மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அங்கத எழுத்தாளர் சித்திரபுத்திரன் – இறுதிப் பகுதி

தேமொழி

Sep 24, 2016

(III) சித்திரபுத்திரன் விவாதங்கள் – மதங்கள் பற்றிய விளக்கம்:

1. சிக்கலான பிரச்சினை: ஒரு ஆத்திகனுக்கும் பகுத்தறிவாதிக்கும் இடையே  சமயங்களையும் கடவுளரையும் குறித்த ஓர் உரையாடல் நடைபெறுகிறது.   மதங்கள் மனிதனால் உண்டாக்கப்பட்டவை. இருப்பது ஒரே கடவுள் என்று சொன்னால் இத்தனை விதமான மதங்களையும், கடவுளரையும் ஒரு  கடவுளே படைக்க வேண்டிய காரணம் என்ன? என்ற பகுத்தறிவுவாதியின் கேள்வியினால் குழப்பமடைகிறார் ஆத்திகன். கடவுளின் மகன் என்று சொல்வதற்கு, கடவுளின் தூதன் என்று சொல்வதற்கெல்லாம் என்ன ஆதாரம்?, வேத நூல்கள் சொன்னால் அதற்கு என்ன ஆதாரம்?, கடவுள் வேத நூல்களைப் படைத்தார் என்பதற்கு என்ன ஆதாரம்?, யாரோ சொன்னார்கள் என்று சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொள்ளலாமா?, அப்படியானால் நான் ஒரு கடவுள் என்று சொன்னால் நீ ஏற்றுக் கொள்வாயா? என்று கேள்விமேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுக்கிறார் பகுத்தறிவுவாதி. பகுத்தறிவாளர் இது போல இந்து, புத்த, கிறித்துவ, முகம்மதிய, பொதுவாக என ஒவ்வொரு மதக் கோட்பாட்டையும் குறித்து பற்பலக் கேள்விகள் கேட்கும்பொழுது; பதில் சொல்லத் தெரியாதபொழுதெல்லாம், “இது ஒரு சிக்கலான பிரச்சினை, பெரியவர்களை கலந்தாலோசித்து பதில் சொல்கிறேன்” என்று பதில் சொல்லாமல் ஆத்திகன் நழுவுவது படிப்பவருக்கு புன்முறுவலை வரவழைக்கும் விதம் அமைந்திருக்கிறது.

2. அப்பவே வாக்குக் கொடுத்திட்டேன்: இந்த உரையாடல் கலப்புமணத்தை ஆதரிக்கும் நோக்கில் அமைந்துள்ளது. பிராமணர் மகள் சேஷுக்குட்டி அடுத்தவீட்டு முஸ்லிம் பையன் சுக்கூர் என்பவனுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு தாய் கோபமுற்று கண்டிக்கிறார். அப்படி என்ன அந்த சாயுபுடன் பேச்சு என்கிறார் தாய். சிறுவயதில் சேஷுக்குட்டி கட்டிய மணல் வீட்டை இடிக்க வந்த சுக்கூரைத் தடுக்கிறாள் சேஷுக்குட்டி.  என்னைத் திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொல் இடிக்கமாட்டேன் என்கிறான் சுக்கூர். அதனால் வாக்குக் கொடுத்ததாகவும், அவனை மணந்து கொள்ளப்போவதாகவும் சொல்கிறாள். சட்டம் வந்திருக்காவிட்டால் உனக்கு எப்பொழுதோ திருமணம் செய்து வைத்திருப்போம், அரசு அந்த சட்டம் போட்டதால் வந்த கேடு இது, உன் அப்பா நாளை வீட்டுக்கு வரட்டும் இதற்கு ஒரு முடிவு கட்டுகிறேன் எனப் பொருமுகிறார் தாய் சாரதா. ஆனால் இரவோடு இரவாக சேஷுக்குட்டியும் சுக்கூரும் காணாமல் போகிறார்கள்.  சேஷுக்குட்டியின் அப்பாவிடம் புலம்புகிறார் அவளது அம்மா. ஆனால் அப்பாவோ திருமண செலவு மிச்சம், வரதட்சினை செலவு மிச்சம். யாரேனும் கேள்வி கேட்டால், கேட்பவர்கள்  காங்கிரசு கட்சிக்காரர்கள் என்றால் இந்து இசுலாம் ஒற்றுமைக்காக முடிவெடுத்தோம் என்று சொல், நீதிக்கட்சிக்காரர்  கேட்டால் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்துவிட்டோம் என்று ஏதோ ஒரு  காரணம்  சொல்லிவிடு என்கிறார்.

