நவம்பர் 21, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

அன்பின் ஐந்திணை – நெய்தல்

தேமொழி

Oct 24, 2020

siragu neidhal1

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது நூலில் முதலில் இடம் பெறும் குறிஞ்சித் திணைப்பாடல்களை அடுத்து ‘இரங்கலும் இரங்கல் நிமித்தமும்’ ஒழுக்கம் குறித்த 31 வெண்பாக்கள் (பாடல்கள் 32 -62) நெய்தல்திணைப் பாடல்களாக இடம் பெறுகின்றன. இப்பாடல்களிலும் நெய்தல் நில இயற்கைக் காட்சிகளும், அம்மக்களின் வாழ்வியலும் அழகுற விவரிக்கப்படுகிறது. நெய்தல் திணையின் முதற்பொருள்(நிலமும் பொழுதும்), கருப்பொருள்(நிலத்தின் தனித்தன்மையைக் குறிப்பன), உரிப்பொருள்(அந்த நில மக்களின் ஒழுக்கமும் வாழ்வு முறையும்) என இம்மூன்று பொருள்களும் பாடல்களில் வழி தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

இந்த நெய்தல்திணைப் பாடல்களிலும், சங்கப்பாடல்களில் தோழிக்குத் தனிச் சிறப்புண்டு என்பதற்கு இணங்க, தலைவன் தலைவியை மணந்து (வரைவு) கொள்ளாமல் காலம் தாழ்த்தும் பொழுது தோழி தலைவனிடம் தலைவியை மணந்து கொள்ள வரைவு கடாதல் என்ற நோக்கில் தலைவியைச் சந்திக்க அவன் வரும் இடர் தரும் வழி, ஊரில் அலர் துவக்கம், வரைவு வேட்கை, குறியிடம் மறுப்பது, பகற்குறி, இரவுக்குறி, அறத்தொடு நிற்றல், ஆற்றுவித்தல், தூது செல்லல் என்றும்வரைவு மலிதல் உதவிகள் செய்வது என்றும் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே காதல் துவங்கி வளர்ந்து கைகூடுவதில் தோழியின் பங்களிப்பு மிகுதி.

இந்நூலின் நெய்தல் பாடல்களை குறிஞ்சி நிலப் பாடல்களுடன் ஒப்பிடுகையில் தலைவிக்குக் காவல் மிகுதி, இற்செறிப்பு, வெறியாட்டு ஏற்பாடு, உடன்போக்கு போன்ற குறிஞ்சிப் பாடல்களில் காணப்பட்ட கருத்தாக்கங்களை நெய்தல் பாடல்களில் காண இயலவில்லை. ஊர் மக்களின் அலர், அதனை தவிர்க்க பகலில் சந்தித்த காதலர்கள் இரவில் சந்திக்க முற்படுதல், இருப்பினும் அலர் தொடர்தல், அதனால் தோழி தலைவனிடம் இரவிலும் வரவேண்டாம் என்று கூறி தலைவியை மணக்க ஏற்பாடு செய்யச் சொல்லல் என்ற பாடல்களே மிகுதி. ‘கனை இருள் வாரல்!’ என்ற கருத்தைத் தொடர்ந்து பல பாடல்களில் தோழி தலைவனிடம் கூறிக்கொண்டே இருக்கிறாள்.

தோழி இடம் பெறாத பாடல்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு. தோழி வரைவு கடாயது என்பது 13 பாடல்களில் (பாடல்கள்: 34, 35, 36, 37, 43, 46, 50, 52, 53, 54, 55, 57, 59) காட்டப்படுகிறது. அதாவது மொத்த நெய்தல் பாடல் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டால், 40 விழுக்காட்டுப் பாடல்கள் இந்த வகையில் அமைந்துள்ளன. தலைவன், தலைவி, தோழன், தோழி, செவிலித்தாய் ஆகியோர் மட்டுமே பாடல்களில் நேரடியாக இடம் பெறுகிறார்கள். தலைவியின் தந்தை, தமையன் மார் போன்றவர் குறித்து குறிப்புகள் மட்டுமே காட்டப்படுகின்றது. செவிலித்தாயும் இரு பாடல்களில் மட்டுமே காட்டப்படுகிறாள். குறிஞ்சி நிலத் தலைவியைவிட நெய்தல் தலைவி கட்டுப்பாடுகள் அதிகம் இன்றி இருக்கிறாள். தலைவியைச் சந்திக்க இயலாத தலைவன் அதைக் கடற்கரை நண்டிடம் கூறிப் புலம்புவதும், தலைவனைச் சந்திக்க இயலாத தலைவி அதைக் கடல் அலைகளிடம் சொல்லிப் புலம்புவதும் என இரு பாடல்கள் காட்சியில் சிறப்பு மிக்கப் பாடல்களாக அமைந்துள்ளன.

