சனவரி 28, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அன்பின் பரிமாற்றம் – சிறுகதை

ரவி

Aug 9, 2014

kashmir protesters srinagar“அம்மா” என்று அழைத்தபடியே ஓடி வந்தாள் கலா. அவள் நடையில் ஒரு துள்ளல்! முகத்தில் இனம் புரியாத பிரகாசம்! அவள் தாயிடமும் அதே உற்சாகம். ஆரத்தி தட்டுடன் தயாராக இருந்தாள் கலாவின் தாய். மெல்லிய நாதஸ்வர இசை சுழன்றுக் கொண்டிருந்தது. ஊதுபத்திகள் இனிய மணத்தைப் பரப்பிக் கொண்டிருந்தன. அடுப்பில் நெய்யும் சர்க்கரையும் தன பங்குக்கு வீடு முழுவதும் ஒரு கலவையான வாசனையை நிரப்பிக் கொண்டிருந்தன. வாசலில் மாவிலைத் தோரணம்! கலர் கோலம் என்று அமர்க்களப்பட்டது வீடு.

கலாவின் கையைப் பிடித்து நின்றுக் கொண்டிருந்த நசீமாவுக்கோ வெட்கம் கலந்த ஆச்சர்யம். இப்படி ஒரு வரவேற்பை அவள் எதிர்பார்க்கவே இல்லை. அந்த உற்சாகமான சூழ்நிலை, அந்த வெளிப்படையான அன்பு, அந்த முகங்களில் தெரிந்த போலியில்லாத மகிழ்ச்சி அவளை திக்கு முக்காடச் செய்தது. எப்பொழுது எங்கு குண்டு வெடிக்குமோ, எப்படி எங்கிருந்து உயிருக்கு ஆபத்து வருமோ என்று மூச்சு முட்ட வைக்கும் காஷ்மீரின் சூழ்நிலையில் இருந்து இப்படி ஒரு மாறுபட்ட, தலைகீழான வாழ்வின் நிதர்சனம் அவளை அப்படியே உறையச்செய்தது. சிரிப்பு, மகிழ்ச்சி, பயமில்லாத பார்வை ஆகியவை அவளுக்கு புதுசு. மிகவும் புதுசு. மூச்சு முட்டும் இருட்டு அறையிலிருந்து காற்றோட்டமான வெட்ட வெளிக்கு வந்து விட்டதைப் போல அவள் உணர்ந்தாள். அந்த வீட்டில் ததும்பிய மகிழ்ச்சி அவளையும் மெல்ல மெல்ல தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது. வெட்கம் விலகிக் கொள்ள ஒரு ஆவல் அவள் மனதில் பரவ ஆரம்பித்தது.

தன் கண் ஜாடை மூலமாக ஆரத்தியை மட்டும் தடை செய்தாள் கலா. காஷ்மீரிலிருந்து வந்த மாணவர்களில் யார் தன்னோடு அனுப்பி வைக்கப்படுவார் என்பது முதலில் அவளுக்குத் தெரியாததால் ஆரத்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்திய ராணுவத்தின் “சத்பாவனா” என்கிற புதுமையான திட்டத்தின் கீழ் கலா குடும்பத்தினரோடு இரண்டு நாட்கள் வாழ்வதற்கும், மேலும் இரண்டு நாட்கள் சென்னையைச் சுற்றிப் பார்க்கவும் என்று அனுப்பி வைக்கப்பட்ட பள்ளி மாணவிதான் நசீமா. இதே போல பத்து சென்னை மாணவிகள் ராணுவ கண்காணிப்பின் கீழ் காஷ்மீருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