3. நமோ! நமஹா! நமோ நமஹா!: இதில் ஒரு கோயில் அர்ச்சகரும், சோதிடரும் கூட்டுக் களவாணிகள் போல இணைந்து ஏமாற்று வேலை செய்து,  மக்களின் மூடநம்பிக்கையால் ஆதாயம் பெறுகிறார்கள். சோதிடர் மக்களிடம் அவர்கள் சாதகப் பலன் சரியில்லை, கோவிலுக்குப் போய் பரிகாரம் செய் என்று அனுப்புகிறார். அதனால் அர்ச்சகருக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. ஆனால், சோதிடரின் பங்கை அவர் தராமல் ஏய்க்க நினைக்கும் பொழுது, சோதிடர் மக்களை வேறு கோயிலுக்குப் போகச் சொல்வேன் என்றும், அர்ச்சகரின் தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள ரகசியங்களை அம்பலப்படுத்துவேன் என்றும் கூறி மிரட்டி அர்ச்சகரைப்  பணிய வைக்கிறார்.  இது மக்களின் மூடநம்பிக்கையால் அவர்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்று காட்டும் நோக்கில் அமைந்துள்ளது.

4. நான் இருக்கப் பயமேன்: ஒரு சராசரித் தந்தை சிரமப்பட்டு மகனை பணம் செலவழித்து பள்ளிக்கு அனுப்புகிறார். ஆனால் அவனோ படிக்காமல் ஊர் சுற்றுகிறான். படிக்காவிட்டால் தேர்வில் தேர்ச்சி பெறமுடியாது என கண்டிக்கிறார் தந்தை. ஆனால் அவர் மகனோ கவலை வேண்டாம் நான் இடுப்பில் சாயிபாபா டாலர் அணிந்திருக்கிறேன், அது எனக்குத் தேர்வில் உதவும் என்று முட்டாள்தனமாக பதில் சொல்கிறான். கோபம் கொண்ட தந்தை மேலும் அது குறித்து விசாரிக்கும் பொழுது அவனது ஆசிரியரே (வாத்தியார் பஞ்சாபகேச சாஸ்திரி) இது போன்ற மூடநம்பிக்கையைப் பரப்பி மாணவர்களிடம் காசு பறிப்பதும், அவருக்கு இந்த சாயிபாபா டாலர் விற்பனையில் உதவ ஒரு உணவு விடுதிக்காரர் (மாடர்ன் கபே சுப்பாராவ்)  ஒத்துழைப்பதும் தெரிய வருகிறது. ஆசிரியர் சாயிபாபா டாலர்களை உணவுவிடுதிக்காரருக்கு தருவித்துக் கொடுத்துவிட்டு, பொதுமக்களிடம் பொய்யுரைத்து ஏமாற்றி உணவுவிடுதிக்கு அனுப்பி சாயிபாபா டாலர் வாங்கிக் கொள்ளச் செய்கிறார். இருவரும் மக்களை ஏமாற்றும் குற்றத்தில் ஒருவருக்கு ஒருவர் உடந்தை. இதுவும் மூடநம்பிக்கையால் விளையும் கேட்டினைக் கூறும் நோக்கில்தான் அமைந்துள்ளது.

5. வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம்: நகை வாங்க விரும்பிய வைதீகர் ஒருவர் காசுமாலையொன்றை வீட்டில் காட்டிவருகிறேன் என்று நகைக்கடைச் செட்டியாரிடம் இருந்து வாங்கிவருகிறார். ஆனால், அவர் அதை அவர் கையில் எடுத்த நேரமோ ராகு காலம், போதாக்குறைக்கு வீட்டிற்கு வரும் வழியில் பூனை ஒன்றும் குறுக்கே போகிறது. வீட்டில் மனைவி காசுகளை எண்ணிப்பார்த்து விட்டு 68 காசு இராசியில்லை என்கிறார். மறுநாள் திருப்பிக் கொடுத்துவிடலாம் என்று பெட்டிக்குள் வைத்துப் பூட்டிவிடுகிறார்கள். வேறு ஒரு வாடிக்கையாளர் வாங்க விரும்புவதாக, நகையைப் பெற்றுக்கொள்ள வருகிறார் நகைக்கடைக்காரர். வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நிறைந்தநாளில் நகையைக் கொடுத்தால் லட்சுமி வீட்டை விட்டுப் போய்விடுவாள், நீ என்ன நாத்திகனா என்று கடைக்காரரைத் திட்டுகிறார் வைதீகர். அந்தக் கணக்கெல்லாம் சொந்த நகைக்கு, ஊரார் நகைக்கல்ல எனது வியாபாரம் போய் விடும், எனது நகையைக் கொடுத்துவிடுங்கள் என வற்புறுத்துகிறார் நகைவியாபாரி. வைதீகரின் மனைவியும் கணவருடன் சேர்ந்துகொண்டு அவரைத் திட்டத்தொடங்க வாக்குவாதம் முற்றுகிறது.  வெளியில் சென்றிருந்த வைதீகர் மகன் வீட்டுக்கு வந்து, தன் பெற்றோர் செய்யும் அடாவடிச் செயலைக் கண்டு அதிர்ந்து போகிறான். தாயின் இடுப்பில் இருந்து பெட்டிச்சாவியைப் பிடுங்கிக் கொண்டு போய் நகையை எடுத்துவந்து கடைக்காரரிடம் கொடுத்தனுப்புகிறான். அவன் குடிஅரசு பத்திரிக்கை படித்துவிட்டு நாத்திகன் போல சாஸ்திரம் சம்பிரதாயம் பார்க்காமல் மதிகெட்டு நடக்கிறான் என்று பெற்றோர்கள் அவனைத் திட்டுகிறார்கள்.  மூடநம்பிக்கையைச் சுட்டிக்காட்டும் மற்றுமொரு உரையாடல் இது.

6. கல்வியின் இரகசியம்: கணபதி சாஸ்திரி, லட்சுமண சாஸ்திரி என்ற வைதீகர் இருவருக்குள் நடக்கும் உரையாடல் இது. பாடம் படிக்காமல் புகைப்பது, குடிப்பது, கூத்து, நாடகம் என நண்பர்களுடன் ஊர் சுற்றும் வழக்கம் கொண்டவர்கள் சாஸ்திரி ஒருவரின் மகன்கள். அவர்களை தேர்வில் வெற்றி பெறச் செய்ய வினாத்தாளை ஆசிரியரிடம் இருந்து பெற்று வருவது, இல்லாவிட்டால் அச்சுக்கூடத்தில் இருந்து பெறுவது, அது கிடைத்தும் ஒழுங்காகத் தேர்வு எழுதாத மகன்களுக்காக விடைத்தாளைத் தொடர்ந்து சென்று திருத்துபவர்களிடம் கையூட்டு கொடுப்பது, கல்லூரியிலும் சமுதாயத்திலும் உயர்பதவியில் இருப்பவர்களின் சிபாரிசு என அவர்கள் தயவைப் பெறுவது, அவர்கள் கையில் காலில் விழுந்து கெஞ்சுவது, தனது மனைவியை அவர்கள் குடும்பப் பெண்களிடம் முறையிட்டு அழச்செய்து  காரியத்தைச் சாதித்துக் கொள்வது என்று பல குறுக்கு வழிகளையும் கடைப்பிடித்துத் தனது பிள்ளைகளை ஒப்பேற்றுகிறார் சாஸ்திரி. இந்த உரையாடலின் வழி, அக்காலத்தில் பிராமண மாணவர்களும், பிராமணர் அல்லாத மாணவர்களும் கல்விக்கூடங்களில் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். கல்வியில் தில்லுமுல்லு செய்வதும்,   பிடிக்காத மாணவர்களை ஒழித்துக்கட்டும் முயற்சிகளும் விவரிக்கப்படுகிறது.

