அன்பழகன் அறியத் தரும் இட ஒதுக்கீட்டின் வரலாறு
தேமொழிMar 14, 2020
“வகுப்புரிமைப் போராட்டம்” என்ற நூல் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களால் 1951 ஆம் ஆண்டில்எழுதப்பட்டு, மக்கள் மன்றம் பதிப்பாக வெளியிடப்பட்ட நூல். அண்மையில் காலமான, இனமான பேராசிரியர் என அழைக்கப்பட்ட பேராசிரியர் க. அன்பழகன் 1944 முதல் 1957 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக தி.மு.க. உருவான நாள் முதல் அதன் உறுப்பினராகவும், 1977 முதல் 2020இல் இறக்கும் வரை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவின் பொது செயலாளராகவும் இருந்துள்ளார். தமிழகத்தின் நிதி, கல்வி ஆகிய துறைகளின் அமைச்சராகவும் பணியாற்றியவர். சட்டமன்ற உறுப்பினராக ஒன்பது முறையும், நாடாளுமன்ற உறுப்பினராக ஒரு முறையும், சட்டமன்ற மேல்சபை உறுப்பினராக ஒரு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டு நீண்ட அரசியல் பங்களிப்பைச் செய்தவர்.
இந்த நூலை எழுதிய காலத்தில் க.அன்பழகன் ஒரு ஆறேழு ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றியவராகவும், திராவிட கொள்கைகளில் ஊறிப்போன 30 வயதுக்கும் குறைவான இளைஞராகவும் இருந்துள்ளார் என்பது தெரிகிறது. புள்ளிவிவரங்கள், தரவுகள் நிரம்பப் பெற்ற நூலாக இருப்பினும் நூலின் நடை எளிமையாகவும் உள்ளது. வகுப்புரிமை கொள்கைக்காகப் போராடிய தமிழகத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் ஒரு வரலாற்று ஆவணம் என்றே இந்நூலை வகைப்படுத்த முடியும். தமிழக ஆசிரியப்பணியில் இருப்போர் வரலாற்று அடிப்படையில் அறிந்திருக்க வேண்டிய நூல் இது.
நான் படித்த இந்த “வகுப்புரிமைப் போராட்டம்” நூலின் பதிப்பில் முன்னுரை, அணிந்துரை, அறிமுகவுரை, ஆசிரியர் எழுதும் என்னுரை, உள்ளுறை என்று நூலின் உள்ளடக்கம் போன்ற எதுவுமே காணப்படவில்லை. நூலின் துவக்கத்தில், முதலில் வகுப்புரிமை கொள்கையின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்ட நீதிக்கட்சி (ஜஸ்டிஸ் பார்ட்டி) பெரியோர்களின் கருத்துகளும், தொடர்ந்து அவர்களின் வழியில் அதற்காகப் போராடியோரின் கருத்துரைகளை ஒருபக்க அளவில் சுருக்கமாக மேற்கோள்களாகக் கொடுத்து நூலின்பொருளைக் கோடி காட்டுகிறது இந்த நூல். சமூகநீதிக் கொள்கையில் பற்று கொண்டிருந்த டாக்டர் பி. நடேசமுதலியார், வகுப்புரிமை கொள்கைக்கு மாநாட்டில் உறுதியான ஆதரவுக்குரல் கொடுத்த வ.உ.சி, வகுப்புரிமையை நடைமுறைக்காகப் போராடிய பெரியார் ஈ. வெ.ரா., மற்றும் அறிஞர் அண்ணாதுரை ஆகிய நால்வரின் படங்களைக் கொடுத்து விட்டு நேரடியாக நூலின் நோக்கதிற்குச் சென்றுவிடுகிறது நூல்.நூலின்சாரத்தைச் சுருக்கமாக இனி அறிவோம்.