anbin parimaatram2மிகவும் வாஞ்சையோடு நசீமாவை அணைத்துக் கொண்டாள் கலாவின் தாய். அந்தப் பெண்ணும் ஒரு புதிய அனுபவத்திற்குத் தயாராக, மிகுந்த எதிர்பார்ப்புகளோடு அந்த வீட்டிற்குள் நுழைந்தாள். வன்முறை, மதக்கலவரங்கள் குண்டு சப்தம், இறப்பு, அழுகை என்ற வாழ்க்கையே தினம் தினம் பார்த்திருந்தவளுக்கு அந்த அமைதியான சூழ்நிலை மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. கேசரி, இட்லி, வடை, பொங்கல் என்று தென்னிந்திய உணவு வகைகளை கலாவின் தாய் செய்து வைத்திருந்தாள். எல்லாமே புதுமையாகவும் இனிமையாகவும் இருந்தது நசீமாவுக்கு. எல்லாவற்றையுமே ரசித்து அனுபவித்தவள் தன் பங்கிற்கு குங்குமப்பூ, காஷ்மீரத்து ஆப்பிள் என தான் வாங்கி வந்திருந்தவைகளை அன்புடன் எடுத்து கொடுத்தாள். கலா குடும்பத்தினரின் ஒற்றுமை, தன்னை நல்ல முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் எல்லாமே அந்த காஷ்மீரப் பெண்ணுக்கு மிகவும் இதமாக இருந்தது. அதே சமயம் தன்னையும் தன் குடும்பம் வாழ்ந்து கொண்டிருக்கும் முறையையும் எண்ணிப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டாள் நசீமா.

தவறான கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு குடும்பத்தை விட்டு பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியேறி இந்திய ராணுவத்தால் சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தன் தந்தை….., கஷ்டப்பட்டு படகோட்டிக் கொண்டு தன் குடும்பத்தைக் காப்பாற்ற ராத்திரி பகலாக அல்லல் படும் தன் தாய்…, அடிக்கடி தடைபடும் தன் படிப்பு… என எல்லாமே எதிர்மறையாக அமைந்துவிட்டது அவளுக்கு. இதைப் போன்ற ஒரு அமைதியான சூழ்நிலையில் சிறிது காலமாவது வாழ மாட்டோமா என்று எண்ணி எண்ணி ஏங்கியது அவளது கலங்கிய மனம். இயற்கையின் தொட்டில் எனப்படும் தனது மாநிலத்தில் அமைதி திரும்பாதா என்று உண்மையிலேயே உருகி உருகி ஏங்கினாள் நசீமா.

கலாவின் குடும்பமும் பணக்கார குடும்பம் என்று சொல்வதற்கில்லை. நடுத்தர குடும்பம்தான். இருந்தாலும் செலவைப் பார்க்காமல் நசீமாவை மிகுந்த அன்புடன் உபசரித்தாள் கலாவின் தாய். சென்னையின் பல இடங்களை கலாவுடன் சேர்ந்து சுற்றிப் பார்ப்பது என்று அடுத்த நாள் ஏற்பாடாகியது. பாம்புப் பண்ணை, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் மிருகக்காட்சி சாலை, மெரினா கடற்கரை எல்லாவற்றையும் ஆவலுடன் பார்த்தாள் நசீமா. மிகுந்த சுதந்திரத்துடன் மக்கள் எங்கு வேண்டுமானாலும் நடமாடுவதையும், சாதாரண வாழ்க்கையில் ஆபத்து என்பதே இல்லை என்பதுவும் அவளை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பிறந்ததிலிருந்து காஷ்மீரத்திலேயே வாழ்ந்தவளாகையால் அவளுக்கு எல்லாமே மிகவும் வியப்பாக இருந்தது. எல்லா மதங்களின் வழிபாட்டு தலங்களும் அருகருகே அமைந்திருப்பதும் அந்தந்த மக்கள் அவரவர் நம்பிக்கையைப் பொறுத்து கடவுளை வழிபடுவதும்… அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்படி என் காஷ்மீரத்தில் ஏன் இல்லை என்று அவள் மிகவும் வேதனைப்பட்டாள்.

“கலா, நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க!” என்று தன் மனத்தை வெளிப்படுத்தினாள் நசீமா.

“நாங்க மட்டும் இல்ல நசீமா, இந்தியாவுல இருக்குற எல்லோருமே ரொம்பக் கொடுத்து வெச்சவங்கதான். இன்னிக்கி நிலைமையைப் பார்த்தோம்னா உங்க ஊரத் தவிர நம்ம நாட்டுல இருக்கிற எல்லா இடமுமே மக்களோட இயல்பு வாழ்க்கைக்கு சாத்தியமான இடங்கள்தான்!”

