அடுக்குமாடி குடியிருப்புகளை (Apartment) வாங்கும்போது பெருநிறுவனங்களை கண்மூடித்தனமாக நம்பலாமா?
வெங்கட்ரமணிDec 13, 2014
சமீபத்தில் கட்டிடங்களை விற்பனை செய்யும் பெருநிறுவனம் ஒன்று பல தவறான காரணங்களுக்காக செய்திகளில் அடிபட்டது. அரசின் கண்காணிப்பு ஆணையங்கள் இந்த நிறுவனத்திற்கு பெருத்த அபராதத்தை விதித்தன. அதற்குக் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சேவைக்குறைவு, ஏகபோக(Monopoly) வியாபாரம் செய்வது போன்றவை சொல்லப்பட்டது. இப்படி அபராதம் விதிக்கப்பட, நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்த வாடிக்கையாளர்களைப் பாராட்டவேண்டும். இப்போது விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் ஏன் முறையாக விசாரனை செய்வதோ,கேள்விகளைக் கேட்டு தகவல்களைப் பெறுவதோ செய்வதில்லை என்பது விந்தையாக உள்ளது. பெருநிறுவனங்களால் கட்டப்படும் கட்டிடங்கள் சிறப்பானதாகவே இருக்கும் என்று நம்புவது இதற்குக் காரணமாக இருக்குமோ?. இந்த விவகாரத்தில் இந்த மனநிலையே பிரச்சனைக்கு முழுகாரணம் என்று அறியப்படுகிறது.
மேலே குறிப்பிட்ட நிறுவனம், நகரத்தின் ஒரு நடுப்பகுதியில் உயரமான அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுவதற்கு அனுமதி பெற்றிருந்தது. அரசின் அனுமதி இத்தனை மாடிகள் மட்டுமே கட்டப்படவேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது. அருமையாக வாடிக்கையாளர்களைக் கவரும் விதமான முப்பரிமாணப் படங்களை நிறுவனம் விளம்பரம் செய்திருந்தது. அந்தப் படங்களைப் பார்த்தால் நகரத்தில் இப்படியும் ஒரு சொர்க்கமா என்று எண்ணும் படியாக இருந்தது. எல்லாம் சிறப்பாக சென்றுகொண்டிருந்த வேளையில் அந்தப் பெருநிறுவனம் தனது மற்றொரு முகத்தைக் காட்டியது. வழக்கம் போல ஒரு சில ஊழல் அதிகாரிகளைக் கையில் போட்டுக்கொண்டு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான மாடிகளைக் கட்டிடத்தில் கொண்டு வந்தது. நாம் முன்னமே சொன்னது போல ஒரு குறிப்பிட்ட கட்டிடத்தில் (அபார்ட்மென்ட்) குடியிருப்புகள் அதிகரிக்கும் பொழுது ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் பிரிக்கப்படாத மனையின் அளவு குறையும். மேலும் புழங்குவதற்கான இடம்,நீர் போன்றவற்றில் பற்றாக்குறை ஏற்படும். இதனால் இந்த கட்டிடத்தில் குடியிருப்பு வாங்கியிருந்த பலர் பெரிதும் பாதிப்படைந்தனர்.
இப்படிப்பட்ட பிரச்சனைகளை எவ்வாறு தடுக்கலாம்?
நாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்னரே கட்டிடம் அனுமதிக்கப்பட்ட வரையறைக்குள்தான் இருக்கவேண்டும்,பிரிக்கப்படாத மனையின் அளவு உறுதிசெய்யப்படவேண்டும் என்று எழுதி கையெழுத்திடவேண்டும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் இவ்வாறு எச்சரிக்கையாக நடந்துகொண்டால் பின்னாளில் ஏற்படும் பல தொல்லைகளைத் தவிர்க்கலாம். நிறுவனங்களும் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு ஒழுங்காக செயல்படும்.