வகுப்புரிமைப் போராட்டத்தின் வரலாறு:
கல்வித்துறையில் ‘வகுப்புரிமை அரசாணை’ அல்லது ‘கம்யூனல் ஜி.ஒ.’ (Communal G.O./communal government order) என்று அறியப்பட்ட, சமூகநீதிக்கான இடவொதுக்கீடு நோக்கில் உருவாக்கப்பட்ட அரச ஆணை சட்டப்படி செல்லாது, அது இந்திய அரசியல் அமைப்புச் சட்டவரைவுக்கு எதிரானது என்று கூறப்பட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு எழுதப்பட்ட நூல் இது. 1950 ஜூலை 27இல் தமிழக சமூகநீதிப் போராளிகளை உலுக்கியசட்டத் தீர்ப்பு குறித்த நிகழ்வுடன் நூல் தொடங்குகிறது. பாலுமகேந்திராவின் திரைப்படத்தில் இந்து டீச்சர் மறைந்துவிட்டார் என்ற கடிதச் செய்தியைப் படித்த பிறகு நாயகனின் நினைவுகள் பின்னோக்கி ஓடும் வகையில் துவங்கும் பாணியில் நூல் அமைகிறது. தமிழக வரலாற்றில் நீதிக்கட்சி என்ற ஒரு கட்சி துவக்கப்பட்டதே வகுப்புரிமை என்ற சமூகநீதியை நடைமுறைக்குக் கொண்டு வரும் நோக்கில்தான். அதற்காகக் காலம் காலமாகப் போராடிய சமூகநீதி நோக்கம் கொண்டோருக்கு இத்தீர்ப்பு அதிர்ச்சியை அளித்தது. ஆனால்… ‘கம்யூனல் ஜி.ஒ.’ எதிர்த்தோர் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தனர்.
இத்தீர்ப்பிற்குப் பிறகு கல்லூரியில், அரசு அலுவலகத்தில், செய்தி நிறுவன அலுவலகத்தில், இசையரங்கில், மகளிர் சங்கத்தில்எனப் பல இடங்களில் பார்ப்பன பின்புலம் கொண்டோர் தீர்ப்பு குறித்து மகிழ்ச்சியாக உரையாடுவதான கற்பனைக் காட்சிகளுடன்நூலின் முதல் அத்தியாயம் துவங்குகிறது. இதில் ஆசிரியர் கொடுக்கும் இடங்கள் யாவும் அக்காலத்தில் பார்ப்பனகுல மக்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்த இடங்கள். இதை ஆசிரியர் நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆனால் வரலாறு புரிந்தவருக்கு அது புரியாமல் போகாது. உரையாடல்கள் அவர்கள் குலவழக்கின்படியும், சமஸ்கிருதமும் ஆங்கிலமும் கலந்த நடையில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஆசிரியர் சுட்டிக் காட்ட விரும்பியது, இந்த தீர்ப்பு ஆதிக்க நிலையில் இருந்தவர்களுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சியை அளித்தாலும் அதை வெளிப்படையாகக் கொண்டாட முடியாத இக்கட்டான சூழல் அன்று தமிழகத்தில் நிலவியது. அடைந்த மகிழ்ச்சியை அடக்கி வாசிக்கும் நிலையிலிருந்தார்கள் அவர்கள் என்பதைப் படிப்போருக்கு உணர்த்துகிறார் அன்பழகன். இதைத் தொடர்ந்து வகுப்பு நீதி வளர்ந்த விதம் குறித்த தமிழக வரலாற்றுப் பின்னணியைக் கொடுக்கிறார்.
வகுப்புரிமைப் போராட்டம் என்பதில் உள்ள ‘உரிமை’ என்பதை ஏற்றுக்கொள்ளாது, அது ஒரு வகுப்புவாத அல்லது வகுப்புபேத திட்டம், அதன் நோக்கம் திறமையையும் தகுதியையும் மதிக்காது ஒரு சிலரின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் திட்டம் என்ற வகையிலேயே பலகாலம் கல்வியையும் அதனால் பலனையும் பெற்றிருந்த ஆதிக்க பிரிவினரால் இத்திட்டம் குறித்துக் குற்றம் சாட்டப்பட்டது. இதனை மறுத்து வகுப்புரிமையின் தேவையை விளக்குகிறார் அன்பழகன். ஒரு கல்லூரிப் பேராசிரியர் நாட்டின் கல்வி அமைப்பு மற்றும் நடைமுறை குறித்து எழுதுவது பொருத்தம் ஆகும். நூல் முழுவதும் பல உவமை மூலம் அவர் விளக்கும் விதம் சிறப்பு. காலம் காலமாகக் கல்வியைத் தனக்கென