மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அன்னதானம் என்னும் பண்பாடு

முனைவர் க. சத்யா

Jan 11, 2020

siragu annathanam1
பாரதநாடு பழம்பெருமை வாய்ந்த நாடு, பல்வேறு சமயங்களைக் கொண்டிருக்கின்ற நாடு ஒவ்வொரு சமயத்தரும் தங்களுக்கென்று தனிக்கோட்பாட்டை, தத்துவத்தை வகுத்துக் கொண்டனர். சமயங்களும், கொள்கைகளும் பலவாறாக இருப்பினும் அடிப்படையில் அவையனைத்தும் ஒன்றுபட்டே நிற்கின்றன.

சமயங்கள் மக்களை நல்வழிப்படுத்தி அறவழியில் அவர்களைச் செலுத்துவதற்கும், நல்வழிப்படுத்துவதற்கும் ஒரு காரணியாக விளங்குகின்றன. கோவில்கள் பண்பாட்டுக்களங்களாகவும் அமைந்திருக்கின்றன. தானங்கள் செய்யும் இடமாகவும் கோயில்கள் விளங்குகின்றன. அன்னதானம், ஆடைதானம், கோதானம், கண்தானம் போன்ற பல தானங்கள் செய்வதற்கான இடமாகக் கோயில்கள் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளன.

அன்னம் பாலித்தல் என்ற அன்னதானம் தமிழர் பண்பாட்டின் முக்கியக் கூறாக விளங்குகின்றது. மணிமேகலை ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்கின்றது. பெரியபுராணம் அடியார்க்கு உணவளித்தலை தலையாய அறமாகக் கொள்கின்றது. இவ்வகையில் அன்னதானம் மிகச் சிறந்த தமிழர் கோட்பாடாக விளங்குகின்றது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் புதுவயலுக்கு அருகில் உள்ள சாக்கோட்டையில் வீற்றிருக்கின்ற சிவதலத்தைப் பற்றிப் பாடப்பெற்ற புராணம் வீரவனப்புராணம் ஆகும்.

“உமையாம்பிகை, வீரசேகர்” என்னும் பெயரில் அருள்பாலிக்கின்ற இறைவன் இறைவியின் பெருமைகளை, அருட்தன்மைகளைப் புராணமாகக் கேட்கக் கருதியும், தங்கள் பகுதியில் கோவில் கொண்டுள்ள இறைவனின் சிறப்புகளைத் தம் சந்ததியினருக்கு எடுத்துரைக்க கருதியும் அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் மகாவித்வான் அவர்ளை தங்கள் ஊருக்கு அழைத்து வந்து வேண்டியன செய்து கொடுத்து எழுதுவிக்கச் செய்ததே வீரவனப்புராணம் ஆகும்.

இப்புராணமானது கடவுள் வாழ்த்து, சிறப்பாயிரம், அவையடக்கச் செய்யுள் நீங்களாக பதினான்கு படலங்களைப் பெற்றுள்ளது. அவை திருநாட்டுப்படலம், திருநகரப்படலம், நைமிசவனப்படரம், வீரசேகரர் திருமுடித்தழும்புற்ற படலம், சோழன் திருப்பணிப்படலம், சோழன் மகப்பெற்று முத்தியடைந்த படலம், வீரைப்பலவாகியபடலம், குபேரன் பூனசப்படலம், சத்திய புட்கரிணிப்ப டலம், திருமால் பூசித்தபடலம், வீர ராகவப் படலம், பெருமாள் பொதி சோறு நிவேதனஞ் செய்த படலம், உமையாண்டாள் மகிமைப்படலம், தளமுதலிய விசேடப்படலம் ஆகியவற்றை உள்ளடக்கிப் படைக்கப்பெற்றுள்ளது. மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் தல புராணங்களுள் குறிக்கத்தக்க புராணங்களுள் ஒன்றாக இது விளங்குகின்றது.

அன்னதானம்:

siragu annathanam2

மனிதன் உயிர்வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்று உணவு. பசித்துன்பதை நீக்குவதே சிறந்த அறமென அனைத்து சமயங்களும் எடுத்துரைக்கின்றன.

