நவம்பர் 21, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

அன்பின் ஐந்திணை – பாலை

தேமொழி

Nov 7, 2020

 siragu paalai1

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது நூலில் முதலில் இடம் பெறும் குறிஞ்சித் திணை, நெய்தல் திணைப் பாடல்களைத் தொடர்ந்து, மூன்றாவதாகப் பாலைத்திணைப் பாடல்கள் இடம் பெறுகின்றன. இப்பாடல்களின் மூலம் பாலை நிலத்தின் கொடிய தன்மையும், அப்பகுதியின் இயற்கைக் காட்சிகளும், அம்மக்களின் வாழ்வியலும் அழகுற விவரிக்கப்படுகிறது. பாலைத் திணையின் முதற்பொருள்(நிலமும் பொழுதும்), கருப்பொருள்(நிலத்தின் தனித்தன்மையைக் குறிப்பன), உரிப்பொருள்(அந்த நில மக்களின் ஒழுக்கமும் வாழ்வு முறையும்) என இம்மூன்று பொருள்களும் பாடல்களில் வழி தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

தலைவி, தலைவன், தோழி, நற்றாய், செவிலித்தாய் ஆகியோர் படல்களில் நேரடியாகக் குறிக்கப்படுகிறார்கள். தலைவியின் தந்தையும் தமையன் மாரும் பற்றிய குறிப்புகள் இடம் பெறுகின்றன, ஆனால் அவர்கள் நேரடியாக இடம் பெறவில்லை. திணைமாலை நூற்றைம்பதின் குறிஞ்சி நெய்தல் பாடல்களுடன் ஒப்பிடுகையில் பாங்கனுக்குப் பாலைநிலப் பாடல்களில் பங்களிக்கப்படவில்லை. தலைவனுக்குத் தலைவனைத் தவிர உறவுகள் வேறு யாரும் இல்லை, இருப்பதாகக் காட்டப்படவுமில்லை.

இந்த பாலைத்திணைப் பாடல்களிலும், சங்கப்பாடல்களில் தோழிக்குத் தனிச் சிறப்புண்டு என்பதற்கு இணங்க, தலைவன் தலைவியை மணந்து கொள்ளத் தோழி உறுதுணையாக இருக்கிறாள். தோழி இடம் பெறாத பாடல்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு. தலைவன் மணந்து கொள்ளக் காலம் தாழ்த்தும் பொழுது தோழி தலைவனிடம் தலைவியை மணந்து கொள்ள ‘தோழி வரைவு கடாயது’ என்ற நோக்கில் இடம் பெரும் பாடல்கள் பாலைத்திணைப் பகுதியில் இடம் பெறவில்லை. அவர்கள் காதல் தடைப்படும் பொழுது உடன்போக்கு செல்ல அவர்களுக்குத் தோழி முன்வந்து உதவுகிறாள். தலைவியை ஆற்றுவித்தல், தூது செல்லல் என்றும், வரைவு மலிதல் உதவிகள் செய்வது என்றும் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே காதல் துவங்கி வளர்ந்து கைகூடுவதில் தோழியின் பங்களிப்பு மிகுதி.

பாடல் 74இல் பாலைத்திணையின் குறிப்புகளுடன் நெய்தலின் இரங்கல் ஒழுக்கமும் இருத்தலைக் காட்டி திணை மயக்கம் காட்டப்படுகிறது. 81ஆம் பாடல், தலைவியின் இற்செறிப்புக்காரணமாக தலைவனுடன் உடன் போக்கு சென்றுவிட்ட  தலைவியை அவள் எங்குச் சென்றாள் என்ன சொன்னாள் என்று மரங்களையும் கொடிகளையும் பாலைநில வழியே அவளைத் தேடிச் செல்லும் செவிலித்தாய் கேட்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. அதே பாடல், தலைவியைத் தேடிச் சென்ற தலைவன் இற்செறிப்புக்காரணமாக அவளைக் காண இயலாத தனது ஆற்றாமையால், அங்கிருக்கும் மரம் செடி கொடிகளிடம் அவள் எங்கே போனாள் என்ன சொன்னாள் என்று கேள்விமேல் கேள்வி கேட்டுப் புலம்பிக் கொண்டிருக்கிறான் என்று காட்டப்படுவதும் தெரிகிறது. இங்குள்ள கதையில் இப்பாடல் தலைவனது கூற்றாகக் கையாளப்பட்டுள்ளது.

இந்நூலின் பாலைத்திணைப் பாடல் இடம் பெரும் பகுதி மலைகள் உள்ள இடம்.  கோடையில் பாலையாக மாறும் பகுதி.  இப்பகுதியில் இற்செறிப்பு இடம் பெறுகிறது, குறி கேட்பதும் இடம் பெறுகிறது. உடன்போக்கும் இடம் பெறுகிறது. தலைவியைச் சந்திக்க இயலாத தலைவன் அதை மரம் செடி கொடிகளிடம் கூறிப் புலம்புவதும், தலைவனைப் பிரிந்த தலைவி அதைப் புறாவிடம் சொல்லிப் புலம்புவதும், செவிலித்தாய் குரா மரத்திடம் தலைவி சென்ற வழி காட்டச் சொல்லி வேண்டுவதும், வழிப்போக்கர்களாக வரும் கணவன் மனைவியாகிய இருவர் தலைவியும் தலைவனும் சென்ற வழி காட்டி உதவுவதும் ஆகிய பாடல்கள் சொல்லும் காட்சிகள் நயம் மிக்கவை.

திணைமாலை நூற்றைம்பது நூலின் பாலைத் திணைப் பாடல்கள் அனைத்திலும் குறிப்பிடப்படும் தலைவனும் தலைவியும் தோழியும் ஒருவரே என்றோ, அவர்களின் நற்றாயும், செவிலித்தாயும், தந்தையும் தமையன்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றோ, அல்லது அவர்கள் வாழிடம் குறிப்பிட்ட பாலை  நில ஊர் என்றோ கூறுதலும் இயலாது. இருப்பினும், 30 பாலை நிலப் பாடல்களையும் (பாடல்கள்: 63-92) ஒரே தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே நிகழும் காதலாகக் கொண்டு ஒரு வரிசைப்படுத்தி அவற்றிலிருந்து ஒரு கதையும் உருவாக்கலாம். அத்தகைய முயற்சியே இக்கட்டுரை. வரிகளுக்குப் பின்னர் அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்படும் எண், திணைமாலை நூற்றைம்பது நூலில் உள்ள பாடல்களின் வரிசை எண்.

