ஆகஸ்டு 1, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

அண்டை மாநிலங்களில் கையேந்தும் நிலைக்கு எப்போது வைப்போம் முற்றுப்புள்ளி?

சு.நாகராஜன்

Sep 24, 2016

நெய்யாறு பிரச்சினைக்கு மாற்றுவழி காட்டும் முல்லையாறு அணைத் திட்டம்.

siragu-neyyaaru4

தமிழகம், கர்நாடக மாநிலங்கள் பதை பதைத்துக் கிடக்கின்றது. நீதிமன்ற வழிகாட்டுதலையும் தாண்டி, போராடித்தான் காவிரித் தாய், தமிழகம் வந்து பாய்கின்றாள். இருந்தும் கர்நாடகம் முழுவதும் எத்தனை பதற்றம்? கர்நாடகத்தில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் பலவும் தீக்கிரையாக்கப்படுவது தொடங்கி, தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியைச்சேர்ந்த விக்னேஷ் என்னும் வாலிபன் தன்னுயிரையே மாய்த்துக் கொண்டது வரை பட்டியல் போட இங்கே சங்கதிகள் அதிகம்.

காவிரியில் தமிழகத்தின் உரிமையை கன்னடர்கள் மறுப்பதற்கு கண்டனக்குரல்கள் நாம் எழுப்பிக் கொண்டிருக்கும் இந்த நிலையில்தான் தமிழக அரசும் சில விடயங்களில் கவனம் செலுத்த வேண்டிய சூழல் எழுந்துள்ளது. அவைகளில் முக்கியமான ஒன்றாக மாறி நிற்கின்றது குமரி மாவட்டத்தின் நெய்யாறு இடதுகரை கால்வாய் விவகாரம்.

தமிழக, கேரள எல்லையோர விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் அமைக்கப்பட்டிருந்த நெய்யாறு இடது கரை கால்வாய் நீரை கேரள அரசு நிறுத்தி 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றது. இதனால் தமிழகத்தின் விளவங்கோடு வட்டத்தில் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது. வைக்கோல் தட்டுப்பாட்டால் கால்நடை வளர்ப்பும்கூட வெகுவாகக்குறைந்துபோனது. இந்த சூழ்நிலையில் நெய்யாறு நதி நீர் பிரச்சினைக்கு மாற்றாக முல்லையாறு_பல்லிக்கூட்டம் அணைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர் விவசாயிகள். அதே நேரத்தில் தண்ணீரை கேரளத்திடம் இருந்து பெறவே முடியாது என்ற நம்பிக்கையோ என்னவோ இந்த இடதுகரை கால்வாயைக் கூட பொதுப்பணித்துறையினர் முறையாக பராமரிக்காமலும், ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும், தண்ணீர் வந்தாலும் பலன் தருமா என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். தமிழகம், கேரளத்துக்கு இடையே இது தொடர்பான தண்ணீர் பங்கீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகின்றது.

OLYMPUS DIGITAL CAMERA

தமிழக – கேரள எல்லையோர விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் 1963-ம் ஆண்டில் இரு மாநிலங்கள் சார்பிலும் கால்வாய் வெட்டப்பட்டு தண்ணீர் திறக்கப்பட்டது. அன்றிலிருந்து 2003 வரை எந்தப்பிரச்சினையும் இல்லாமல் தண்ணீர் பங்கிடப்பட்டு வந்தது. 2003ல் கேரளா, கேரள நீர் ஆதாரங்களிலிருந்து, பிற மாநிலங்களுக்கு தண்ணீர் விநியோகிக்கக்கூடாது என்று சட்டம் பிறப்பித்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதை கேரளம் நிறுத்தியது. இப்போது நெய்யாறு இடதுகரை கால்வாய் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. 40 ஆண்டுகளாக வந்துகொண்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டதால் விளவங்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் இனிமேல் வரவே வராது என நினைத்து விட்டார்களோ என்னவோ, கால்வாயை தூர்வாராமலும், பல இடங்களில் உடைப்புகளை சரிசெய்யாமலும் அப்படியே விட்டு விட்டனர். நெய்யாறு நதி நீர் பிரச்சினை தீராத தலைவலியாக உள்ள நிலையில், இப்போது இந்த நீர் தேவைக்கு மாற்று வழி காட்டும் வகையில் முல்லையாறு_பல்லிக்கூட்டம் அணையை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்கின்றனர் விவசாயிகள்.

