செப்டம்பர் 19, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

அதிதி (சிறுகதை)

ஸ்ரீதரன்

Oct 14, 2017

Siragu adhithi1பாலுவிட்டத்தைப் பார்த்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தான். அடிக்கடி கற்பனையில் மூழ்கி விடுவது அவன் பழக்கம்.

அப்போது தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டது. அவன் வெளியே ஓடினான். வீட்டுக்கு எதிரே இருக்கும் கோவிலின் அர்ச்சகர் தேங்காயை   சூரைத்தேங்காய் உடைத்தார். பூ விற்பவள், மற்றும் இரண்டு சிறுவர்களும் தேங்காயை எடுக்க ஓடினர். பாலுவும் ஒரு பெரிய தேங்காய் சிதறலை எடுத்துக் கொண்டான். அது அவனுடைய வழக்கம். சூரைத்தேங்காய் சிதறலை எடுக்க வெட்கப்பட மாட்டான்.

அவனுக்கு ஐம்பது வயது ஆகிறது. பொறுப்பு என்பதே கொஞ்சம் கூட கிடையாது. எப்போதும் கனவு உலத்தில் சஞ்சரிப்பான். கடவுள் பக்தி உண்டு. எதிரேயிருக்கும் கோவிலுக்கு அடிக்கடி செல்வான். அப்படிப் போகும்போதெல்லாம் சிதறு தேங்காய் கிடைத்தால் பொறுக்கி வருவான். அவனை அறியாமலேயே அவனுக்கு அது பழக்கமாகி விட்டது.

அவனுக்கு வாழ்க்கைச் சக்கரம் ஓடுகிறதென்றால் அவனுடைய புத்திசாலி மனைவி சாரதாதான் காரணம். சிக்கனமாய் செலவு செய்து சேமிப்பாள். சோதிடத்திலும் நம்பிக்கை உண்டு. அவன் முன்னேறாமல் வாழ்க்கையில் பின்தங்கியிருப்பதுக்குக் காரணம் கிரகங்கள்தான் காரணம் என்று சோதிடர் சொல்வதை முழுவதும் நம்பி அதற்கான பரிகாரங்களைச் சிரத்தையுடன் செய்வாள்.மிதமிஞ்சிய இரக்க குணம் உடையவள். யாராவது கோவிலில் உற்சவம் நன்கொடை என்று கேட்டு வந்தால் முடிந்ததை அளிப்பாள். அதிதிக்கு உணவு அளித்தால் புண்ணியம் என்பாள். பாலு அவளின் குணத்திற்கு நேர் எதிர். தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தருமமும் என்பது அவன் கொள்கை. “நாமே இரக்கப்படக்கூடிய நிலையில் இருக்கிறோம். நாம் எதுக்கு இன்னொருத்தர் மேலே இரக்கப் படணும்” என்பான்.

காலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்டது. யாரது? பாலு கதவருகே போனான். திருவல்லிக்கேணியிருந்து ஒரு பெண் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அப்பளம் வடாம் கொண்டு வந்து விற்பாள். ஏழைப் பெண் என்று சாரதா அவளிடம் ஒவ்வொரு முறையும் வாங்குவாள்.

”யாரது?:”

பூசை அறையில் சுலோகம் சொல்லிக் கொண்டிருந்த சாராதா அதை நிறுத்திவிட்டுக் கேட்டாள். எப்போதும் அப்படித்தான் என்னதான் வாய் சுலோகம் சொல்லிக் கொண்டிருந்தாலும் மனம் அலைபாயும். காது உன்னிப்பாக தன் வேலையைச் செய்யும்.

”அப்பளம் விக்கும் பெண் வந்திருக்கு.”

உடனே எழுந்து வந்த சாரதா அவளிடம் இரண்டு கட்டு அப்பளம் வாங்கினாள். அதற்குண்டான பணத்தைக் கொடுத்தாள்.

”நான் கோவிலுக்குப் போறேன்” பாலு நகர்ந்து விட்டான்.

கோவிலுக்குள் சென்ற பாலு அங்கு பாலாஜி சாஸ்திரிகளைப் பார்த்தான். அவர் நன்கு வேத பாராயணம் செய்தவர். குரல் கணீரென்று இருக்கும். ஓஹோன்னு இருந்தவர். எல்லாம் போச்சு. அவர் குரல் போச்சு. வைதீகம் போச்சு. குரல் வளையில் கேன்சர் என்பதால் அவரால் பேச முடியாது.கோவில்லே வந்து அடிக்கடி உட்கார்ந்துப்பார். ராமஜெயம் எழுதிக் கொண்டிருப்பார். தேவைப்பட்டால் சைகை மொழியில் பேசுவார். பாலாஜி சாஸ்திரிகள் பாலுவைப் பார்த்து புன்னகைத்தார். பாலு பதிலுக்கு குறுநகை புரிந்தான். கோவிலைச் சுற்றத் தொடங்கினான்.

