நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

அண்ணல் சிதம்பரனாரும் சைவமும் பகுதி – 2

காசி விசுவநாதன்

Sep 15, 2012

சைவ நெறியின் மேன்மைக்குரிய சிவஞான போதத்திற்கு உரை எழுத ” தீக்ஷை ” என்ற தகுதி கோரிய பெருந்தகைகளுக்கு, மனித நெறியின் மேன்மையை உணர்த்தி வெண்பாவில் அறம் பொதிந்த பொருளுரைத்து வாயடைத்தார். தவத்தின் பயனும் பொருளும் மனிதன் மனிதனாக இருத்தலேயன்றி வேறென்ன? என்றார்.

தனது சிவஞான போதவுரையில் ஒவ்வொரு செய்யுளுக்கும் 1. பொருள் ( சொற்பொருள்), 2. அகலம் ( இலக்கண விளக்கம் ), 3.கருத்து  (உரை) என்று மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டார். இந் நூலுக்கு முகப்பாக உரைப் பாயிரம் ஒன்றினையும் எழுதியுள்ளார்.

சிவஞானபோத வரலாறு என்ற தனது கட்டுரையில் சைவ உலகில் இருபிரிவுகளாய், சிவஞான போதத்தின் தோற்றம் 1. வட மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டதே என்றும், 2. மற்றொரு பிரிவினர் சைவ சித்தாந்தத்தின் ஆணிவேரான இந் நூல் மெய்கண்டார் அருளிச் செய்த பின்பே அதனை வடமொழிப்படுத்தி, மேலும் பழமை நல்கி இடைச் செருகலாக “ரௌரவ ஆகமத்துள்” இணைத்தனர் என்றும் கூறுவதால், நான் திருநெல்வேலி வண்ணார்பேட்டை திரு.தி.க.சிதம்பரநாத முதலியார் அவர்கள் வீட்டில் சில காலம் தங்கி இருந்து அங்கு வடமொழி  நன்கு அறிந்த பண்டிதர் வாயிலாக வடமொழிச் சிவஞான பொதத்தின் பன்னிரெண்டு சூத்திரங்களையும் தமிழில் மொழிபெயர்த்து, அதனையே நம் மெய்கண்டார் அருளிய தமிழ்ச் சிவஞான போதத்தின் பன்னிரெண்டு சூத்திரங்களுடன் படித்தும் ஒப்பிட்டும் பார்த்தேன். இரண்டு நூல்களும் ஒன்று மற்றொன்றின் மொழிபெயர்ப்பாகவே இருப்பதைக் கண்டேன், எது முதல் நூல் எது மொழிபெயர்ப்பு என்று தீர்மாணிக்க முடியவில்லை என்கிறார். அண்ணல் சிதம்பரனார் வல்லடி விவாதங்களுக்கு மேலும் செல்லவில்லை. அவர் உணர்ந்தவற்றை நடு நிலை தவறாமல் சார்பு நெறியில்லாமல் பதிவு செய்தார். (காப்புரிமை இல்லாத காலத்தில் சமூக, அரசியல் வலிமை கொண்டு ஒரு மொழியின் ஆதிக்கம், பிற மொழியின் இருத்தலையே அழிக்கும்  வல்லாண்மை கொண்டது என்பது நன்கு அறியவருகின்றது).

அறிஞர் சி.சு.மணி அவர்கள்,

பழமையில் ஊறிய சைவ சித்தாந்திகள் ‘சிவஞான போதம்’ என்பது ரௌரவ ஆகமத்தின் பாசவிமோமசனப் படலத்தின் இறுதியில் உள்ளது “என்பர். இதுவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டடு வார்த்திகப் பொழிப்புரையும் செய்தார் என்று வாதிடுவர். தலைமுறை,தலைமுறையாக வந்த இந்த நம்பிக்கை, இக்கால அறிஞர்களால் சான்றுகளுடனும்,ஆதாரங்களுடனும் மறுக்கப்பட்டு, ‘சிவஞான போதம்’ தமிழ் முதல் நூலே ; மொழிபெயர்ப்பன்று என்ற கருத்து நிலை நாட்டப்பட்டுவிட்டது. ஆயினும் இன்னமும் இதனை ஏற்காத அதி தீவிரப் பழமைவாதிகள் உள்ளனர். ” இவ்வாறு அறிஞர் சி.சு.மணி அவர்கள், தூத்துக்குடி வ.உ.சி.சமூக அறிவியல் நிறுவணம் வெளியிட்ட வ.உ.சி.யின் சிவஞான போத உரை – தொகுப்பு வெளியீடு – ஆண்டு-1999 கி.பி. என்ற முதற் பதிப்பின் 31ம் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். நிற்க.

