மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அண்ணல் சிதம்பரனாரும் சைவமும்

காசி விசுவநாதன்

Sep 1, 2012

” தொன்மையாவும் எனும் எவையும் நன்று ஆகா ; இன்று
தோன்றியநூல் எனும் எவையும் தீது ஆகா….., ”
—— சிவப்பிரகாச நூல் அருளிய அருட்திரு உமாபதி சிவாச்சாரியார்.
அண்ணல் சிதம்பரனார் அவர்களின் தேசியப்பணியின் ஊடாக அவரது பன்முகத் தன்மை வாய்ந்த பல அறிய செயல்கள் குறித்து இவ்வுலகம் பாராமுகமாகவே இருந்துள்ளது. வழக்குரைத்தல் அவரது தொழில். அதன் நீட்சியே அவரது இந்திய விடுதலை குறித்த பார்வையும், சமூக, பொருளாதார மாற்றம் காணவேண்டிய தொலை நோக்கு சிந்தனையும், அதன் ஊடாக தான் பிறந்து வளர்ந்த மதம்,வழிபாடு குறித்த சீர்திருத்த சிந்தனையும் என்பது, அவரது சம காலத்து மனிதர்களின் பார்வையிலும் சார்பு மற்றும் முரண்பாடு கொண்ட நிகழ்வுகள் தரும் செய்தி.

இது தவிர்த்து இலக்கியத்தில் மனக்குடவர் உரையுடன் கூடிய திருக்குறள் பதிப்பு, அமெரிக்க அறிஞர் ஜேம்சு ஆலன் நூல்களின் மொழிபெயர்ப்பு , தொல்காப்பியம் – இளம்ப்புரணர் உரையுடன் எழுத்து, பொருள் அதிகாரம் பதிப்பு, அகவற்பாவில் தன்வரலாறு, இலங்கை வீர கேசரியில் – திலகமகரிஷி வரலாறு, தானே எழுதிய பாடல் திரட்டு என்று இலக்கிய உலகில் முன்னோடியாகவும், மெய்கண்ட நாயனார் எழுதிய சிவஞானபோதத்திற்கு 1935ம் ஆண்டு உரையும் எழுதி சைவக் கருத்தியல் உலகிலும் தம் தடம் பதித்தவர். இது பிற்கால அரசியல் காரணங்களால் அவரது புகழ்,பணி இரண்டும் இருட்டில் அடைக்கப்பட்டது. அவரது படைப்புகள் மிகச்சில அறிஞர் பெருமக்களாலேயே பாதுகாக்கப்பட்டது, புரிந்துகொள்ளப்பட்டது.
மதமும் மொழியும் :

அண்ணல் சிதம்பரனார் தாம் பின்பற்றிய மத நெறியில் வழுவாதும், தான் சார்ந்த நெறியில் குறையிருப்பின் நழுவாது சீர் செய்தலும் தம் கடமையாகவே உணர்ந்தார். சைவம் தமிழகத்தின் தனிப்பெரும் மத நெறியாகவும், பல ஆதீனங்கள் கொண்ட கட்டமைப்பும் கொண்ட நிறுவணமாக இயங்கிய காலத்தில், அதன் சமூக வாழ்வியல் தாக்கம், ஆகம நெறி முறைகள் என்ற பல முக்கிய கூறுகளை சீர்திருத்தம் செய்ய முயன்ற முன்னோடிகளாக திருச்சி தாயுமானவ சுவாமிகளும், இராமலிங்க வள்ளலாரும் ஒரு சமரச சீர்மை செய்ய முயன்றனர். தாயுமானவரின் காலம் வள்ளலாருக்கு முந்தையது. வள்ளலார் காலத்தில் 18ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கனிந்த காலச் சூழலை அவர் இயன்றவரை புதுமை செய்தார். அவரது திருவருட்பாக்கள் மருட்பாக்கள் என்று கடுஞ்சைவர்களால் தூற்றப்பட்டது, பரப்புரை செய்யப்பட்டது. இந்த காலகட்டத்தில் ஒரு அரை நூற்றாண்டு பின் வந்த அண்ணல் சிதம்பரனாரும் தன் மனதில் பட்ட செயல்களை சமுதாயத்தில் பதிவு செய்தார். அதுவே கடுஞ்சைவருலகில் அவரை ஒதுக்குவதற்கு காரணமானது. அவரது மிகச் சில நண்பர்களால் மட்டுமே புரிந்துகொள்ளப்படது. அவர் ஆற்றிய உரைகள் கண்டனத்திற்கு உள்ளானது. மிகுந்த விவாதங்கள் உருவாகின. ஆனால், அண்ணல் தன் நிலை அறிவித்து ஒரு சலனத்தையும் கடுஞ்சைவருலகில் உண்டாக்கியது ஒரு மாபெறும் வெற்றியே. அன்று வழக்காடும் உரிமை இழந்து தினப்படி வாழ்விற்கும் தன் குடும்பத்துடன், சென்னையிலும், கோவையிலு,சேலத்திலும் பட்ட துயரத்திலும் நேர்மை குன்றாத நெஞ்சுரம் மேற்படி

