மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அன்பழகன் அறியத் தரும் இட ஒதுக்கீட்டின் வரலாறு – பகுதி -2

தேமொழி

Mar 21, 2020

siragu anbalagan1

தகுதி அடிப்படை என்ற பொருந்தாவாதத்தை அன்பழகன் நல்லதொரு உவமையுடன் தெளிவாக விளக்குகிறார். ஊர்மக்களுக்குப் பொதுவான விளைநிலத்தில் அனைவரிடம் இருந்தும் விதைநெல் பெற்று, விதைத்து, பயிர் விளைவித்த பின்னர், விளைச்சலைத் தக்க முறையில் பங்கிடாது, அவரவர் திறமைக்கும் வலுவுக்கும் ஏற்ப அறுவடை செய்து கட்டிக் கொண்டு போங்கள் என்று கூறுவோமானால், அறம் எதுவெனத் தெரிந்தவர் அதை ஏற்றுக்கொள்ள வழியில்லை என்கிறார் (பக்கம் – 64). ஆனால் கல்வித்துறைக்காகச் செலவிடும்வரிப் பணத்திற்கு அதுதான் அப்பொழுது விளைவாக இருந்திருக்கிறது. இந்த சுரண்டல் முறையை அநீதி என்று உணர்ந்தவர் வெகு சிலரே. அரசு குடியானவனின் தெரு கடைத்தேங்காயை எடுத்துச் சென்று அக்கிரகார தெரு பிள்ளையார் கோவிலில் உடைத்துக் கொண்டிருப்பது போல நிர்வாகம் செய்துள்ளனர் என்கிறார் அன்பழகன்.

உண்மையில் பார்ப்பன வகுப்புரிமைக்கான வாய்ப்பை அவர்கள் இழக்கவில்லை என்பதைத்தான் தரவுகள் காட்டுகிறது. இத்தரவுகளைக் கொடுத்த அன்பழகன் சதவிகித எண்களையும் அடைப்புக்குறிக்குள் கொடுத்திருக்க வேண்டும், அப்பொழுதுதான் நூலைப் படிப்பவர் கணக்குப் போட வேண்டிய தேவையின்றி ஒரு பார்வையிலேயே வகுப்புரிமை நிலையை அறிந்து கொள்ள உதவியாக இருந்திருக்கும். தரவுகள் குறித்து அன்பழகன் தனது நூலில் ஒரு கேள்வியை எழுப்பாமல் விட்டாலும்.. தரவுகளைப் பார்வையிட்ட பிறகு நமக்கு எழவேண்டிய கேள்வி… தகுதியும் திறமையும் உள்ளவர் என்று தொழிற்கல்வியை 1940களில் ஆக்கிரமித்த இந்தப் பிரிவினரிலிருந்து அப்துல்கலாம் போல எத்தனை விஞ்ஞானிகளை நாம் இவர்களிலிருந்து அடையாளம் காட்ட முடியும்? தரவுகள் காட்டும் காலகட்டத்தில் பள்ளியில் பயிலும் மாணவராகவே கலாம் இருந்திருப்பார். இவர்கள் அவருக்கும் மூத்த தலைமுறையினர்.

மேலும், தகுதி என்பதை மதிப்பெண்கள் கொண்டு நிர்ணயிக்கும் நிலையில் உள்ள இக்கட்டையும் தெளிவாக விளக்குகிறார். தகுதியும் திறமையும் என்ற தலைப்பின் கீழ் மதிப்பெண்கள் காட்டுவது உண்மையான தகுதியையா என்பது குறித்த ஒரு விளக்கமும் அளிக்கிறார் அன்பழகன் (பக்கம் 75-76). மாணவர்களின் வேறுபட்ட கல்வி கற்கும் சூழலை விளக்கும் விதமாக அட்வகேட் அனந்தாச்சாரி என்பவர் வீட்டில் வளரக்கூடிய மாணவர், வக்கீல் குமாஸ்தா கோவிந்தசாமிப் பிள்ளை வீட்டில் வளரக்கூடிய மாணவர், கூலி வேலை செய்யும் குப்பன் குடும்பத்தில் வளரும் மாணவர் (பக்கம் 80 – 84) என மூன்று வெவ்வேறு சூழலில் படிக்கும் மாணவர்களின் நிலையைக் காட்டி, இவர்களின் கல்வித் திறமையை மதிப்பெண் தகுதி என்பதன் கீழ் நிர்ணயிக்க முற்படும் முறையில் உள்ள பிழையையும் சுட்டிக்காட்டுகிறார். தகுதி என்ற முறையில் அண்மையில் சமூகநீதி அடிபட்டு நன்கு படித்த மாணவியான டாக்டர் அனிதா என்பவரின் தொழிற்கல்வி கனவு சிதைந்ததை யாரும் மறந்திருக்க வழியில்லை.