திணைமாலை நூற்றைம்பது நூலின் நெய்தல் திணைப் பாடல்கள் அனைத்திலும் குறிப்பிடப்படும் தலைவனும் தலைவியும் ஒருவரே என்றோ, அவர்களின் தோழியும் தோழனும், செவிலித்தாயும், தந்தையும் தமையன்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றோ, அல்லது அவர்கள் வாழிடம் குறிப்பிட்ட நெய்தல் நில ஊர் என்றோ கூறுதலும் இயலாது. இருப்பினும், 31 நெய்தல் பாடல்களையும் ஒரே தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே நிகழும் காதலாகக் கொண்டு ஒரு வரிசைப்படுத்தி அவற்றிலிருந்து ஒரு கதையும் உருவாக்கலாம். அத்தகைய முயற்சியே இக்கட்டுரை. வரிகளுக்குப் பின்னர் அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்படும் எண், திணைமாலை நூற்றைம்பது நூலில் உள்ள பாடல்களின் வரிசை எண்.

இரங்கலும் இரங்கல் நிமித்தமுமாகிய ஒழுக்கமும் கொண்ட நெய்தல் நிலத்தில், கடற்கரையோரப் பகுதியில் நிகழ்வது இக்கதை.

அது ஓர் அழகிய நெய்தல் நிலம். குளிர்ந்த கடல் நீரும் அதில் தொடர்ந்து ஒரு அலை வந்து கரையில் மோதித் திரும்பும் முன்னர் மேலும் இரு அலைகள் அதை விரட்டிவந்து மோதிச் செல்லும் வளப்பம் நிறைந்த கடற்கரை. பகலிலும் இரவிலும் மக்கள் கடற்பகுதியில் அலைந்து அலைகளுக்குப் போட்டியாக ஆரவாரித்துக் கொண்டு நடமாடியவண்ணம் உள்ளார்கள். அலைகளால் அள்ளி வரப்பட்டு கடற்கரையில் ஒதுக்கப்பட்ட சிப்பிகள் வாய்பிளந்து காட்டுவதால் வெளிப்படும் முத்துக்களின் ஒளி இரவில் இருளையும் விரட்டக் கூடியதாக இருக்கிறது. அவற்றை அள்ளிச் செல்ல விரும்பும் மக்களின் நடமாட்டத்தை இரவிலும் காணக்கூடியதாக உள்ளது.

கடற்கரையில் உப்பங்கழிகளும் அவற்றைச் சுற்றி சூழ்ந்துள்ள கடற்கரையின் பசுமை நிறைந்த கானல் சோலைகளும், நீல நிறக் கடலும் இவற்றுக்கு மாற்றாக மிக வெண்மையான மணல் நிரம்பிய கடற்கரை மணலும் கண்ணைக் கவரும் வண்ணம் உள்ளது. உப்பங்கழிகளில் சுறாமீன்கள் சுழன்று விளையாடி நீந்தியவண்ணம் உள்ளன. கடற்கரை எங்கும் அன்று பூத்த மலர்களுடன் மணம் மிக்க புன்னை மரங்களும், ஞாழல் மரங்களும், நெருக்கமாக அடர்ந்து வளர்ந்த தாழை மரங்களும், உயர்ந்து வளர்ந்த பனை மரங்களும் உப்பங்கழிகளைச் சுற்றி அடர்ந்த தில்லை மரங்களும் நீர் முள்ளிச் செடிகளும் வளர்ந்துள்ளது. கடற்பகுதியில் வீசும் புலால் நாற்றத்தைப் புன்னை மரத்தின் மலர்களின் இனிய நறுமணம் நீக்கிக் கொண்டிருக்கிறது. எங்கும் நெய்தல் மலர்கள் பூத்துள்ளன. அங்கு மீட்டாமலே மேன்மையான இசையை தேன்வண்டுகள் பொழிந்த வண்ணம் உள்ளன.

அவ்வூரின் நுளையர் குடும்பத்தில் அண்ணன்களும் ஓர் தங்கையும் எனச் சிறு குடும்பம் உள்ளது. அந்த அண்ணன் மார் படகு செலுத்தி, நுட்பமாகப் பின்னிய வலையை வீசி மீன் பிடிக்கும் தொழிலில் மிக வல்லவர்கள். அவர்கள் ஆழ்கடலில் அமிழ்ந்து முத்துக்களும் சங்குகளும் கூட பிடித்து வருவார்கள். அவர்கள் அவ்வாறு வலை வீசி கடலில் இருந்து முகந்து வரும் மீன்களை வெய்யிலில் கருவாடாக உலர வைத்து, அவற்றைப் பறவைகள் கொத்திப் போகாமல் காவல் காப்பது தங்கையின் வேலை. இவளே இக்கதையின் தலைவி. இவள் வேலை ஒத்திருக்கும் மிகப் பெரிய நீண்ட கண்களையும், மருண்ட பார்வையையும், காதில் சிறிய சுறாமீன்கள் வடிவில் வார்க்கப்பட்ட மகரக்குழை காதணிகளையும், கையில் முத்துக்கள் பதித்த வளையல்களையும் அணிந்திருக்கிறாள். ஆகவே அவளை நாம் முத்தழகி என்றும் பெயர் சூட்டி அழைக்கலாம்.

