டிசம்பர் 7, 2019 இதழ்
தமிழ் வார இதழ்

அமெரிக்கத் தேர்தல் கூத்து

விவேக் கணேசன்

Nov 5, 2016

siragu-american-election1

ஈராண்டுகளுக்கு முன் இந்தத்தேர்தல் கூத்து துவங்கியது. சனநாயக்கட்சி (டெமோகிரேட்), குடியரசுக்கட்சி (ரிபப்லிகன்) கட்சிகளுக்குள் குடியரசுத்தலைவர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கும் கூத்து துவங்கியது. சனநாயக்கட்சிக்குள் ஹில்லரி கிளிண்டனும், பெர்னி சாண்டர்சும் போட்டியிட்டனர். ரிபப்லிகன் கட்சிக்குள் பலர் போட்டியிட்டனர். அதில் முடிவில் டொனல்டு டிரம்பும், ஹில்லரி கிளிண்டனும் வென்று இன்று வேட்பாளர்களாக நிற்கின்றனர். இந்த வாரம் செவ்வாய் கிழமையன்று குடியரசுத் தேர்தல் நடைபெறவுள்ளது. யார் வெல்வார்கள் என்று தேர்தல் கணிப்பாளர்கள் அவரவர் கொள்கைப்படி கூறிவருகின்றனர். இனி வேட்பாளர்கள் குறித்து பார்ப்போம்.

siragu-american-election2

டொனல்டு டிரம்பு: இவர் ரிபப்லிகன் கட்சியின் வேட்பாளராக வெல்வார் என்பதை அக்கட்சியினரே ஓராண்டிற்குமுன் கனவு கூட கண்டிருக்கமாட்டார்கள். ஆனால் இவரை எதிர்த்து நின்றவர் அனைவரும் கோமாளிகளாக நடந்து கொண்டதாலும், அரசியல் முதிர்ச்சியேதுமில்லாததாலும் தோற்றனர். டிரம்பு கட்சியினரின் கோபத்தைப்புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் நடந்து கொண்டது அவரது வெற்றிக்கு வழிவகுத்தது. டிரம்பு ஒரு பொழுதுபோக்காளர், தொலைக்காட்சியில் நடந்து கொண்டது போலவே இந்தத்தேர்தலையும் பாவித்து வருகிறார். இந்தப்போக்கு வலதுசாரி கட்சியான ரிபப்லிகன் தொண்டர்களுக்கு பிடித்து விட்டது. இதற்கு அக்கட்சிக்குள்ளேயே பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்தது ஒரு பெரும்காரணம். இவரது பேச்சு படித்தவர்களை கோபம் கொள்ளவைத்தாலும், உழைக்கும் வெள்ளையர்களை ஈர்த்தது. மெக்சிக்கோவிற்கும் அமெரிக்காவிற்கும் எல்லைச்சுவர் எழுப்புவேன், அந்தச்செலவையும் மெக்சிகோவையே ஏற்க வைப்பேன், வெள்ளையர்கள் அல்லாதவரை, குறிப்பாக இசுலாமியரை அமெரிக்காவிற்குள் விட மாட்டேன், இழந்த வேலை வாய்ப்புகளை மீண்டும் அமெரிக்காவிற்குக் கொண்டுவருவேன், நாடுகளுக்குள் கையெழுத்தான ஒப்பந்தங்களை நீக்குவேன், தீவிரவாத இயக்கங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவேன் என்கிற தீவிர திரைப்பட வசனங்கள் ரிபப்லிகன் கட்சியின் தீவிர தொண்டர்களைக் கவர்ந்ததால் இன்று இவர் வேட்பாளராக நிற்கிறார்.

டிரம்பு அவமானப்படுத்தாத நபர் எவருமில்லை என்றே கூறலாம். இவரது கட்சியின் தலைவர்களை வாய்க்கு வந்த மாதிரி திட்டுவதும், கிண்டலடிப்பதும் கட்சியின் மீது கோபம் கொண்டிருக்கும் தொண்டர்களை ஈர்த்துள்ளது. பெண்களை கிண்டலிடிப்பதும், அவமானப்படுத்துவதும், கேவலமான சொற்களால் ஏசுவதும் இவருக்கு கரும்பு தின்பது போல். இந்த செயல்களே இவருக்கு ஆப்பு வைக்கும் என்று தேர்தல் அரசியல் வல்லுநர்கள் நம்புகின்றனர். மேலும் இவர் தனது வருமான வரி ஆவணங்களை வெளியிடமாட்டேன் என்பது, இவர் மேல் ஐயம்கொள்ள வைக்கிறது. இதுவரை எந்த வேட்பாளரும் தங்களது வருமானத்தை வெளியிடாமல் இருந்ததில்லை. அனைத்து ஊடகங்களும், அரசியல் விமர்சகர்களும் இவர் தோற்பது உறுதி என்று எழுதி வருகின்றனர்.