முன்னேறிவிட்டவருக்குப் படிப்பு ஒரு அடையாளச் சீட்டு, நடுத்தர நிலையில் உள்ளவருக்கு வாழ்க்கைப் பிரச்சனை, தாழத்தப்பட்ட சூழலில் சிக்கிக் கொண்டவருக்கோ அது ஒரு தண்டனை, வேதனைச் சூழல் என விளக்குகிறார். அதனால் தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் வெளியேற்றப்படுபவர்கள் அறிவாற்றல் அற்றவர்கள் அல்ல எனத் தெளிவு படுத்துகிறார். “ஒரு நாட்டிற்கு இன்றியமையாத ‘தகுதியும் திறமையும்’ பாழாக விடக்கூடாது” என்பதற்காகவே, கம்யூனல்ஜி.ஒ. வை எதிர்ப்பதாகக் கூறுவது உண்மையிலேயே இல்லாத ஆற்றிலே, ஓடாத தண்ணீரைத் தேக்காதது குற்றம் என்று பேசும் பித்தலாட்டமேயாகும்” என்பது அன்பழகன் வைக்கும் வாதம் (பக்கம் 92, இப்பக்கத்தில் உள்ள வாதங்கள் பலவும் சிறப்பானவை).

 siragu anbalagan8

இவ்வாறாகப் பல போராட்டத்திற்கு இடையில் உருவாக்கப்பட்டு, எதிர்ப்புகளுக்கு இடையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கம்யூனல்ஜி.ஒ. வை எவ்வளவு முயன்றும் மாநில சபையின் மூலம் ஒழிக்க முடியாததால், விடுதலை பெற்ற இந்தியாவின் மத்திய அரசின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் மற்றொரு பக்கம் நடந்து கொண்டிருந்தன. 1948ஆம் ஆண்டு மே மாதம் மத்திய அரசு இந்து சமய மக்களுக்குள் சாதி பேதம் காட்டும் முறை அரசு கொள்கைக்கு மாறானது என்ற சுற்றறிக்கை அனுப்பியது. மாநில முதல்வர் ஓமந்தூர் ராமசாமி தெளிவான முறையில் உறுதியோடு இது குறித்த நடவடிக்கைகள் எடுத்த வண்ணம் இருந்தார். தமிழகத்தில் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல பொதுநல அமைப்புகள் அதை எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்றின.

பிராமணர்களுக்கு உத்தியோகமில்லையா? அவர்கள் தகுதி திறமை பாழாவதா என்று வெகுண்டவர்கள், “புல்லேந்தும்மரபில் வந்த நாம், சமயம் நேர்ந்தால் வாள் ஏந்தும் திறமையுடையோர்கள் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும்” என்று 1948 மே மாதத்தில் நடைபெற்ற “முற்போக்கு பார்ப்பனர் மாநாட்டில்” முழக்கமிட்டிருக்கின்றனர் (பக்கம் 111). இது இக்காலத்தில் வைரமுத்துவின் ஆண்டாள் விளக்கம் குறித்து சினம் கொண்டு ‘கல் எறியவும், சோடா பாட்டில் வீசவும் தெரியும்’ என்று மார்தட்டிய சோடாபுட்டிஜீயரை நினைவுபடுத்துகிறது. இது பார்ப்பன வகுப்பினரின் கம்யூனல்ஜி.ஒ. எதிர்ப்பின் உச்ச நிலையைக் காட்டும். ஓமந்தூர் ராமசாமிக்குத் தலைமைப் பதவியிலிருந்து விலக வேண்டிய நெருக்கடி உருவாக்கப்பட்டது (இதை மண்டல் அறிக்கையை நடைமுறைக்குக் கொண்டுவந்த பிரதமர் வி.பி.சிங் 1990இல் எதிர் கொண்ட நிலையுடன் ஒப்பிடலாம்).