ஒதுக்கிக் கொண்ட ஆதிக்கப்பிரிவினர் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இந்தியா வந்த பொழுது; அப்பொழுதும் தங்களின் கல்வித்தகுதியின் அடிப்படையில் அனைத்து அரசு வேலைகளிலும் நீக்கமற நிறைந்துவிட்டனர். பார்ப்பனர் அல்லாதோரில் (அதாவது; பார்ப்பனர் அல்லாத இந்துக்கள், ஆதிதிராவிடர், இஸ்லாமியர், கிறித்துவர்களாகிய தமிழக மக்கள்) கல்வி கற்றிருந்த ஒரு சிலர் அரசுப்பணிகளில் நுழைய இடம் விடாமல் அவர்கள் கூட்டத்தின் உள்தொடர்பு முறையில் கட்டுப்படுத்திக் கொண்டிருந்ததில் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அரசுப்பணிகளில் இருந்தோர் குறித்த புள்ளிவிவரங்களின் படி எங்கும் எதிலும் அவர்களே நீக்கமற நிறைந்திருந்தனர். பிறர் அரசின் ஓர் உதவியை எதிர்பார்ப்பது என்றாலும் கூட அது பார்ப்பனர் கருணையைப் பெற்றாலே இயலும் என்ற அளவில் நிலைமை அவர்கள் கட்டுப்பாட்டிலிருந்தது. இதே நிலை கல்வித்துறையிலும் இருந்தது. அதனால் நல்ல கல்வி அதன் மூலம் ஒரு நல்ல பணி என்பதிலிருந்த பாதையை அவர்களின் கைவசம் வைத்துக் கொண்டு அதை மற்றவர் அடையாமல் கட்டுப்படுத்துதல் அவர்களுக்கு எளிதாயிற்று. இதனைப் பார்ப்பனர்களின் இனப்பற்று ஆதிக்கவெறி ஆகியவற்றின் விளைவாகப் புரிந்து கொள்ளலாம். ஆகவே நடைமுறையில் மறுவகையில் ஆங்கிலேயர் ஆட்சியிலும் வருணாசிரம முறை மீண்டும் நடைமுறையிலிருந்தது என்றே சொல்ல வேண்டும்.
மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் பார்ப்பனர் அல்லாதவரில் நல்ல கல்வியும் செல்வமும் பெற்றவர், பாதிக்கப்பட்டவர் சிலர் முயற்சி எடுத்தனர். ‘திராவிடத் தந்தை டாக்டர் சி. நடேசமுதலியார்’, ‘திராவிடச் செம்மல் சர். பி. தியாகராய செட்டியார், திராவிடப்பேரறிஞர் டாக்டர் டி. எம். நாயர் ஆகியோர் ஒருங்கிணைந்து பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனை பாதுகாக்க முன்வந்தனர். மெட்ராஸ் திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்த அவர்கள் 1916 ஆம் ஆண்டில் ‘தென் இந்தியர் நலவுரிமைச் சங்கத்தையும்’ தோற்றுவித்தனர். காங்கிரஸ் கட்சியில் சமூகநீதி வகுப்புரிமைக்கு இடம் இல்லாமையினால் இந்த நீதிக்கட்சி தோற்றுவிக்கப்பட்டது என்பதுதான் சமூகநீதிக்கான கட்சி ஒன்றின் துவக்க வரலாறு. இவர்களின் தொடர் முயற்சியால் முதலில் வரிவசூல் துறையில் அனைத்து வகுப்பினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் முறை அரசு உத்தரவாக ஏற்படுத்தப்பட்டது. 1920இல் பனகல் அரசரின் தலைமையில் நீதிக் கட்சி ஆட்சி அமைத்தபொழுது 1921இல் மேல்சபையில் இது தீர்மானமாகக் கொண்டுவரப்பட்டு அந்த ஆண்டு செப்டெம்பர் 1921இல் உத்தரவாக நிறைவேற்றப்பட்டது. 1915ஆம் ஆண்டில் சென்னை மாநிலத்தில் பார்ப்பனர் ஆதிக்கம் இருந்த நிலையை அறிந்தவரால்தான் பார்ப்பனர் அல்லாதோரின் சமூகநீதி இயக்கத்தின் முக்கியத்தை உணரமுடியும் என்கிறார் அன்பழகன். அதைக் கவனத்திற்குக் கொண்டுவரப் பல புள்ளிவிவரங்களை அடுக்கிறார். தமிழக மக்கள் தொகையில் வெறும் 3% இருந்த பார்ப்பனர் அனைத்து உயர்பதவி, அரசு பதவி, கல்வி, தொழிற்கல்வி, சட்டம், நீதி, காவல்துறை, கல்வித்துறை என அனைத்திலும் பெருவாரியாக நிரம்பி இருந்தனர்.