siragu-american-election3

ஹில்லரி கிளிண்டன்: டிரம்பின் மீது நடுநிலையிலுள்ள வாக்காளர்கள் கோபத்திலிருந்தாலும், கிளிண்டன் நிச்சயமாக வெல்லுவார் என்று எவராலும் கூற இயலவில்லை. கிளிண்டன் குடும்பத்தின் மீதிருக்கும் ஐயம், ஊழல் குற்றச்சாட்டுகள் போன்றவை இதற்குக்காரணம். 2008-ல் நடந்த தேர்தலில் ஹில்லரியை எதிர்த்து நின்றவர் பராக் ஹுசைன் ஒபாமா. இவர் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர், இவரது தந்தை ஒரு இசுலாமியர், எவ்வித பலமுமில்லாதவர். இவரிடமே ஹில்லரி தோற்றார். இப்பொழுது மிகவும் பலவீனமான டிரம்பிடமும் இவர் தோற்க வாய்ப்புள்ளதைக் கண்டாலே இவரது நிலை நன்கு விளங்கும். முன்னாள் குடியரசுத் தலைவர் பில் கிளிண்டனின் அறக்கட்டளைக்கு வந்த நன்கொடைகள் குறித்த சர்ச்சைகள் தினமும் வந்துகொண்டிருக்கின்றன. அண்மையில் கூட கத்தார் நாட்டிலிருந்த ஒரு மில்லியன் டாலர் நன்கொடை, ஹில்லரி வெளியுறவுத்துறைச் செயலராக இருந்த போது வந்திருக்கிறது என்பது தெரிந்தது. அதை வெளியில் இதுவரை அவர் கூறவில்லை. இது போல் எந்தெந்த நாட்டிலிருந்து பணம் வந்தது என்பது அறியாத புதிர். கிளிண்டனின் மீதிருக்கும் மற்றொரு குற்றச்சாட்டு அவர் நிதி நிறுவனங்களுடன் நெருக்கமாக இருக்கிறாரென்பது. இவர் வங்கிகளுக்கு ஆதரவாக இருப்பார் என்கிற ஐயம் டெமோகிராட் கட்சியினருக்கே இருக்கிறது. மேலும் இவரின் போர் ஆதரவும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஈரான் நாட்டின்மீது இவருக்கு இருக்கும் கோபம் போராக மாறுவதற்கு வாய்ப்புள்ளது.

கடந்த முறை பில் கிளிண்டன் அதிபராக இருந்தபோது சனநாயக்கட்சியை வலதுபக்கம் எடுத்துச் சென்றவர். ரிபப்லிகன் கட்சியினர் கனவில் கூட நினைக்காத வலதுசாரி கொள்கைகளை இவர் தனது ஆட்சியின் போது நிறைவேற்றியிருக்கிறார். Welfare reform, Criminal Justice reform, bank de-regulation போன்றவைகள் புஷ், ரீகனாலும் நிறைவேற்ற முடியாதது, கிளிண்டன் ஆட்சியில் நிறைவேறியது. முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு இந்தப்போக்கு வெகுவளவில் கோபத்தைக் கொடுத்தது. அது போலவே ஹில்லரியும் கட்சியை மேலும் வலது பக்கம் எடுத்துச் சென்றுவிடுவார் என்கிற அச்சமிருப்பதால் இவருக்கு ஆதரவு பெருமளவிலில்லை. டிரம்பிடமே இப்படி தடுமாறுவது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்திருக்கிறது. பெர்னி சாண்டர்சு வென்றிருந்தால் இந்த அச்சமிருந்திருக்காது என்றும் கட்சியினர் நம்புகின்றனர். கிளிண்டனின் அதிர்ஷ்டம் டிரம்பு குடியரசுக் கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது. டிரம்பைத் தவிர வேறு எவராவது வென்றிருந்தால் கிளிண்டன் தோற்பது நிச்சயமாக்கப்பட்டிருக்கும். டிரம்பின் ஆபாசப்பேச்சினாலும், சனநாயகத்தையே ஒரு கேலிக்கூத்தாக்கியிருப்பதும் ஹில்லரிக்கும் ஒரு நல்வாய்ப்பை அளித்துள்ளது.

ஹில்லரியின் மீது பல ஐயங்கள் இருந்தாலும் சிறிய நம்பிக்கையிருக்கத்தான் செய்கிறது. இவர் புவிவெப்பமாதைத்தடுக்க முயற்சிகள் எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார். உழைக்கும் தொழிலாளர்கள் என்றுமே சனநாயக்கட்சிக்கு ஆதரவாளர்கள் எனவே இவர் தொழிலாளிகளுக்கும், குழந்தைகள், பெண்கள் நலனுக்கும் ஆதரவாக இருப்பார் என்று நம்புவோம். மத்திய கிழக்கு நாடுகளில் பல்லாண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் போரை முடிவுக்குக்கொண்டுவர மக்கள் நெருக்கடி கொடுப்பார்கள் என்றும் நம்புவோம். சிரியாவில் நடைபெறும் மனித இனத்திற்கு எதிரான வன்முறை முடிவுக்குக்கொண்டுவருவார் என்றும் நம்புவோம்.

இறுதியாக ஈழத்தமிழர்களுக்கு ஹில்லரி கிளிண்டன் ஆதவாக சில முடிவுகளை எடுப்பார் என்று அமெரிக்கத் தமிழர்கள் பலர் நம்புகின்றனர். 2000 ம் ஆண்டு நடந்த தேர்தலில் இவர் கூறிய சில சொற்கள் நம்பிக்கையை நமக்கு அளித்துள்ளது. தமிழர்களும் பெருமளவில் இவரை ஆதரித்து வருவது உதவும் என்றும் நம்புவோம். புலம் பெயர்ந்த தமிழர்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி தமிழர்களுக்கு ஆதரவான செயல்களை அமெரிக்க அரசை எடுக்க நெருக்கடி கொடுக்க வேண்டும். இளைஞர்கள் பலர் அரசியலில் ஈடுபட்டு மெல்ல மெல்ல அமெரிக்க அரசை நமக்கு ஆதரவாகக் கொண்டுவரவும் முயலவேண்டும்.


விவேக் கணேசன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அமெரிக்கத் தேர்தல் கூத்து”

அதிகம் படித்தது