“உண்டி கொடுத்தாரே உயிர் கொடுத்தோர்” எனப் புறநானூறு அன்னதானத்தின் சிறப்பினை எடுத்துரைக்கிறது. இதன் அடிப்படையிலேயே ஆலயங்களில் அன்னதானம் செய்யும் முறைமை வழக்கத்தில் வந்திருக்கின்றன.

சிறு தெய்வ வழிபாட்டில் திருவிழாக் காலங்களில் அன்னதானம் வழங்கும் வழக்கம் நடைமுறையிலிருக்கின்றது. தற்காலத்தில் பெரும் தலங்களில் நாள்தோறும் அன்னதானம் வழங்குகின்றனர். இதனை கோவில் நிர்வாகமோ அல்லது அரசாங்கமோ ஏற்று நடத்துகின்றன. தானங்களில் சிறந்தது அன்னதானம். அன்னதானம் வழங்கும் இடத்தை அன்னசத்திரம் என்று வழங்குபவர்.

வீரவனத்தில் உள்ள அன்ன சத்திரம் ஒன்றில் முல்லை அரும்பு போன்ற அரிசிச் சோற்றுக்கு பருப்பும், தொடுகறியாக, துவட்டல் கறியும், பொரிகறியும், குழம்பும் வழங்கப்பட்டதென்று கூறப்பட்டுள்ளது. மேலும் இவற்றோடு பால், தயிர், மிதவையோடு கூடி நெய் போன்றவையும் வழங்கப்பட்டதென்பதை.

“அருப்பு முல்லைநே ரடிசிறு மாடக வண்ணப்
பருப்புங் குய்கமழ் கருணையும் வறையலும் பாகும்
விருப்பு நீடிய யாறயிர் நெய்செறி மிதவை
கருப்பு வார்சுவை போடமை சத்திரங் கவினும்”(வீரவனப்புராணம் நா.ப.18)
என்ற அடிகள் எடுத்துறைக்கின்றன.

மக்களின் தாகத்தை தீர்ப்பதற்கு தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருக்கும். வீரை நகரில் தண்ணீர்பந்தல் அமைக்கப்பட்டிருந்ததென்பதனை. “தூய வெண்மணல் பரப்பிமேற்பு முக்கலந் துறுத்தி” என்ற அடி காட்டுகின்றது. அப்பந்தலில் மோறும் பழச்சாறும், தண்ணீரும் வழங்கப்பட்டதென்பதை,

“பாயமோரிலி குழப்பச் சாறுநீர் பரவ
வேய வாக்கியின் குளமாள நீரொரு மின்னுந்
தோய வாக்கநீர்ப் பந்தரு மிடந்தொறுந் துவன்றும்”(வீ.வ.புரானம் நா.ப.19)
என்ற அடிகள் எடுத்துரைக்கின்றன.

தமிழர்கள் அறஞ்செயல்களிலும் பசிப்பினி நீக்குகின்ற பண்பாட்டிலும் சிறந்து விறங்கினர் என்பதற்கு வீரவயணப் புராணம் சான்று பயக்கின்றது. இந்நிலைப்பாடு சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தைப்பூசத்தின்போது அன்னதானம் வழங்கப்படும் முறை, தண்ணீர்ப்பந்தல் வைக்கும் முறை ஆகியன காணப்படுகின்றன. தமிழர் பண்பாடு இவ்வகையில் தெற்காசிய நாடுகளிலும் பரவி உள்ளமையை அறியமுடிகின்றது.

படையல்:

படையல் என்பதற்கு நிவேதன யாருள் என்பது பொருள். திருக்கோவில் நடைபெறும் வழிபாட்டின் பொழுது இறைவனுக்குப் படைக்கப்படும் தூய்மையான படையல்கள் மக்களின் உள்ளத்திற்கும் உடலுக்கும் மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்திருக்கிறது. அகலமான துணிகளைப் பரப்பி அதன்மேல் படைக்கப்படும் பொருள்கள் “பாவாடை” என்று அழைக்கப்படும். இதனை.
“பதம்பெற் றார்க்குப் பகல்விறக்கும்
பாவாடை யுகமாகக் காள்வரே” என்று கலிங்கத்து பரணி எடுத்துவைக்கின்றது.