பார்ப்பனர் காங்கிரஸ் கட்சியைக்கேடயமாகப் பயன்படுத்தி அதன் மறைவில் வகுப்புரிமை கொள்கையை வகுப்புவாதம் எனப் பெயர் சூட்டி எதிர்த்தனர். நீதிக்கட்சியில் வந்து சேர்ந்தவரெல்லாம் அதற்கு முன் காங்கிரசிலிருந்து பின்னர் உண்மை புரிந்து வெளிவந்தவர்களே. வ. உ. சி. 1927ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமை ஏற்று வகுப்புரிமையின் தேவையை எடுத்துக் கூறினார், பிறகு நிலைமை புரிந்து அவரும் காங்கிரசைக் கைவிட்டார். காங்கிரசின் முக்கிய பதவிகளில் செயலாற்றிய பார்ப்பனர் அல்லாதோர், ஈ. வெ. ரா. பெரியார் உட்பட, அங்குப் பார்ப்பன ஆதிக்கத்தின் கீழ் சமூகநீதிக்கு உலை வைக்கப்படுவதை உணர்ந்த பொழுது, வகுப்புரிமையை வலியுறுத்தி வந்தவர்கள். ஆனால், அதற்கு காங்கிரசில் இடமில்லை என்று புரிந்து ஒவ்வொருவராகத் தொடர்ந்து வெளியேறி வந்தனர் என்பதை வரலாறு காட்டுகிறது. டாக்டர். வரதராஜுலு நாயுடு, திரு. வி. க. போன்றோர் சிலர் மேலும் இவர்களில் குறிப்பிடத்தக்க அரசியல்வாதிகள் ஆவார்கள். இவர்களைப் போன்று சமூகநீதி குறித்த அக்கறையுடன் போராடியவர்கள் சென்ற நூற்றாண்டிலும் கூட தேசத்துரோகிகள் என்றுதான் முத்திரை குத்தப்பட்டனர் என்பதில் இருந்து இது வருணாசிரமதர்ம ஆதரவாளர்களின் முறையாக என்றுமே இருந்திருப்பது தெரிகிறது.
1926ஆம் ஆண்டின் தேர்தலுக்குப் பின்னர் டாக்டர் சுப்பராயன் தலைமையின் கீழ் ஆட்சியமைத்த அரசு, மாகாண அரசு ஊழியர்களின் பணிக்கான விதிகளை நிர்ணயிக்குமாறு ஆங்கிலேய அரசு மாகாணங்களுக்கு அனுப்பிய ஆணையை ஒரு வாய்ப்பாகத் தக்க முறையில் பயன்படுத்திக் கொண்டது. மக்கட்தொகை விகிதப்படி பல வகுப்பினரின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் நோக்கில் விகிதாச்சார அடிப்படையில் வாய்ப்பளிக்கும் ஒரு முறை திட்டமிடப்பட்டது. 1928ஆம் ஆண்டில் சுப்பராயன் அரசின் அமைச்சர் முத்தையா ‘கம்யூனல்ஜி.ஒ.’ என்பதற்குத் தோற்றமளித்து அரசஆணையாக்கினார். இது முடிவான முடிவல்ல. காலத்திற்கு ஏற்ப மறு பரிசீலனை செய்து மாற்றியமைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டம். இத்திட்டம்1921இல் மேல்சபையில் தீர்மானமாகக் கொண்டுவரப்பட்டது, ஆனால் ஒரு அரசஆணையாக மாற்றம் பெற மேலும் ஏழாண்டுகள் ஆயின. முதலில் ஆவணப்பதிவுத் துறையில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இதன்படி 12 பணியிடங்கள் இருப்பின், அதில் 10 இடங்கள் பார்ப்பனர் அல்லாதவருக்கு என்ற அளவில் வரையறுக்கப் பட்டது. இது தமிழக மக்கட் தொகை அளவில் சதவிகித அடிப்படையில் அனைத்துப் பிரிவினருக்கும் அரசுப்பணிகளில் சம வாய்ப்பு அளிக்கும் அடிப்படையில் அமைந்தது. அதுநாள் வரையில் 12 இடங்களில் 10 இடங்கள் போல ஆக்கிரமித்திருந்த பார்ப்பன வகுப்பினரின் நிலைமை தலைகீழானது. இருப்பினும் மக்கட்தொகையில் 3% இருந்தோருக்கு 16% பணிகள் ஒதுக்கப்பட்டிருந்தும் அவர்கள் அமைந்து கொண்டிருந்தார்கள். சிறுபான்மையினர் பெரும்பான்மையினரின் பணிகளை அபகரித்தால் அது சமூக அநீதி, அறமற்ற முறைகேடு என்ற அடிப்படைப் புரிதல் இன்றும் பலருக்கு இல்லை என்னும் நிலையில், சென்ற நூற்றாண்டில் எல்லாமே தங்கள் உரிமை என எண்ணியிருந்தவரைப்பற்றிக் குறை கூற வழியேது?