அடுத்து 1949 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த குமாரசாமி ராஜா ஆட்சியில் நாட்டின் புதிய அரசியல் சட்டத்தின் துணையுடன் கம்யூனல்ஜி.ஒ. வை முறியடிக்கும் நோக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. 1950 ஜனவரி 26 இல் இந்தியாவின் புதிய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்ததுதான் இதற்கான திருப்புமுனை. தமிழகத்தில் நடைமுறை வழக்கிலிருக்கும் கம்யூனல்ஜி.ஒ. விளைவாகத் தாம் ஒரு பிராமணர் என்பதால் மருத்துவம் படிக்க இயலாது போகக்கூடும் என்று செண்பகம் துரைசாமி என்பவரும், பொறியியல் படிக்கும் வாய்ப்பு இல்லாமல் போகக்கூடும் என்று சீனிவாசன் என்பவரும் மனு செய்தனர். தகுதி அடிப்படையில் அவர்கள் விண்ணப்பங்கள் மதிப்பிடப்பட வேண்டும் கம்யூனல்ஜி.ஒ. குறுக்கீடு இருக்கக் கூடாது என்பது அவர்கள் கோரிக்கை. இவர்களுக்காக இந்த வழக்கில் வாதாடியவர் அன்றைய அட்வகேட் ஜெனரல் ஆகப் பதவி வகித்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் என்பவர். இவர் இந்திய அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக் குழுவில் இடம் பெற்றவர். வரைவுக் குழுத்தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் இணைந்து இந்திய அரசியல் அமைப்புச்சட்ட வரைவு உருவாக்கப்படக் காரணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் இவரது மகன் அல்லாடி குப்புசாமி அய்யரும் இணைந்து வழக்காடினார்.

வழக்கின் முடிவில் தமிழக அரசின் கம்யூனல்ஜி.ஒ. என்ற இட ஒதுக்கீடு ஆணை இந்திய அரசின் சட்டப்படி செல்லாது என்ற தீர்ப்பு தலைமை நீதிபதி பி. வி. இராசமன்னார் அவர்களால் வழங்கப்பட்டது. அரசியல் அமைப்புச்சட்ட வரைவு உருவாக்கிய அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரே இந்தியச் சட்டத்திற்கு எதிராக உள்ள ஆணை என்று வாதாடினால் தீர்ப்பு வேறு எவ்வாறு இருக்க முடியும்? இதுவரை இடவொதுக்கீடு, சமூகநீதி என்று போராடிப் பெற்ற அத்தனை முயற்சியும் தீர்ப்பால் செயலற்றுப் போனது. அரசியல் சட்டத்தினாலேயே மக்களின் உரிமை பறிக்கப்பட்ட அவலநிலை இது. இதிலிருந்துதான் இந்த நூலைத் துவங்கியுள்ளார் அன்பழகன்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டவரைவுக்குழுவில் இட ஒதுக்கீட்டுக்கு முடிவுகட்டும் விதத்தில் சட்டம் இயற்றப்பட்டது வரைவுக்குழுவில் இடம் பெற்ற அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் அவர்களாலும் டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் ஆகியோரால் என்பதையும் தமிழகம் அன்று உணர்ந்திருந்தது. இதை “இவர்களது நல்லெண்ணத்தின் பாற்பட்ட செயல்” என்று வஞ்சப் புகழ்ச்சியாகக் குறிப்பிடுகிறார் அன்பழகன். சட்ட வரைவுக்குழுவில் இடம் பெற்ற நால்வர் பார்ப்பனர், அவர்களில் தென்னாட்டிலிருந்து பிரதிநிதிகளாகச் சென்ற மூவருமே பார்ப்பனர், இவர்கள் கருத்தின்படி இச்சட்டம் தயாரானது என்பது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு குறிப்பு. சட்ட நுணுக்கங்களை நன்கு அறிந்தவர் ஒருவர் செய்த சூழ்ச்சி இது என்பதைச் சென்னை மேல்சபை உறுப்பினர் பி. நாராயணசாமி நாயுடு எம். எல். சி. ஆற்றிய ஒரு உரையின் மூலமும் அறிந்து கொள்ளலாம். மாநிலக் கல்லூரி கூட்டம் ஒன்றில் வழக்கு நடக்கும் முன்னரே அல்லாடி கிருஷ்ணசாமி இடவொதுக்கீடு ஒழிக்கப்பட வேண்டும் என்று ஆற்றிய சொற்பொழிவுச் சான்றும்கூட உண்டு.

