அமெரிக்காவின் வரலாறு புரட்சிகளால் எழுதப்படுகிறது
தேமொழிJul 4, 2020
அமெரிக்கா புரட்சி செய்து மூன்றாம் ஜார்ஜ் மன்னார் ஆட்சியின் கீழ் இருந்த இங்கிலாந்திலிருந்து விடுதலை பெற்ற நாடாகத் தன்னை அறிவித்துக் கொண்ட நாள் ஜூலை 4, 1776 நாள். அன்று இங்கிலாந்தின் காலனி ஆட்சிமுறை அமெரிக்க மண்ணில் மறைந்தது, இந்த ஜூலை 4, 2020 அன்று 244 ஆண்டுகள் நிறைவுற்று 245 இல் அடி எடுத்து வைக்கிறது அமெரிக்கா. இங்கிலாந்தின் ஆட்சிக்கு உட்பட்டவையாக அமெரிக்காவிலிருந்த 13 மாநிலங்களும் இணைந்து கூட்டாட்சி முறையில் தனி நாடாக உருவெடுத்தது. இன்றும் அமெரிக்க அரசின் அடிப்படை மாநிலங்களின் கூட்டாட்சி அமைப்பு தான்.
வரலாற்றில் பல திருப்பங்களைக் கடந்து வந்துள்ளது அமெரிக்கா. அமெரிக்கக் கண்டத்தின் கிழக்குக் கரையிலிருந்த வெறும் 13 மாநிலங்கள் என்பதில் துவங்கி, பிரான்ஸ் நாட்டின் ஆளுமைக்கு உட்பட்டிருந்த பகுதியை விலைக்கு வாங்கியது, ரஷ்யாவிடம் இருந்து அலாஸ்கா பகுதியை வாங்கியது, ஸ்பெயின் நாட்டுடன் ஏற்பட்ட போரில் கிடைத்தது என நாட்டை விரிவாக்கி உலகை ஆட்டிப் படைக்கும் வல்லரசாக அணு ஆயுதங்கள், அறிவியல் வளர்ச்சி என்று உச்சத்தைத் தொட்ட அமெரிக்காவின் வரலாற்றில் இது போன்ற ஒரு முடக்கப்பட்ட நிலையில் விடுதலை நாளைக் கொண்டாடுவது இதுவே முதல் முறை. சற்றொப்ப ஒரு 250 ஆண்டுகளில் மக்களின் மனநிலையும் கூட மாறிவிட்டிருக்கிறது.
அண்மையில் மினசோட்டாவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிலாய்ட் என்பவர் கைது செய்யப்பட்ட பொழுது, உயிருக்குப் போராடிய அவரை இரக்கமின்றி காவல்துறையினர் கொலை செய்த காட்சி படமாக சமூகவலைத்தளங்கள் மூலம் பரவி உலகம் முழுவதுமே அதிர்ந்தது. உள்நாட்டில் அமெரிக்க மக்கள் பலவகையில் தெருவில் இறங்கிப் போராடினர். ஜார்ஜ் ஃபிலாய்ட் காணொளியைக் கண்ட பிறகு இது கொரோனா தொற்று காலம் என்பதற்கோ, அதற்கான நாடு தழுவிய பொதுமுடக்கம் என்பதற்கோ மக்கள் மத்தியில் மதிப்பில்லாது போனது.
அமெரிக்காவின் 21 ஆம் நூற்றாண்டு இளைய தலைமுறையினர் பலர் இனவாதக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்கள். குறிப்பாக மில்லினியல்ஸ் (Millennials) மற்றும் போஸ்ட்-மில்லினியல்ஸ் (Post-Millennials) என்று அழைக்கப்படும், பிரிவினர்1980களிலும், 1990களிலும் பிறந்து இன்று வாக்களிக்கக் கூடிய வயதை எட்டியவரிலிருந்து 40 வயதுக்கும் குறைவானவர்கள் இவர்கள். இவர்கள் மத்தியில் இனவாத சிந்தனை பெரிதும் எடுபடாத நிலையில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒபாமாவும் அமெரிக்க அதிபர் ஆகும் நிலை உருவாகியிருந்தது. இவர்கள் காலத்தில் நடைபெறும் இனவாத குற்றங்கள் கைபேசி வழியே படங்களாக எடுத்து விரைவாகப் பகிரப்பட்டு இனவாதத்தை எதிர்க்கும் போராட்டங்களாகத் தொடங்கிவிடுகிறது.
