக்கும் எனவும் பேசிக் கொள்கிறார்கள். இந்த அரசியல் உரையாடல் மூலம் தனது வகுப்பு வாரி பிரதிநிதித்துவ உரிமை கோரிக்கை தோல்வியடைந்தது, வகுப்புவாரி இட ஒதுக்கீடு ஆதரவாளரான பனகல் அரசர் பதவியில் இல்லாதது போன்றவற்றால் யார் ஆதாயம் அடைந்ததாக மகிழ்வார்கள் என்று பொது மக்களுக்கு எடுத்துக்காட்டுகிறார். இந்த உரையாடலின் மையக்கருத்து இதுவாக இருந்தாலும், முழுஉரையாடலும் சென்றநூற்றாண்டின் சமுதாயத்தில் மக்களிடம் இருந்த உயர்வுதாழ்வு நிலையையும், அரசியல் நிலையையும், குறிப்பாக வேலைவாய்ப்பு நிலையையும் விரிவாகப் படம் பிடித்துக் காட்டும்.

(2) அய்யர் அய்யங்கார் சம்பாஷணை (குடி அரசு – உரையாடல் – 07.11.1937): ராமானுஜம் அய்யங்கார், சுப்பராய அய்யர் என்ற இருவர் இராஜாஜி முதல்வரான பின்னர் எடுத்த நடவடிக்கைகளின் தாக்கங்களை அலசுகிறார்கள்.   பனகல் அரசர் 1921 ஆம் ஆண்டு கொணர்ந்த ‘அரசு பணிகளில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை’யை மாற்றப்போவதில்லை, மதுவிலக்கு கொண்டு வரப்படும், பள்ளியில் இந்தி கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்த அறிக்கையால் என்ன விளைவுகள் ஏற்படும், யாருக்கு இழப்பு, ஏன் அந்த இழப்பு, ஒவ்வொரு திட்டத்தினாலும் பயன் பெறப்போவது யார், பாதிக்கப்படப்போவது யார் என விவாதிக்கிறார்கள். அக்காலத்தில் கல்விக்கான நிதி மதுவிற்பனையால் பெறப்பட்டது என்பதும், மதுவிலக்கு கொண்டுவந்தால் கல்விக்காகச் செலவிடப்படும்   தொகை குறையும், இதனால் கல்விக்கு ஆபத்து என்பதையும் அவர்கள் உரையாடல் காட்டுகிறது. அத்துடன் இந்தியை நுழைத்த செயல் இராஜாஜிக்கு எதிராகத் திரும்பிவிடும் என்றும் கவலை அடைகிறார்கள். இந்த உரையாடல் தமிழகத்தின் கல்விநிலை, கல்வியில் இந்தி புகுத்தப்படுவதால் முன்னேறி வரும் பிரிவினரின் வேலைவாய்ப்பில் ஏற்படப்போகும் மறைமுக பாதிப்புகள் ஆகியவற்றை மக்களுக்குக் கொண்டு செல்லும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய உரையாடல்கள் சமுதாய அரசியல் மாறுதல்களைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டவை. பெரியாரின் சமயமறுப்பு, சாதிமறுப்பு கொள்கைகளை வெளிப்படுத்தும் உரையாடல்கள் சிலவற்றையும் அடுத்து காணலாம்.

siragu-nayyaandi6(3) சுயமரியாதைக்காரருக்கும் புராண மரியாதைக்காரருக்கும் சம்பாஷணை (குடி அரசு – உரையாடல் – 07.09.1930) : சுயமரியாதைக்காரன் ஒருவருக்கும், புராண மரியாதைக்காரன் ஒருவருக்குக்கும் இடையே நடக்கும் உரையாடல் இது. அதாவது நாத்திகருக்கும் ஆத்திகருக்கும் இடையே நடக்கும் உரையாடல். இதன் மையக்கருத்தும், உரையாடல் போக்கும் நகைச்சுவைக்காகவே படித்து மகிழத்தக்கவை. வறிய நிலையிலும் சிரமம் பாராமல் கடன் வாங்கிக் கொண்டு காசிக்குப் பயணம் போகிறார் ஒரு புராண மரியாதைக்காரன். அப்படிப் போகவேண்டிய தேவைதான் என்ன என்பது சுயமரியாதைக்காரன் எழுப்பும் கேள்வி. பதிலுக்கு சுயமரியாதைக் கூட்டத்தைத் திட்டித் தீர்க்கிறார் புராண மரியாதைக்காரன். இந்தப்பகுத்தறிவாளர்கள் கூட்டம் வந்து மக்களைக் கெடுத்துவிட்டது, பாடுபட்டு வளர்த்துப் படிக்க வைத்த இவரது பிள்ளைகளுக்கு பகுத்தறிவாளர் கொள்கைகள் மீது ஆர்வம் வந்துவிட்டது. இனி மோட்சம் போக அவர்களை எப்படி நம்புவது என்று கேள்வி கேட்கிறார். மேலும், “நானோ வயது முதிர்ந்த கிழவன். ஒரு வேளை திடீர் என்று செத்துப்போய்விட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது என்னுடைய பிள்ளைகள் எனக்குக் கர்மம் செய்வார்களா? திதி செய்வார்களா? எள்ளுந் தண்ணீர் இறைப்பார்களா? பிண்டம் போடுவார்களா? நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம். இந்த நாசமாய்ப் போன சுயமரியாதைக்காரர்களால் எவ்வளவு தொல்லை?”என்று புலம்புகிறார். அதற்கு காசிக்குப் போவானேன் என்கிறார் குழப்பத்துடன் சுயமரியாதைக்காரன்.