 “ஆமா கலா நீ சொல்றது சரிதான்.” வேதனையுடன் அவளை ஆமோதித்தாள் நசீமா. ஆதரவுடன் அவள் தோள்களில் கையை வைத்து இறுக்கிக் கொண்டாள் கலா.

“வேதனையை விடு நசீமா. உன்னைப் போல பல இளைஞர்கள் இப்போ இந்தியா முழுசும் சுத்திகிட்டிருக்கீங்க இல்லியா? நீங்க தானே எதிர்கால காஷ்மீர்!? அமைதியான வாழ்க்கைதான் தேவைன்னு நீங்க எல்லாம் தெரிஞ்சுகிட்டீங்கன்னா போதும். தன்னால உங்க பிரச்னை தீர்ந்துடும். வேதனை குறைஞ்சிடும்.”

“அப்படி எல்லாம் ஆயிட விட மாட்டாங்க கலா….வெளி நாட்டில இருந்து ஆட்கள் வந்து கிட்டே தான் இருப்பாங்க…”

நசீமாவின் வறட்டு சிரிப்பு கலாவுக்கு நிதர்சனமான நிலையை உணர்த்தியது. தொடர்ந்து பேசினாள் நசீமா.

“எங்கள எல்லாம் இப்படியே விட மாட்டாங்க கலா. வெளி நாட்டிலிருந்து வந்து எங்களை வற்புறுத்துவாங்க. மிரட்டுவாங்க. எங்க காஷ்மீரத்து மக்கள் மிகவும் அமைதியும் அன்பும் உருவானவங்கதான். ஆனா பக்கத்து நாட்டுக்காரங்க எங்களை அமைதியா இருக்க விடறதில்ல. ஹும்… தப்பிக்க எங்களுக்கு வழியே இல்லை. என்னைக்காவது ஒரு நாள் நானும் துப்பாக்கியை நீட்டிக்கிட்டு காட்டுல சுத்த வேண்டி இருக்கலாம்.. மனித வெடிகுண்டா மாற வேண்டி இருந்தாலும் இருக்கலாம். யாருக்கு தெரியும்!? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.” அவளது வேதனையான பேச்சு கலாவை மிகவும் வாட்டியது. அந்த பெண்ணின் சோகம் கலாவைத் தாக்கியது.

அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது அடுத்த வீட்டில் இருந்து ஒரு பெண் தன குழந்தையை தூக்கிக் கொண்டு கலவரமாக ஓடி வந்தாள். குழந்தை அழுதபடியே இருந்தது.

“மாமி, ரெண்டு நாளா குழந்தை அழுகையை நிறுத்தவே இல்லை”

கலாவின் தாய் அந்தப் பெண்ணை அமைதிப்படுத்தி விட்டு குழந்தையை நிதானமாக உற்றுப் பார்த்தாள். குழந்தையின் கை, கால், முதுகு எல்லாவற்றையும் பொறுமையாக சோதித்துப் பார்த்தாள். அந்தப் பெண்ணை சில கேள்விகள் கேட்டாள். பிறகு ஸ்வாமி படத்திற்கு அருகில் இருந்து விபூதியை எடுத்து குழந்தைக்கு பூசி விட்டாள்.

“எந்த பிரச்சனையும் இல்லம்மா. குழந்தை எதையோ பாத்து பயந்து இருக்கு. அவ்வளவுதான். மவுண்ட் ரோடுல இருக்கற தர்காவுக்குக் கொண்டு போய் மந்திரிச்சிண்டு வந்துடு. ரெண்டு நாள்ல சரியாய் போயிடும்.”

நடப்பதைப் பார்த்துக் கொண்டே இருந்த நசீமாவுக்கோ மிகவும் ஆச்சரியம்.

“ஆண்டி, நீங்க இந்துக்கள் இல்லியா?!” என்று கலாவின் தாயைப் பார்த்துக் கேட்டாள்.

“ஆமாம்மா..நாங்க இந்துக்கள் தான். என்ன திடீர்னு இந்த கேள்வி?”

“அந்தப் பக்கத்து வீட்டு ஆண்டியும் இந்துதானே?!”

“கண்டிப்பா இந்துவேதான்”

மித மிஞ்சிய வியப்பை கண்களில் தேக்கியபடி பார்த்தாள் நசீமா.

