மே 30, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

அமெரிக்கச் சிறுவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஃபிட்ஜெட் ஸ்பின்னர்

தேமொழி

May 13, 2017

Siragu Fidget Spinner2

இணையத்தில், “Fidget Spinner” (ஃபிட்ஜெட் ஸ்பின்னர்) எனக் கூகுள் இணையத்தேடல் செய்தால், ஒரு மில்லியனுக்கும் அதிகமான முடிவுகளை அரை நொடியில் (About 1,130,000 results – 0.51 seconds) அது அள்ளி வழங்கும். இது என்ன? நாம் கேள்விப்படாத ஒரு புதுச் செய்தியாக இருக்கிறதே! என்று (குறிப்பாக இளம் பெற்றோர்களைத் தவிர்த்த) பெரும்பாலோர் வியப்போடு மேலும் “கூகுள் தேடலின் போக்கு” (Google Trends) எந்த வகையில் செல்கிறது என்று ஆராய முனைவோம். அத்தேடலில் “Fidget Spinner” என்னும் இணையத்தேடல், இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரம் துவங்கி, தொடர்ந்து வந்த ஒரு ஒன்றரை மாதத்தில் இந்த அளவு பிரபலமாகி இருப்பதைக் கண்டு வியப்படையலாம். அது சரி! ஃபிட்ஜெட் ஸ்பின்னர் என்றால்தான் என்ன? என்ற கேள்விக்கு விடை: இது அமெரிக்கச் சிறுவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஒரு விளையாட்டு பொம்மை. கேரம் போர்ட் ஸ்ட்ரைக்கர் அளவில், பல அமைப்பில் உள்ள ஒரு வில்லை. இதனை கையால் சுழற்றிவிட்டால், சுழற்றுபவரின் திறமைக்கேற்ப, ஃபிட்ஜெட் ஸ்பின்னர் தயாரிக்கப்பட்ட தரத்திற்கேற்ப அதிக அளவு 3 நிமிடங்கள் வரைத் தொடர்ந்து சுழலும் தன்மை கொண்டது. இரவில் ஒளிர்வது, பலநிறங்களில் உள்ளவை, இரண்டு முனைகள் மூன்று முனைகள் கொண்டவை, உலோகம், பிளாஸ்டிக், பீங்கான், பேட்மேன்-சூப்பர்மேன் படங்களுடன் எனப் பல வகைகளிலும் ஃபிட்ஜெட் ஸ்பின்னரை வாங்கி விரல்களுக்கு இடையில் சுழற்றிக் கொண்டிருக்கலாம்.

Siragu Fidget Spinner4

“ரூபிக் கியூப்” (Magic Cube/Rubik’s Cube) என்று 1980 களில் பரவலாக சிறுவர்களைக் கவர்ந்த நிறப்புதிர் பொம்மைக்கும், “ஹூலா ஹூப்” (Hula hoop)என்று 1960 களின் சிறுவர்களைக் கவர்ந்த வளைய விளையாட்டுப் பொம்மைக்கும், “ஸ்லின்க்கி” (Slinky) என்று 1940 களின் சிறுவர்களைக் கவர்ந்த சுருள் பொம்மைக்கும், “யோ யோ” (Yo-yo) என்று 1920 களில் வளர்ந்த சிறுவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கைநூலில் சுழலும் பம்பரம் போன்ற ஒரு விளையாட்டுப் பொம்மைக்கும் இணையாக, இந்த நூற்றாண்டின் அமெரிக்கச் சிறுவர்களின் பொம்மையாகப் பெயரெடுத்து விட்டது ஃபிட்ஜெட் ஸ்பின்னர். ஒரு சோடாப்புட்டியின் மூடியைத் தட்டையாக ஒரு நாணயம் போலத் தட்டி, அதன் நடுவில் அருகருகே இரு துளையிட்டு, அவற்றின் வழியே நூலைச் செலுத்தி முடி போட்டு, இருகைகளின் இரண்டு விரல்களினால் பிடித்து சுழற்றிவிட்டு, விரல்களை அசைத்து அசைத்து அந்த வில்லையை நூலில் சுழலவிட்டு சிறு வயதில் அதைக் கண்டு மெய்மறந்து விளையாடியவர்கள் இந்தப் பொம்மையை வாங்கி, அதன் முனைகளில் ஒன்றைச் சுண்டிவிட்டு சுழற்றி மகிழலாம்.