தலைவியின் அண்ணன்கள் வலைவீசி மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்று விட்டார்கள். கடற்கரை சோலைப் பகுதியில் மீன்கள் உலர்த்தப் பட்டுள்ளன. அருகில் அடப்பங் கொடிகளில் முளைப்பாலிகையினைப் போல ஒன்றாகக் கூடி மலர்கள் பூத்திருக்கின்றன. அவற்றின் மீது உடலில் இருந்து நீக்கிய கவசம் போல மீன் வலைகள் வெய்யிலில் உலர்த்தப் பட்டிருக்கின்றன. அப்பகுதியில் தலைவியும் அவளது இணைபிரியாத தோழியும் கருவாடுகளை உலர்த்தி அவற்றைக் காவல் காத்த வண்ணமும், அவற்றை வாங்க விரும்புவோருக்கு விலை கூறி விற்றவாறும் பகல் பொழுதை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த கடற்கரை ஊரின் தலைவனின் படகுக் கூட்டம் கரையை நோக்கி வருகிறது. அமைதி என்பதையே அறியாத மன்னவன் ஒருவனின் படை ஒன்று போருக்குச் செல்லுகையில் எவ்வளவு ஆரவாரம் இருக்குமோ அது போல ஆரவாரம் கடற்கரைப் பகுதியில் ஏற்படுகிறது. அலை ஓசை போரின் பறை ஓசை போல முழங்க , அலைகள் யானைப் பாகனாகவும், நீண்ட தோணிகள் யானைப் படைகள் போலத் தோற்றமளிக்க, வானில் சுற்றும் பருந்துகள் புரவிகள் போல விரைந்து பின் தொடர, அந்த ஓசையில் அச்சமுற்ற கடற்கரையினை அடுத்துள்ள சோலையில் ஆர்த்தெழும் பறவைகள் ஒருசேர அலறலுடன் வானில் எழும்பிட படைவீரர்களுடன் மன்னன் போருக்குச் செல்லும் காட்சி போல இருக்கிறது அது. அந்தத் தலைவனின் தோற்றத்தால் கவரப்படுகிறாள் தலைவி.

அவள் பார்வை கருவாடுகளைக் காவல் செய்வதை விட்டு அவன் செல்லும் இடமெல்லாம் தொடர்ந்து அவனையே காவல் செய்யத் துவங்குகிறது. தலைவியின் அழகைக் கண்டு மயங்கிய தலைவனும் அவள் பார்வை தன்னை சிறைபிடிப்பதை உணர்கிறான். அன்று பூத்த ஞாழல் மலர்களைக் கொத்தாகப் பறித்து தலைவியின் கையில் திணிக்கிறான். இவர்களின் செயல்களை தோழியும் நோட்டமிட்டவாறே எதையும் அறியாதவள் போல உடன் இருக்கிறாள்.

தனது இடத்திற்குத் திரும்பிய தலைவன் தலைவியின் கவர்ந்திழுக்கும் பார்வை தவிர வேறொரு சிந்தனையும் இன்றி அதில் மூழ்கியிருக்கிறான். தலைவனிடம் கண்ட மாறுதலை உணர்ந்து தோழன் அவனிடம் பேச்சு கொடுக்கிறான்.

கடற்கரையில் மீன் உலர்த்திக் காவல் காக்கும் தலைவியின் கண்கள் என்மீது பாய்ந்து என்னையே வட்டமிட்டு என்னை அவளது காவலுக்குள் வைத்தது என்று தலைவன் தோழனிடம் கூறுகிறான் (32). அவளது வெண் முத்துப்பற்கள் சிந்தும் புன்முறுவலைக் காணுகையில் மனம் துவண்டு வருந்துகிறேன் என்கிறான் (33). தலைவியின் ஒரே பார்வையில் கவிழ்ந்துவிட்ட தலைவன் ஒரு பண்பாளனா என்ற எண்ணம் தோழனின் மனதில் தோன்றுகிறது.

