ஏப்ரல் 10, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

அன்னி மிஞிலி

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Feb 22, 2020

siragu ilakkiyam1

அன்னி மிஞிலி சங்கக் காலப் பாடல்களில் நாம் காணும் பெயர். யார் இவர்? இவர் பெண்!! அதுவும் வஞ்சினம் கொண்டு சூளுரைத்த பெண், அகநானூறு 196 மற்றும் 262 இவர் பெயரைப் பதிவு செய்திருக்கின்றது. இரு பாடல்களையும் எழுதியவர் பரணர். பரணர் சங்க இலக்கியப் புலவர்களுள் முக்கியமானவர். சங்க இலக்கியப் பாடல்களில் வரலாற்றுச் செய்திகளைப் பதிவு செய்வது இவர் பாடல்களின் தனிச் சிறப்பு.

சரி அன்னி மிஞிலி யாரை எதிர்த்துச் சூளுரைத்தாள்? கோசர்களை எதிர்த்து? யார் இந்த கோசர்கள் என்று பல வரலாற்றுத் தரவுகளும், குழப்பங்களும் உண்டு. சுருக்கமாகக் கோசர்கள் என்றால் யார் எனப் பார்க்கும் போது, கோசர் என்பவர் பண்டைக்காலத் தென்னிந்தியாவின் குறுநில மன்னர்களாக இருந்தவர்கள். இவர்கள் தொன்மையான குடியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் துளு நாட்டிலும், கொங்கணத்திலும், கொங்கு நாட்டிலும் அதிகாரம் பெற்றிருந்ததோடு தமிழ் நாட்டின் வேறு பல பகுதிகளிலும் இவர்கள் சிற்றரசர்களாக இருந்திருக்கின்றனர். இவர்கள் கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கருதப்படுகிறார்கள். காஷ்மீரத்திலிருந்து வந்தவர்கள் என்றும் கருதப்படுகிறார்கள். எனவே அவர்கள் யார் என்பது ஆய்விற்கு உரியது. ஆனால் அவர்களைப் பற்றிய செய்திகள் நிறையச் சங்கப் பாடல்களில் காணப்படுகின்றது.

சரி நாம் அன்னி மிஞிலியைப் பற்றிப் பார்ப்போம். அவள் ஆயர் குலத்தைச் சேர்ந்தவள் என்கிறது தரவுகள். அன்னி என்பது ஒரு வீரனின் பெயர் அன்னி மிஞிலி என்பது ஒரு வீரனின் பெயர், இவ்விரு பெயர்களையும் தாங்கி நின்றாள் அன்னி மிஞிலி என்கிறது சங்க இலக்கிய பாடல்களில் கிடைக்கும் தரவுகள். புலவர் கா. கோவிந்தன் என்பார், “தனக்குத் தவறு செய்தாரைத் தண்டிக்கத் தவறாத தறுகண்மை உடையாள் அன்னி மிஞிலி “என்கிறார்.

அன்னி மிஞிலியின் தந்தை மாடுகளை மேய்த்துக் கொண்டு இருக்கும் போது அது, அவை கோசர்களின் நிலத்தில் விளைந்த பயிரினை அழித்து விட்டது. எனவே கோசர்கள் சினம் கொண்டு, தண்டனை என்ற பெயரில் அன்னி மிஞிலியின் தந்தையின் கண்களைப் பிடுங்க உத்தரவு இட்டனர். அன்னி மிஞிலி கோசர்களிடம் கேட்டுக்கொண்டும் அவர்கள் அவள் தந்தையின் கண்களைப் பிடுங்கிய காரணத்தால் கோபம் கொண்ட அன்னி மிஞிலி, அக் கோசரை அழித்துப் பழி வாங்குமுன், கலத்தும் உண்ணேன் தூய ஆடையும் உடேன்” என வஞ்சினம் உரைத்தாள். வஞ்சினம் என்பது, புறநானூறுத் துறைகளுள் ஒன்று. தன் பகை மன்னனை எதிர்த்து வெற்றி பெறுவேன் என்று சூளுரைத்து போரில் ஈடுபடுவது.

அன்னி மிஞிலி தனியாகப் போரிட முடியாது என்பதால் திதியன் எனும் மன்னனின் ஆதரவை நாடினாள். திதியன் பொதியமலைப் பகுதியை ஆண்ட அரசன் என்று “செல்சமம் கடந்த வில்கெழு தடக்கை, பொதியிற் செல்வன் பொலந்தேர்த் திதியன்” என்கிறது – ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் பாடிய அகநானூறு 25 ஆம் பாடல். அவளின் நிலையைக் கண்டு அவளுக்கு உதவுவதாக திதியன் வாக்களித்தான். திதியனுக்கும், கோசர்களுக்கும் போர் மூண்டது. அந்த போர்க்களத்திற்குச் சென்று கோசர்களைக் கண்டம் துண்டமாக வெட்டி வீழ்த்தினாள் அன்னி மிஞிலி என்கிறது பரணர் எழுதிய அகநானூற்றுப் பாடல் 196.

“தந்தை கண் கவின் அழித்ததன் தப்பல், தெறுவர
ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று முரண் போகிய
கடுந்தேர்த் திதியன் அழுந்தை, கொடுங்குழை
அன்னி மிஞிலியின் இயலும்
நின் நலத் தகுவியை முயங்கிய மார்பே…” (அகம் 196)

தலைவி தலைவனோடு ஊடல் கொண்டிருக்கும் பாடலில் ஒரு வாரலாற்றுச் செய்தியைக் கொண்டு வந்து சேர்ப்பது என்பதே சங்ககாலப் புலவர் பரணரின் சிறப்பு.

அதே போல அகநானூறு 262 ஆம் பாடலில்

“மறங்கெழு தானைக் கொற்றக் குறும்பியன்
செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர்
இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய
அன்னி மிஞிலி போல”

என்ற வரிகளில் பரணர், குறிஞ்சித்திணையில் இரவுக்குறிகண் தலைவியை புணர்ந்து நீங்கும் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லிய பாடலில் அன்னி மிஞிலியின் வரலாற்றைக் கொண்டு வந்து சேர்க்கிறார்.

வஞ்சினம் உரைப்பது என்றாலே அறிவிற்குப் பொருந்தாத திரௌபதி கதையை நினைப்பதை விடுத்து, தன் தந்தைக்காக வஞ்சினம் உரைத்து வெற்றி பெற்ற அன்னி மிஞிலியின் தரவு அறிவிற்குப் பொருந்துவதாக இருக்கின்றது. அது மட்டும் அல்லாமல் பெண் குழந்தைகளுக்கு ஒரு அழகிய தமிழ்ப் பெயரும் கிடைத்து விட்டது. “அன்னி மிஞிலி”


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அன்னி மிஞிலி”

அதிகம் படித்தது