மெய் கண்டார் சைவத்தின் மெய்மை கண்டார். ஆகவேதான் மெய்கண்டார் எனப்பட்டார்.

தம் வாழ் நாளில் மனித குலத்தில் ஏற்ற தாழ்வு என்பது கல்வி,பொருளாதாரம்,ஆன்மீகம்,வாழ்வுரிமை என்று எந்த தளத்திலும் இல்லாது இருக்க விரும்பிய செம்மல், கப்பலோட்டி கரை சேரவில்லை என்றாலும், தம் அக புற வாழ்வில் மானிடருக்கு கலங்கரை விளக்கமாகவே இருந்தார். ஆன்மீகம் என்ற மெய்யியலில் என்றுமே அவர் முன்னோடிதான்.

திதி-சிராத்தம் என்ற சடங்குளையும் அந்த நாட்களிலேயே நேரிடையாக எதிர்த்தவர். இதனை தேவகோட்டை மாணவர் சங்கத்தில் நடந்த  சொற்பொழிவில் அவர் பதிவு செய்தபொழுது, அப்பொழுதும் கடுஞ்சைவர்களால் வசைபாடப் பட்டார். அதுமட்டுமல்ல பொ.முத்தையா பிள்ளை என்பவர் ‘அரங்கின்றி வட்டாடல்’ என்ற தலைப்பிட்டு -சிவநேசன் சஞ்சிகையில் மிக ஏளனமாகக் கடிந்துரைத்தார். ‘ அரங்கு வகிப்பவர் யார்’ என்று கேள்வியிட்டு அண்ணல் சிதம்பரனார் பதிலுரைத்தார். இந்த விவாதங்கள் ‘சிவநேசன்’ இதழில் கி.பி.1928ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதற்கொண்டு மார்ச்சு மாதம் வரையிலும் பதிவாகியுள்ளன. ஒரே ஆறுதல் அண்ணலின் மறுமொழிகள் ஒதுக்கப்படாது அந்தப்பத்திரிக்கையில் வெளிவந்ததுதான்.

முற்போக்கு இயக்கங்கள் மட்டுமல்ல, முற்போக்கு சிந்தனைக்களமாகவும் இருந்த அண்ணல் சிதம்பரனார் நான்காம் தமிழ்ச் சங்கம் கண்ட வள்ளல் பாண்டித்துரை அவர்களை வாழ்த்திப்பாடிய ஆசிரியப்பாவின் (1914ம் ஆண்டு) இறுதி வரிகளில்,

“…………..நின்று நிலவநீ நீடு வாழ்கச்

சிவனடி மலரைச் சிந்தையில் வைத்துத்

தவமும் புரிந்து தவமுறு வோமே.

என்றதற்கு, முன்னரே(முதற்பகுதில்) தவமும் – தீக்ஷையும் யாதென வென்பாவில் செப்பமுற நன்றாய் பொருள் விளக்கம் செய்துள்ளார்.

கி.பி.1872-செப்டம்பர் -5 – பிறப்பு ; 1936 நவம்பர் -18 மறைவு. அண்ணலின் ஈகையினை, சிந்தையில் வைத்து தவமும் புரிந்து தவமுறுவோமே.


காசி விசுவநாதன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “அண்ணல் சிதம்பரனாரும் சைவமும் பகுதி – 2”
  1. arunkumar01012002 says:

    அருமையான கட்டுரை. வ.உ.சிக்கு இத்தனை முகங்களா?.

அதிகம் படித்தது