ஆனால் இந்தியாவில் கட்டிடங்களைக் கட்டி,விற்கும் நபரே ஒப்பந்தத்தின் கூறுகளைத் தீர்மானிக்கிறார். வாங்கும் வாடிக்கையாளர்கள் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்திடுகின்றனர். அப்படி யாரேனும் கேள்வி கேட்டால்,“எங்களுடைய நிறுவனம் பெரிய நிறுவனம்,பல ஆண்டுகளாக மக்கள் சேவை செய்துவருகிறது,உங்களுக்கு ஒப்பந்தத்தில் கேள்விகள் இருந்தால் நீங்கள் வேறு நிறுவனத்திற்கு சென்று வாங்கிக் கொள்ளலாம்”என்று நிறுவனத்தினர் அறிவுறுத்துகின்றனர். மேலும் இது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொதுவான ஒப்பந்தம் ஆகும். உங்கள் ஒருவருக்காக எதையும் மாற்றமுடியாது என்று வம்படியாகக் கூறுகின்றனர்.
வீடு வாங்கவேண்டும் என்ற அழுத்தத்தினால் மக்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தலைப்படுகின்றனர். அடுத்ததாக 70 சதவீத முன்பணம் கட்டவேண்டும் என்று கோரிக்கை விடப்படுகிறது. “ஐயோ! என்னால் அவ்வளவு பெரிய தொகையை உடனடியாகக் கட்ட இயலாது.”என்று சொன்னால் அவர்களுடைய பதில் இந்த மாதிரி உள்ளது,
“கட்டிடம் கட்டும் தொழிலைப் பற்றி உங்களுக்கே தெரியும். அதன் மிகப் பெரிய செலவே அடிமனையின் விலைதான். ஒரு நிறுவனம் பெருந்தொகையை செலவிட்டே அந்த அடிமனையை வாங்குகிறது. மேலும் கடன் வழங்கும் பல வங்கிகள் கட்டிடத்தை அங்கீகரித்துள்ளன. ஆகையால் 70 சதவீதம் என்பது குறைவான தொகையே.”என்று வாதிடுகின்றனர். இந்த சூழ்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. கட்டிடம் விரைவில் முடியவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்வதைத் தவிர வேற வழியே இல்லை.
இதற்கு வேறு வழியே இல்லையா?,உள்ளது. முறையான ஆலோசகரிடம் தாம் வாங்கப்போகும் வீட்டைப் பற்றி எடுத்துக்கூறி ஒப்பந்தத்தைக் காண்பித்து சரியான ஆலோசனை பெற்றால் சிக்கல்களிலிருந்து விடுபடலாம். ஆனால் இங்கே அத்தகைய ஆலோசகர்களைத் தேடுவதும் பிரச்சனையாக இருக்கிறது. தேவையான அளவில் அவர்கள் இருக்கிறார்களா என்பது கேள்வியே. வீடு என்பது ஒரு மனிதனின் மிகப்பெரிய முதலீடாக இருக்கும் பொழுது அரசு மக்களைப் பற்றி சிந்தித்து கொள்கைகளை முறைப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் பெருநிறுவனங்கள் வாடிக்கையாளர்களை நிர்பந்தம் செய்வதையும்,சிக்கல்களில் தள்ளிவிடுவதையும் தவிர்க்கமுடியும்.
வீடு மற்றும் மனை வாங்குவதிலும், விற்பதிலும், அவற்றை மதிப்பீடு செய்வதிலும் ஆலோசனைகள் தேவைப்பட்டால் கீழ்காணும் நிறுவனத்தை அணுகலாம்.
BVe Consulting Engineers
Engineering Project Consultancy & Property Advisory Services,
Residential-Commercial-Industrial-Infrastructure Designs
Due-diligence studies -Asset valuation services
Chennai -600 083
bv.consultingengrs@gmail.com
www.bveconsultingengineers.com
வெங்கட்ரமணி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “அடுக்குமாடி குடியிருப்புகளை (Apartment) வாங்கும்போது பெருநிறுவனங்களை கண்மூடித்தனமாக நம்பலாமா?”