ஆகஸ்டு 1, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

அணைக்கும் கரங்கள் (சிறுகதை)

ஸ்ரீதரன்

Sep 9, 2017

Siragu anaikkum karangal2

”பத்மலட்சுமி குழந்தைகள் காப்பகம்“ அன்று கோலாகலமாயிருந்தது. அங்கு ஒரு வயதிலிருந்து நான்கு வயது வரை உள்ள பிஞ்சுக் குழந்தைகள் தன் பிஞ்சுப் பாதங்களுடன் அங்குமிங்கும் குதித்தோடிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்துக் கொள்ளும் ஆயாக்களோ மூச்சு வாங்க அவர்கள் பின்னால் ஒடிக்கொண்டிருந்தனர். மேடை போட்டு பந்தல் கட்டி வண்ண வண்ண பலூன்களால் அலங்கரித்து விழா ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. பார்வையாளர்கள் உட்கார நாற்கலிகள் வரிசையாகப் போடப்பட்டிருந்தன. ஒரு ஆயா இன்னொரு ஆயாவைக் கேட்டாள், ”இன்னைக்கு என்ன விசேசம்? நம்ம டாக்டர் அம்மாவுக்குப் பிறந்த நாளா?

நீ வேறே…………. இன்னிக்குக் குழந்தைகள் காப்பகத்தின் மூன்றாவது ஆண்டு முடிந்து நான்காவது ஆண்டு ஆரம்பிக்கிறதாம். டாக்டர் அம்மாவைப் போல இந்த உலகத்திலே யாரும் இருக்க மாட்டாங்க. தன்னலம் கருதாமே இந்த அநாதை குழந்தைகள் காப்பகத்தை நடத்திக்கிட்டு இருக்காங்க.”.

அப்போது டாக்டர் அகிலா ஆண்டு விழா வேலை எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என்பதைப் பார்பதற்காக அங்கே வந்தாள். அவளைப் பார்த்ததும் பல குழந்தைகள் அவளிடம் ஓடி வந்தன. ஒரு குழந்தை குறுகுறு நடை நடந்து சிறுகை நீட்டி டாக்டரின் புடவையைப் பிடித்து இழுத்து மழலையில் மிழற்றியது. டாக்டர் பூ போன்ற அந்த மென்மையான குழந்தையைத் தூக்கித் தாய்ப் பாசத்துடன் கொஞ்சினாள்.ஒரு குழந்தைக்குப் பாட்டிலிலே பால் கொடுத்துக் கொண்டிருக்கிற ஆயாவிடம், “குழந்தையை நல்லா கவனிச்சுக்கங்க ஆயா.” என்றாள்.

தரவற்ற அநாதை குழந்தைகளை அரவணைத்து அக்கறையோடு கவனித்துக் கொள்ளும் ’பத்மலட்சுமி குழந்தைகள் காப்பகத்தை டாக்டர் அகிலா பொறுப்பேற்று நடத்தி வருகிறாள். அந்த காப்பகத்தில் எல்லா அடிப்படை வசதிகளும் உண்டு. இரண்டு எம்பிபிஎஸ் டாக்டர்கள் நிரந்தராமாக அங்கு பணி செய்கின்றனர். பெண் வார்டன் உண்டு. நாலு ஆயாக்கள், நான்கு செவிலியர்கள் உண்டு. டாக்டர் அகிலாவுக்கு தெரிந்தவர்கள் எல்லாம் ஆண்டு விழாவிற்கு வந்து விட்டனர். விழாவுக்குத் தலைமை தாங்க இருக்கும் மாவட்ட ஆட்சியாளர் ஜெயந்தி ஐ.ஏ.எஸ் வந்ததும் விழா துவங்கியது.

மாவட்ட ஆட்சியாளர் ஜெயந்தி தன் தலைமையுரையில் பேசியதாவது, ”இந்தக் காப்பகத்தை கட்டிக் காத்து வரும் காப்பாளரும் டாக்டருமான அகிலா சாதாரணமானவர் அல்ல, அன்புத்தெய்வம். பிறருக்காக அவதரித்தவர், இவ்வுலகில் தான் ஈட்டிய பெரும்பொருளை எல்லாம் கைம்மாறு கருதாமல் பிறர் வாழ தம் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட நங்கை.