இந்த இளைய தலைமுறையின் காலத்தில் இனவாதத்தின் அடிப்படையில் உள்ள ஒவ்வொரு அமெரிக்க வரலாற்றுச் சின்னமும் போராட்டம் மூலம் நீக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. பழங்குடியினர் உரிமையை மதிக்காத கொலம்பஸ் சிலை முதற்கொண்டு பல வரலாற்றுப் பிரபலங்கள் சிலைகளும் இவற்றில் அடக்கம். கொலம்பஸ் நாள் அமெரிக்காவில் கொண்டாடுவதைப் பலர் கைவிட்டுவிட்டனர். தலைவர்கள் தவிர்த்து இனவாதத்தைக் குறிக்கும் சின்னங்களும் கொடிகளும் நீக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. அவற்றில் ஒன்று ‘கன்ஃபெடரேட் கொடி. இந்தக் கொடி அமெரிக்காவின் தென்மாநிலங்களில் அரசு கட்டிடங்களில் அதிகாரப்பூர்வமாக இடம் பெற்று வந்தது. இனி வரும் தலைமுறை இது குறித்து வரலாற்றுப் பாடமாக மட்டுமே அறிய முடியும்.
அமரிக்கா விடுதலை பெற்ற நூறாண்டுகளுக்குள், அதிபர் லிங்கன் காலத்தில் மனித நேய அடிப்படையிலான ஒரு முதல் மாற்றம் உள்நாட்டுப் போராக (1861-1865) வெடித்தது. அப்பொழுது அமெரிக்க நாடு 34 மாநிலங்களாக விரிவாகிவிட்டிருந்தது. தென் மாநிலங்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தைக் கொண்டவையாக இருந்தன. இன்றும் இதில் மாற்றமில்லை. அவர்களின் வயல்வெளிகளிலும் தோட்டங்களிலும் வேலை செய்யக் குறைந்த ஊதியத்தில் வேலையாட்கள் தேவைப்பட்டனர். அதனால் அதனை கறுப்பின மக்களை அடிமைப்படுத்தி நிலவுடைமை கொண்டிருந்த வெள்ளையின மக்கள் தங்களை வளர்த்துக் கொண்டனர் (இன்று மெக்சிகோ நாட்டிலிருந்து பிழைப்புத் தேடி வருபவர்கள் இத்தேவையைக் குறைந்த ஊதியத்தில் செய்து தீர்க்கிறார்கள்).
பெரும்பாலும் தொழிற்புரட்சிக்குப் பின் தொழிற்சாலை இயந்திரங்கள், மேலும் பல வேறுபட்ட பொருளாதார முயற்சியில் இயங்கி வந்த வடமாநில மக்களுக்குத் தென்மாநிலங்களின் மனிதரை மனிதர் அடிமைகளாக, தங்கள் உடைமைகளாக நடத்தும் முறை ஏற்புடையதாக இருக்கவில்லை, அவர்கள் எதிர்த்தனர். இரு பிரிவுகளும் மோதிக் கொண்டனர். அதிபர் லிங்கன் ஆட்சிக்கு வந்த ஒரு மாதம் கழித்துப் போர் துவங்கியது. ‘கன்ஃபெடரேட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா’ (Confederate States of America) என்ற அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பாகத் தென்மாநிலங்கள் இணைந்து, ஐக்கிய அமெரிக்க நாட்டின் வட மாநிலங்களுடன் போரில் ஈடுபட்டது.
இந்த உள்நாட்டுப் போரில் அடிமை முறையை ஆதரித்த தென் மாநிலங்களின் கூட்டமைப்பின் போரை ஜெஃபர்சன் டேவிஸ், ராபர்ட் ஈ. லீ. போன்ற தலைவர்கள் முன்னெடுத்துச் சென்றார்கள். தென் மாநிலங்களால் அன்புடன் போற்றப்படும் வரலாற்று நாயகர்கள் அவர்கள். இந்தக் கூட்டமைப்பு தங்களுக்கென ஒரு கொடியையும் உருவாக்கினர் அது ‘கன்ஃபெடரேட் கொடி’ என அழைக்கப்படுகிறது. சிவப்பு நிறக் கொடியில் குறுக்காக ஒரு பெரிய நீல நிற x வடிவமும், நடுவில் ஒரு வெள்ளை நட்சத்திரமும், நடுவிலிருந்து பிரியும் ஒவ்வொரு கோட்டிலும் 3 வெள்ளை நட்சத்திரங்கள் என 13 நட்சத்திரங்கள் கொண்டது கன்ஃபெடரேட் கொடியின் அமைப்பு. அடிமை முறையை ஆதரித்த காரணத்தால் இது இனவாதத்தின், வெள்ளையின மேட்டிமை மனப்பான்மையின் வெளிப்பாடாகவும் உணரப்பட்டு பெரும்பாலோரால் வெறுக்கப்படும் அடையாளம். இருப்பினும், இன்றும் ஒரு சிலர் இதனைப் பெருமைக்குரிய வரலாற்றுச் சின்னமாகக் கருதுவதுண்டு. அந்தப் போரின் உள்நோக்கம் மனிதநேயமற்றது என்ற அடிப்படையில் கன்ஃபெடரேட் முத்திரை இனி நீக்கப்படவேண்டும், அது அமெரிக்காவின் பெருமைக்குரிய வரலாறு அல்ல என்பதை உணர்வோர் மாற்றத்தை எதிர்பார்ப்பர்.