சாரதா சுலோகத்தைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தாள். மீண்டும் இடையூறு. காலிங்பெல் அடிக்கும் ஒலி கேட்டது. கணவர் கோவிலுக்குப் போயிருப்பதால் அவள்தான் எழுந்து வர வேண்டும்

கதவைத் திறந்து பார்த்தால் வேட்டி கட்டி ருத்திராட்ச மாலை அணிந்து வயதான முதியவர், அறுபதைக் கடந்தவர் நின்று கொண்டிருந்தார். நெற்றியில் வீபூதி பட்டை. பெரிய குங்குமப் பொட்டு. அவளைப் பார்த்ததும் கையில் ஒரு நோட்டிசைக் கொடுத்தார். “கோவிலுக்கு நன்கொடை. உங்களால முடிஞ்சதைக் கொடுங்க”.

சாரதாவால் மறுக்க முடியவில்லை.

”இருங்க வரேன்” உள்ளே போய் தேடி நூறு ரூபாயை கொண்டு வந்து கொடுத்தாள்.

அவர் முகத்தில் இவ்வளவுதானா என்கிற மாதிரி இருந்தது. ஒரு ரசீதை எழுதிக் கொடுத்தார். ஒரு சுலோகத்தைத் தங்கு தடையில்லாமல் கூறினார். கேட்ட சாராதவுக்கு பிரம்மிப்பாய் இருந்தது. அவரை ஆச்சர்யத்தோடு பார்த்தாள்.

”நான் அதிதி வந்திருக்கேன். எனக்கு சாப்பிட டிபன் கொடுங்கோ” என்று உரிமையோடு தயக்கமில்லாமல் கூறினார்,

சாரதாவிக்குத் திக்கென்றது. என்ன இது? அதிதி என்கிறாரே? இவருக்குச் சாப்பாடு போட்டால் புண்ணியம் அல்லவா என்று நினைத்துக் கொண்டு “உள்ளே வாங்க”. என்று அழைத்தாள். அந்தக் கிழவர் உள்ளே வந்து உட்கார்ந்தார்.

சாரதா சமையலறைக்குள் இட்லியைச் செய்ய குக்கரை வைத்தாள்.

சுடச்சுட ஆறு இட்லி, மிளகாய் பொடி சாப்பிட்டார்.

”இன்னும் சாப்பிடறேளா?” என்று சாரதா கேட்டதிற்கு. இரண்டு இட்லி மட்டும் போடுங்கோ” என்று சொல்லி அதைச் சாப்பிட்டார்.

”காபி சாப்பிடறீங்களா ?”

“நான் காபி சாப்பிடமாட்டேன். பூஸ்ட் இல்லேன்னா ஹார்லிக்ஸ் கொடு.” என்று அதட்டலான குரலில் சொன்னார்.

”யாசிப்பவர் தன்மையாய் கேட்கவேண்டும். ஆனால் இங்கிதம் தெரியாமல் இவ்வளவு அதிகாரமாய் கேட்கிறாரே ”என்று அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

அவருடைய முகமலர்ச்சியைக் கெடுக்க கூடாதென்று எதுவும் சொல்லாமல் சமையலறைக்குள் சென்றாள்.

அவள் கொண்டு வந்த ஹார்லிக்ஸை சாப்பிட்டுவிட்டு அந்தக் கிழவர் வீட்டை மேலும் கீழும் பார்த்தார். மனசுக்குள் ஒரு கணக்கு போட்டு விட்டு இந்த வீட்டுக்குத் தோசம் இருக்கு. பரிகாரத்துக்கு ஒரு ஹோமம் செய்ய வேண்டும். ஐந்தாயிரம் ஆகும். நாளை உங்காத்துக்குச் சாப்பிட வருவேன், பத்து மணிக்கு வருவேன். அதிதிக்குச் சாப்பாடு போட்டால் உங்களுக்குக் கோடி புண்ணியம். அதுக்குள்ளே பணத்தைத் தாயார் பண்ணி வைங்க“ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

அவர் போய் பத்து நிமிடம் கழித்து தேங்காய் மூடியோடு வந்த சம்பத் “சாரதா இந்தா தேங்காய் மூடி. சூரைத்தேங்காய் விடுவதற்காக காத்திருந்தேன். அதனாலே லேட் ஆகிவிட்டது. சட்னியைத் தயார் பண்ணி இட்லியைக் கொடு”என்றான்.