 பிரிதலும், பிரிதல் நிமித்தமுமாகிய ஒழுக்கம் கொண்ட பாலை நிலப் பகுதியில் நிகழ்வது இக்கதை.

பாலைநில  வழிகளில், கள்ளிச் செடிகள் மிகுந்து வளர்ந்துள்ள காட்டு வழியில் காட்டுப்பசுக்கள் அஞ்சி ஓடிடும். காட்டு எருமைகள் பிரிந்து காணாது போன தங்களது காட்டெருமைப் போத்துக்களை நினைத்துக் கதறி அழுது கொண்டிருக்கும். கற்களும் யானைகள் பரவி நிற்பன போலத் தோற்றமளிக்கும். சிள்வண்டுகள் கொடிய ஒலி எழுப்பியபடி திரிந்து கொண்டிருக்கும். பெரிய யானைகள் தாகத்திற்குத் தண்ணீர் குடிக்க விரும்பி சுனைகளிடம் சென்று, அங்கு நீர்  கிடைக்கப் பெறாது, மேலும் நடக்க இயலாமல் அந்த சுனை அருகிலேயே துவண்டு விழுந்து கிடக்கும்.  இயலாமல் வருந்தி இறந்து வீழ்ந்த யானைகளை, தமது பசி மிகுதியினாலே அவ்வழியில் செல்பவர்கள் பார்த்து அவற்றை உண்டு பசியாறிச் செல்லும் வழக்கமும் உள்ளது. வெப்ப மிக்க ஞாயிறு எரிந்து, புழுதிகள் சூடேறி மேலே எழுந்து புழுதிப் புயலாக வீசி வானையும் சூடேற்றும்.  தரையிலே, நடந்து செல்வார் அடிகள் வெந்து கண்களையும் சுடச் செய்வதுமாகி பாலைநில வழியே எவரும் செல்ல விரும்ப மாட்டார்கள். கொள்ளை கொள்ளக் கூடிய பொருள் வழிப்போக்கரிடம் இல்லாவிட்டாலும், திடீரென்று எதிர்பாராத வகையில் வந்து அவர்கள் மீது அம்பெய்து கொன்று இரக்கமற்ற வகையில் கொள்ளையடிக்கும் மறவர்கள் எதிர்ப்படும் அந்தப் பாலைநிலத்தின் வழி, பயணம் செய்ய ஏற்ற வழியல்ல.

தலைவியும், தலைவியின் நற்றாயும் செவிலித்தாயும் தந்தையும் தமையன் மார்களும் மலைகள் கொண்ட பகுதி ஒன்றில் வசிக்கிறார்கள். கொடிய கோடையில் அப்பகுதி வறட்சி கண்டு பாலைத் தன்மையைக் கொள்கிறது. இத்தகைய நிலப்பகுதியில் வாழும் மிக அழகியான தலைவி காதுவரை நீண்டும் அகன்றும் உள்ள பெரிய விழிகளைக் கொண்டவள்.  அந்த விழிகள் மானைப் போன்ற மருண்ட பார்வைக் கொண்டனவாய் இருக்கின்றன. காதில் மகரக்குழைகளையும், இரு கை நிறைய மின்னும் பொன் வளையல்களையும் அணிந்திருக்கிறாள். நறுமணம் கொண்ட தகரப்பொடியால் செய்த சாந்தை தனது அவிழ்ந்து விரிந்து புரளும் நீண்ட குழலில் பூசி தனது கூந்தலுக்கு மணமூட்டி இருக்கிறாள். அவளுக்கு ஒரு தோழி. விற்போரில் வல்லவனான ஒரு இளைஞனுக்கும் தலைவிக்கும் இடையே அன்பு மலர்கிறது. தலைவியின் தோழி அவர்கள் இருவரின் காதலைப் புரிந்து கொண்டு அவர்களது நல் வாழ்வில் அக்கறை கொண்டவளாக இருக்கிறாள். தலைவன் பொருள் தேடும் பொருட்டு தலைவியைப் பிரிந்து பாலைநிலம் வழியாக வேறு இடத்திற்குச் செல்ல விரும்பி அதைத் தலைவியிடம் கூறுகிறான். அதைக் கேட்டு அவள் அஞ்சுகிறாள். அவளைப் பிரிந்து சென்ற பிறகு அவளது துயர் கொண்ட மருண்ட விழிகளே அவனை வாட்டிய வண்ணம் உள்ளன.

என் நெஞ்சே! பகலவனின் கொடிய வெப்பத்தால் நெல்லும் பொரியாகப் பொரிந்துவிடக் கூடிய பாலை நிலத்தின் நெடிய வழியில் நான் பொருள் ஈட்டச் செல்ல விருப்பது குறித்து நீ அஞ்சாதே என்று எனது தலைவிக்கு ஆறுதலாகச் சில சொற்கள் சொல்வதற்குள், அவளைப் பிரிவதை எண்ணி என் மனமும் அச்சமுற்றது. அதனால் எனது முக மாறுதலைக் கண்டு அஞ்சிய அவளது பெரிய நீள் விழிகளில் கண்ணீர் துளிர்த்தது. தலைவியும் அஞ்சி கண்கலங்கினாள், அவளை எவ்வாறு நான் பிரிவது எனத் தலைவன் கலங்குகிறான்(76). தலைவனின் இந்த முடிவைக் கேட்டு வருத்தமுற்ற தலைவி அதைத் தனது தோழியிடம் வந்து சொல்கிறாள்.

தலைவியின் துயரைக் காணச் சகியாத தோழி தலைவனிடம் அவனது எண்ணத்தைக் கைவிடும்படி கூறச் செல்கிறாள். பொருளால் எதையும் அடைந்துவிடலாம் என்று பொருளுக்கு முதன்மை இடம் கொடுப்பவர் சொல்வதைப் பொன் போல மதித்து, பொருள் தேடச் செல்கின்றீர். உங்களிடம் அன்பு கொண்டுள்ள தலைவியின் மேல் அருள் காட்டுவதை ஒரு பொருட்டாக நீங்கள் கொள்ளவில்லை. பொருளால் கடந்து சென்ற இளமையைப் பெறமுடியாது என்பதை எண்ணிப் பாருங்கள் என்று தோழி தலைவனுக்கு அறிவுரை கூறுகிறாள் (85). ஆனால், தோழியின் சொற்கள் தலைவனிடம் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. தனது முடிவில் தான் உறுதியாக இருப்பாகச் சொல்லும் தலைவன் பொருள் தேடக் கிளம்பிச் சென்றுவிடுகிறான்.