இந்த காப்பகத்தின் ஆண்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பை எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையையும் அடைகிறேன். தாயின் இதயமும் தலைவியின் உள்ளமும் கொண்ட டாக்டர் அகிலா இச்சிறார்களின் மழலை மொழிகளைக் கேட்டும் ஆனந்தப்படுவதிலேயும், பச்சிளம் தளிர்களை வளர்ப்பதுவும் தன் பிறவிப் பயன் என்று கருதி வாழ்ந்து கொண்டிருக்கிறார்.அவரை மனிதக் குலத்தின் தோழி என்று கூறினால் மிகையாகாது.

இந்தக் குழந்தைகள் பண்புள்ள குழந்தைகளாக வளர்ந்து ஒழுக்கமும் நல்ல கல்வியும் பெற்று நாட்டுக்கு நல்ல பயன் தரும் மக்களாக வாழ வாழ்த்துகிறேன்.” என்று தன் உரையை முடித்தார்.

Siragu anaikkum karangal1

”டாக்டர் ஏன் தன் பணத்தைச் செலவழித்து குழந்தைகள் காப்பகத்தை நடத்த வேண்டும்? அதில் ஏதோ மர்மம் இருக்கிறது. நன்கொடையாய் வரும் பணத்தில் மேலும் சொத்து வாங்கிச் சேர்ப்பார்” என்று வம்பர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். ”தவறான வழியில் குழந்தையைப் பெற்ற பெண்கள் இங்கே வந்து குழந்தையை வீசி விட்டு போகிறார்கள்” என்று ஒரு பெண் பக்கத்திலிருந்தவளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். குற்றம், குறை சொல்லுவார் சிலர். இது மனித இயல்பு. அதைப் பொருட்படுத்தினால் பொதுச்சேவை செய்ய முடியாது.

டாக்டர் அகிலா உரையாற்ற மேடையில் வந்து நின்றார். பார்வையாளர்களைப் பார்த்துப் புன்முறுவலித்துவிட்டு மலர்ந்த முகத்துடன் பேச ஆரம்பித்தார்.

என் தந்தையார் திரு. பத்மநாபன் எனக்கு நல்ல கல்வி அளித்து என்னை டாக்டர் படிப்பு படிக்க வைத்தார். அவர் மரண படுக்கையில் இருக்கும் போது என்னிடம் ”என்னை மன்னித்து விடு அகிலா. ஒரு ரகசியத்தை உன்னிடம் சொல்லாமல் மறைத்துவிட்டேன்.”என்றார் .”என்ன விசயம் அப்பா” என்றேன்.

“நீ பிறந்தவுடன் உன்னைப் பெத்த அம்மா இரக்கமில்லாமல் அரசாங்க ஆஸ்பிட்டல் முன் உன்னை வீசிவிட்டுப் போய்விட்டாள். உன்னை தத்து எடுத்து வளர்த்தோம்” என்றார். நான் அதிர்ச்சியுடன், “ஏன் இதுவரை என்னிடம் சொல்லவில்லை?” என்று கேட்டதற்கு, ”நீ வருத்தப்படுவாய் என்பதால்தான் சொல்லவில்லை. உன் அம்மாவும் வானுலகம் போய்விட்டாள். நா…னு….ம்—–“ என்று சொல்லும்போதே அவர் உயிர் உடலை விட்டுப் பிரிந்தது.

நான் அநாதை என்ற எண்ணமே என்னை மிகவும் வாட்டியது. தூக்க மாத்திரை சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தேன். சாவதற்கு முன் தந்தையின் அறைக்குக் கடைசி முறையாய் அவர் புகைப்படத்தைக் காணச் சென்றேன். அப்போது அவரது மேசையின் மேலிருந்த ”சகோதரி நிவேதிதை வாழ்க்கை வரலாறு” என்னும் புத்தகம் என்னைப் படிக்கத் தூண்டியது. என்னை மறந்து புத்தகத்தில் மூழ்கி விட்டேன். அயர்லாந்தில் பிறந்த சகோதரி நிவேதிதை. விவேகானந்தர் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 1898ம் வருடம் இந்தியா வந்து இந்திய பெண் குழந்தைகளுக்காக ஒரு பள்ளியை ஆரம்பித்து இருக்கிறார். அமெரிக்காவிலிருந்து நிதி திரட்டி பள்ளியை நடத்தினார். பல சமூகப் பணிகளில் தன்னை அர்பணித்தார். நாற்பத்து நான்கு வயதாகும்போது கல்கத்தாவில் இறந்தார். தன் சொத்துகளையும் நூல்களையும் இந்தியப் பெண்களுக்கு தேசியக் கல்வி வழங்க உயில் எழுதி வைத்தார். நிவேதிதை ஏழைகளுக்குச் செய்த சேவை என்னை மிகவும் கவர்ந்தது. வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து இந்தியர்களுக்காக அவர் ஆற்றின தொண்டு என்னை பிரமிக்க வைத்தது.