அவனது மனதின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட தலைவன் தலைவி குறித்து மேலும் அடையாளம் கூறி அவனையே சென்று பார்த்துக் கொள்ளச் சொல்கிறான். கடல் அலைகள் ஆர்ப்பரித்துத் திரும்பிச் சென்ற வண்ணம் அலைமோதும் கரையினிடத்தே, கரையில் அலையும் நண்டுகளைக் கால்களினாலே கண்டு பிடித்தவாறு, கரை அருகே மலர்ந்துள்ள நெய்தற் பூக்களைக் கொய்தவாறு நிற்கும், மிக நீண்ட கண்களை உடையவள் எனக்குக் காதல் மயக்கத்தை உண்டாக்கியவள். அவள் அந்த பரதவரின் மகளாகிய என் தலைவி (60) என்று தலைவன் தோழனிடம் கூறுகிறான். தலைவனைக் கவர்ந்தவளைத்தான் பார்த்துவிடுவோமே என்ற எண்ணத்தில் தலைவன் குறிப்பிட்ட அடையாளங்கள் உதவியுடன் கடற்கரைக்கு வந்து அவளைக் கண்டு வியக்கிறான் தோழன்.

siragu neidhal2

ஒப்புமை கூற இயலாத இத்தகைய சிறந்த அழகியான தலைவியைக் கண்ட பிறகும், இணையற்ற அவளது இரு பெரிய கண்களைப் பார்த்த பின்னரும் கூட அவளை விட்டு தனது உறவுகளை நாடி தனது இடத்திற்குத் திரும்பிய தலைவன் மன உறுதி கொண்டவன் மட்டுமல்ல பண்பில் சிறந்தவன்தான் (45) என்று தோழன் மனதில் எண்ணம் ஏற்படுகிறது. மீண்டும் தலைவனிடம் செல்கிறான்.

ஒரு பொருட்டாக அக்கறை செலுத்தாதவர்களும் கூட காண நேர்ந்தால் இயற்கையழகு நிறைந்த தெய்வமாகக் காட்சி அளிக்கக் கூடியவள் தலைவி. அத்தகையவளை கருத்தாகக் காக்கும் எண்ணத்தைக் கைவிட்டு, அழகிய கடற்கரைச் சோலையினிலே ஓர் அணங்கு போலத் தோற்றமளிக்கும் தலைவியை அவர் குடும்பத்தார் பிறர் துன்புறுவாரே என்ற கருத்தின்றி கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள் என்று தோழன் தலைவனிடம் தலைவியின் சிறப்பைப் பாராட்டிக் கூறுகிறான் (47).

மீண்டும் தலைவியைக் காண விரும்பி கடற்கரை பக்கம் புரவி பூட்டிய தனது தேரில் செல்கிறான் தலைவன், அங்கு தோழியைக் காணுகிறான். தான் தலைவியைச் சந்திக்க விரும்புவதைக் கூறுகிறான். தலைவியின் செவ்வாயின் முத்துப்பற்கள் முன்னர், அவளது கைவளையில் பதிக்கப்பட்டிருக்கும் உண்மையான முத்துக்கள் போட்டிப் போட இயலாமல் தோற்கும் எனத் தலைவன் தலைவியின் அழகைப் போற்றுகிறான் (42).

அவர்களது காதல் நாடகத்தை முன்னர் பார்த்துக் கொண்டிருந்த தோழிக்குத் தலைவன் தலைவிக்கு ஏற்றவன்தான் என்ற எண்ணம் வருகிறது. அவனுக்கு உதவ முன் வருகிறாள். தலைவனே, உயர்ந்த தாழை மரங்களும் ஞாழல் மரங்களும் அடர்ந்த சோலை தலைவி விளையாடும் இடம், அங்கு அவளைச் சந்திக்க வாய்ப்புள்ளது (44, 58). அங்கு இல்லாவிடில், கடற்கரைக் கானல் அருகில் கருவாடுகளை உலர்த்திக் காயவைத்துக் காவல் காத்துக்கொண்டிருக்கும் தலைவியை பகற்பொழுதில் அங்கு காணலாம் எனத் தோழி தலைவனுக்குக் குறிப்பு கொடுக்கிறாள் (51).

தலைவனும் தலைவியும் சந்திக்கத் துவங்குகிறார்கள். நாட்கள் கடக்கின்றன. தலைவன் தலைவியைப் பார்க்க வந்து செல்வது பிறர் கவனத்திற்கு உள்ளாகிறது. ஊரில் அலர் எழுகிறது. நம் மீது கூறப்படும் அலர் வளர்ந்து, மழைமேகம் மூளுவது போல எங்கும் சூழ்ந்து மின்னல் இடியுடன் பொழிவது போல, பலநாளாக என்னை வருத்துகிறது என்று தலைவி தனது ஆற்றாமையைத் தோழியிடம் வெளிப்படுத்துகிறாள் (41). இதனால் அவர்கள் சந்திக்க இயலாத நிலை ஏற்படுகிறது.