தலைவன் சென்றுவிட்டான் என்பதைத் தோழி தலைவியிடம் சொல்ல அஞ்சினாலும், தயங்கியவாறே அவன் பிரிவை ஒருவாறு தலைவியிடம் தெரிவித்துவிடுகிறாள். அதைக் கேட்டு மனம் வெதும்புகிறாள் தலைவி. அவள் தனது குரலில் விரக்தி தொனிக்கத் தோழிக்குப் பதில் கூறுகிறாள்.  தலைவன் பொருள் தேட பாலைநிலம் வழியே செல்ல உறுதியான முடிவை எடுத்துள்ளான் என்பதை என்னிடம் மறைக்காது சொன்ன நீ ஒரு சிறந்த தோழியே, ஆனால் அதனால் என்ன பயன்? ஆறுதல் வழங்கக் கூடியவர் எவரிடமாவது சென்று சொல் என்று தலைவி மனம் வருந்தி தோழியிடம் சொல்கிறாள் (86).

நல்ல வாழ்வை வாழ விரும்பும் எவரும் கொடிய பாலை நிலம் வழியாகச் செல்ல விரும்ப மாட்டார்கள், தலைவன் அவ்வாறு செல்லுதல் நல்லதல்ல. கள்ளிச்செடிகளும், சார் மற்றும் கரிய மாமரங்களும், நாராகிய பற்றுதலில்லாது பூக்களையுடைய, நீண்டு வளர்ந்த, முருங்கை மரங்களும், மிகுந்த மூங்கிற் புதர்களும் நிறைந்த இடத்திற்கு, நல் வாழ்க்கையை வாழ விரும்பும் மக்கள் விரும்பிச் செல்வார்களா? புள்ளிகளையுடைய பருந்துகள் மற்றும் கழுகுகள் புதிதாக வரும் வழிப் போக்கர்கள் கொண்டு செல்லும் பொருளைக் கொள்ளை அடிக்க எதிர்பார்த்து, அவ்விடத்தில், தங்கியும் உறங்கியும் வீழ்ந்து கிடக்கும் இடமாகிய பாலை நில வழியே எவரும் செல்ல விரும்புவார்களா? என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள் (91).  அத்துடன், தன்னைச் சார்ந்தவரின் நலவாழ்வைக் கருத்தில் கொள்ளும் எவரும் தம்மைச் சார்ந்து வாழ்பவர் சிறப்பழிந்து வருந்துமாறு கொடிய பாலை நிலம் வழியாகச் செல்ல விரும்ப மாட்டார்கள், தலைவன் அவ்வாறு செல்லுதல் நல்லதல்ல என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்(92).

தலைவிக்கு ஆறுதல் சொல்ல விரும்பும் தோழி உலக நடப்பைக் கூறி அவளை அமைதி அடையச் செய்ய முயல்கிறாள்.  ஆண்களின் கடமை என்ன என்று அவர்களுக்கான நெறியினை ஆராய்ந்து பார்த்தால், ஆண்மக்கள் மேற்கொள்ள வேண்டிய கடமையாகப் பொருள் தேடுதலைப் பெரியோர் வகுத்து வைத்துள்ளனர். எனவே, தலைவன் தான் மேற் கொள்ள வேண்டிய கடமையாகச் செல்வம் தேடிச் சென்றுள்ளார். ஆதலால், சுருக்கமாக உரையாடும் முறையை மேற்கொண்டு நீ சிறிது காலம் பிரிவால் வருந்துகின்ற உனது நிலையைப் பிறர் அறியாவண்ணம் மறைத்து வைப்பது நல்லது என்று தலைவிக்குத் தோழி கூறினாள்(82).

Siragu aganaanootru paadal1

நல்ல தோழியே! கொடிய பாலைநில வழியே செல்ல விரும்புவார் எவராவது உண்டோ? அப்படி ஒரு செயலை எண்ணிப் பார்க்கவும் இயலாது. அவ்வாறு நினைத்தாலே நெஞ்சு எரிவது போன்று துன்பம் தரும். பொருட்படுத்தாது அப் பாலை நிலவழியே வெற்றிகரமாகச் சென்று மீண்டு வரமுடியமா? தலைவன் அந்த வழியே சென்று பொருள் தேட எண்ணியது நிறைவேறுமா? (83).  கொள்ளையர்கள் இரக்கமற்று கொலை செய்யக்கூடிய பாலை நில வழியாக, தனக்கென அறிவைக் கொண்டிருப்பவர்கள் எவரும் மறந்தும் செல்ல விரும்புவார்களா? ஆதலால் தலைவன் பொருள் தேடி அந்த வழியில் செல்வது நல்லதல்ல (84), என்று மீண்டும் மீண்டும் வருந்தி தலைவி தோழியிடம் புலம்பிய வண்ணம் இருக்கிறாள். அவளுக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவது என அறியாது தோழியும் தவிக்கிறாள்.

இதற்கிடையில், கொடிய பாலை நிலம் வழியே செல்லும் தலைவனையும் தலைவியின் நினைவு துரத்துகிறது. பொருளினைத் தேட வேண்டு மென்று தீர்மானித்து; தலைவியைப் பிரிந்து போக நினைத்தாலும், போகும் வகை விளங்கவில்லையே? இப்பெரிய இப்பாலை நில வழியே செல்கையில் எதிர்ப்பட்டு, என்னை நெடுந்தொலைவு தொடர்ந்து வந்து, தலைவியின் நீண்ட கண்களின் ஏக்கப் பார்வை என்னை எதிர் கொண்டு துரத்துகிறதே! நெஞ்சே, பொருள் தேட நான் எப்படிச் செல்வேன்? என்று தனக்குத் தானே செல்லுதற்கு வருந்தி எண்ணிக் கொள்கிறான் (68).