” தொன்மையாவும் எனும் எவையும் நன்று ஆகா ; இன்று
தோன்றியநூல் எனும் எவையும் தீது ஆகா….., “

என்ற உமாபதி சிவாச்சாரியாரின் பாடலுக்கு பொருளாய் விளங்கினார்.

மொழியிலும் நேர்மையான சிந்தனைகள் கொண்டிருந்தார். 1915ம் ஆண்டில் “ஞானபானு” என்ற இதழில், தமிழில் எழுத்துக்குறை என்ற தலைப்பில் தமது அருமை நண்பரும், எந்து மாமனார் என்று பெருமைகொண்ட பாரதியார் எழுதிய கட்டுரைக்கு, உறவு, நட்பு என்ற எந்த ஒரு பற்றுதலையும் முன் வைக்காமல் நீண்ட மறுப்புக்கட்டுரை எழுதினார். அவர்கள் விவாதம் தொடர்ந்தது. இருவரும் அவரவர் வாதத்தில் நிலையாக நின்றனர். அண்ணல் சிதம்பரனார் தம் நண்பருக்கு விடுத்த வேண்டுகோள் எல்லாம் ஒன்றுதான், அதாவது பாரதியார் விரும்பும் எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழில் வரிக்கும் முன் தங்கள் இருவருக்கும் நெருங்கிய தோழரான வங்கத்து அரவிந்தரிடம் அவரது உச்சரிப்பையேனும் மாற்றி வெற்றி கண்டால் பிறகு தமிழ் குறித்து விவாதிக்கலாம் என்று நயம்பட மொழிச் சிக்கல் குறித்து எடுத்துரைத்தார்.

சிவஞான போதம் சைவ சித்தாந்தத்தின் ஆணி வேர்
மெய்கண்டார் என்றும், மெய்கண்ட நாயனார் என்றும் அழைக்கப்படும் மெய்கண்டார் அருளிய சிவஞான போதம் என்ற நூல் 12 பாக்களால் ஆனது. அத்துடன் ஒரு காப்புச் செய்யுளும் கொண்டது. முற்றிலும் அகவற்பாவில் எழுதப்பட்டது.நாற்பது வரிகளைக்கொண்டது. இதற்கான விளக்கவுரையையும் அவரே எழுதிஉள்ளார். வெண்பாவிலும் உரை நடையிலும் செய்யப்பட்டது. அதற்குப்பின் பல உரைகள் வந்துள்ளது.
இந்தப்பெரு நூலுக்குப்பின் அவரது நூல் அமைப்பின் செம்மையும் சிறப்பும் கருதி, அந்த அமைப்பில் மேலும் பல அறிஞர்கள், சைவத்திற்கு தமிழ் கொடை செய்துள்ளனர்.  முறையே அருள் நந்தி சிவனார் என்பவர் படைத்த ” சிவஞான சித்தியார் “, அவருக்குப்பின் ஒரு நூற்றாண்டு பின் வந்த உமாபதி சிவாச்சாரியார் அவர்கள். இவர அருளியதே ” சிவப்பிரகாசம் ” எனும் நூல்.16ம் நூற்றாண்டில்  வாழ்ந்த ஞானப்பிரகாசர் என்பவரும் இதற்கு ஒரு உரை எழுதி உள்ளார்.