170502-catherine-hettinger-fidget-spinners

தற்பொழுது 60 வயதுகளில் இருக்கும் ‘கேத்தரின் ஹெட்டிங்கர்’ (Catherine Hettinger) என்ற பெண்மணி, சுமார் ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்னர் (1993 ஆம் ஆண்டின்) கோடைக்காலத்தில் உடல்நலக் குறைவுடன் இருந்த பொழுது, ஓய்வில் இருந்தவாறே தனது 7 வயது மகளுடன் விளையாட ஃபிட்ஜெட் ஸ்பின்னர் பொம்மையை வடிவமைத்து அவளுடன் விளையாடியதாக கார்டியன் பத்திரிக்கைக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு செவ்வியில், தமது இஸ்ரேல் பயணத்தின் பொழுது, இஸ்ரேலில் பாலஸ்தீனிய சிறுவர்கள் வன்முறை நோக்கோடு இஸ்ரேலியக் காவல்துறையினர் மீது கல்லெறிவதைக் கண்டதாகவும், அவர்கள் வன்முறையில் இறங்குவதைத் தடுத்துத் திசை திருப்பும் நோக்கில், அவர்களுக்கு அமைதி வழியில் விளையாட ஃபிட்ஜெட் ஸ்பின்னரை உருவாக்கியதாக மற்றொரு பத்திரிக்கையிலும் குறிப்பிட்டுள்ளார். இவர் வடிவமைத்த ஃபிட்ஜெட் ஸ்பின்னரின் முதல் வடிவம் இன்றைய ஃபிட்ஜெட் ஸ்பின்னரின் வடிவத்தில் இருந்து சற்று மாறுபட்டது (காண்க: http://classicspinner.com/).பிறகு அதற்கு 1997 இல் அவர் காப்புரிமையையும் பெற்றார். அந்தக் காப்புரிமை 2005 ஆம் ஆண்டு காலாவதியானது. அதனைப் புதுப்பிக்க $400 நிதி வசதி இல்லாததால் புதுப்பிக்கும் எண்ணத்தைக் கைவிட்டார். ஏனெனில் அந்தப் பொம்மையை சிறு அளவில் விற்பனைக்கு எடுத்துச் சென்றதில் கேத்தரின் ஹெட்டிங்கருக்குப் பெரிய அளவில் எந்த வருமானமும் வந்திருக்கவில்லை. ஹாஸ்பாரோ (Hasbro) போன்ற மிகப் பெரிய பொம்மை தயாரிக்கும் நிறுவனங்களை கேத்தரின் ஹெட்டிங்கர் அணுகிய பொழுது அவையும் இந்தப் பொம்மையை தங்கள் விற்பனைக்கென்று ஏற்றுக் கொள்ளவில்லை.

Siragu Fidget Spinner3

இப்பொழுது இந்தப் பொம்மை மிகப் பிரபலமாகி விற்கும் பொழுதும் அதனால் கேத்தரின் ஹெட்டிங்கருக்கு வருமானம் என்ற வகையில் எந்தப் பலனுமில்லை. இன்று அவர் வளரும் பிள்ளைகள் வம்பு தும்புகளில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, ஃபிட்ஜெட் ஸ்பின்னர் பொம்மை விளையாடுவதில் கவனத்தைத் திருப்ப பரப்புரை செய்து வருகிறார் (https://www.kickstarter.com/projects/638415231/classic-fidget-spinner-spinning-de-stressor-finger). குறைந்த விலையுள்ள பொம்மை, எளிதில் எங்கும் எடுத்துச் செல்லலாம் என்பதுமே இந்தப் பொம்மையின் பரவலுக்குக் காரணமாகிவிட்டது. பெரும்பாலான சிறுவர்கள் பெற்றோர் தங்களுக்குத் தரும் பாக்கெட் மணியிலேயே வாங்கி விடுகிறார்கள். ஹாஸ்பாரோ நிறுவனமும் இப்பொழுது இதன் தயாரிப்பில் இறங்கிவிட்டது என்பது என்னவோ உண்மை. ஃபிட்ஜெட் ஸ்பின்னரை யாரும் எளிதில் உருவாக்கலாம். எவ்வாறு தயாரிப்பது என்று யூடியூப் விளக்கக் காணொளிகளும் பல கிடைக்கின்றன. அதே போல எப்படி வித்தைகள் காட்டி விளையாடுவது என்ற காணொளிகளுக்கும் யூடியூப்பில் பஞ்சமில்லை.