இவ்வாறு பிரிதல் காரணமாகத் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் நினைத்து வருந்திக் கொண்டிருக்கையில், காலம் மெதுவாகக் கடந்து செல்கின்றது. பருவங்கள் மாறுகின்றன. தலைவன் மீண்டும் வருவேன் என்று குறிப்பிட்டுச் சென்ற வேனிற் காலம் துவங்கியதை இயற்கையின் அறிகுறிகள் உணர்த்துகின்றன. எரியும் தீ போன்ற நிறத்தோடு மலர்ந்திருக்கும் நீண்ட அசோக மரத்தின் பூங்கொத்துகளில் எல்லாம் உடலில் கோடுகள் கொண்ட அழகிய நீண்ட வண்டுகள் பாடி மொய்த்துக் கொண்டிருக்கின்றன. பொன் போன்ற மலர்கள் கோங்க மரங்களெல்லாம் பூத்துக் குலுங்குகின்றன.

தலைவி புறாவிடம், சிறிய பெட்டைப் புறாவே! உனது துணையாகிய ஆண்புறாவோடு, ஊடல் கொள்வதால் பயன் ஒன்றும் இல்லை. ஏனெனில், அன்பு கொண்ட உறவு மனநிலையில் உள்ளவரே என்றாலும், கடினமான இதயம் கொண்டவராக எனது தலைவன் போலப் பிரிந்து சென்று விடுவார்கள். தலைவன் தேரோடு வந்து சென்ற சுவடு கொண்ட அகன்ற வழியினைப் பார்த்து, பொன்னிறம் போர்த்தியது போன்று எனது மேனியில் பசலை பூத்தது, அன்பு கொண்டவராயினும் கடின நெஞ்சம் கொண்டு பிரிந்துவிடுவார் என்று தன்னிலைக்கு இரங்கிப் புலம்புகிறாள் (74). இயற்கையின் மாறுதலையும், தலைவியின் நிலையையும் கண்ட தோழி, தலைவியே! உனக்குப் பசலை நோய் தோன்றிய காரணம் என்ன? என்று வினவி, வேனிற்பருவம் என்பதால் தலைவன் வந்துவிடுவான் என்பதைத் தலைவியிடம் வலியுறுத்துகிறாள் (63). பொருள் ஈட்டும் பொருட்டு நம்மைப் பிரிந்து சென்ற தலைவர் மீண்டும் திரும்பி வரும் நாள் அருகில்தான் உள்ளது. அல்லாமல் உன்னிடம் அன்பு செலுத்திய தலைவர் விரைவில் வருவேன் என்று சொன்ன சொல்லின் உறுதியை அறியாமல் துயர் கொள்ளும் தலைவியே, காலம் தாழ்த்தமாட்டார். அவர் வருவேன் என்று சொன்ன பருவகாலம் துவங்கிவிட்டது. வேனிலால் வறண்ட இம்மலை நாட்டிற்கு வரும் தலைவரைக் கண்டு மகிழ்வாயாக என்று தோழி தலைவியிடம் சொன்னாள் (79). தலைவன் பிரிவைத் தாங்க மாட்டாளே தலைவி எனக் கவலையுறும் தோழிக்கு, அவர் எந்த இடரையும் எதிர் கொள்ளாது நல்லவிதமாகத் திரும்புவார் என்று கூறி தலைவியும் தனது உறுதியை உணர்த்துகிறாள்(78).

உன் உணர்வை வெளிக்காட்டாது உன்னை இத்துன்பத்திலிருந்து காத்துக் கொள்வாய், என்று எத்தனைத்தான் சொன்னாலும் எச்சரிக்கை கொள்ளாது அனைவரும் அறியும் வண்ணம் வருந்தும் வெட்கக்கேடான செயலைச் செய்கிறாய் தலைவியே! நெருப்பினை சிதறி விட்டாற் போன்று குளிர்ந்த முருக்க மரங்கள் பூத்தன, கனமில்லாத நெற்பொரியினைச் சிதறி விட்டாற்போன்று புங்கைமரத்தின் பூக்கள் மலர்ந்தன(64). செல்வந்தர் வீட்டுச் சிறுவர்களுக்கு அணிவிப்பதற்காகப் பொற்கொல்லர் உயர்ந்த பவளத் துண்டத்தினை ஐம்படைத்தாலியில் பதித்து வைத்தாற் போலக் காணும்படியாக மலர்ந்த மலர்களுடன் மரங்கள் திகழ்வதைக் காண்பாயாக (66), வேனில் வந்தது; இனி வேந்தனும் வருவான் கவலையற்க தலைவியே! என்று தோழி தலைவியிடம் கூறினாள்.

வேனிற் பருவமும் வந்து விட்டது, பொருள் தேடிச் சென்ற தலைவனோ சொன்னபடி வேனிலில் வரவில்லை. வந்துவிடுவார் பொறுத்துக் கொள் என்று நீ சொல்வதால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியுமா? வருந்தாதே அமைதியாக இரு என்கிறாயே தோழி என்னால் எப்படி வருந்தாமல் இருக்க முடியும்? என்னை வருத்துவதற்காகவே பொன்னிடத்திலே பொருந்தியுள்ள பவழத்தினைப் போன்று இந்தப் பூக்கள் அடர்ந்து வளர்ந்துள்ள முருக்க மரங்களில் மலர்ந்துள்ளன. அதைக் காணுகையில் என் நெஞ்சினிலே துன்பம் மிகுந்துள்ளது, என்னால் தாங்க இயலாது (67) என்று தலைவி தோழிக்கு மறுமொழி கூறினாள். தலைவியே பொருள் தேடச் சென்ற தலைவர் இன்றே வருவார். இந்த நல்ல செய்தியை உணர்ந்து மிகவும் துடிக்கிறது எனது இடது கண்.  ஆதலால், கவலை கொள்ள வேண்டாம் என்று தோழி தலைவிக்கு ஆறுதல் சொல்கிறாள் (80).  வேலை நிறைவேறிய பின்னர் மீண்டும் வாழிடம் திரும்ப எண்ணும் தலைவன் தன் மனக்கண்ணில் தோன்றிய தலைவியின் உருவம் கண்டு, பெண்ணே என் எதிரே என்னைச் செல்லவிடாமல் தடுக்கும் உனது பார்வையுடன் நீ நின்றாய் என்றால், என்னால் உன்னை விட்டுச் செல்ல முடியுமா? என்று அவளை இனிப் பிரியா முடியாத தனது நிலையை மனக்கண்ணில் தோன்றும் உருவத்திடம் சொல்லி விரைகிறான்(77).