கடற்கரைக்குச் செல்லும் தோழி அங்கு தலைவனைச் சந்திக்கிறாள், தலைவி இனி வரமாட்டாள் என்று சொல்கிறாள். நிலையைப் புரிந்து கொள்ளும் தலைவன் தோழியை நோக்கியவாறு, கடற்கரையில் விளையாடும் நண்டிடம் பேசுவது போல, துணையுடன் கூடிக்களிக்கும் நண்டே, எனது பிரிவுத்துயரை உன்னிடம் சொல்லி என்ன பயன் என மனம் வெதும்புகிறான். தோழிக்கு அவனது நிலை காண்பதற்கு மிகவும் இரங்கத் தக்கதாக இருக்கிறது. அதை அவள் தலைவியிடம் வந்து தெரிவிக்கிறாள். தனது பெண் துணையோடு இன்புற்று விளையாடும் ஆண் நண்டினையும், என்னையும் தலைவன் பார்த்து, என் இனிய துணைவியாகிய தலைவியோடு இவ்வாறு கூடிக் களிக்க எனக்கும் வாய்ப்பு கிடைக்குமோ? என்று தனக்குத் தானே பேசிக் கொண்ட தலைவன்; அந்த ஆண் நண்டினை நோக்கி நீ உனது இனிய துணையாகிய பெட்டை நண்டுடன் இன்புற்று விளையாடுதலாகிய ஒன்றையே செய்திருப்பாயானால் பிரிவுத்துன்பம் என்ன என்பதனை அறிந்திருக்கமாட்டாய், என் பிரிவுத்துயரை உன்னிடம் கூறுவதால் என்ன பயன்? என நண்டிடம் பேசுவது போலத் தலைவன் தனது கருத்தை எனது கவனத்திற்கு சொல்லிவிட்டுப் புரிந்து கொண்டவனாய் மனம் வெறுத்து விலகிச் சென்றுவிட்டான் (40) என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள் .

தலைவனின் நினைவால் தலைவியும் இரவில் உறக்கமின்றி புலம்புகிறாள். என்னைப் போல உறக்கம் வாராது நீ ஏன் அலைமோதுகிறாய். நான் படும் துன்பத்தைப் போன்ற இந்த உறங்கா நிலையாகிய துன்பத்தை உனக்குக் கொடுத்தவர் யாரென்று சொல்வாயாக என்று தலைவி கடலை நோக்கிக் கேட்கிறாள் (38).

இவர்கள் படும் துன்பத்தைக் காணச் சகிக்க முடியாமல் தோழி இரவில் அவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்கிறாள். தலைவனைக் கண்டு, தலைவனே இரவில் நீ தலைவியைக் காண வருவாயானால் உன் நினைவால் கலங்கி இருக்கும் அவளது கண்களைக் காண இயலும் (34). கடற்கரையில் உள்ள புன்னைமரச் சோலையில், அன்றில் பறவைகள் பாடும் உயர்ந்த பனைமரத்தைக் கொண்ட வீட்டின் முற்றத்தின் மணல் பரப்பில் இரவில் தலைவியைச் சந்திக்கலாம் எனத் தோழி தலைவனிடம் கூறுகிறாள் (56).

தலைவனும் வருகிறான், இரவில் அவர்கள் சந்திக்கிறார்கள். தலைவன் இரவில் வருகையில் அவனது புரவியின் குளம்புத் தடயம் மணலில் அழுந்தி அவன் வந்து சென்றதை அறிவிக்கிறது. தலைவியினை இரவினில் காணவருவதைப் பிறர் காணநேரிட்டால் அலர் உண்டாகும் என்று அவன் இனி இரவிலும் வந்து தலைவியைக் காண வேண்டாம் என்று தோழி கூறுகிறாள் (48). பகற் பொழுதில் நீ வந்தாய் எனில் பழிச் சொற்கள் பல வரும். அப்பழிச்சொற்களைத் தவிர்க்க விரும்பி இரவில் நீ வந்தாய் என்றால் வருவதற்கு இடையூறுகளும் பல உண்டு (59). அலர் தவிர்க்க விரும்புவாயானால் இரவிலும் மக்கள் நடமாட்டம் உள்ள பட்டினத்தில் இரவில் தலைவியைக் காண வர வேண்டாம் (49). உனது செய்கையால் ஊரில் அலர் மிகுவதால் அவள் மிகுந்த துயருடன் கண்ணீர் சிந்தியவாறு இருக்கிறாள். நீ வந்தாயானால் அவள் உயிர் துறப்பாள் (55). இரவில் நீ தலைவியைச் சந்திக்க வரும் வழி இடர்கள் மிக்க வழி, அதன் வழி வருவது துன்பம் தரும், உமக்கு ஒன்று நேருமாயின் தலைவி உயிர் வாழமாட்டாள். ஆகவே நீ தலைவியைப் பார்க்க வர வேண்டாம் (61) என்று தலைவனிடம் தோழி கூறுகிறாள்.