காப்புரிமை என்ற தடை இல்லை, தயாரிக்கக் குறைந்த செலவு, அதிக முதலீடு தேவையில்லை என்ற வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி, சீனத் தொழிற்சாலைகள் கோடிக்கணக்கில் இவற்றைத் தயாரித்து அமெரிக்க மக்களுக்கு விற்பனை செய்து இதில் நல்ல வருவாய் பார்த்துள்ளன. எந்த ஒரு சிறிய பிளாஸ்டிக் தொழிற்சாலையும் ஒரே நாளில் 10,000 ஃபிட்ஜெட் ஸ்பின்னர் வரை தயாரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஒரு ஃபிட்ஜெட் ஸ்பின்னர் தயாரிக்க ஆகும் அடக்கவிலை 25 சென்ட்ஸ். ஏற்றுமதி, இறக்குமதி, மொத்தவிலை வணிகர், சில்லறைவிலை வணிகர் என வியாபாரிகளைக் கடந்து நுகர்வோர் கைக்கு வரும்பொழுது ஒரு சில டாலர்கள் அளவில் ஃபிட்ஜெட் ஸ்பின்னரின் விலை ஏறிவிடுகிறது. சில்லறை வியாபாரிக்கு ஒரு ஃபிட்ஜெட் ஸ்பின்னர் விற்பதில் சுமார் 6 டாலர் வரை லாபம் கிடைக்கிறது. கைபேசி உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் சீனத் தொழிற்சாலைகள் தங்களுடைய மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் வழியாகவே இவற்றை எளிதில் விற்றுவிடுகின்றன. கைபேசி உதிரிப்பாகங்கள் விற்போர் ஃபிட்ஜெட் ஸ்பின்னர் சில்லறை வியாபாரிகளாகவும் உருவெடுத்து, கைபேசி உதிரிப்பாகங்கள் விற்பதைவிட ஃபிட்ஜெட் ஸ்பின்னர் விற்று அதிக லாபம் பார்த்துள்ளனர். சில பெருவணிக நிறுவனங்கள் விலையில் தள்ளுபடி, இலவசமாகத் தருவது போன்ற விற்பனை உத்திகளுக்கும் இவற்றைப் பயன்படுத்துகின்றன. இப்பொழுது சாதாரண தெருமுக்குப் பெட்டிக்கடை போன்ற ‘செவென் லெவன்’ கடைகளிலும் ஏழெட்டு டாலர்களுக்குக் கிடைக்கும் நிலை வந்துவிட்டது. கடைகளுக்குச் சரக்கு வந்த உடனே விரைவில் விற்றுத் தீர்ந்துவிடும் நிலையும் உள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளிலும் சிறுவர்கள் ஃபிட்ஜெட் ஸ்பின்னர் பொம்மையால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.

Siragu Fidget Spinner6

கவனச்சிதறல் உள்ள சிறுவர்களின் கவனக்குவிப்பிற்கும் அதன் விளைவாகக் கற்றலுக்கும் (concentration and to stimulate learning) உதவும் என்று இந்தப் பொம்மை முதலில் விற்பனைக்கு விளம்பரப்படுத்தப்பட்டது. அதனால் ஏ.டி.ஹெச்.டி (ADHD-Attention-deficit/hyperactivity disorder), ஆட்டிசம் (Autism) குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பதில் உதவும் என்று அவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். கவனக்குறைபாடு இருப்போருக்கும், மனவழுத்தம் கொடுக்கும் நேரத்தில் பதற்றப்படும் இயல்பு உள்ளோருக்கு “ராப்பிட் ஸ்ட்ரெஸ் மேனேஜ்மெண்ட் டெக்னிக் (rapid stress management technique / RSMT) என்ற மனப்பதற்றத்தை விரைவில் கட்டுக்குள் கொண்டுவர உதவும் சிகிச்சை முறையில், ஃபிட்ஜெட் ஸ்பின்னர் அவர்களை அமைதிப்படுத்த உதவும் என்று பரிந்துரைக்கப்டுகிறது. சிலர் சிகிச்சை முறையில் பயன்படுத்தினாலும், இதுவரை ஃபிட்ஜெட் ஸ்பின்னர் சுழற்றுவதால் கவனச்சிதறல் குறையும், கற்பதில் உதவும் என்ற விளம்பர அறிவிப்புகள் ஆய்வுகள் வழியாகவோ, மருத்துவர்களாலோ உறுதிப்படுத்தப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