தலைவன் ஊர் திரும்பிவிட்டான். தலைவனும் தலைவியும் தனிமையில் கூடிக் களிக்கிறார்கள். உன்னுடைய பார்வையைப் போன்ற பார்வையைக் கொண்ட மான் ஒன்று குளிர்ந்த குராமரத்தினது நிழலில் நிற்பதைப் பார். மான் போன்ற பார்வை கொண்ட பெண்ணே இங்கு மணலில் வந்து என்னுடன் விளையாடுவாயாக (70) என்று தலைவன் அழைக்கிறான். இருவரும் மகிழ்ந்திருந்தாலும் இச்செய்தியை அறிந்த தலைவியின் குடும்பம் மகிழவில்லை.  தலைவனையும் தலைவியையும் கடிந்து கொள்கிறார்கள். தலைவியின் தந்தையும் தமையன் மார்களும் பழிச்சொற்கள் கூறி தலைவியின் மனதை வருத்துகிறார்கள். தலைவி வீட்டை விட்டு வெளியேறாத வண்ணம் வீட்டிலேயே அடைக்கப்படுகிறாள்.

தலைவனுக்கு வாக்களித்தவாறு, இற்செறிப்பின் காரணமாகச் சந்திக்க வேண்டிய புனத்தில் சந்திக்க வேண்டிய வேளையில் தலைவியால் தலைவனைச் சந்திக்க இயலவில்லை. தலைவியைத் தேடிச் சென்ற தலைவன் அவளைக் காண இயலாத தனது ஆற்றாமையால், அங்கிருக்கும் மரம் செடி கொடிகளிடம் அவள் எங்கே போனாள் என்ன சொன்னாள் என்று கேள்விமேல் கேள்வி கேட்டுப் புலம்பிக் கொண்டிருக்கிறான். கொன்றை மரமே! குருந்தமரமே! கொடிகளாகப் படர்ந்துள்ள முல்லைச் செடியே! நீங்கள் மிகவும் வாட்டமுற்றுக் காணப் படுகின்றீர்களே! உங்கள் எதிரில் நிற்கும் நான், உங்கள் துயரின் காரணம் தலைவியுடன் நீங்கள் கொண்ட உரையாடல் என்று அறிந்து கொண்டேன். நீண்ட கண்களையுடைய அவள் இவ்விடத்தை விட்டுச் செல்லும்படி என்ன கூறினீர்கள்? உங்களிடம் அவள் என்ன கூறினாள்?அதற்கு நீங்கள் அவளுக்கு என்ன மறுமொழி அளித்தீர்கள்? அதற்கு அவள் உங்களிடம் என்ன பதில் சொன்னாள் ? மின்னும் அணிகலன்களைப் பூண்ட அவள் அவற்றை மிளிரவிட்டுக் கொண்டிருக்க என்ன உரையாடல் இங்கு நடந்தேறியது? என்று பலவாறு புலம்புகிறான் தலைவன் (81).

தலைவனும் தலைவியும் எதிர்கொள்ளும் இந்த சோதனை நிறைந்த சூழலைத் தோழியால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. தலைவி தலைவனுடன் உடன்போக்கு செய்வதுதான் இதற்கான தீர்வு என்று கருதுகிறாள். முன்னர் தலைவி உடன்போக்கு எண்ணத்தைக் கைவிட்டது நினைவு வருகிறது. தலைவனிடம் அது குறித்துப் பேசுகிறாள். கழுத்தில் சிவந்த மாலை அணிந்தது போன்ற தோற்றம் கொண்ட கிளியின் சிவந்த வாயினின்றும் வெளிப்படும் கிள்ளை மொழியைக் கேட்க இயலாமல் போகும், குளிர்ந்த குளத்தில் மலர்ந்திருக்கும் கருமையான கண்களையொத்த நீல மலர்களைக் காண இயலாமல் போகும், சிறப்பு மிக்க உறவினரும் சுற்றமும் அலரால் தோன்றக் கூடிய பழிச்சொல் கேட்டு துயர் கொள்வார் என்பனவற்றைக் கருதி வருந்தியதாலும் முன்னர் பேதையாகிய என் தலைவி உடன் போக்கு எண்ணத்தைக் கைவிட்டாள் (73). ஆனால் இனி வேறு வழியில்லை. தலைவியை உங்களுடன் அழைத்துக் கொண்டு வேறிடம் சென்று விடுங்கள் என்று தலைவனிடம் கூறிய தோழி அதற்கான ஏற்பாட்டில் இறங்குகிறாள். தலைவியிடமும் சென்று உடன்போக்கிற்குச் சம்மதிக்கச் செய்கிறாள். தலைவனுடன் உடன்போக்கு செய்யும்படி தோழி சொன்ன அறிவுரைக்கு உடன்பட்ட தலைவி, யாவரும் விரும்பும் புகழினைக் கொண்ட தலைவனைப் பின் தொடர்ந்து உடன் போக்கு செய்தல் ஒழுக்கம் பிறழாத செயலே ஆகும். விற்போரில் வல்லவனாக,  வேலைக் கையில் கொண்ட தலைவன் பக்கத்தே துணையாய் வர செல்லுதற்கரிய தொலைவையும் பாலை நிலவழியையும் கடப்பது எனக்குக் கடினமான செயல் அல்ல என்று தலைவி தோழியிடம் கூறினாள்(87).

அத்துடன், தோழியை நோக்கி, பொருத்தமற்ற வெறுப்புச் சொற்கள் கூறி, எங்களது காதலைப் புரிந்து கொள்ளாது, எங்களைக் கடிந்து கொள்ளும் தந்தையையும் தமையன் மார்களையும் விட்டு நான் விலகுகிறேன். எங்களது காதலை ஏற்காமல் பொல்லாப்பு கூறும் எங்களது இல்லத்தாரைப் பிரிந்து தலைவனுடன் உடன்போக்குச் செய்கிறேன். தோழியே, எனது பெற்றோரையும் தமையன் மாரையும் சந்திக்கத் துணிவுடன் என் வீட்டிற்கு நீ செல்வாயானால், நாங்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பை அவர்களுக்கு எடுத்துக் கூறி, உடன்போக்கு செல்லும் எனது நிலையையும் முடிவையும் அவர்களுக்குக் கூறி, என் மீது கோபம் கொள்ளும் அவர்களது மனதை மாற்றி, எம்மேல் அவர்கள் கொண்டுள்ள குறை நீக்கி, எங்கள் மீது வீட்டை விட்டுச் செல்லும் பழிச் சொல்லும் கருத்தினையும் அவர்கள் மனத்திலிருந்து நீக்கி, நீ எல்லோருக்கும் நல்லவளாக இரு என்று தலைவி தோழியிடம் கேட்டுக் கொள்கிறாள்(88).

