டிசம்பர் 3, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

அடால்ப் ஐச்மன்-வழக்கு விசாரணை ஒரு பார்வை

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Aug 13, 2016

Siragu Adolf1

அடால்ப் ஐச்மன் (Adolf Eichmann) ஜெர்மனிய நாட்டினைச் சேர்ந்த  இராணுவ அதிகாரி  (lieutenant colonel).  இரண்டாம் உலகப் போரின்போது  பல்லாயிரக்கணக்கான யூத மக்களின் இன அழிப்பை நடத்தியவர். 6 மில்லியன் யூத மக்களைக் கொல்வதவற்கான வழிமுறைகளைக் கட்டளையிட்டவர். இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட நாஜி ஜெர்மனியர்களை தண்டிக்க நூரெம்பெர்க் நீதி விசாரணை நடந்தது (Nuremberg trial). அந்த விசாரணையில் இருந்து தப்புவதற்காக ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பலர் அந்த நீதி விசாரணையில் தண்டிக்கப்படுகின்றனர். அதில் இருந்து தப்பித்துச் சென்றவர் அடால்ப் ஐச்மன். பல்வேறு நாடுகளில் சுற்றித் திரிந்து இறுதியில் தன் பெயரை ரிக்கார்டோ கிளெமென்ட் என (Ricardo Klement) மாற்றிக் கொண்டு அர்ஜென்டினாவில் மறைந்து வாழ்கின்றார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் இஸ்ரேல் என்ற நாடு யூத மக்களைக் கொண்டு உருவாகின்றது. தங்கள் மக்களின் இன அழிப்பிற்காக நீதிகோரி இஸ்ரேல் நாட்டின் அரசு யூத மக்களின் இன அழிப்பில் ஈடுபட்ட மறைந்து வாழும் நாஜி அதிகாரிகளைத் தேடும் வேட்டை நடத்துகின்றது. அந்தத் தேடுதல் வேட்டையில் அர்ஜென்டினாவில் மறைந்து வாழும் அடால்ப் ஐச்மனை கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து கடத்திக் கொண்டு வருகின்றது. இதை அறிந்த அர்ஜென்டினா தன் நாட்டில் இருக்கும் நபரை கடத்திக் கொண்டு வந்தது பன்னாட்டு சட்டத்திற்கு எதிரானது என்று ஐ.நா பாதுகாப்பு சபையிடம் புகார் அளிக்கின்றது.  ஆனால் இஸ்ரேல் அர்ஜென்டினாவிடம் மன்னிப்பு கேட்டவுடன் அர்ஜென்டினா இந்தப் பிரச்சினையை பெரிதுபடுத்தவில்லை.

Siragu Adolf3

6 மில்லியன் யூத மக்களைக் கொன்று குவித்த அடால்ப் ஐச்மன், இஸ்ரேல் நாட்டு  நீதிமன்றத்தின் முன் விசாரணைக்காக நிறுத்தப்படுகின்றார்.  இந்த நீதி விசாரணையில் அரசு வழக்கறிஞராக இஸ்ரேல் நாட்டின் கியூடியான் ஹவுஸ்நர் (Guideon Hausner) நியமிக்கப்படுகிறார். அடால்ப் ஐச்மன் சார்பில் வாதாட ஜெர்மனியைச் சேர்ந்த ராபர்ட் சேர்வடிஸ் (Robert Servatius) வரவழைக்கப்படுகின்றார். அரசாங்கத் தரப்பில் 112 சாட்சிகள் வரவழைத்து விசாரிக்கப்படுகின்றனர். இதில் பெரும்பாலும் வரலாறு, நீதி துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் யூத இன அழிப்பிலிருந்து தப்பிப்பிழைத்தவர்கள். அரசு வழக்கறிஞரைப் பொறுத்தவரை அடால்ப் ஐச்மனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுகின்றதோ இல்லையோ, இஸ்ரேல் நாட்டின் இளைய தலைமுறையினர் தங்கள் இன அழிப்பின் வலிகளை புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார். அதற்காக இந்த நீதி விசாரணையை விரிவாக நடத்தி இஸ்ரேல் நாட்டு இளைஞர்களிடம் எழுச்சியை உண்டாக்க விரும்பினார்.

நாஜிகள் மற்றும் நாஜிகளுடன் இணைந்து வேலை செய்த நபர்களின் தண்டனைச் சட்டம் 1950( nazis and nazi collaborators (punishment)law மூலம் அடால்ப் ஐச்மன் மீது 15 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது .

1. 6 மில்லியன் யூத மக்களைக் கொன்றது
2. அவர்களை நெருக்கடிப்பகுதிகளில் வைத்து அவர்களின் உடல் நிலையை சீர்கேடாக்கியது.
3. யூத இன மக்களுக்கு உடல் மற்றும் உளவியல் தொந்தரவு தந்தது
4. யூத இன மக்களுக்கு கருத்தடை செய்து யூதக் குழந்தைகள் பிறப்பதை தடைச் செய்தது.
5. யூத மக்களை அடிமைகளாக்கி அவர்களை பட்டினி போட்டது
6. யூத மக்களுக்கு தொடர்ந்து தேசிய, இன, மத, அரசியல் அடிப்படையில் இடர்ப்பாடு கொடுத்தது.
7. யூத மக்களின் சொத்துக்களை கட்டாயப்படுத்தி வன்முறையின் மூலம் சூறையாடியது.

மேலும் 500000 போலாந்தியர்களை, 14000 ஸ்லோவேனிஸ் மக்களை, 1000 க்கணக்கான ஜிப்ஸி இன மக்களைக் கொன்று குவித்தது என்று 15 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.

1389.9 Holocaust A

இதற்கு எதிராக அடால்ப் ஐச்மனின் வழக்கறிஞர் ராபர்ட் மூன்று வாதங்களை எடுத்து வைத்தார். அதாவது இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் யூத இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கண்டிப்பாக நடுநிலையோடு இந்த விசாரணையை நடத்த முடியாது. அதே போன்று இஸ்ரேல் நாட்டுக்கு இந்த வழக்கை விசாரிக்க உரிமை இல்லை. குறிப்பாக அடால்ப் ஐச்மனை கடத்திக் கொண்டு வந்து விசாரிப்பது தவறு என்று மூன்று வாதங்களை வைத்தார்.

Siragu Adolf5

ஆனால் அரசு வழக்கறிஞர் ஹவுஸ்நர் இந்த வாதங்களை மறுத்து இஸ்ரேல் நாட்டில் தான் இந்த விசாரணை நடைபெற முடியுமே அன்றி, ஜெர்மனிய நாட்டில் நடந்தால் அங்கு ஒருதலைப்பட்சமான நீதி தான் கிடைக்கும் என்று வாதிட்டார். 112 சாட்சிகளில் முக்கியமாக யோசேலையூஸ்க (Yoselewska) என்பவர் இன அழிப்பில் இருந்து தப்பிப் பிழைத்தவர். அவர் தான் எப்படி பிணக்குவியலுக்கு மத்தியில் இருந்து தப்பிப் பிழைத்தேன் என்று கூறியது, நீதிமன்றத்தை மட்டுமல்ல இஸ்ரேல் நாட்டையே உலுக்கச் செய்தது. இதைத் தான் அரச வழக்கறிஞராக இருந்த ஹவுஸ்நர் விரும்பினார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் எதையும் அடால்ப் ஐச்மன் மற்றும் அவரின் வழக்கறிஞர் மறுக்கவில்லை ஆனால், அவை அனைத்தும் தன் சொந்த விருப்பத்தால் செய்தது அல்ல, தனக்கு மேல் இருக்கும் அதிகாரிகள் கொடுத்த கட்டளைகளை நிறைவேற்றியதாகத் தான் கொள்ள முடியும் என்ற வாதத்தினை, நீதிபதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியில் 1962 மே மாதம் அடால்ப் ஐச்மனுக்கு  தூக்கு தண்டனை தரப்பட்டது. அதை எதிர்த்து ஷம்முயில் ஹியூகோ பெர்க்மான் (shamuel hugo Bergmann) கருணை மனு விண்ணப்பித்தார். அவர் இஸ்ரேல் நாட்டினைச் சேர்ந்த தத்துவ ஆசிரியர் என்றாலும் மரண தண்டனையில் அவருக்கு நம்பிக்கை இல்லை. அவரின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. பின் மே மாதம் 31 1962 நள்ளிரவிற்கு முன் அடால்ப் ஐச்மன் தூக்கிலிடப்பட்டார்.

eelam-fi

இந்த வழக்கு விசாரணையில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தியாக நாம் பார்க்கவேண்டியது, இன அழித்தலுக்கு யூத மக்களால் எப்படி அடால்ப் ஐச்மனை தண்டிக்க முடிந்தது என்றால் யூத மக்களுக்கு என்று தனி நாடும், அரசும், நீதிமன்றமும் இருந்ததால் தான். அதே போன்று ஈழத்தில் நடந்த தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டும் என்றால் தமிழர்களுக்கான ஒரு நாடு அமைந்தால் மட்டுமே அது சாத்தியப்படும். ஆனால் மிகப்பெரிய இனஅழிப்பை சந்தித்த யூத மக்களின் நாடான இஸ்ரேல், இனஅழிப்பை நடத்திய இலங்கை அரசுக்கு துணை நின்றது என்பதுதான் கசப்பான உண்மை. வரலாற்றுப் பக்கங்கள் சில நேரங்களில் இப்படியான விசித்திரப் போக்குகளை கொண்டது.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அடால்ப் ஐச்மன்-வழக்கு விசாரணை ஒரு பார்வை”

அதிகம் படித்தது