இப்படையலிடும் வழக்கம் அனைத்து சமயங்களிலும் காணப்பட்டாலும் படையல் பொருட்களானது தெய்வத்திற்கு தகுந்தபடி மாறுகின்றது. சான்றாக தேவர்களின் தலைவன் இந்திரன் கட்டளையால் புகார் நகரை காவல் புரிய வந்த பூதத்தின் பலிபீடத்தில் படையல் பொருட்கள் பற்றி சிலப்பதிகாரம் எடுத்துரைக்கையில்.

“தேவர் கோமான் ஏவலிற் போந்த
காவந் புத்துக் கடைகெழு பீடிகைப்
புழுக்கலும் நோலையும் விழுக்குடை மயலயும்
புவும் புகையும் பொங்கலுஞ் லூரிந்து”
என்று கூறுகின்றது இங்கு அவரை, துவரை, எள்ளுருண்டை திணைச்சோறு, பூ, புகை, பொங்கல் ஆகியன படைப்புப்பொருட்களாக இருந்தமை வெளிப்படுகின்றது.

பின்னர் குன்றக்குரவையில் தேவர்கள் மலர்மாரி பொழிந்து கண்ணகியைக் கோவலனோடு வாழ்வதற்கு அழைத்த நிகழ்வைக் கண்ட குறவர்குல மகளிர் கண்ணகியைத் தெய்வமாகப் போற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்கின்றனர். அப்பொழது குறிஞ்சிப்பன் பாடி, நரும்புகை, எழுப்பி, பூப்பலி, செய்ய வேண்டும் என்ற முறைமை பின்பற்றப்பெற்றுள்ளது. இதன்வழி பூவும் புகையும் படைப்புப் பொருள்களாக இருந்தமை வெளிப்படுகின்றது. இதனை.

“குறிஞ்சி பாடுபின் நறும்புகை எடுமின்
பூப்பலி செண்ம்மின் காய்ப்புகை நிறுமின்
பரவலும் பரவுமின் விரவுமலர் தூவுமின்”

என்ற அடிகள் எடுத்துரைக்கின்றன. மாலைக் கால வழிபாட்டின் பொழுது நெல்லும் மலரும் படைப்புப் பொருள்களாக இருந்ததைப் பற்றி நெடுநல்வாடை, முல்லைப்பாட்டு ஆகியன உரைக்கின்றன. இதனை,

“இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீ இ,
நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது” (திருமுருகாற்றுப்படை 41-42)
என்ற அடிகள் காட்டுகின்றன.

கொற்றவை வழிபாட்டின் பொழுது வீரர்கள் தங்களுடைய தலைகளையே அறுத்து காணிக்கையாகச் செலுத்துவதைக் கலிங்கத்துப்பரணி பறைசாற்றுகின்றது.

பொதிசோறு நிவேதனஞ்செய்த படலம் என்பது வீரவனப் புராணப் படலங்களில் ஒன்று. இதில் இறைவன் தனக்குப் படைக்க வேண்டிய பொருட்கள் பற்றிக் கூறும்பொழுது,

“பொதிபடு யாப்ப விழ்த்துப் புளிமடை முன்ப டைத்துத்
துதிமிசை பின்பி டைத்துச் சாற்றிய கறியும் வைத்து
மதிலுயி மூனு காயின் வருக்கமற் றுளவும் வைத்து
விதிமுறை யமுது செய்ய வேண்டும்” (பொதிசோறு நிவேதனம் செய்த படலம் 22)
என்று குறிக்கப்படுகிறது. இதிலிருந்து இறைவனுக்குப் படைக்க வேண்டிய பொருட்கள் எவை எவை என்பதனையும், படைக்க வேண்டிய முறையினையும் மீனாட்சிசுந்தரனார் காட்டி நிற்கிறார்.


முனைவர் க. சத்யா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அன்னதானம் என்னும் பண்பாடு”

அதிகம் படித்தது