”கோவிலுக்கு நன்கொடை கேட்க ஒருவர் வந்திருந்தார். அவருக்கு நூறு ரூபாய் கொடுத்தேன். இட்லியைச் சாப்பிடக் கொடுத்தேன். வயிராற திருப்தியாய் சாப்பிட்டார். நாளை சாப்பிட வரேன் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். வீட்டிலே தோசம் இருக்காம். பரிகாரமாய் ஹோமம் செய்யணும். ஐயாயிரத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க.”

”தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தருமமும்,. நம்ம பணம் நல்ல காரியத்திற்குப் போகிறது என்பதை உறுதி செய்துகொண்டுதான் பணத்தைப் பிறருக்குக் கொடுக்க வேண்டும். இந்த ஹோமம் எல்லாம் பணம் பறிக்கத்தான். உனக்குப் புரிய மாட்டேங்கிறதே”.

”எனக்கு எல்லாம் தெரியும். நீங்க அதைப் பத்தி எதுவும் சொல்லாதீங்க. முதல்லே பணத்துக்கு ஏற்பாடு செய்யுங்க,.”

“என்கிட்டே பணம் இல்லையே”.

”நகை வாங்கறதுக்காக நான் சேமித்து வைச்சிருக்கேன். அதிலிருந்து கொடுத்துடலாம்”

இது தேவைதானா என்று கேட்பது போல் அவளைப் பார்த்தான்.

”அதிதிக்குச் சாப்பாடு போடுவது ரொம்ப புண்ணியம். அவர் சொல்ற ஹோமம் செய்தால் வீட்டில் உள்ள தோசம் போகும். உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அதனாலே மறுக்காதீங்க” என்றாள்.

அவன் காய்கறி எல்லாம் வாங்கி வந்தான். அடுத்த நாள் காலை சாரதா எழுந்து விருந்து சமையல் செய்ய ஆரம்பித்தாள். மணி பத்து ஆச்சு. சமையல் தயார் ஆகிவிட்டது. ஆனால் அதிதி வரவேயில்லை. சாரதா தன் கணவரைப் பார்த்து, ”நேற்று வரேன் என்று சொல்லிவிட்டுப் போனார். எதனால் இன்னும் வரவில்லையென்று தெரியவில்லை. அவர் வருவார் என்னும் நம்பிக்கையில் சமைத்து வைத்து விட்டேன். அவர் வராவிட்டால் சமைத்ததை என்ன செய்வது? எனக்கு ஒரே டென்ஷனாக இருக்கிறது. நீங்கள் இந்த தெருகோடிவரைப் போய் யாராவது ஒல்லியாக ருத்திராட்ச மாலை அணிந்து வீபூதி பட்டையுடன்  வந்து கொண்டிருக்கிறாரான்னு பார்த்துட்டு வாங்க.” என்றாள்.

பாலு நகர்ந்தான். தெருக்கோடியில் ஒரு வீட்டில் கூட்டமாக இருந்தது. இரண்டு போலீஸ்காரர் இருந்தனர்.

“என்ன விசயம் என்று அங்கிருந்த ஒருவரிடம் கேட்டான். இவர் ஹோமம், பரிகாரம் என்று பணம் பறித்து விடுகிறார். கோவிலுக்கு நன்கொடை என்று நோட்டீஸ் கொடுத்து எல்லோரிடமும் பணம் வாங்கியிருக்கிறார். இந்த வீட்டுகாரரின் பெரியப்பா பிள்ளை போன மாதம் பணத்தை இழந்திருக்கிறார். ஏதேச்சையாக இங்கு வந்திருக்கும் அவர்தான் போலீஸ்க்கு தெரிவித்தார்” என்று சொன்னார்.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும் என்பார்கள். தலைகுனிந்து கொண்டு சாரதா சொன்ன அடையாளங்களுடன் இருந்தவர் போலீஸ் ஜீப்பில் ஏறினார்.