“எப்படி ஆண்டி இது!? நீங்க இந்து. பக்கத்து வீட்டு ஆண்டியும் இந்துதான். அப்படி இருக்கும் போது அந்தக் குழந்தையை எப்படி மசூதிக்கு கொண்டு போக சொல்றீங்க!?

கலாவின் தாய்க்கு சிரிப்பு வந்தது. “ஓஹோ! அதுதான் உன் சந்தேகமா! நசீமா இங்க பாரு. எங்க ஊர்ல எப்பவுமே மசூதிக்கு போய் மந்திர்க்கறது உண்டு. எந்த மசூதியைப் போய் பார்த்தாலும் அங்க நிறைய பேர் குழந்தைகளை வெச்சிண்டு நிக்கரதைப் பார்க்கலாம். அதுல முக்கா வாசி பேர் இந்துக்கள் தான். இது இங்க ரொம்ப சகஜம்மா.!”

anbin parimaatram1வியப்பிலும் சந்தோஷத்திலும் நசீமாவுக்கு கண்கள் பனித்து விட்டன. உணர்ச்சி வயப்பட்டவளாக கலாவின் தாயுடைய கைகளைப் பிடித்துக் கொண்டாள். சிறிது நேரத்திற்கு அந்தக் காஷ்மீரப் பெண்ணிற்கு பேச்சே வரவில்லை. இது எப்படி சாத்தியம் என்று அவள் மனம் எண்ணி வியந்தது. மத வழிபாட்டுத் தலங்கள் எல்லாமே மதக் கலவரங்களை தூண்டி விட மட்டுமே இருக்கின்றன என்கிற அழுத்தமான எண்ணம் எப்படி இந்த நாட்டின் சில பகுதியில் மட்டும் விரவி நிற்கிறது என்று நினைத்தாள் நசீமா. அதே சமயம் தென்னிந்தியாவில் எப்படி மத ஒற்றுமை இப்படி செழித்து வளர்கிறது என்றெண்ணியும் வியந்தாள். அவள் எண்ண ஓட்டங்களைப் புரிந்து கொண்டவளாய் அவளின் தலையை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்து தன்னோடு பிணைத்துக் கொண்டாள் கலாவின் தாய்.

“நசீமா! காலம் இப்படியே போய்விடாது. பகவான் தயவுல உங்க ஊருலயும் நல்ல விஷயங்கள் நடக்கும். உறுதியாக நடக்கும். நீ உன் படிப்பை முடிச்சுட்டு பெரிய மனுஷியா, ஒரு குடும்பத் தலைவியா மறுபடியும் இதே மாதிரி சென்னைக்கு வரணும். எங்களை எல்லாம் பூலோக சொர்க்கமான காஷ்மீரத்துக்கு நீ கூட்டிண்டு போகணும்.!”

அதைக் கேட்டு வறண்ட சிரிப்பொன்றை உதிர்த்தாள் நசீமா. “ஆண்டி! நானாவது படிப்பை முடிக்கரதாவது!?”

அதைக் கேட்டு திடுக்கிட்டாள் கலா. ஆதரவுடன் அந்த காஷ்மீரத்து அழகியின் கையை அழுத்தி விட தொடர்ந்து பேசினாள் நசீமா.

“ஆமா கலா! ஆமா ஆண்டி! என்னோட படிப்பு இந்த வருஷத்தோட நின்னு போயிடும்.”

“ஏன் நசீமா?’ ஒரே நேரத்தில் கேட்டார்கள் கலாவும் அவள் தாயும்.

“இதுக்கு மேல பணம் கட்ட எங்க அம்மாவால முடியாது ஆண்டி. இந்த வருஷத்தோட படிப்பை நிறுத்திட்டு நானும் ஒரு படகு வாங்கி ஓட்ட வேண்டியதுதான்.” சோகம் இழையோட தன் நிலைமையை விளக்கினாள் நசீமா. கலாவும் அவள் தாயும் செய்வதறியாமல் நின்று விட்டார்கள். அது வரை அங்கே நிலவி வந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் வடிந்து போய் சட்டென்று ஒரு இறுக்கமான அமைதி பிடிவாதமாக வந்து உட்கார்ந்து கொண்டது. எதுவும் பேசத் தோன்றாமல் ஏதோ ஆழ்ந்த யோசனையுடன் சமையல் கட்டுக்கு நகர்ந்தாள் கலாவின் தாய்.