தலைவி மீது ஊரார் அலர் தூற்றாதவாறு இருக்க நீ இரவும் பகலும் தலைவியைக் காண விரும்பி இப்பக்கம் வரவேண்டாம் (35). இனி வருவாய் என்றால் தலைவியை மணமுடிக்க ஓர் நாள் குறித்து வந்து அவளை மணந்து கொள்ளுதலே நீ அவளுக்குச் செய்யும் நன்மையாக இருக்கும் (43). தலைவிக்குத் துன்பம் நீங்குமாறு நீ அளித்த வாக்குறுதிக்குக் கடல் சான்றாக உள்ளது. அவளை ஊரார் அலர் தூற்றாதவாறு மணம் செய்து கொள்வாயாக (36, 37). தலைவனே என் உதவியுடன் நீ இனி தலைவியைச் சந்திக்கத் தேவையில்லை, அவளை மணமுடித்து உன்னவள் ஆக்கிக் கொள் (57). தூக்கக் கலக்கத்தில் கண்ட கனவு போன்று விளங்கிக் கொள்ள முடியாத, வகையில் வருகின்ற உனது வரவை நிறுத்திவிடு தலைவனே. முறைப்படி தலைவியை மணமுடித்து உனது துணையாக்கிக் கொள்வதே உனது தகுதிக்குப் பொருத்தமான செய்கை (50). களவுப் புணர்ச்சியில் மிகுந்த விருப்பம் கொள்ளாமல் தக்க நாளொன்றினை தேர்வு செய்து தலைவியை மணம் புரிந்து கொள்வதுதான் உனக்கேற்ற நன்னெறியாகும் (52). எமது சுற்றத்தாரிடம் சென்று ஒப்புதல் பெற்று தலைவியை மணமுடித்து அவளுடன் வாழ்வாயாக (53). இது குறித்து எண்ணி ஆய்வு செய்து காலத்தை வீணாக்க வேண்டாம், தக்க நாள் ஒன்றைத் தேர்வு செய்து, காலம் தாழத்தாது பெண் கேட்டு வந்தால், நீ தலைவியைத் துணையாக அடையும் வாய்ப்பு உமக்குக் கிட்டும் (46). ஆகவே மேலும் ஆராய்ந்து கொண்டிராதே, கோள்கள் குறித்து ஆராய்தல் தேவையில்லை. நிமித்தம் அறியும் கணிஞரை வரவழைத்து, ஓர் மண நாளைக் குறித்துக் கொண்டு வந்து, இவளை விரும்பி மணம் புரிந்து கொள்ளுதலே நீ தலைவிக்குச் செய்யும் நன்மையாக அமையும் (54) என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

தலைவியைப் பெண்கேட்டு அயலார் சிலர் வருகிறார்கள். தோழி இனி அமைதியாய் இருப்பது சரியல்லவென்று செவிலித்தாயிடம் தலைவியின் காதல் குறித்து தெரிவிக்கிறாள். கடற்கரைச் சோலையில் தலைவிக்கு ஞாழல் பூவினை தந்து சென்ற தலைவனே தலைவியின் மென்தோள்களை அடையத் தகுதி உடையவன், அவளை மணக்க விருப்பம் தெரிவித்து வரும் மற்ற அயலவர் அல்ல (39). விற்போரில் வல்ல வீரர்கள் கூடி நடத்தும் வில்விழாக் கூட்டத்திலும், கடலினாலே சூழப் பெற்ற இவ்வுலகத்தினிடத்தே நல்லவர் பலர் கூடி நடத்தும் மணவிழாக் கூட்டத்திலும், அன்று கடற்கரையினிடத்து தலைவிக்கு ஒப்பற்ற உதவியினைச் செய்த கடல் துறை முகத்துக்குரியவனை ஒத்த ஆடவரை நாங்கள் காணவில்லை!! இவரைப் போன்ற அத்தகைய சிறந்தவர் சுவர்க்கத்திலிருந்தாலும் அவரை தலைவிக்குத் தேர்வு செய்து மணமுடிப்பாயாக நல்ல எமது அன்னையே! நம் தலைவிக்கு இவனே பொருத்தமான மணமகன் என்பதால், அவன் போலச் சிறந்தவர் கிடைப்பவர் அரிது என்று செவிலிக்குத் தோழி அறத்தொடு கூறி நிற்கிறாள் தோழி (62).

குறிப்பு – கதையாகக் கோர்க்கப்பட்ட பாடல்களின் வரிசை, பாடல் எண்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது:

32. கடற்கரையில் மீன் உலர்த்திக் காவல் காக்கும் தலைவியின் கண்கள் என்மீது பாய்ந்து என்னையே வட்டமிட்டு என்னை அவளது காவலுக்குள் வைத்தது என்று தலைவன் தோழனிடம் கூறுகிறான்.

33. தலைவியின் வெண் முத்துப் பற்கள் சிந்தும் புன்முறுவலைக் காணுகையில் மனம் துவண்டு வருந்துகிறேன் நான் என்று தலைவன் தோழனிடம் கூறுகிறான்.

60. கடற்கரையில் நண்டு பிடித்தவாறு நெய்தல் பூக்களைக் கொய்து கொண்டிருக்கும் நீண்ட கண்களையுடைய தலைவி எனக்குக் காதல் மயக்கம் தந்தாள் என்று தோழனிடம் கூறுகிறான் தலைவன்.