”சாரதா சொன்ன ஆள் சரியான ஏமாற்று பேர்வழி. பாவம் அதிதி என்று நினைத்து அவள் விருந்து தயார் செய்து காத்திருக்கிறாள். ஏமாற்றப்பட்டது தெரிந்தால் மிகவும் கவலையுறுவாள்” என்று எண்ணிய பாலு கோவிலுக்குப் போய் பாலாஜி சாஸ்திரிகளையாவது வீட்டிக்குச் சாப்பிட அழைத்துப் போகலாம் என்று கோவிலுக்குச் சென்றான். அன்று பாலாஜி சாஸ்திரிகள் வரவில்லை. அட்டா, இப்போ என்ன செய்வது? சாரதாவிடம் என்ன பதிலைச் சொல்லுவது என்று யோசித்துக்கொண்டு கோவிலுக்கு வெளியே வரும்போது அர்ச்சகர் சூரைத்தேங்காயை உடைத்தார். பாலுவின் காலருகில் தேங்காயின் பெரிய சிதறல் விழுந்தது. அதை அவன் எடுக்கும்போது தாடி வைத்த ஒருவன் ஏக்கத்துடன் கையை நீட்டினான்.

”நான் சாப்பிட்டு இரண்டு நாள் ஆச்சு. என்கிட்டே கொடுங்க“ என்றான். பஞ்சத்தில் அடிபட்டவன் போல் இருந்தான். ”சாப்பிட்டு இரண்டு நாள் ஆச்சு” என்னும் வார்த்தைகளைக் கேட்டதும் பாலுவின் மனதில் சடாரென்று ஒரு யோசனை உதித்தது. சாரதா அன்னமிடக் காத்திருக்கிறாள். இவனோ பசியோடு இருக்கிறான். இரண்டு பேருடைய பிரச்சனையும் தீர்ந்துவிடும்..” என்று எண்ணியவன் ,

”எங்கூட வாங்க. சாப்பிட போகலாம்”.

”என்னது ? சாப்பிடவா?” என்று மகிழ்ச்சியுடன் கேட்டான் தாடிகாரன்

”அதோ அந்த வீடுதான். வாங்க போகலாம் ”

இருவரும் வீட்டுக்குள் நுழைந்தனர். இலை போட்டு தயாராக இருந்தது. பாலு தன்னுடன் வந்தவரைப் பார்த்து அங்கே போய் கால் கை கழுவி வாங்க, சாப்பிடலாம் என்றான்.

சாரதா பாலுவைப் பார்த்து, “யார் இவர்? நம் அதிதி எங்கே?” என்றாள்.

அவர் மாமியார் வீட்டுக்குப் போயிருக்கார்.

அவரை நம்பி விருந்து சமைத்து வைத்திருக்கேன். அவர் என்னை ஏமாற்றிவிட்டாரே எப்போது வருவாராம் ?

”ஜெயிலிருந்து விடுதலையாகும்போதுதான் வருவார். நம்ம பணம் மிச்சமாச்சேன்னு சந்தோசப்படு. நடந்ததை நினைத்து வருந்தாதே. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள். இனிமேல் ஏமாறாமல் ஜாக்கிரதையாய் இருப்போம். “

”சிறந்த பக்திமான் மாதிரி இருந்தாரே? அவரா.. நீங்கள் சொல்வதை என்னால் நம்பவே முடியவில்லை. ஒரு வேடன் கண்ணுக்குத் தெரியும் முயலை விட்டு விட்டு வானத்தில் பறக்கும் காக்கைக்குக் குறி வைப்பது போல நானும் அறிவில்லாமல் பகவான் மேல் நம்பிக்கை வைத்து பலன் பெறுவதை விட்டு பரிகார ஹோமம் செய்து பணத்தை இழக்க இருந்தேன். இனிமேல் அப்படி நம்பி மோசம் போகமாட்டேன். நல்ல காலம். நம் பணம் மிச்சமாச்சு. அதுசரி, நான் சமைச்சது வீணாகக் கூடாது என்பதற்காக புது அதிதியை அழைச்சிண்டு வந்தீங்களா?”

”இவரைக் கோவிலிலே பார்த்தேன். பசித்தவருக்கு உணவு அளிப்பதுதான் புண்ணியம் என்பதால் அழைத்து வந்தேன். இவர்தான் நம் அதிதி”

சாரதா மனநிறைவோடு சிரித்தாள்.

“நீங்க சொன்னது ரொம்ப சரி“ என்றவள் இலையில் சந்தோசமாய் வந்தமர்ந்த விருந்தினருக்குப் பரிமாற ஆரம்பித்தாள்.


ஸ்ரீதரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அதிதி (சிறுகதை)”

அதிகம் படித்தது