தன்னுடயை சோகம் அந்த வீட்டின் அமைதியை குலைத்து விட்டதை எண்ணி பதட்டப்பட்டாள் நசீமா. திடீரென்று ஏற்பட்டு விட்ட அசாதாரணமான மௌனம் அவளை அழுத்தியது. ஒரு சில வினாடிகளுக்குப் பிறகு சகஜ நிலைக்கு வரும் பொருட்டு, “ஏய்! கலா! உன்னுடைய அப்பாவைப் பற்றி நீ ஒண்ணுமே சொல்லலியே!” என்று ஒரு போலியான உற்சாகத்தோடு கேட்டாள் நசீமா.

அதுதான் சாக்கு என்று எழுந்து சென்ற கலா ஒரு ஆல்பத்தை கொண்டு வந்து நசீமாவின் முன் வைத்தாள். மெல்ல ஆல்பத்தை எடுத்துப் புரட்டத் தொடங்கினாள் நசீமா. இரண்டாவது படத்திலேயே ராணுவ உடையில் கம்பீரமாக நின்று இருந்தார் கலாவின் அப்பா. அதைப் பார்த்தவுடன் மின்சாரக் கம்பியை தொட்டவள் போல துடித்துப் போனவளாக பதட்டத்துடன் ஆல்பத்தை கீழே போட்டாள் நசீமா. அவள் உதடுகள் நடுங்கத் தொடங்கி இருந்தன. “ஏய் நசீமா! என்ன ஆச்சு உனக்கு? என்னவோ மாதிரி இருக்கயே!?” என்று அவள் அருகில் வந்தாள் கலா. தன் முகத்தை கைகளால் மூடிக் கொண்டு பொங்கி வரும் அழுகையை அடக்க முயற்சி செய்து கொண்டு இருந்தாள் நசீமா.

சட்டென்று அவளுக்கு ஏற்பட்ட மாறுதலை புரிந்துக் கொள்ள முடியாதவளாக அவளருகில் அமர்ந்து ஆதரவுடன் அவள் தோள்களைப் பற்றினாள் கலா. “என்ன நசீமா! ஏன் அழற! என்ன விசயம்னு சொல்லுமா!” என்று கேட்டபடியே அவள் கைகளை விலக்கினாள் கலா. ஏற்கனவே சிவந்த அவள் கண்கள் மேலும் கலங்கி இருந்தன. “எதுவா இருந்தாலும் சொல்லு நசீமா. நீ அழ வேண்டிய காரணம் என்ன!?” என்று மேலும் மேலும் ஆதரவாக கேட்டாள் கலா. தன் சோகத்தை தாங்க முடியாதவளாக அவள் மேல் சாய்ந்து விம்மினாள் நசீமா. கலாவின் கைகள் அவள் முதுகை ஆதரவுடன் தடவிக் கொண்டிருந்தன. தன் அழுகையை கட்டுபடுத்திக் கொண்டே பேசினாள் நசீமா.

“கலா! உங்க அப்பா போட்டோவப் பாத்தேன்!.”

“உம்…” என்று மேலும் தூண்டி விட்டாள் கலா.

“அது….அது…வேற யாருமில்ல…கொஞ்ச நாளுக்கு முன்னால எங்க அப்பாவை சுட்டுக் கொன்ன ஆபீசர் தான்….” என்று சொல்லி விட்டு தாங்க முடியாதவளாக கலாவின் நெஞ்சில் தன் முகத்தை புதைத்துக் கொண்டாள் நசீமா. கலா இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை. பேரிடியாக அது இறங்கியது. கலங்கிப் போனாள். என்ன செய்வது என்ன பேசுவது என்று அவளுக்குப் புரிய வில்லை. எதை சொல்லி நசீமாவை சமாதானப் படுத்துவது என்று அந்த சிறுமியின் அறிவுக்கு எட்ட வில்லை. சூழ் நிலையின் அசாதாரணம் அவளை பதட்டத்தில் ஆழ்த்தியது. அவர்களைப் பார்த்துக் கொண்டே, அவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டே வந்த கலாவின் தாய்க்கும் நிலைமையின் நெருக்கடி சட்டென பிடிபட்டது. அவளும் தர்ம சங்கடப் பட்டாள். மெல்ல அவர்களை நெருங்கி நசீமாவை தன் பக்கம் இழுத்துக் கொண்டாள். மெல்ல மெல்ல தன் அழுகையை அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள் நசீமா. விம்மல்கள் அவளையும் மீறி வெடித்துக் கொண்டிருந்தன.