தலைவனும் தலைவியும் முன்னர் தலைவி மறுதலித்த கொடிய பாலை நிலம் வழியாகவே வேறிடம் செல்ல முடிவெடுத்து வீட்டை விட்டு வெளியேறி தங்களது புதிய வாழ்க்கையைத் தொடரச் செல்கிறார்கள். கொடுமையான அந்த வெம்மை நிறைந்த பாலை வழியில் அவர்கள் பயணம் தொடர்கிறது. மாலை மயங்குகிறது. அவர்கள் இருவரும் செல்வதைக் கண்ட வழிப்போக்கர் சிலர், தலைவியை அழைத்துக் கொண்டு பாலைவழிச் செல்லும் தலைவனிடம், நீங்கள் செல்கின்ற இப்பாலை நில வழியும் நீண்டதாக உள்ளது. நெருப்பினைப் போன்ற கதிர்களைக் கொண்ட பகலவனும் பாதியளவு வரை அந்த பெரிய மலையின் பின்னே மறைந்து விட்டான். ஆதலால், அணிகளை அணிந்துள்ள இந்த அழகிய மங்கையுடன் நீங்களும், எங்களில் ஒருவராக உங்களைக் கருதிக் கொண்டு எமது சிறிய ஊரில் இரவில் தங்கி, நாளை அங்கிருந்து செல்வதே நல்லது என்று கூறி தங்களில் ஒருவராக அவர்களது சிற்றூரில் இரவு தங்கிச் செல்லும்படி அழைக்கிறார்கள்(69).

தலைவி உடன்போக்கு மேற்கொண்டதை அறிந்த செவிலித்தாய் துயர் தாளாமல் தலைவியைத் தேடி பாலை நிலம் வழியே செல்கிறாள். வழியில் இருக்கும் குரா மரத்தின் கீழ் நின்று மரத்திடம் உதவுமாறு முறையிடுகிறாள். ஒரு தாய் போன்று மன நெகிழ்வுற்றுத் தாழ்ந்து முலை போன்ற கோங்க மலர்களைக் கொடுத்துப் பாலூட்ட நீ பொம்மை போன்ற பெண் குழந்தையைப் போன்ற காய்கள் பெற்றெடுத்தாய் குரா மரமே. அது போலவே தலைவியும் நான் பராமரிக்கும் எனது மகள் தான் பெரிய குராமரமே! அவள் உன்னிடம் சொல்லியவற்றை என்னிடம் சொல்ல முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனாலும், முள் போன்ற கூரிய பற்களைக் கொண்ட என் மகள் தனது தலைவனுடன் சென்ற வழி இதுதான் என்று மனமுவந்து அவள் எந்த வழியில் சென்றாள் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக என்று குராவிடம் கூறுகிறாள்(65).

அவ்வழியே வரும் கணவன் மனைவியாகிய இருவர் செவிலித்தாயின் நிலை கண்டு அவள் மீது கழிவிரக்கம் கொள்கிறார்கள்.  தாங்கள் அவர்களைப் பார்த்தோம் என்றும், விரைந்து சென்றால் அவர்களைக் காணலாம் என்றும் கூறுகிறார்கள். விரைந்து நீங்கள் செல்வீர்கள் என்றால், நம்மவர்களாகிய அவ்விருவரையும் காணவேண்டும் என்ற உங்கள் எண்ணம் எளிதில் நிறைவேறும். (பிறன்மனை நோக்காப் பேராண்மை கொண்டவனாகிய அவன்) வெப்ப மிக்க கதிரவன் போன்ற தலைவனை, நான் பார்த்தேன் என்றும்,  குளிர்ந்த மதியையொத்த தலைவியை (மற்ற ஆண்மகனை ஏறெடுத்தும் பார்க்காத) இவள் பார்த்தாளாம் என்று ஆண்மகன் செவிலித்தாயிடம் கூறுகிறான்(89). அவன் காட்டிய வழியில் விரைகிறாள் செவிலித்தாய். எதிர்ப் பட்டவரிடம் எல்லாம் அவர்களை இந்த வழியில் நீங்கள் பார்த்தீர்களா, பார்த்தீர்களா என்று கேட்டுக் கொண்டே கவலை தோய்ந்த முகத்துடன் செல்கிறாள்.

நிலவையும் கதிரையும் ஒத்திருந்த தலைவியும் தலைவனும் அந்தப் பாலை நிலத்தின் வழி சென்றதைக் கண்டதாக வழிப்போக்கர்கள் சிலர் செவிலித்தாயிடம் கூறுகிறார்கள்(71). செவிலித்தாயே, அழகிய தலைவி துன்பம் ஏதுமின்றித்தான் பாலைநில வழியே சென்றாள், எனவே கவலையற்க என வழிப்போக்கர்களில் சிலர் செவிலித்தாய்க்கு ஆறுதலும் கூறுகிறார்கள் (72). வீட்டில் தலைவி பிரிந்து சென்றுவிட்டதால் நற்றாயும் வருந்தியவாறு உள்ளாள். எரியும் தழல் போலச் சுடுகின்ற பகலவனின் ஒப்பில்லாத கதிர்களால் வெம்மை சூழ்ந்த பாலை நிலத்தில், விரித்து விட்ட கூந்தலையுடைய என்மகள் விருப்பத்தோடு செல்லும் வழியில், முறுக்கி விட்ட கயிற்றினைப் போன்று மலைப்பாம்புகள் புரண்டு இறந்து கிடக்குமே.  அத்தகைய கொடிய பாலை நில வழியே தனது தலைவனைப் பின்தொடர்ந்து சென்றுவிட்டாளே என் மகள். அத்தகைய கொடிய வழி மகளுக்கு அச்சம் தருமோ என அன்னை தனக்குள் கேட்டு கவலை கொள்கிறாள் (75). மகள் திரும்பி வருவாளா? உடன் போக்கு சென்ற மகளைத் தலைவன் எனது வீட்டிற்கு அழைத்து வருவானா? அல்லது தனது வீட்டிற்கே கொண்டு சென்றுவிடுவானா? என்று நற்றாய் நிமித்தம் கேட்க முடிவு செய்கிறாள். தெய்வத் தன்மையின் அருளால் நிமித்தம் கூறக்கூடிய ஒருத்தியை அழைக்கிறாள். நிமித்தம் கூறும் பலரிலும் நீ வேறுபட்டவள் என்ற கருத்தினால் உன்னைக் கேட்கிறேன். உன் தெய்வத்தன்மையின் உதவி கொண்டு கூறுவாயாக. புகழ்ந்து கூறும் நற்பண்பினைக்  கொண்டவனாக எனது மனைக்கு முறைப்படி மணம் முடித்துத் தர எனது மகளைத் தலைவன் அழைத்து வருவானா? அல்லது, ஒளி மிக்க வளையணிந்த என் மகளைத் தனது மனைக்கே அழைத்துச் சென்று விடுவானா ? என்று நற்றாய் குறி சொல்பவளிடம் கேட்கிறாள்(90).

