பிப்ரவரி 27, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

அன்னை மீனாம்பாள்

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Jan 13, 2018

Sirgu Annai_Meenambal1

தலித் ஆளுமை அன்னை மீனாம்பாள் பற்றிய நிகழ்ச்சி அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அன்னை மீனாம்பாள் அவர்கள் 1904 ஆம் ஆண்டு, டிசம்பர் 26 ஆம் தேதி பிறந்தார்.

இரங்கூனில் இவரது பாட்டனார் மதுரைப்பிள்ளை பிரபலமானவர். ‘வணிகர் விக்டோரியா’, ‘மதுரை மீனாட்சி’ என்கிற இரண்டு லாஞ்சுகள் அவருக்குச் சொந்தமானவை. இண்டர்மீடியட் படித்துவிட்டுத் திருமணத்துக்காக 16வது வயதில் சென்னைக்கு வந்தார் அன்னை மீனாம்பாள். அப்போதிலிருந்து தொடர்ந்து சமூகப்பணிகளை தான் இறக்கும் வரையில் செய்து வந்திருக்கின்றார். சைமன் குழு வருகையை ஆதரித்துப் பேசி 1928இல் தன் பொது வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.

மிகச் சீரிய சுயமரியாதை வீரங்கனை. ஆம், அன்றைய காலக்கட்டங்களில் தந்தை பெரியார் அவர்களோடு பல்வேறு கூட்டங்களில், திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றியவர்.

அவருடைய பெரியப்பா வேணுகோபால் பிள்ளை அவர்கள் கடப்பையில் நகராட்சி ஆணையாளராகப் பணிப்புரிந்தவர். சென்னை ஸ்பர்டாங் சாலையில் நீதிக்கட்சியின் தூண்களில் ஒருவரான டாக்டர் டி. எம். நாயர் ஆற்றிய சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர். அந்த வகையில் நீதிக்கட்சியுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.

Sirgu Annai_Meenambal2

ராஜாஜி அவர்கள் பிரதமராக இருந்த சமயம் தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க ஏற்பாடு செய்தார். அப்போது சென்னை தியாகராயர் நகரில் கூட்டத்தைத் தொடங்கி வைத்து அன்னை மீனாம்பாள் இந்தி திணிப்பை எதிர்த்து உரையாற்றி முதன் முதலில் இந்தி திணிப்பு போரை தொடங்கி வைத்தார்.

அதே போன்று வரலாற்றில் தந்தை பெரியார் அவர்களுக்கு பெரியார் எனும் பட்டம் அளித்த பெருமை அன்னை மீனாம்பாள் அவர்களையே சாரும். 1938 இல் சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் பெரியார் என்ற பட்டம் அளிக்கப்பட்டது.

இதனை நீதிக்கட்சி பவள விழா மலர் ஒன்றில் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறுகிறார்.

“நான், நாராயிணி அம்மாள், டாக்டர் தருமாம்மாள் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தபோது, காந்தியாருக்கு மகாத்மா என்ற பட்டம் கொடுத்து அழைக்கிறார்கள். நாம் நம் மக்களுக்காக எல்லாவற்றிலும் முன்னின்று பாடுபடுகிற ஈ.வெ.ரா. அவர்களுக்கு ஒரு பட்டம் கொடுத்து அழைக்கவேண்டும் என்று முடிவு செய்தோம். அப்பொழுதுதான் ‘பெரியார்’ என்று அழைப்பது என்ற முடிவு செய்து, பிறகு பெண்கள் மாநாடு கூட்டி ‘பெரியார்’ என்று பட்டம் கொடுத்தோம். அதை ஒரு முக்கிய நிகழ்ச்சியாக என் வாழ்நாளில் கருதுகின்றேன்”. என்றார்.

Sirgu Annai_Meenambal3

அதே போன்று, மும்பையில் உள்ள அண்ணல் அம்பேத்கர் வீட்டில் தன் இணையர் தந்தை சிவராஜ் அவர்களுடன் கலந்து கொண்ட போது, அண்ணல் அவர்களே விருந்து சமைத்து பரிமாறினார்கள் என்பது மிகச் சிறப்பான செய்தி. அண்ணல் அவர்கள் எப்போதும் அன்னை மீனாம்பாள் அவர்களை தன் தங்கை என்றே அழைத்து வந்தார்கள்.

அக்காலத்தில் அன்னை மீனாம்பாள் வகித்த பதவிகளை படிப்பவர்களுக்கு அவர் எத்தகைய ஆளுமையோடு இருந்தார் என்பது விளங்கும்! அவர் வகித்த பதிவிகள்

• கவுன்சிலர் (6 ஆண்டுகள்)
• கௌரவ மாகாண நீதிபதி (16 ஆண்டுகள்)
• திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் (6 ஆண்டுகள்)
• சென்னை மாகாண ஆலோசணைக் குழு உறுப்பினர் (9 ஆண்டுகள்)
• தொழிலாளர் ட்ரிப்யூனல் உறுப்பினர்
• சென்னை நகர ரேசன் ஆலோசனைக் குழு உறுப்பினர்
• சென்னை பல்கலைக் கழக செனட் உறுப்பினர் (13 ஆண்டுகள்)
• போருக்குப்பின் புனரமைப்புக்குழு உறுப்பினர்
• S.P.C.A உறுப்பினர்
• நெல்லிக்குப்பம் பாரி கம்பெனி தொழிலாளர் தலைவர்
• தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர்
• அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர் (6 ஆண்டுகள்)
• சென்னை கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர்
• விடுதலை அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர்
• காந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர்
• மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத்தலைவர் (6 ஆண்டுகள்)
• சென்னை அரசு மருத்துவ மனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர்
• அடையார் மதுரை மீனாட்சி மகளிர் விடுதி நடத்துனர்
• லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர்

மிகச் சீரிய பெண்ணியவாதியாக திகழ்ந்த அன்னை மீனாம்பாள் அவர்களின் முழக்கம், “பெண்களின் விடுதலையே ஆண்களின் விடுதலை” என்பது.

31 -1 -1937 இல் திருநெல்வேலியில் ஆதிதிராவிடர் மாநாட்டில் அன்னை மீனாம்பாள் இவ்வாறு பேசினார்கள்.

“ஒற்றுமையில்லாக் குடும்பம், ஒருமிக்க கெடும் என்பார்கள். அதுபோல ஒரு குடும்பமோ, ஒரு சமுதாயமோ, ஒரு தேசமோ முன்னேற்றமடைய வேண்டுமானால் ஒற்றுமை மிகவும் அவசியம். நாம் தேசத்தில் சாதிப்பிரிவினை அறவே ஒழிய இன்னும் பல ஆண்டுகள் செல்லுமாயினும் நம் சமூகத்தினர், நாம் முன்னேற்றமடைய நாங்களும் மனிதர்கள்தான், எல்லா உரிமைகளும் எங்களுக்கும் உண்டு என்று நிரூபிக்க வேண்டி நாம் யாவரும் பிரிவினை இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று வலியுறுத்திய அன்னை மீனாம்பாள் அவர்கள், 30 -11 -1992 இல் மறைந்தார்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அன்னை மீனாம்பாள்”

அதிகம் படித்தது