கவனச் சிதறலுக்கு உட்படும் சிறுவர்கள் ஃபிட்ஜெட் ஸ்பின்னரை பள்ளிகளுக்கு எடுத்தச் சென்று சுழற்றிக் கொண்டிருக்க, அவர்களின் நண்பர்களும் ஆர்வம் கொண்டு அவர்களும் வாங்கி விளையாடத் தொடங்க, அனைத்துப் பள்ளி மாணவர்களும் ஆளுக்குக் குறைந்தது ஒன்றாவது வைத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. யாருடையது அதிக நேரம் சுழல்கிறது என்று அவர்களுக்குள் போட்டி விளையாட்டுகளும் விளையாடப்படுகின்றன. இளவேனில் விடுப்பு (spring break) முடிந்து பள்ளி துவங்கிய பொழுது, திடீரெனத் தோன்றி வேகமாகப் பரவியிருந்த ஃபிட்ஜெட் ஸ்பின்னரால் ஆசிரியர்கள் வியப்புக்குள்ளானார்கள். வகுப்பில் மாணவர்கள் அதில் அதிக ஆர்வம் செலுத்தியதில் கல்வியில் நாட்டம் குறைந்தது. கற்றலுக்கு இடையூறு செய்யும் இந்த பொம்மையை இனி பள்ளிக்குக் கொண்டுவரக் கூடாது என சில பள்ளிகளும் தடை செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எந்தவகையில் கற்பதற்கு கவனத்தைக் குவிக்க உதவும் என்று விளம்பரப்படுத்தப்பட்டதோ, அதற்கு மாறான விளைவுகளை ஃபிட்ஜெட் ஸ்பின்னர் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மூன்றில் ஒரு உயர்நிலைப்பள்ளியில் இப்பொழுது தடைசெய்யப்பட்ட பொம்மை என்ற நிலையை ஃபிட்ஜெட் ஸ்பின்னர் எட்டியுள்ளது.

Siragu Fidget Spinner7

ஒரு சில பள்ளிகள் மாறுபட்ட கோணத்தில் அணுகி, ஃபிட்ஜெட் ஸ்பின்னரை கல்விக்கு உதவும் கருவியாக்கி எவ்வாறு பாடத்திட்டத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் திட்டங்கள் வகுத்துள்ளன. ஃபிட்ஜெட் ஸ்பின்னரின் மையத்தில் “தாங்கு உருளைகள் மற்றும் எடைகள்” (bearings and weights/Ball Bearing – especially R188 Open Ball Bearing) கொண்ட பகுதி அமைக்கப்பட்டு, உலோகப் பந்துகள் உராய்வு இன்றி உருளுவதன் மூலம் சுழல்வதுதான் ஃபிட்ஜெட் ஸ்பின்னர் செயல்படுவதன் அடிப்படை. மூன்று முனைகள் உள்ள ஃபிட்ஜெட் ஸ்பின்னர் சுழல்வது ஒரு சிறிய மின்விசிறி சுழல்வது போன்ற தோற்றமளிக்கும். ஃபிட்ஜெட் ஸ்பின்னர் எவ்வாறு செயல்படுகிறது, எவ்வளவு நேரம் சுழலும் போன்ற தரவுகள் சேகரிப்பது, கணித சூத்திரங்களை இதற்குப் பயன்படுத்துவது என்ற வழியிலும், ஃபிட்ஜெட் ஸ்பின்னர் செயல்படுவதன் இயற்பியல் அடிப்படை, நியூட்டனின் விதிகளின் விளக்கம் என ஃபிட்ஜெட் ஸ்பின்னரை சுழற்றுவதையே பாடமாக்கியும் வருகின்றன இப்பள்ளிகள்.