“நசீமா! ரொம்ப சாரிடா கண்ணா! இப்பிடி இருக்கும்னு எங்களுக்கு தெரியவே தெரியாது.”

தாயின் ஆறுதல் பேச்சு நசீமாவின் அழுகையை மேலும் அதிகமாக்கியது. கலாவின் தாயை மேலும் இறுக்கிக் கொண்டாள் அந்த காஷ்மீரத்து சிறு பெண். மெல்ல நசீமாவின் முகத்தை உயர்த்தினாள் கலாவின் தாய். அவள் கண்களைத் துடைத்து விட்டு ஆசுவாசப் படுத்தினாள். நசீமாவும் தன கண்களைத் துடைத்துக் கொண்டு சகஜமாக முயற்சித்தாள். ஒரு மெல்லிய புன்னகை அவளின சிவந்த உதடுகளில் தவழ ஆரம்பித்தது. நிலைமையை மாற்றும் பொருட்டு, “நசீமா உனக்கு இப்ப நான் ஒரு நல்ல செய்தியும் சொல்ல போறேன்” என்று மகிழ்ச்சியோடு சொன்னாள் கலாவின் தாய். எல்லோருமே அவளை ஆவலோடு பார்த்தார்கள்.

“ஆமா நசீமா! பணம் இல்லாதததுனால படிக்க முடியாதுன்னு சொன்ன இல்லயா? நா இப்ப என்ன முடிவு பண்ணியிருக்கேன்னா…..உன்னோட காலேஜ் செலவு முழுசையும் எங்க குடும்பமே ஏத்துக்க போறது.! ஆமா நசீமா. கலாவை மாதிரியே நீயும் மேல படிக்கலாம். இதை உன்னை இங்க அனுப்பி வெச்ச ராணுவ அதிகாரிங்க கிட்டே சொல்லி வேண்டிய ஏற்பாடுகளை செய்யப் போறேன்.” என்று மகிழ்ச்சியோடு சொன்னாள் கலாவின் தாய். கலாவுக்கோ தன தாயின் அந்த அறிவிப்பு மகிழ்ச்சியை தந்தாலும் ஆச்சரியமாகவும் இருந்தது. குடும்ப செலவுகளையும் சமாளித்துக் கொண்டு தன படிப்புக்குப் பணம் கட்டுவதே போதும் போதாமலும் இருக்கும் பொழுது நசீமாவின் முழு படிப்பு செலவையும் ஏற்றுக் கொள்வது எப்படி என்று வியந்தாள் கலா. அதற்கான பதில் அடுத்த நாள் அன்புடன் நசீமா பிரியா விடை பெற்று சென்ற பிறகு தான் அவளுக்குக் கிடைத்தது. பொங்கி வந்த தன துக்கத்தை அடக்கிக் கொண்டு கரகரத்த குரலில் சொன்னாள் அவள் தாய்.

“கலா! கம்பீரமாக நாலு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ன உங்க அப்பா அடுத்த நாளே இன்னொரு தீவிரவாதியின் குண்டு பட்டு உயிரை விட்டுட்டார். அவருடைய செயலை பாராட்டி அரசாங்கம் பத்து லட்சம் ருபாய் பரிசா கொடுக்கப் போறது. அதுல இருந்துதான் அந்த காஷ்மீரப் பொண்ணு நசீமாவுடைய படிப்புக்குப் பணம் கொடுக்க போறேன்.”

நாட்டு பாதுகாப்புக்காக உயிரை விட்ட தந்தையை விடவும் உயரமான இடத்தில் தன் தாய் கம்பீரமாக நிற்பதை உணர்ந்து மகிழ்ச்சியில் விம்மினாள் கலா.


ரவி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அன்பின் பரிமாற்றம் – சிறுகதை”

அதிகம் படித்தது