அந்தப் புத்தகம் என்னுடைய வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது, வாழ்க்கைக்கு வழி காட்டியது.நிவேதிதையின் வாழ்க்கை சரிதத்தைப் படித்தவுடன் அவரைப் போல்மனிதத் தொண்டு செய்ய வேண்டும் என உறுதிமொழி எடுத்தேன். தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று இருந்த என் மனநிலை மாறிவிட்டது. அப்போது வீட்டில் செய்தித்தாள் வந்து விழுந்தது, பிறந்த பச்சிளங் குழந்தை சாலை ஓரத்தில் ஒரு துப்பட்டாவில் வைக்கப்பட்டுக் கிடந்தது என்னும் திடுக்கிடுட வைக்கும் செய்தியை படித்த எனக்கு நான் ஏன் இந்த பூமியில் பிறந்தேன் என்பது புரிந்தது. ஆம், கடவுளே வழிகாட்டி விட்டார்! தான் பெற்ற குழந்தைகளை தானே அநாதை ஆக்குவது கொடுமையிலும் கொடுமை. அந்த அவல நிலை யாருக்கும் வரக் கூடாது என்பதால் எனக்கு அப்பாவின் மூலம் வந்த சொத்தையெல்லாம் அறகட்டளைக்கு மாற்றி மறைந்த என் அப்பா அம்மாவின் பெயரைச் சேர்த்து ”பத்மலட்சுமி குழந்தைகள் காப்பகம்” என்னும் பெயரில் ஆதரவற்ற அநாதை குழந்தைகளுக்காக காப்பகம்  ஆரம்பித்தேன்.

Siragu anaikkum karangal3

உலகில் பிறந்த ஒவொரு மனிதரும் தான் வாழ்தலைப் போல் பிறரையும் வாழச் செய்தல் வேண்டும். இதுவே பிறவிப் பயனின் நோக்கம் மனிதன் மனிதருக்காக வாழ வேண்டும். இந்த மனித நேய அடிப்படையில் தோன்றியதுதான் இந்த காப்பகம்.

மூன்று வருடங்களுக்கு முன்பு குப்பைத் தொட்டியில் வீசி எறியப்பட்ட பதினைந்து நாள் பச்சிளம் குழந்தையுடன் ஆரம்பிக்கப்பட்ட காப்பகம் இப்போது ஐம்பது குழந்தைகளுடன் வளர்ந்திருக்கிறது. சகோதர, சகோதரிகளே, குழந்தை என்பது கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். தயவு செய்து அதைச் சாலையின் ஓரத்தில் வீசி எறிந்துவிட வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். காப்பகத்தின் நுழைவில் ஒரு கண்டா மணி இருக்கிறது. அதனருகில் ஒரு தொட்டில் இருக்கிறது. கிடைத்தற்கரிய குழந்தைச் செல்வத்தை வேண்டாம் என்று மறுப்பவர்கள் குழந்தையை தொட்டிலில் வைத்து விட்டு கண்டாமணியை ஒலித்துவிட்டால் போதும். நாங்கள் ஓடிவந்து குழந்தையை எடுத்து அன்புடன் அணைத்துக் கொள்வோம். எங்கள் மனிதத் தொண்டு எப்போதும் தொடரும். வாழ்க சகோதரி நிவேதிதா”என்று அவர் உரையை முடித்ததும் கரவொலி எழும்பியது. எங்கும் வாழ்த்தொலி முழங்கத் தொடங்கின. டாக்டர் அகிலாவைக் கட்டிப்பிடித்துப் பாராட்ட எழுந்த பெண்களால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது “டாங், டாங், என்று கண்டா மணி ஒலித்தது. ஒரு செவிலித்தாய் கண்டாமணியை நோக்கி ஓடினாள்.


ஸ்ரீதரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அணைக்கும் கரங்கள் (சிறுகதை)”

அதிகம் படித்தது