காசியில் இறந்தால் மோட்சம் கிடைக்கும் அங்கேயே போய் உயிரைவிடப்போகிறேன், திரும்பி வரும் எண்ணம் இல்லை என்கிறார் புராண மரியாதைக்காரன். கவனிக்கவும்; திரும்பி வரும் எண்ணம் இல்லாதவர் கடன் வாங்கி காசிக்குப் போகிறார், அதனால் கடனைத் திருப்பித் தரும் எண்ணமும் இவருக்கில்லை, மோசடி வேலையில் மோட்சத்துக்குப் போவது இவருடைய திட்டம். தொடர்ந்து, “இவ்வளவு தீர்மானத்துடனும் பிடிவாதத்துடனும் இந்த முதிர்ந்த வயதில் போகின்றீர்களே ஒரு சமயம் தாங்கள் வழியில் செத்துப் போய் விட்டால் என்ன செய்வீர்கள்? அப்புறம் கயாவும், காசியும் எப்படித் தங்களுக்கு உதவும்?” என்ற ஒரு சந்தேகத்தை எழுப்பி சுயமரியாதைக்காரன் மேலும் சில வசவுகளை புராண மரியாதைக்காரனிடம் இருந்து பெற்றுக் கொண்டு இடத்தைக் காலி செய்கிறார். இந்த உரையாடலின் நோக்கம், பெரியாரின் சமயமறுப்புக் கொள்கை, புராண நம்பிக்கைகளின் மீது கேள்வி எழுப்பும் வழக்கமான பாணியில் அமைந்துள்ளது.

(4) வைதிகப் பார்ப்பானுக்கும், கோயில் பிரவேச பார்ப்பானுக்கும் சம்பாஷணை (குடி அரசு – உரையாடல் – 13.11.1932) : வைதிகப் பார்ப்பனர் ஒருவருடன் உரையாடும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆலய பிரவேசத்தை ஏற்றுக் கொண்ட பார்ப்பனர், “கோயில்களில் ஆதிதிராவிடர்கள் முதலான தாழ்த்தப்பட்டவர்களையெல்லாம் விட்டு விட்டால்தான் என்ன? சாஸ்திரம் போனால் போகிறது?” என்று சொல்கிறார். அவரது கவலையெல்லாம் ஒரேடியாக, சாஸ்திரங்களெல்லாம் பொய் என்று சொல்லும் சுயமரியாதைக் காரர்கள் கேட்கும் கேள்விகளுக்குச் சமாதானம் சொல்ல முடியாமலிருப்பதுதான். சுயமரியாதைக்காரர்கள் சாஸ்திரங்கள் பார்ப்பனர்களின் வயிற்றுப் பிழைப்புக்காக ஏற்பட்டவை. மனிதர்களுக்குள் சிறிதும் வித்தியாசமே இல்லை. எல்லா மனிதர் களுக்கும் எல்லாச் சுதந்தரங்களும் உண்டு. உலகத்தில் உள்ள வித்தியாசங்கள் எல்லாம் மனிதனால் ஏற்பட்டவை தான், அதுவும் சுயநலத்தால் ஏற்பட்டவை என்று கூறி சமதர்ம வாதம் புரிகிறார்களே அவர்களை எப்படிச் சமாதானப்படுத்த முடியும் என்பதாக இருக்கிறது. இதனால் ஆதிதிராவிடர்களைக் கோவிலுக்குள் அனுமதித்துவிடுவோம் என்கிறார். அவருக்கு வைதீகர், “நீங்கள் நாத்திகர்கள், உங்களுக்கு ஒன்றும் சொல்ல முடியாது என்று சொல்லிவிட வேண்டியது தான். மற்றவர்களிடமும், அவர்களைப்பற்றி நாத்திகர்கள், மதத் துரோகிகள், தேசத்துரோகிகள் என்று கூறிவிட்டால் சரியாகப் போய்விடும். ஆகையால் அதைப் பற்றிக் கவலை வேண்டாம்”, என்று ஆறுதல் கூறுகிறார். இந்த உரையாடலின் நோக்கமும், பெரியாரின் சமயமறுப்புக் கொள்கை, புராண நம்பிக்கைகளின் மீது கேள்வி எழுப்பும் வழக்கமான பாணியில் அமைந்துள்ளது. அத்துடன் அக்காலத்தில்ஆதிதிராவிடர்களின் ஆலயப் பிரவேசத்திற்கு எழுந்த தடை பற்றிய வரலாற்றுச் செய்தியும் இருக்கிறது.

வைக்கத்தில் ஆதிதிராவிடர்களின் ஆலயப் பிரவேசத்திற்காகப் போராடிய காரணத்தால் பெரியார் ‘வைக்கம் வீரர்’ எனவும் பாராட்டப்பட்டார் என்பது நாம் அறிந்ததே. சமத்துவ நோக்கம் தவிர்த்து, சுகாதார நோக்கிலும் மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டுவர ‘மாமாங்கத்தின் அற்புதம்’ என்றொரு அங்கத உரையாடலையும் எழுதியுள்ளார் சித்திரபுத்திரன். ‘சித்திரபுத்திரன் விவாதங்கள்’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள 12 உரையாடல்களும் பெரியாரின் சமயமறுப்புக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன. அவற்றைச் சற்று விரிவாகவும் நோக்குவதன் மூலம், பெரியார் அங்கத எழுத்தாளராக உருவெடுத்து எந்தெந்த கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்த்தார் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

-தொடரும்


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அங்கத எழுத்தாளர் சித்திரபுத்திரன்”

அதிகம் படித்தது