இதில் மிகச் சிறந்த உரையாக இன்றளவும் அறியப்படுவது கி.பி. 18ம் நூற்றாண்டு வாழ்ந்த மாதவச் சிவஞான முனிவர் வழங்கிய – “திராவிட மாபாடியம்” என்பதே. சிவஞான போதத்தின் மிக அழகிய விளக்கவுரையை திருவாவடுதுறையில் அரங்கேற்றிய பின் கி.பி.1785ம் ஆண்டு மறைந்தார். இவர் தென் மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரத்தில் பிறந்தவர். { தமிழ் தாத்தா சரியாக ஒரு நூற்றாண்டிகுப்பின் கி.பி.1880ல் இவரது இல்லம் சென்று சுவடிகள் தேடியதையும், திராவிட மாபாடியம் எழுதிய சிவஞான முனிவர் பிறந்த விக்கிரமசிங்கபுரம் என்றும், தன் வரலாற்றில் பதிவு செய்துள்ளார் }. ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்குப்பின் திருவாவடுதுறை மடத்திலிருந்த மடை, திறந்த பின் “திராவிட மாபாடியம்” அச்சேறியது. இது குறித்து பாரதியார் – திராவிட மாபாடியம் என்ற நூலுக்கு, யூதர்கள் எல்லாம் எப்படி மூசாவின் வருகைக்கு காத்திருந்தனரோ அப்படியே தமிழர்களும் மாதவச் சிவஞான முனிவரின் மாபாடியத்திற்கு காத்திருந்ததாக 1906ம் ஆண்டு இந்தியா இதழில் எழுதியுள்ளார்.

குறிப்பு : மாபாடியம் என்பது மகபாஷ்யம் என்பதன் தமிழ் வடிவம். இது சிவஞான் முனிவர் அரங்கேற்றிய பொழுதே வழங்கப்பட்ட நூற்பெயர்.

இந்தச் சூழலில் தான் அண்ணல் சிதம்பரனார் மெய்கண்டார் அருளிய சிவஞான போதத்திற்கு 1935ம் ஆண்டு உரை எழுதி வெளியிட்டார். இதற்குப் பெரிதும் ஊக்கம் தந்து ஆதரவு நல்கியவர் அ.செ.சு.கந்தசாமி ரெட்டியார் அவர்களே. ஏனைய சைவர்கள் பெரும்பாலும் இவரது உரை வெளிவருவதை கடுமையாவே எதிர்த்தனர். அதிலும் குறிப்பாக பொ.முத்தையாப் பிள்ளையும் ஏனைய கடுஞ்சைவர்களும் சிதம்பரனார் சைவத்தில் முறையாக தீட்ச்சை பெறவில்லை. ஆகவே அவருக்கு உரை எழுதும் அருகதை இல்லை என்ற போது ,

சிவஞான போதவுரை செப்புதற்குத் தீக்கை
தவஞானம் வேண்டுமெனச் சாற்றி – நவஞானம்
பேசுகின்றா ரவ்விரண்டும் பேரளவிற் கேட்ட சிலர்
ஏசுகின்றா ரென்னையில னென்று.

தீக்கை வடமொழியில் தீக்ஷா வெனுஞ்சொல்லே
‘தீ’க்கர்த்தம் ஞானநல்கல் “க்ஷா”க்கர்த்தம் – போக்கன் மலம்
“உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை
யற்றே தவத்திற் குரு “.

ஞான்முறன் மாசறுத்த னண்ணுந் துயர்தாங்கல்
ஈனவுயிர்க் குந்தீங் கியாற்றமை – யானென்னின்
காலமெல்லாங்கொண்டுள்ளேன் கண்ணுடையர் கூறுவரோ
ஏலவுயர் தீக்கையிலேனென்று.

அன்றியுமிவ் வையமெலா மாக்கி யளித்தழித்து
மன்ற்றைவாரென்னுள்ளே வாழ்கின்றா – ரென்றறிவார்
தீக்கையிலே னென்றிகழ்ந்து செப்பாரென்னுள்வாழ்வார்
தீக்கைசெய்து வையாரோ சேர்த்து.

—- தொடரும்


காசி விசுவநாதன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “அண்ணல் சிதம்பரனாரும் சைவமும்”
  1. M.kannan pillai says:

    Vazhthukal

அதிகம் படித்தது