இக்காலத்திலேயே இந்த நிலை என்றால்!!!… என்ற எண்ணம் எழுவதை யாராலும் தவிர்க்க இயலாது என்பதுதான் உண்மை. மக்களாட்சி ஒன்றில் அனைவரின் பிரதிநிதித்துவத்தின் இன்றியமையாமை குறித்து கற்க வேண்டிய பாடம் இதில் இருக்கிறது (பக்கம் 144 – 146). இந்தியாவின் சட்டவரைவை உருவாக்கும் குழுவில் இடம் பெற்றவரே இடவொதுக்கீட்டுக்கு ஊறு விளைவிக்கும் ஒரு சட்டத்தையும் இடம்பெறச் செய்து, பார்ப்பன மாணவர்கள் சார்பில் ஒரு வழக்கையும் தொடுத்து, அவரே வாதாடி சட்ட வரையறையைக் கொண்டே இடவொதுக்கீட்டு ஆணையை முறியடித்தும் காட்டினார் என்பது அன்று தமிழகத்தின் முதுகில் குத்தப்பட்ட நிகழ்வு. வழக்குத் தொடுத்த மாணவர் இருவரும் தொழிற்கல்வி கற்கச் செல்லவில்லை என்பது வேறு ஒரு தனிக்கதை. நூல் வெளியான அக்காலத்தில் நிகழ்ந்தவரைத்தான் இந்த நூல் குறிப்பிடுகிறது. சட்டம் திருத்தப் பட வேண்டிய தேவையை வலியுறுத்துகிறது. மக்களின் தீர்ப்பை மக்களாட்சி கேட்க வேண்டும் என்று கூறி வெற்றி பெற்ற பிறகு என்ன செய்யவேண்டும் என்ற பல அறிவுரைகளோடு நூல் நிறைவுறுகிறது.

தமிழரின் அறப்போராட்டத்தைச் சான்றுகளுடனும் தரவுகளுடனும் பதிவு செய்துள்ளார் அன்பழகன். நூலின் இறுதிப்பகுதி இந்திய அரசியல் அமைப்புச் சட்டவரைவைக் குடிமக்களின் உரிமை, அரசின் கடமை என்ற கோணத்தில் விரிவாகவும் நூலாசிரியர் அலசுகிறார். இந்த நூல், தமிழரின், தமிழகத்தின் வரலாற்றின் ஒரு பகுதி. 180 பக்கங்களில் தமிழரின் இடவொதுக்கீடு போராட்டத்தைப் பதிவு செய்யும் ஒரு சிறந்த வரலாற்று ஆவணம். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியின் தமிழக வரலாற்றைக் காட்டும் காலக் கண்ணாடி.

பிறகு நடந்தது என்ன?

ஒரு தீர்ப்பு சட்டப்படி சரி, ஆனால் அறத்தின் அடிப்படையில் பிழை என்றால் சட்டத் திருத்தம் ஒன்றுதான் மீண்டும் அறத்தை நிலை நிறுத்தும். ஆகவே, தீர்ப்பையடுத்து ஈ. வெ. ரா. பெரியாரின் தலைமையில், திருச்சியில் நடந்த இடவொதுக்கீடு குறித்த மாநாட்டில் இந்த தீர்ப்பினை எதிர்த்து இட ஒதுக்கீட்டு முறைக்காக சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. இங்குதான் இட ஒதுக்கீட்டில் பெரியாரின் பங்களிப்பின் முக்கியத்துவம் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இன்றும் இடவொதுக்கீட்டின் தேவையையும் அதன் வரலாற்றையும் அறியாதவர் எண்ணற்றவர் என்பது ஒரு பெரிய குறைபாடு. கட்சி வேறுபாடு இன்றி தமிழகத்தில் அனைத்துக் கட்சியினரும் ஒன்று திரண்டனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் காமராஜரும் ஆதரவு அளித்தார். பெரியாரின் தலைமையில் எடுக்கப்பட்ட போராட்ட நடவடிக்கை இந்தியாவின் முதல் சட்டத்திருத்தத்திற்கு அடிகோலியது, இடவொதுக்கீடு உரிமையை மீட்டுக் கொடுத்தது.

தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு நேரு தலைமையிலிருந்த மத்திய அரசை உலுக்கியது. போராட்டத்திலிருந்த நியாயம் உணரப்பட்டது. இந்தியா அரசின் முதல் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்த காலத்திலேயே இட ஒதுக்கீடு அளிக்கப்பட அரசியல் சட்டத்தில் 15(4) பிரிவு (ஆர்ட்டிக்கில் – 15(4)) என்ற சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. கல்வி மற்றும் சமூகரீதியாக பிற்படுத்தப்பட்டவர்கள் தான் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற வரையறை உறுதி செய்யப்பட்டது. கல்வி மற்றும் சமூகவாழ்வில் முன்னேற வேண்டிய எந்த ஒரு வகுப்பினருக்கான திட்டங்களில் அரசின் எந்த ஒரு சட்டமும் தடை செய்ய முடியாத வகையில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதில் பொருளாதார நிலை குறித்த அளவுகோலை நுழைக்கும் முயற்சி பொருத்தம் இல்லை என்று ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இவற்றுடன் பெண்கள் சொத்துரிமை விவாகரத்து உரிமை போன்றவற்றுக்கும் வழிவகுக்க அம்பேத்கர் எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது, தனது எதிர்ப்பைக் காட்ட அவர் சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்.