45. ஒப்புமை கூற இயலாத இத்தகைய சிறந்த அழகியான தலைவியைக் கண்ட பிறகும் அவளை விட்டு தனது உறவுகளை நாடி தனது இடத்திற்குத் திரும்பிய தலைவன் பண்பில் சிறந்தவன்தான் என்று தோழன் வியக்கிறான்.

47. அழகிய கடற்கரைச் சோலையினிலே ஓர் அணங்கு போலத் தோற்றமளிக்கும் தலைவியை அவர் குடும்பத்தார் பிறர் துன்புறுவாரே என்ற கருத்தின்றி கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள் என்று தோழன் தலைவனிடம் தலைவியின் சிறப்பைப் பாராட்டிக் கூறுகிறான்.

42. தலைவியின் செவ்வாயின் முத்துப்பற்கள் முன்னர், அவளது கைவளையில் பதிக்கப்பட்டிருக்கும் உண்மையான முத்துக்கள் போட்டிப் போட இயலாமல் தோற்கும் எனத் தலைவன் தலைவியின் அழகைப் போற்றுகிறான்.

44. தலைவனே உயர்ந்த தாழை மரங்களும் ஞாழல் மரங்களும் அடர்ந்த சோலை தலைவி விளையாடும் இடம், அங்கு அவளைச் சந்திக்க வாய்ப்புள்ளது எனத் தோழி குறிப்பு கொடுக்கிறாள்.

58. அலைகடலும் அதனருகே கடற்கரைச் சோலையும், வெண் மணலும் ஞாழலும், தாழையும் புன்னையும் நிரம்பிய இடங்களை விரும்பிப் பார்ப்பாயாக எனத் தோழி தலைவனுக்குப் பகற்குறி சொன்னாள்.

51. கடற்கரைக் கானல் அருகில் கருவாடுகளை உலர்த்திக் காயவைத்துக் காவல் காத்துக்கொண்டிருக்கும் தலைவியைப் பகற்பொழுதில் அங்கு காணலாம் எனத் தோழி தலைவனுக்கு குறிப்பு கொடுக்கிறாள்.

41. நம் மீது கூறப்படும் அலர் வளர்ந்து, மழைமேகம் மூளுவது போல எங்கும் சூழ்ந்து மின்னல் இடியுடன் பொழிவது போல, பலநாளாக வருத்துகிறது என்று தலைவி தனது ஆற்றாமையை வெளிப்படுத்துகிறாள்.

40. துணையுடன் கூடிக்களிக்கும் நண்டே, எனது பிரிவுத்துயரை உன்னிடம் சொல்லி என்ன பயன் என மனம் வெதும்புகிறான் தலைவன்.

38. தலைவனின் நினைவால் உறக்கமின்றித் தவிக்கும் என் நிலையைப் போல உறங்காமல் அலைமோதும் இத்துன்பத்தை உனக்குக் கொடுத்தவர் யார் கடலே? என்று தலைவி கடலினை நோக்கிக் கேட்கிறாள்.

34. தலைவனே இரவில் நீ தலைவியைக் காண வருவாயானால் உன் நினைவால் கலங்கி இருக்கும் அவளது கண்களைக் காண இயலும் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

56. தலைவனே கடற்கரையில் உள்ள புன்னைமரச் சோலையில், அன்றில் பறவைகள் பாடும் உயர்ந்த பனைமரத்தைக் கொண்ட வீட்டின் முற்றத்தின் மணல் பரப்பில் இரவில் தலைவியைச் சந்திக்கலாம் எனத் தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

48. தலைவியினை இரவினில் காணவருவதைப் பிறர் காணநேரிட்டால் அலர் உண்டாகும் என்று தலைவனை இரவில் வர வேண்டாம் என்று தோழி அறிவுறுத்துகிறாள்.

59. பகல் இரவு என்று இரு பொழுதுகளும் தலைவியைச் சந்திக்க வருதலை விடுத்து விரைவில் அவளை மணமுடித்துக் கொள் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

49. அலர் தவிர்க்க விரும்புவாயானால் இரவிலும் மக்கள் நடமாட்டம் உள்ள பட்டினத்தில் இரவில் தலைவியைக் காண வருதல் ஏற்புடையதல்ல எனத் தோழி தலைமகனிடம் மறுத்துரைக்கிறாள்

55. தலைவனே தலைவியைப் பார்க்க வரவேண்டாம், உனது செய்கையால் ஊரில் அலர் மிகுவதால் அவள் மிகுந்த துயருடன் கண்ணீர் சிந்தியவாறு இருப்பதைக் காண்பாயாக. நீ வந்தாயானால் அவள் உயிர் துறப்பாள் என்று தலைவனிடம் இரவு வருகையை நிறுத்தச் சொல்கிறாள் தோழி.