கன்னியாகுமரி மாவட்டத் தலைநகர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டங்களில் இது தொடர்பாக கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக மனு கொடுத்தும், அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசியும் வருகின்றனர் விவசாயிகள். அவர்களில் சிலரிடம் பேசியதில் இருந்து,’’நெய்யாறு நதி நீர் இல்லாமல் விளவங்கோடு வட்டத்தில் நெல் விவசாயமே இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. துவக்க காலங்களில் இப்பகுதியில் வயல் ஓரங்களில் மட்டுமே நடப்பட்டு வந்த ரப்பர், தண்ணீர் தட்டுப்பாட்டால் நெல் விவசாயத்தையே ஒழித்து கட்டி விட்டு, வயல் பரப்பையும் வியாபித்து விட்டது. இதோ இப்போது ரப்பருக்கும் உற்பத்திக்கு ஏற்ற உரிய விலை இல்லை. கால்நடை வளர்ப்பும் சரிந்து போனது. இந்த சூழலில் தான் காலத்தின் கட்டாயம் இப்புதிய அணையின் தேவைக்கு சாட்சியமாக உள்ளது. இப்புதிய அணைக்கு ஏற்ற இயற்கை சூழலும் இங்கு இயல்பிலேயே உள்ளது.

siragu-neyyaaru2

இயற்கை எழில் கொஞ்சும் மாங்கோடு மலைச்சரிவில் உற்பத்தியாகும் முல்லையாறு தண்ணீரானது சற்றேறக்குறைய இருபது கிலோ மீட்டருக்கு மாங்கோடு, பல்லிக் கூட்டம், மாலைக்கோடு, சிறக்கரை, கோவில் நடை, அண்டுகோடு, பேரை, கடமக்கோடு ஆகிய பகுதிகளின் வழியே பாய்ந்து, திக்குறிச்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றுடன் கலக்கின்றது. இந்த இயற்கை கால்வாயில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரத்தும் உள்ளது. குமரி மாவட்டத்தில் தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை காலங்களில் இங்கு கூடுதல் தண்ணீர் செல்லும். இந்த கால்வாயில் 14 இடங்களில் தொடக்கக்காலத்திலேயே சின்ன, சின்ன தடுப்பணைகள் கட்டப்பட்டிருந்தன. ஆனால் 1992ல் வந்த பெருமழையில் இந்த தடுப்பணைகள் சேதம் அடைந்து விட்டன. ஒவ்வொரு ஆண்டும் தொடர் மழையின் போதும், முல்லையாற்றின் கரையோர பகுதிகளில் பெரும் சேதமும் உண்டாகின்றது.

1986ம் ஆண்டிலேயே மாலைக்கோடு அருகில் பல்லிக்கூட்டம் அணை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு, அப்பகுதியில் பாறைகள் துளையிடப்பட்டு உறுதித்தன்மை ஆய்வும் நடத்தப்பட்டது. ஆனால் தொடர்ந்து அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. 2005ம் ஆண்டு தடுப்பணை கட்ட மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டது. முல்லையாறு_பல்லிக் கூட்டம் தடுப்பணை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தினால் நெய்யாறு நதி நீர் கேட்டு கேரளாவிடம் கையேந்தாமல், விவசாயத்தை காக்க முடியும்.”என்கின்றனர்.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளோ,’’பல்லிக் கூட்டத்தில் முல்லையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி, நெய்யாறு கால்வாயின் முல்லையாறு கிளை கால்வாய்க்கு திருப்பி விடும் திட்டத்துக்கு 107.50 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து பொதுப்பணித்துறை ரீதியிலான பரிசீலனைக்கு உள்ளது.”என்கின்றனர்.

நெய்யாறு விவகாரத்தைப் பொறுத்தவரை மாற்றுத் திட்டத்தை செயல்படுத்தினாலே அண்டை மாநிலத்திடம் கையேந்தும் நிலை இருக்காது என்பதே விவசாயிகளின் கருத்தாகும்.

Understanding android tracking apps choosing the features for the best tracking app for android devices can take a little foresight and research, but it is essential to make an educated http://www.spying.ninja choice for the protection of your child

சு.நாகராஜன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அண்டை மாநிலங்களில் கையேந்தும் நிலைக்கு எப்போது வைப்போம் முற்றுப்புள்ளி?”

அதிகம் படித்தது