செப்டம்பர் 19, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

அண்ணல் அம்பேத்கர்!

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Dec 8, 2018

siragu ambedkar1

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 63 வது நினைவு நாள். இந்து மத எதிர்ப்பை தன் வாழ்வியலாகவே கொண்டு பார்ப்பனியத்தை, அது ஏற்படுத்திய நான்கு வர்ணங்களை அதன் புரட்டை, பௌத்தம் என்ற பகுத்தறிவு பண்பாட்டை பார்ப்பனர்கள் எப்படி அழித்து ஒழித்தனர் என்பதை மக்களுக்கு தோலுரித்துக் காட்டியவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.

அண்ணல் ஏற்படுத்திய அமைப்பைப் பற்றி அண்ணல் அவர்களே கூறும்போது,

“நம்முடைய அமைப்பு நமது குறைபாடுகளை மட்டுமே போக்குவதற்கான அமைப்பு அல்ல. மாறாக, அது ஒரு சமூகப் புரட்சியை உருவாகும் நோக்கம் உடையது. அந்த சமூகப் புரட்சியானது, சமூக உரிமைகளைப் பொறுத்தவரையில் மனிதர்களுக்கிடையே எந்தப் பாகுபாடும் காட்டாததாக இருக்கும். அதோடு, வாழ்வின் உச்சபட்ச நிலையை எட்டும் வாய்ப்பை அனைவருக்கும் சமமாக அளிப்பதன் மூலம், சாதி உருவாக்கியுள்ள செயற்கைத் தடைகளை நீக்கக்கூடிய ஒரு புரட்சியாகவும் அது இருக்கும். நமது அமைப்பானது ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் இவற்றிற்குமான அமைப்பே ஆகும். நாம் நமது அமைப்பை அந்த அளவிற்கு அமைதியாகவே கொண்டு செல்ல விழைகிறோம். இருப்பினும் வன்முறையின்றி இருக்க வேண்டும் என்ற எங்கள் உறுதியானது எங்கள் எதிரிகளின் மனப்போக்கைப் பொறுத்தே உள்ளது.

இருண்ட காலத்தில் உருவாக்கப்பட்ட சாஸ்திரங்களாலும், ஸ்மிருதிகளாலும் கட்டுப்படுத்தப்படுவதை நாங்கள் ஏற்க மறுக்கிறோம். மாறாக, எங்களை நீதி மற்றும் மனித நேயத்தின் அடிப்படையில் கட்டமைத்துக் கொண்டுள்ளோம். தீண்டத்தகாதவர்கள், வர்ணாசிரமம் ஒழிய வேண்டும் என விரும்புகின்றனர். உரிமைகள், பொறுப்புகள் மற்றும் சமூக நிலை ஆகியவை பிறப்பு என்ற விபத்தின் அடிப்படையில் அல்லாமல், தகுதியின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என்றும் அவர்கள் விழைகின்றனர். தீண்டத்தகாதவர்கள் ஒரு மிகப் பெரிய சமூகப் புரட்சியை தங்கள் லட்சியமாகக் கொண்டுள்ளனர்.”

என அண்ணல் அம்பேத்கர் 1927 மகத் குளப் போராட்டத்தின்போது கூறினார்.