குடிமக்கள் அனைவருக்கும் சமவாய்ப்பளிப்பது ஒரு அரசின் கடமையாக இருக்கவேண்டும். மக்களில் பெரும்பான்மையோர் கட்டும் வரிப்பணத்தில் ஒரு சிறுபிரிவினருக்கு மட்டும் கல்வி கற்கும் வாய்ப்பும் அளித்து, அவர்களை அதிகாரம் உள்ள பதவிகளில் இடம்பெற வைத்து, அவர்களையே ஆளவும் வைத்து, பெரும்பான்மை மக்கள் தங்கள் உரிமையை அடையாமல் புறக்கணிக்கப்பட்டதும் அல்லாமல், தங்கள் வரிப்பணத்தில் தாங்களே வளர்த்துவிட்டவரின் தயவை எதிர்பார்த்து வாழவேண்டிய சூழலில் இருந்தார்கள். தங்களது சொந்தக் காசில்தங்களுக்கே சூனியம் வைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த நிலையை மாற்ற உருவாக்கப்பட்ட இத்திட்டத்தை நாட்டில் தகுதி திறமையை வீணடிக்கும் வகுப்புபேத திட்டம் என்று பார்ப்பன வகுப்பினர் கண்டித்துக் கொண்டிருந்தனர். கல்வி மூலமே ஒருவர் அதிகாரமுள்ள அரசுப்பணிகளில் பங்கு பெறமுடியும். ஆனால், நடைமுறையில், கல்வி கற்பிக்கச் செலவிடும் தொகையும், கல்விக்கூடங்களில் ஆசிரியப் பணி யாவும் என கல்வித்துறையே பார்ப்பனர் ஆதிக்கத்திலிருந்தது.
இருப்பினும், கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தகக்கூடிய ஒரு சூழ்நிலை அனைவரின் தகுதி திறமைகளை வளர்த்துவிட்ட பிறகு 1950களில் தான் உருவாகும் எனவும் ஆட்சியாளர்களால் அன்றைய நிலைமை கணிக்கப்பட்டது. இதற்காக அனைவருக்கும் கல்வியளிக்க ஏற்பாடு செய்து, பணிகளுக்குத் தகுதியுள்ளவரை அதிகரிக்க இருக்கும் தேவையும் அரசால் உணரப்பட்டது. அதுவரை தகுதி உள்ளவர் கிடைக்கவில்லை என்று கூறி பார்ப்பனர்தான் தொடர்ந்து பணியில் அமர்த்தப்பட்டும் வந்தனர் என்பதுதான் அன்றைய நிலைமையாகவும் இருந்தது. இந்த நிலையில் எதிர் வரப் போவதை உணர்ந்த ஆதிக்கப் பிரிவினர் பணிகளுக்கான தகுதிகளைத் தேவையின்றி செயற்கை முறையில் அதிகரிக்கவும் தலைப்பட்டனர். அடுத்து காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பொழுது முதலமைச்சர் இராஜாஜி (இவர் இந்த நூல் வெளிவந்த காலத்திற்குப்பிறகும், மற்றொருமுறை 1953 ஆண்டுக் காலத்தில் அவர் பதவியிலிருந்த பொழுது குலக்கல்வி முறையை நுழைத்து கல்வித்தடையை உருவாக்க முயன்றார், அப்பொழுது தமிழகத்தில் கல்வி கற்றவர் வெறும் 21% தான் என்பதையும் தமிழக வரலாறு அறிந்தவர் நினைவு கூரலாம்) நேரடியாக ‘கம்யூனல்ஜி.ஒ.’ செயல்படுத்துவதை எதிர்த்து மக்களின் கசப்புணர்வைக் கூட்டி தங்கள் ஆட்சியை இழக்காமல் சூழ்ச்சியின் மூலம் திட்டத்தை செயல்பட விடாமல் தடுக்கும் முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