Fidget Spinner

ஃபிட்ஜெட் ஸ்பின்னர் குறித்து பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், உளவியல் மருத்துவர்கள், செய்தியாளர்கள் எனப் பலரும் பல கோணத்தில் ஃபிட்ஜெட் ஸ்பின்னரை ஆதரித்தும், விமர்சித்தும் தங்கள் கருத்துகளை எழுதி வருகின்றனர். ஃபிட்ஜெட் ஸ்பின்னர் சுழற்றுவதின் பயன் என்ன எனப் பலவித கருத்துக்களும் வந்துள்ளன. பெரியவர்கள் சிலர் ஃபிட்ஜெட் ஸ்பின்னரைச் சுழற்றி அதனைப் பார்த்துக் கொண்டிருப்பது கவனத்தைக் குவிக்க உதவுகின்றது, சிந்தனை செய்ய உதவுகின்றது, மன உளைச்சலைக் குறைக்கிறது, மன அழுத்தத்தை நீக்குகிறது, அமைதிப்படுத்துகிறது, கைபேசிக்கு அடிமையான என்னை அந்தப் போதையில் இருந்து மீட்டிருக்கிறது என விதவிதமாகக் கருத்துகளைத் தெரிவித்துக் கொண்டிருந்தாலும், குழந்தைகள் என்னவோ ஃபிட்ஜெட் ஸ்பின்னரைச் சுழற்றி அதை வேடிக்கைப் பார்த்து மகிழ்ந்து கொண்டு மட்டுமே இருக்கிறார்கள். இணையத்தில் ஃபிட்ஜெட் ஸ்பின்னரை சுழற்றி விளையாட விரும்புபவர்கள் எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் தளத்தில் (MIT Media Lab Project https://scratch.mit.edu/projects/148408547/) விளையாடி மகிழலாம்.                                _____________________________________________________________________________

உதவிய கட்டுரைகள்:-

கல்வி:

* One Salisbury school embraces the fidget spinner, while a few schools are banning the toy

http://www.wmdt.com/news/maryland/one-salisbury-school-embraces-the-fidget-spinner-while-a-few-schools-are-banning-the-toy/491557548

** Want to Know How Long a Fidget Spinner Spins? Get a Laser and Some Physics

https://www.wired.com/2017/05/the-phyiscs-of-fidget-spinners/

*** How Fidget Spinners Work: It’s All About the Physics

http://www.livescience.com/58963-how-fidget-spinners-work-physics.html

மருத்துவம்:

Fidget toys: Effective tools or classroom distractions?

http://www.ajc.com/lifestyles/fidget-toys-effective-tools-classroom-distractions/i4FB0QtMsMA6e9L0YY8zrN/

Can Fidget Spinners Really Help Anxiety and ADHD? An Expert Weighs In

http://www.health.com/adult-adhd/fidget-spinners-anxiety-adhd-autism

Fidget Spinner won’t ruin your child’s health or education

http://honey.nine.com.au/2017/05/10/13/26/fidget-spinners-health-or-education#GDWT6KbYrx2Vixxx.99

Nashville child psychologist says fidget spinners shouldn’t be written-off

http://fox17.com/news/local/nashville-child-psychologist-says-fidget-spinners-shouldnt-be-written-off

My Fidget Spinner Is Helping Break My Smartphone Addiction

http://time.com/4770412/what-are-fidget-spinners/

பொது:

Fidget Spinners Are The Must-Have Office Toy For 2017

https://www.forbes.com/sites/jplafke/2016/12/23/fidget-spinners-are-the-must-have-office-toy-for-2017/#482bdc3318a4

What are fidget spinners? Is hot new toy dangerous, or helpful to kids?

http://www.syracuse.com/entertainment/index.ssf/2017/05/fidget_spinners_dangerous_toy_helpful.html


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அமெரிக்கச் சிறுவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஃபிட்ஜெட் ஸ்பின்னர்”

அதிகம் படித்தது