61. இரவில் நீ தலைவியைச் சந்திக்க வரும் வழி இடர்கள் மிக்க வழி, அதன் வழி வருவது துன்பம் தரும், ஆகவே நீ தலைவியைப் பார்க்க வர வேண்டாம் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

35. தலைவி மீது ஊரார் அலர் தூற்றாதவாறு இருக்க நீ இரவும் பகலும் தலைவியைக் காண விரும்பி இப்பக்கம் வரவேண்டாம் என்று தலைமகனிடம் தோழி கூறுகிறாள்.

43. தலைவனே இரவில் தலைவியைத் தேடி வாராதே, வந்ததால் அவளை மணமுடிக்கும் நோக்கில் மட்டும் வருவாயாக (கனை இருள் வாரல்!) என்கிறாள் தோழி.

36. உன் நாட்டுப் பறவைகளும் குடியும் குடித்தனமுமாக வாழ முற்படுகையில், அது போல நீயும் தலைவியை மணந்து அவளுடன் தங்கிவிடுவாயாக எனத் தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

37. தலைவிக்குத் துன்பம் நீங்குமாறு நீ அளித்த வாக்குறுதிக்குக் கடல் சான்றாக உள்ளது. அவளை ஊரார் அலர் தூற்றாதவாறு மணம் செய்து கொள்வாயாக என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

57. தலைவனே என் உதவியுடன் நீ இனி தலைவியைச் சந்திக்கத் தேவையில்லை, அவளை மணமுடித்து உன்னவள் ஆக்கிக் கொள் என்கிறாள் தோழி.

50. இரவில் வருவதை நிறுத்தி முறைப்படி தலைவியை மணமுடித்து உனது துணையாக்கிக் கொள்வதே உனது தகுதிக்குப் பொருத்தமான செய்கை என்று தோழி தலைவனுக்கு அறிவுறுத்துகிறாள்.

52. நாள் கடத்தாது, தக்க நாள் ஒன்றில் தலைவியை மணமுடித்து இல்லறம் மேற்கொள்வதே உன் தகுதிக்கேற்ற நல்லொழுக்கம் எனத் தோழி தலைவனுக்கு உரைக்கிறாள்.

53. தலைவனே எமது சுற்றத்தாரிடம் சென்று ஒப்புதல் பெற்று தலைவியை மணமுடித்து அவளுடன் வாழ்வாயாக என்று தோழி தலைவனுக்குக் கூறுகிறாள்.

46. தலைவியைப் பெண்கேட்டு வந்து விரைவில் மணம் முடிப்பாய் தலைவனே, அதை விட்டு இடர் நிறைந்த இரவில் அவளைக் காண வருவதைத் தவிர்ப்பாயாக என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

54. தலைவனே இரவில் வாராதே, இனி வருவாய் என்றால் தலைவியை மணமுடிக்க ஓர் நாள் குறித்து வந்து அவளை மணந்து கொள்ளுதலே நீ அவளுக்குச் செய்யும் நன்மையாக இருக்கும் எனத் தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

39. கடற்கரைச் சோலையில் தலைவிக்கு ஞாழல் பூவினை தந்து சென்ற தலைவனே தலைவியின் மென்தோள்களை அடையத் தகுதி உடையவர், அவளை மணக்க விருப்பம் தெரிவித்து வரும் மற்ற அயலவர் அல்ல என்று தோழி செவிலித் தாயிடம் தலைவியின் காதல் குறித்துத் தெரிவிக்கிறாள்.

62. தலைவிக்கு இவனே பொருத்தமான மணமகன் என்பதால், அவன் போலச் சிறந்தவர் கிடைப்பவர் அரிது என்று செவிலிக்குத் தோழி அறத்தொடு கூறி நின்றாள்.

_____________________________________________________

உதவிய தளங்கள்:

1. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது

மூலமும் உரையும் – மகாவித்வான் ரா. ராகவையங்கார்

செந்தமிழ்ப் பிரசுரம், 1927 (இரண்டாம் பதிப்பு)

https://upload.wikimedia.org/wikipedia/commons/4/4e/திணைமாலை_நூற்றைம்பது.pdf

https://ta.wikisource.org/s/31hg

2. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது

விளக்க உரை – தமிழ்ப் புலவர் திரு. அ. நடராச பிள்ளை

http://www.tamilvu.org/library/l2F00/html/l2F00ind.htm

http://www.tamilvu.org/library/l2F00/html/l2F00vur.htm

3. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது

உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.

https://www.chennailibrary.com/pathinenkeelkanakku/thinaimaalai150.html

4. திணைமாலை நூற்றைம்பது – கணிமேதாவியார்

தமிழ் இலக்கியத் தொடரடைவு, முனைவர்.ப.பாண்டியராஜா

http://tamilconcordance.in/TABLE-THINAIMALAI150-TEXT.html

—–


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அன்பின் ஐந்திணை – நெய்தல்”

அதிகம் படித்தது