7. எல்லாப் பெண்களும் கற்பில்லாதவர்களா? ஆத்திகப் பெண் ஒருவருக்கும், நாத்திகன் ஒருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் இது. ஆத்திகப் பெண் இக்காலத்துப் பெண்கள் கற்புக்கரசிகள் இல்லை என்று ஏன் சொல்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு நாத்திகன்  சாஸ்திரம், வேதநூல்கள் போன்றவை கற்புள்ள பெண் சொன்னால் மழை பெய்யும் என்கிறது. மூன்று ஆண்டுகளாக மழையில்லை, ஊரில் குடிக்கத் தண்ணீர் இல்லை. ஒரு பெண்ணாவது கற்புடன் இருந்து மழை பெய்யச் சொல்லவில்லையே, பின் எவ்வாறு எல்லாப் பெண்களையும்  கற்புக்கரசிகள் என்று கூறமுடியும்  என்று  இடக்காக பதில் சொல்கிறார்.

8. எது ஜீவ காருண்யம்: சைவன், பார்ப்பனர் என இருவர் எது ஜீவகாருண்யம் என்று விவாதிக்கிறார்கள். சைவர் பார்ப்பனரிடம் நீங்கள் ஏன் மாமிசம் சாப்பிட ஆரம்பித்துவிட்டீர்கள் எனக் கேட்கிறார். அதற்கு அவர், சந்திர போஸ் தாவரங்களுக்கு உயிர் உள்ளது என்று சொல்லிவிட்டதால் ஒவ்வொருமுறையும் இலைதழைகளைப் பறிப்பது அவற்றிற்கு அதிகத் துன்பத்தைத் தரும் செயல். மேலும் வேதம், புராணம், மனுதர்மம் போன்றவை பார்ப்பனர் மாமிசம் உண்பதை ஏற்றுக் கொள்கிறது. கண்ணப்ப நாயனார் போன்ற புராணக் கதைகளும் மாமிசம் உண்பது தவறல்ல என்பதை விளக்குகிறது. பல தாவரங்களை அடிக்கடி துன்புறுத்துவதைவிட, ஒரு விலங்கை துன்புறுத்தாமல் உயிர் நீக்கி சாப்பிடுவதே சிறந்த ஜீவ காருண்யம்  என்கிறார்.

9. பஞ்ச கன்யாஸ்மரே:  ‘அகல்யா, துரோபதி, சீதா, தாரா, மண்டோதரி ஸ்மிதா பஞ்ச கன்யாஸ்மரே நித்யம் மகா பாதக நாசனம்’ என்ற சமற்கிருத சுலோகம் சொல்லும் பொருளென்ன என்று விளக்குகிறது இந்த விவாதம். இந்த ஐந்து கன்னிகைகளையும் தினம் நினைத்தால் மகாபாதகமெல்லாம் நாசமாகிவிடும் என்பது இதன் பொருள். “ஐந்துக்கு இரண்டு பழுதில்லை” என்ற பழமொழியும் இந்த சுலோகத்தின் காரணமாக உருவாக்கப்பட்டதே. உண்மையில் சொல்லப்போனால் மண்டோதரி மட்டுமே இப்பெண்களுள் மதிக்கத் தகுந்தவள் என்று விளக்கப்படுகிறது. இது உரையாடல் நடையில் அமையப்பெறவில்லை.

10. ஆசிரியர் – மாணாக்கன் – சம்பாஷணை, கெடுவான் கேடு நினைப்பான்: இராமாயண வகுப்பு ஆசிரியர், ஆரியசங்கரன் என்ற மாணவனிடம் ‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்ற பழமொழிக்குப் பொருத்தமான நிகழ்வொன்றை இராமாயணத்தில் இருந்து கூறுமாறு சொல்கிறார். அதற்கு அந்த மாணவன், தசரதனும் அவரது மகன் இராமனும்தான் பொருத்தமானவர்கள் என்று கூற, குழப்பமடைந்த ஆசிரியர் விளக்கம் கேட்கிறார். பரதனுக்குச் சேரவேண்டிய நாட்டை இராமனுக்குக் கொடுக்க சூழ்ச்சி செய்த தசரதன் இறந்தார், அதனை ஏற்றுக்கொள்ள முன்வந்த இராமன் மனைவியைப் பிரிந்து துன்பமுற நேர்ந்தது.  இது அவர்கள் பரதனுக்குக் கேடு செய்ய நினைத்ததால், அவனது ஆட்சி  உரிமையைக் கவர நினைத்ததால் நடந்தது என விளக்குகிறான்.