ராபர்ட்-டி-நொபிலி (Robert de Nobili)என்ற இத்தாலியர் கிறித்துவ மதபோதகராக 1600களில் மதுரையில் சமயப் பணியாற்றினார். முதல் உரைநடை நூலைத் தமிழில் எழுதியவர் என்ற சிறப்புப் பெற்றவர் இவர். அத்துடன் தமிழ் நூல்கள் சிலவும் எழுதினார். தம்மை இத்தாலியப் பிராமணர் என்று கூறிக் கொண்ட இவர் மதுரை திருமலை நாயக்க மன்னரின் நல்லதோர் நண்பராகவும் விளங்கினார்.

 siragu anbalagan9

1610ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 22ஆம் நாள் நொபிலி எழுதிய கடிதமொன்று மதுரை நாயக்க மன்னரின் கல்வியமைப்பைப்பற்றி நமக்கு அறியத் தருகிறது. ‘மதுரையில், 10,000 கக்கும் மேலான எண்ணிக்கையில் மாணவர்கள் கல்வி கற்றனர். அவர்கள் வகுப்பொன்றுக்கு 200 முதல் 300 வரை என்ற எண்ணிக்கையில் பல வகுப்புகளில் கல்வி கற்றனர். அவர்களெல்லோரும் பிராமணர்களே, அவர்களுக்கு மட்டுமே உயர்தரக்கல்வியைக் கற்பது தனிவுரிமையாக்கப்பட்டிருந்தது. அவர்கள் வாழ்வாதாரத்திற்குப் பொருள் தேடி அல்லல்படாது கருத்தூன்றிக் கல்வி கற்கும் பொருட்டு அவர்களுக்காக மன்னர் சிறந்த வகையில் கொடைகள் வழங்கியிருந்தார்’ (History of the Nayaks of Madura, p.257.). இவ்வாறு இந்தியாவில் காலம் காலமாக மக்களின் வரிப்பணம் பார்ப்பனர் கல்வி என்பதற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது என்பதும், கல்வி கற்கும் உரிமையும் சமய சட்டங்கள் மூலம் அவர்களுக்கே அளிக்கப்பட்டிருந்தது என்பதும்தான் இந்தியாவின் சமூக அநீதியின் வரலாறு. வைதீக சமயத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்.

கடந்த கால வரலாற்றை ஊன்றிப் படிப்போருக்குத் தெரியும், இட ஒதுக்கீடு என்பது ஒரு சலுகை அல்ல! அது ஒரு நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கான உரிமையும் பங்கீடும் என்ற அறநெறி என்பது.

நூல் விவரம்:
வகுப்புரிமைப் போராட்டம், க. அன்பழகன், 1951; மக்கள் மன்றம், பவழக்காரத் தெரு, சென்னை.
[ https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZh8lZxy&tag=வகுப்புரிமைப்%20போரட்டம்#book1/ ]

படங்கள் உதவி: நூலில் காணப்படும் படங்கள் மற்றும் விக்கிப்பீடியா

செய்தி பெற்ற தளங்கள்:
[1] The State Of Madras vs SrimathiChampakam; on 9 April, 1951

https://indiankanoon.org/doc/149321/

[2] சமூகநீதி வரலாற்றைச் சுமக்கும் தமிழ்நாடு கடந்துவந்த பாதை: இடவொதுக்கீடு: 150 ஆண்டுக்கால வரலாற்றுத் தொகுப்பை கூர்மை வெளியிடுகிறது, 2018 செப். 30

https://www.koormai.com/pathivu.html?vakai=5&therivu=350

[3] History Of The Nayaks Of Madura, Sathyanath Aiyar, 1941, pp.257

https://archive.org/details/in.ernet.dli.2015.156898/page/n267/mode/2up


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அன்பழகன் அறியத் தரும் இட ஒதுக்கீட்டின் வரலாறு – பகுதி -2”

அதிகம் படித்தது