இந்து மதத்தைப் பற்றிக் கூறும்போது, மிக அருமையாக அண்ணல் அவர்கள் ஒரு கருத்தினை முன்வைப்பார்கள். அதாவது அனைவரும் இந்துக்களே என்ற உணர்வினை அதை பின்பற்றும் மக்களிடத்தில் ஏற்படுத்தவில்லை. மாறாக அவர்களிடம் இருப்பது சாதி உணர்வு தான் எனத் தெளிவாகக் கூறுவார்கள். சாதி என்பது எப்படி இந்தியச் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி உள்ளது என்பதை “caste is a graded inequality” என்பார். அதே போன்று சமூக சீர்த்திருத்தமே அரசியல் சீர்திருத்தத்திற்கு முன்னோடியாக இருக்க முடியும் என்பதை பல எடுத்துக்காட்டுகளுடன் நிறுவியுள்ளார். சந்திரகுப்தா மவுரியரால் நடத்தப்பட்ட அரசியல் புரட்சிக்கு புத்தரின் மதப் புரட்சியும் சமுதாய புரட்சியும் முன்னோடியாக இருந்தது. மகாராட்டிர துறவிகளால் ஏற்பட்ட மதச் சீர்த்திருத்தமும், சமுதாய சீர்த்திருத்தமுமே சிவாஜியால் ஏற்பட்ட அரசியல் சீர்த்திருத்தத்திற்கு முன்னோடியாக அமைந்தது என்பதன் மூலம் சமுதாய சீர்த்திருத்தத்தின் இன்றியமையாமையை கூறுகின்றார்கள். அதையே நம் தமிழ் நாட்டில் பொருத்திப் பார்க்கின்றபோது, பார்ப்பனர் அல்லாதோர் படிப்பறிவு பெற்று ஆட்சியில் அமர தந்தை பெரியார் ஏற்படுத்திய சமூக புரட்சியும், மக்களின் மனநிலை மாற்றமும் காரணம் என்றால் மிகையல்ல.

siragu ambedkar2

சாதிக்கு ஆதரவாக வைக்கப்படும் வாதங்களை தன்னுடைய அறிவுத்திறத்தால் உடைத்துப்போட்டவர் அம்பேத்கர். சாதி அமைப்பு என்பது தொழில் பிரிவினையின் மறு பெயரே, நாகரீகச் சமுதாயம் ஒவ்வொன்றிலும் தொழில் பிரிவினை என்பது, தேவையான ஓர் அம்சமாக உள்ளது, எனவே சாதி அமைப்பில் தவறேதும் இல்லை என்னும் வாதம் உள்ளது. இந்த வாதத்துக்கு எதிராக வலியுறுத்திக் கூறப்பட வேண்டிய முதல் செய்தி என்ன என்றால். சாதி அமைப்பு தொழில்களை மட்டும் பிரிப்பதில்லை, தொழிலாளர்களையுமே அது பிரித்து விடுகிறது. நாகரீகச் சமூகத்திலும் தொழில் பிரிவினையானது தொழிலாளர்களை ஒரு செயற்கையான முறையில், இறுக்கமான தனித்தனி தீவுகளாகப் பிரித்து விடுவது இல்லை. தொழிலைப் பிரிப்பது என்பது வேறு, தொழிலாளிகளைப் பிரிப்பது என்பது வேறு. சாதி அமைப்பானது தொழிலாளிகளை வெறுமனே பிரிக்கின்ற அமைப்பு மட்டுமல்ல, தொழிலாளிகளை மேல் கீழ் என்று ஏற்றத்தாழ்வாக படிநிலை அமைப்பாக வகைப்படுத்தும் அமைப்பு ஆகும். இதுபோல தொழிலாளிகளை ஏற்றத் தாழ்வாக வகைப்படுத்துகிற தொழில் பிரிவினை, வேறு எந்த நாட்டிலும் இல்லை என்று தெளிவாக சாதிய பிரிவினைகளை எடுத்து இயம்புகின்றார்.

அதே போன்று சாதியின் தோற்றத்திற்கு இனமேம்பாடே அடிப்படை என்றால், கலப்புமணம் தடை செய்யப்பட்டு இருப்பது ஏன் என்று புரிந்து கொள்ள முடியும்? ஆனால் சாதிகளுக்கு இடையிலும் உட்சாதிகளுக்கு இடையிலும் சமபந்தி தடை செய்யப்பட்டு இருப்பதன் நோக்கம் என்ன? சமபந்தியால் இரத்தத் தூய்மை கெட்டு விடுமா? எனவே அது இனத்தின் மேம்பாட்டுக்கோ, சீர்கேட்டுக்கோ காரணமாக இருக்க முடியாது. எனவே சாதியின் தோற்றத்திற்கு அறிவியல் அடிப்படை ஏதும் இல்லை.