குறிப்பு – கதையாகக் கோர்க்கப்பட்ட பாடல்களின் வரிசை, பாடல் எண்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது:

76. என் நெஞ்சே! பொருள் ஈட்ட நான் பாலை வழி செல்ல இருப்பதை எண்ணி அஞ்சாதே என்று நான் தலைவியை ஆற்றுவிக்கும் முன் அவளது பிரிவை எண்ணி நான் அஞ்சுவதை உணர்ந்து கொண்ட தலைவியும் அஞ்சி கண்கலங்கினாள், அவளை எவ்வாறு பிரிவது எனத் தலைவன் கலங்குகிறான்.

85. பொருளால் எவற்றையும் அடைந்துவிடலாம் என்று பொருள் தேடி நீங்கள் செல்ல விரும்புகையில், தலைவியின் மீது அருள் காட்ட மறக்கிறீர்கள். பொருளால் கடந்து சென்ற இளமையைப் பெறமுடியாது என்பதை எண்ணிப் பாருங்கள் என்று தோழி தலைவனுக்கு அறிவுரை கூறுகிறாள்.

86. தலைவன் பொருள் தேட பாலைநிலம் வழியே செல்ல முடிவெடுத்துள்ளான் என்பதை என்னிடம் மறைக்காது சொன்ன நீ ஒரு சிறந்த தோழியே, ஆனால் அதனால் என்ன பயன், ஆறுதல் வழங்கக் கூடியவர் எவரிடமாவது சென்று சொல் என்று தலைவி மனம் வருந்தி தோழியிடம் சொல்கிறாள்.

91. நல்ல வாழ்வை வாழ விரும்பும் எவரும் கொடிய பாலை நிலம் வழியாகச் செல்ல விரும்ப மாட்டார்கள், தலைவன் அவ்வாறு செல்லுதல் நல்லதல்ல என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

92. தன்னைச் சார்ந்தவரின் நலவாழ்வைக் கருத்தில் கொள்ளும் எவரும் கொடிய பாலை நிலம் வழியாகச் செல்ல விரும்ப மாட்டார்கள், தலைவன் அவ்வாறு செல்லுதல் நல்லதல்ல என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

82. தலைவியே ஆண்களின் கடமை பொருள் தேடுதல் என்பதால் தலைவன் பொருள் தேடிச் சென்றுள்ளார். பிறர் அறியும் வண்ணம் உனது துயரை வெளிக்காட்டாதிருக்க வேண்டி நீ அதிகம் பேசாமல் இருத்தல் நல்லது எனத் தோழி தலைவிக்குக் கூறுகிறாள்.

83. தலைவன் பொருள் தேடி பாலை வழி செல்லவிருக்கிறான் என்று தோழி கூறியது கேட்டு தலைவி அதற்கு உடன்படாது சொல்லியது.

84. கொள்ளையர்கள் இரக்கமற்று கொலை செய்யக்கூடிய பாலை நில வழியாக அறிவுடைய எவரும் செல்ல விரும்ப மாட்டார்கள், ஆதலால் தலைவன் பொருள் தேடி அந்த வழியில் செல்வது நல்லதல்ல என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

68. நெஞ்சே, பொருள் தேட எப்படிச் செல்வேன், பாலை வழியிலும் அழகிய என் தலைவியின் நீண்ட கண்களின் ஏக்கப் பார்வை என்னை எதிர் கொண்டு துரத்துகிறதே என்று தலைவன் வருந்துகிறான்.

74. புறாவே ஊடல் கொள்வதால் பயனில்லை, என்னைவிட்டு நீங்கிய தலைவன் சென்ற சுவட்டைக் கண்டு எனது மேனியில் பசலை பூத்தது, அன்பு கொண்டவராயினும் கடின நெஞ்சம் கொண்டு பிரிந்துவிடுவார் என்று தன்னிலைக்கு இரங்கிப் புலம்புகிறாள் தலைவி.

63. தலைவியே உனக்குப் பசலை நோய் தோன்றிய காரணம் என்ன என்று தோழி தலைவியை வினவினாள்.

79. தலைவன் விரைவில் வருவேன் என்று சொன்ன சொல்லின் உறுதியை அறியாமல் துயர் கொள்ளும் தலைவியே, தலைவன் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை, அவர் வருவேன் என்று சொன்ன பருவகாலம் துவங்கிவிட்டது. வரப்போகும் அவரைக் கண்டு களிப்பாயாக என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

78. தலைவன் பிரிவைத் தாங்க மாட்டாளே தலைவி எனக் கவலையுறும் தோழிக்கு, அவர் நல்ல வகையில் திரும்புவார் என்று கூறி தலைவி தனது உறுதியை உணர்த்துகிறாள்.

64. வேனில் வந்தது; இனி வேந்தனும் வருவான் கவலையற்க தலைவியே! என்று தோழி தலைவிக்கு ஆறுதல் சொல்கிறாள்.

66. வேனிற் காலம் துவங்கி விட்டது, முருங்க மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன, வேனிலில் வருவதாகக் கூறிச் சென்ற தலைவன் வந்துவிடுவான் தலைவியே!