11. ஐயங்கார் ஆசிரியர் – தமிழ் மாணவன் உரையாடல்:  தசரதராம ஐயங்கார் என்ற ஆசிரியருக்கும் தமிழரசன் என்ற மாணவனுக்கும் இடையே நடக்கும் உரையாடல். ஆசிரியர் தமிழரசனை அழைக்கும் பொழுது அவன் வணக்கம் சொல்கிறான். அவன் ஏன் ‘வணக்கம்’ என்று சொல்கிறான், அவன் கருப்புச்சட்டைக்காரனாக (திராவிடக் கழகத்தானாக) மாறிவிட்டனா என்று ஆசிரியர் கேலி செய்கிறார். பள்ளி மாணவர்கள் ஒன்றுகூடி முடிந்தவரை இனி தமிழில் பேச முடிவெடுத்ததாகச் சொல்கிறான் மாணவன். தமிழில் எல்லாச் சொற்களையும் சொல்ல முடியுமா என மேலும் நகைக்கிறார் ஆசிரியர். மனம் புண்பட்ட மாணவன் முடிந்தவரை இனி தமிழில் பேசப்போவதாகவும்; ஒரு வணக்கம் சொன்னதற்கே கருப்புச்சட்டை என்று பகடி செய்யும் இடத்தில்  இனி இருக்க விரும்பவில்லை என்றும் கூறுகிறான். நீ நன்கு படிக்கும் மாணவன், தவறான நட்பால் கெட்டுப் போயிருக்கிறாய், இனி எங்கு சென்றாலும் நீ உருப்பட மாட்டாய் என்று வாழ்த்தி அனுப்புகிறார் ஆசிரியர். “உருப்படாவிட்டால் கருப்புச்சட்டை தைத்துப் போட்டுக் கொண்டு ‘தமிழ் வாழ்க’ என்று தமிழ்த் தொண்டு செய்வேன்” என்கிறான் மாணவன். இந்த உரையாடல் தமிழில் பேச நினைப்பவர்களுக்கு அக்காலத்தில் மதிப்பு வழங்கப்படவில்லை  என்பதைக் காட்டுகிறது.

12. தீபாவளி தத்துவமும் இரகசியமும்: தீபாவளி குறித்து டேவிஸ் என்பவருக்கும் ராமானுஜம் என்பவருக்கும் இடையே நிகழும் உரையாடல். இது ஆய்வு நோக்கில் தீபாவளி கொண்டாடுபவர்கள் பண்டிகையின் உண்மை பின்னணி என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் வழங்கப்படுவதாக முன்குறிப்பு கூறுகிறது. புராணக் கதைகளின் நம்பமுடியாத தன்மையை; அறிவியல் விளக்கங்களுக்குப் பொருந்தாத நிகழ்வுகளைக் காட்டுவது இந்த உரையாடலின் நோக்கம். இந்தக்கதைகள் சொல்லும் நம்பிக்கைகள் குறித்து கேள்விமேல் கேட்கும் அந்த நண்பன், கருப்புச்சட்டை நாத்திகன் என்று கிண்டல் செய்யப்படுகிறான். அத்துடன், கடவுள், மதம், சமய நம்பிக்கைகள் குறித்து கேள்விகள் எழுப்புவது சரியல்ல என்றும் அறிவுறுத்தப்படுகிறான். புவியில் உள்ள தேவர்களுக்கு (பார்ப்பனர்களுக்கு)  தொல்லை கொடுத்தால், அரக்கர்கள் போல  அழிந்து போவீர்கள் என்பதை மற்றவர்களுக்கு  நினைவூட்ட இப்பண்டிகை கொண்டாடப்படுவதே   தீபாவளியின் தத்துவ இரகசியம் என்று விளக்கப்படுகிறது.