கல்லூரிகளில் அனைவருக்கும் வாய்ப்பளிக்க பனகல் அரசரின் காலத்தில், 1920களில் உருவாக்கப்பட்டு அன்று நடைமுறையிலிருந்த ‘கல்லூரிக் குழு’ என்ற கண்காணிக்கும் அமைப்பு இராஜாஜியின் ஆட்சியில் நீக்கப்பட்டது. அனைவரும் கல்வி கற்க ஆர்வம் கொண்டு, பிறவகுப்பாரும் கல்லூரிகளில் படிக்க விரும்பிய பொழுதும் தொழிற்கல்விகள் படிக்க முன்வந்த பொழுதும் இந்தக் கல்லூரிக் குழு சம வாய்ப்பு அளிப்பதற்காக உருவாக்கப்பட்டிருந்த ஒரு அமைப்பு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதுதான் இராஜாஜி ஆட்சியில் சூழ்ச்சியுடன் நீக்கப்பட்டது. இராஜாஜி ஆட்சியில் ஆதிக்கப் பிரிவினர் எந்தெந்த வகையில் கல்வியிலும் தகுதியிலும் பிற வகுப்பினர் உயர்வதை, ‘கம்யூனல்ஜி.ஒ.’ நடைமுறைக்கு வருவதை முடக்க முடியுமோ அவற்றைச் செய்து தங்கள் திட்டத்தைச் செய்யலாக்கிக் கொண்டிருந்தனர். இதன் விளைவாக மாணவர்களைச் சேர்க்கும் முறை கல்லூரித் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அப்பொழுது அரசு கல்லூரித் தலைமைப் பொறுப்பிலிருந்தவரெல்லாம் பெரும்பான்மையும் பார்ப்பனரே என்பதும் தமிழகம் அறிந்த உண்மை. ஆகையால், இத்தகைய மாற்றத்தின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை ஊகிக்கலாம்.
இராஜாஜி பதவி விலகிய பின்னர் 1942இல் தொழிற்கல்வி கல்லூரி முதல்வர்களுக்கு ‘கம்யூனல்ஜி.ஒ.’ முறைப்படி மாணவர்கள் சேர்க்கை அமைய வேண்டும் என்ற உத்தரவு மீண்டும் அனுப்பப்பட்டது. கல்லூரிக்குழு மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் தங்கள் கல்விக்குத் தடை என்று பார்ப்பனர் குமுறத்தொடங்கினர். ஆனால் அதில் உண்மை இல்லை என்பதற்கு அன்பழகன் புள்ளிவிவரங்கள் கொடுக்கிறார். அதில் மாணவர்களின் விகிதாச்சாரம் ஆரம்பப் பள்ளியில் இருக்கும் நிலை, உயர்நிலைப்பள்ளி முடிக்கும் பொழுது மாறிவிடுவதைக் காட்டுகிறார். பார்ப்பனர் அல்லாத பிரிவினர் பலர் இடையில் கல்வியைக் கைவிட்டு விடுவது அதன் மூலம் தெரியவருகிறது. அதற்கு அக்கால பள்ளிகளின் கல்விச்சூழல் மற்றும் மாணவர்களின் படிப்பு குறித்துப் பார்ப்பனர் அல்லாத குடும்பங்கள் கொண்டிருந்த கருத்து நிலைமையும் காரணம் என்கிறார் அன்பழகன்.
தொழிற்கல்வி குறித்த தரவுகளும் இது போன்ற நிலையிலேயே இருந்திருக்கிறது. 1946இல் (பக்கம் 74 இல் கொடுக்கப்பட்டுள்ள தரவுகள்) காட்டுவது; தகுதி என்ற மதிப்பெண் அடிப்படையில் பார்ப்பன பிரிவு மாணவர்கள் தங்கள் வகுப்புரிமை விழுக்காட்டை எட்டிவிட்டாலும், மீண்டும் ஒருமுறை வகுப்பு விகித அடிப்படையில் சேர்க்கப்பட்டிருக்கும் ஒரு முறையற்ற நிலையை. அதனால் 3% என்பதற்குப் பதிலாக 20% க்கும் மேலான அளவில் இடங்கள் அவர்களுக்குக் கிடைத்துள்ளன (இது ஆங்கிலத்தில்.. Legal definition of double dipping என்பதற்கு ஒப்பான முறை). இருந்தும் பார்ப்பனகுல மக்கள் மகிழ்ச்சி அடைந்தார் இல்லை.
-தொடரும்
தேமொழி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “அன்பழகன் அறியத் தரும் இட ஒதுக்கீட்டின் வரலாறு”