67. பொருள் தேடிச் சென்ற தலைவன் சொன்னபடி வேனிலில் வரவில்லை, வருந்தாதே அமைதியாக இரு என்கிறாயே தோழி என்னால் எப்படி வருந்தாமல் இருக்க முடியும் என்று தலைவி தோழியிடம் கேட்கிறாள்.

80. தலைவியே பொருள் தேடச் சென்ற தலைவன் விரைவில் வருவார். துடிக்கும் எனது இடது கண் அந்த நல்ல செய்திக்கு அறிகுறியாகும், கவலை வேண்டாம் எனத் தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

77. பெண்ணே என் எதிரே என்னைச் செல்லவிடாமல் தடுக்கும் உனது பார்வையுடன் நீ நின்றாய் என்றால், என்னால் உன்னை விட்டுச் செல்ல முடியுமா? என்று தன் மனக்கண்ணில் தோன்றிய தலைவியின் உருவத்துடன் வேலை நிறைவேறிய பின்னர் மீண்டும் வாழிடம் திரும்ப எண்ணும் தலைவன் கூறுகிறான்.

70. மான் போன்ற பார்வை கொண்ட பெண்ணே இங்கு மணலில் வந்து என்னுடன் விளையாடுவாயாக என்று தலைவன் அழைக்கிறான்.

81. இற்செறிப்புக்காரணமாகப் புனத்தை விட்டுச் சென்றுவிட்ட தலைவியைத் தேடிச் சென்ற தலைவன் தனது ஆற்றாமையால் மரம் செடி கொடிகளிடம் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தான்.

73. முன்னர் தலைவனுடன் உடன் போக்கை மேற்கொள்ள விருந்த தலைவி, பின்னர் அச்செய்கையால் ஏற்படக் கூடிய துயரை எண்ணிக் கைவிட்டாள் என்று தோழி தலைவனிடம் கூறினாள்.

87. தலைவனுடன் உடன்போக்கு செய்யும்படி தோழி சொன்ன அறிவுரைக்கு உடன்பட்ட தலைவி, விற்போரில் வல்லவனான அவனுடன் பாலை நில வழியில் செல்வது கடினமான செயல் அல்ல என்கிறாள்.

88. எங்களது காதலை ஏற்காமல் பொல்லாப்பு கூறும் எங்களது இல்லத்தாரைப் பிரிந்து தலைவனுடன் நான் வெளியேறுகிறேன். தோழியே எனது பெற்றோரையும் தமையன் மாரையும் சந்திக்க என் வீடு சென்றால் எங்களது அன்பைக் கூறி, உடன்போக்கு செல்லும் எனது நிலையையும் கூறி அவர்களது மனதை மாற்றி எல்லோருக்கும் நல்லவளாக இரு என்று தலைவி தோழியிடம் கேட்டுக் கொள்கிறாள்.

69. தலைவியை அழைத்துக் கொண்டு பாலை வழிச்செல்லும் தலைவனிடம், பொழுது சாயப் போகிறது எங்கள் சிற்றூரில் இரவு தங்கி நாளை செல்க என்று எதிர்ப்பட்ட வழிப்போக்கர்கள் கூறுகிறார்கள்.

65. சுரத்திடை (பாலை நிலவழி) தனது தலைவனுடன் தலைவி சென்ற வழி எது என்று எனக்குக் காட்டுவாயாக எனச் செவிலித்தாய் குரா மரத்தருகில் நின்று புலம்புகிறாள்.

89. உடன்போக்கு சென்ற தலைவியையும் தலைவனையும் பாலை நில வழியே தேடிச் செல்லும் செவிலித்தாயிடம், எதிர்ப்படும் கணவன் மனைவியாகிய இருவர், தாங்கள் அவர்களைப் பார்த்தோம் என்றும், விரைந்து சென்றால் அவர்களைக் காணலாம் என்று கூறுகிறார்கள்.

71. நிலவையும் கதிரையும் ஒத்திருந்த தலைவியும் தலைவனும் அந்தப் பாலை நிலத்தின் வழி சென்றதைக் கண்டதாக வழிப்போக்கர்கள் செவிலித்தாயிடம் கூறுகிறார்கள்.

72. செவிலித்தாயே, அழகிய தலைவி துன்பம் ஏதுமின்றித்தான் பாலைநில வழியே சென்றாள், எனவே கவலையற்க என வழிப்போக்கர் செவிலித்தாய்க்கு ஆறுதல் கூறினர்.

75. கொடிய பாலை நில வழியே தனது தலைவனைப் பின்தொடர்ந்து சென்றுவிட்டாளே என் மகள், அந்த வழி அவளுக்கு அச்சம் தருவதாக இருக்குமோ என்று துயர் கொள்கிறாள் தாய்.

90. உடன் போக்கு சென்ற மகளைத் தலைவன் எனது வீட்டிற்கு அழைத்து வருவானா? அல்லது தனது வீட்டிற்கே கொண்டு சென்றுவிடுவானா? என்று நற்றாய் நிமித்தம் கூறுபவரிடம் குறி கேட்கிறாள்.

_____________________________________________________

உதவிய தளங்கள்:

1. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது

மூலமும் உரையும் – மகாவித்வான் ரா. ராகவையங்கார்

செந்தமிழ்ப் பிரசுரம், 1927 (இரண்டாம் பதிப்பு)

https://upload.wikimedia.org/wikipedia/commons/4/4e/திணைமாலை_நூற்றைம்பது.pdf

https://ta.wikisource.org/s/31hg

2. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது

விளக்க உரை – தமிழ்ப் புலவர் திரு. அ. நடராச பிள்ளை

http://www.tamilvu.org/library/l2F00/html/l2F00ind.htm

http://www.tamilvu.org/library/l2F00/html/l2F00vur.htm

3. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது

உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.

https://www.chennailibrary.com/pathinenkeelkanakku/thinaimaalai150.html

4. திணைமாலை நூற்றைம்பது – கணிமேதாவியார்

தமிழ் இலக்கியத் தொடரடைவு, முனைவர்.ப.பாண்டியராஜா

http://tamilconcordance.in/TABLE-THINAIMALAI150-TEXT.html

—–


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அன்பின் ஐந்திணை – பாலை”

அதிகம் படித்தது