முடிவுரை:

வரலாற்றில் மிக இன்றியமையாத காலங்களில் நையாண்டி முறை விமர்சனம் முக்கியத்துவம் பெறும். பொதுவாக, எப்பொழுது பெரும்பான்மையான எளிய மக்களின் மீது, அவர்கள் பொறுமையை சோதிக்கும் வண்ணம், அவர்கள் மீது  முட்டாள்தனமானக்  கருத்துகள் அதிகார வர்க்கத்தால் திணிக்கப்பட்டு அவர்கள் அடக்குமுறைக்கு ஆளாகிறார்களோ;  அப்பொழுது நையாண்டி முறைக் கருத்துக்களுக்கும் அவர்களிடம்  வரவேற்பிருக்கும் என்கிறார் கனடாவின் ஊடக விமர்சகர் ஜான் டோயில் (John Doyle). வரலாற்றில் அரசியல் அடக்குமுறைகள் நிகழ்ந்த காலத்திலும், மதத்தின்  பேரில் சமுதாயத்தின் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட காலகட்டங்களிலும் நையாண்டி செய்யும் இலக்கியங்கள் தோன்றி மக்களுக்கு விழிப்புணர்வைத் தூண்டிவிட்டு அவர்களை வழிநடத்தியிருக்கிறது. தந்தை பெரியாரும்  அது போன்ற ஒரு காலகட்டத்தில்தான் சித்திரபுத்திரன் உரைகளை எழுதத் துவங்கியிருக்கிறார். வருணாசிரம தர்மம் என்ற கொள்கைகளால் மக்களில் ஒருசிலர் அடக்குமுறைக்கு ஆளான பொழுதும், இந்திய மக்கள் ஆங்கிலேயரின் ஆட்சியில் அடக்குமுறைக்கு உள்ளாகி அல்லலுற்ற பொழுதும் ‘சித்திரபுத்திரன்’ உருமாறி தனது எழுத்துக்களில் அங்கதம் புகுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளார் பெரியார்.
_____________________________________________
சித்திரபுத்திரன் விவாதங்கள் -  பெரியார்; 2007:   http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/22.pdf
மதுவிலக்கு சம்பாஷணை  – சித்திரபுத்திரன்:   http://ebooks.newshunt.com/Ebooks/tamil/madhuvilaku-sambashanai-sithiraputhiran-book-90811
பார்ப்பனீய சம்பாஷணை – சித்திரபுத்திரன்:   http://www.periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-07-04-20-16/29102-2015-09-23-12-55-42
அய்யர் அய்யங்கார் சம்பாஷணை – சித்திரபுத்திரன்:   http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-07-04-18-53/31379-2015-10-18-12-02-50
சுயமரியாதைக்காரருக்கும் புராண மரியாதைக்காரருக்கும் சம்பாஷணை – சித்திரபுத்திரன்:   http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/47-2015-09-16-07-04-23/30088-2015-10-07-13-08-41
வைதிகப் பார்ப்பானுக்கும், கோயில் பிரவேச பார்ப்பானுக்கும் சம்பாஷணை – சித்திரபுத்திரன்:   http://viduthalai.in/home/viduthalai/rationalism/121064-2016-04-23-13-12-53.html
மாமாங்கத்தின் அற்புதம் – சித்திரபுத்திரன்:   http://viduthalai.in/e-paper/97454.html#ixzz3ThbQF66R
பெரியார் ஈ.வெ.ரா.  சிந்தனைகள், மூன்றாம் தொகுதி, தொகுப்பு – ஆனைமுத்து, 1974; -  http://www.padippakam.com/document/M_Books/periyar_vol_03.pdf
_____________________________________________
தகவல் பெற்ற தளங்கள்:

படைப்பிலக்கியம், கவிதை (P2031), திரு.கி.சிவகுமார், தமிழ் இணையக் கல்விக் கழகம்; – http://www.tamilvu.org/courses/degree/p203/p2031/html/p2031554.htm
Collector of stories, The Hindu, January 18, 2010; – http://www.thehindu.com/features/friday-review/art/collector-of-stories/article81978.ece
Many Ramayanas -The Diversity of a Narrative Tradition in South Asia, Paula Richman (Edited by), 1991; – http://publishing.cdlib.org/ucpressebooks/view?docId=ft3j49n8h7;brand=ucpress
925-984-9136
தந்தை பெரியார் சிந்தனைகள், பேராசிரியர் ந. சுப்புரெட்டியார், 2001 ;   – http://www.tamilvu.org/library/nationalized/pdf/35-subbureddiyar/513-thanthaiperiyarsenthanaigal.pdf
Ours is a very satire-friendly age, John Doyle, 2006; – http://www.theglobeandmail.com/arts/ours-is-a-very-satire-friendly-age/article1329571/


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அங்கத எழுத்தாளர் சித்திரபுத்திரன் – இறுதிப் பகுதி”

அதிகம் படித்தது