இப்படி இந்து மதத்தின் அடிப்படையாக இருக்கும் சாதியை தன் வாழ்நாள் முழுவதும் அதன் கயமைத்தனத்தை மக்களுக்கு எடுத்துக்கூறி இந்து மதம் ஒழியாத வரை சாதியை ஒழிக்க முடியாது என்று ஆணித்தரமாகக் கூறியவர். மேலும் நான் இந்துவாக பிறந்திருக்கலாம் ஆனால் நான் ஒரு இந்துவாக சாக மாட்டேன் என புத்த மதத்திற்கு மாறியவர் அண்ணல் அம்பேத்கர். இந்திய வரலாறு என்பது ஆரியத்திற்கும் பௌத்தத்திற்கும் நடந்த போர் தான் என்று ஆதாரப்பூர்வமாக விளக்கிக்காட்டியவர். தன் இறுதி நாட்களில், தன்னுடைய உதவியாளரிடம் அண்ணல் இவ்வாறு கூறினார்.

என் மக்களுக்குச் சொல் நானக்சந்த், என் மக்களுக்காக நான் சாதித்தவைகளெல்லாம், தனி ஆளாக நின்று கொடுமையான துயரங்களையும், முடிவற்ற சிரமங்களையும் கடந்து எல்லா பக்கங்களிலிருந்தும், குறிப்பாக இந்துப் பத்திரிக்கைகளிடமிருந்து வந்த அவதூறுகளுக்கு எதிராகவும், என் எதிரிகளுக்கு எதிராகவும் என் வாழ்நாளெல்லாம் போராடிப் பெற்றவையே.

என்னோடு சேர்ந்து போராடிய சிலரும் இப்போது தங்களது தன்னலத்திற்காக என்னை ஏமாற்றத் துணிந்து விட்டனர்.

ஆனால் என் வாழ்நாளின் இறுதி வரை ஒடுக்கப்பட்ட எனது சகோதரர்களுக்காவும், இந்நாட்டிற்காகவும் எனது பணியைத் தொடர்வேன்.

என் மக்கள் பயணிக்கும் இந்த ஊர்தியை மிகவும் சிரமப்பட்டே இப்போது இருக்கும் இடத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறேன். வழியில் வரும் தடைகளையும் மேடு பள்ளங்களையும், சிரமங்களையும் பொருட்படுத்தாமல் இந்த ஊர்தி முன்னேறிச் செல்லட்டும். மாண்புடனும், மரியாதையுடனும் என் மக்கள் வாழ நினைத்தால், இச்சமயத்தில் அவர்கள் கிளர்ந்தெழ வேண்டும். என் மக்களும், என் இயக்கத்தினரும் அந்த ஊர்தியை இழுத்துச் செல்ல முடியாது போனால், அது இப்போது எங்கே நிற்கிறதோ அங்கேயே அதனை விட்டு விட்டுச் செல்லட்டும். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் அந்த ஊர்தியைப் பின்னோக்கித் தள்ளிவிட வேண்டாம். இதுவே என் செய்தி.

உண்மையில் எல்லா வகைகளிலும் தீவிரம் மிகுந்த எனது இந்தக் கடைசிச் செய்தி நிச்சயமாக கவனிக்கப்படாமல் போகாது. போய் என் மக்களுக்குச் சொல்; போய்ச் சொல்; போய்ச் சொல்”. என்றார்.

இதுவே அண்ணலின் இறுதி செய்தி. 1956 டிசம்பர் 6 நம்மை விட்டு அண்ணல் மறைந்தார். ஆனால் அவர் தந்துவிட்டுப்போன கொள்கைகள் இன்றும் உயிர்ப்போடு உள்ளது. அவரை இந்துத்துவ அம்பேத்கர் என ஆர்எஸ்எஸ் விழுங்க நினைத்தாலும் அதை செயற்படுத்த முடியாமல் அண்ணலின் கருத்துகளை இன்னும் வேகமாக கொண்டு செல்ல வேண்டிய காலத்தில் உள்ளோம். அந்தப்பணியை செய்வோம் என அண்ணலின் நினைவு நாளில் உறுதி ஏற்போம்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அண்ணல் அம்பேத்கர்!”

அதிகம் படித்தது