அமெரிக்க மாநிலங்களுக்கு எனத் தனிக் கொடிகள் உண்டு. தென் மாநிலங்கள் கொடிகளில் சில கன்ஃபெடரேட் கொடி வடிவமைப்பை உள்ளடக்கியதாக இருந்தன. மிசிசிப்பி மாநிலக் கொடியும் அவற்றில் ஒன்று. ஜார்ஜ் ஃபிலாய்ட் மரணத்திற்குப் பின்னர் ஏற்பட்ட இனவாத விழிப்புணர்வு போராட்டத்தில் மிசிசிப்பி மாநில 126 ஆண்டு வரலாற்றுச் சின்னமாக அறியப்பட்ட கன்ஃபெடரேட் கொடி அதன் மதிப்பிழந்தது. ஹவுஸ் பில் (house bill) 1796 கீழ் சட்டசபை உறுப்பினரிடையே வாக்கெடுப்பு நடத்தியதில் 37 வாக்குகள் கொடியை நீக்குவதற்கும், 14 வாக்குகள் மட்டுமே ஆதரவாகவும் கிடைத்தன. இதன் அடிப்படையில் கொடியை நீக்குவதைச் சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தி ஆளுநர் ஜூன் 29, 2020 அன்று கையெழுத்திட்டார். அன்றே கொடியும் இறக்கப்பட்டது (காணொளி:https://youtu.be/9FKP-vdO15E). வரும் ஜூலை 13க்குள் மிசிசிப்பி மாநிலத்தின் அனைத்து அரசு கட்டிடங்களிலிருந்தும் மாநிலக் கொடி நீக்கப்படும். அதன் பிறகு மாநிலத்திற்காக மற்றொரு கொடி உருவாக்கப்படும்.
இது போன்ற நடவடிக்கைகளின் தொடக்கம் 2015 ஆண்டு முதலே துவங்கிவிட்டது. அமெரிக்காவில் கருப்பினர் பலர் காவல்துறையின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் உயிர் இழந்த சில நிகழ்வுகள் கொந்தளிப்பை ஏற்படுத்தி வந்த காலத்தில், தென் கரோலினாவின் சார்லஸ்டன் நகரின் தேவாலயம் ஒன்றிலும் ஒரு வெள்ளையின மேலாதிக்க மனப்பான்மை கொண்டவர் துப்பாக்கியால் ஒன்பது கறுப்பின மக்களைக் கொன்று குவித்த பொழுது மக்கள் கொதித்துப் போனார்கள். இனக்கலவரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளை விடத் தொடங்கியது. இந்த சூழ்நிலையில் தென்கரோலினா மாநிலம் ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வை அரங்கேற்றியது.
தென்கரோலினா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ‘நிக்கி ஹேலி‘ (Nikki Haley – Nimrata Nikki Randhawa Haley) அவர்கள் இனி கன்ஃபெடரேட் கொடி தென்கரோலினா அரசின் தலைமையகத்தில் பறக்கக்கூடாது என்று ஜூலை 10, 2015 அன்று சட்ட வரையறை ஒன்றில் கையெழுத்திட்டார். அப்பொழுது துவங்கியது கன்ஃபெடரேட் கொடி இறக்கம். இன்னமும் சில தென் மாநிலக் கொடிகளில் கன்ஃபெடரேட் கொடி முத்திரை ‘நேரடியாக’ அவ்வாறே பயன் படுத்தப் படாமல் x அல்லது நட்சத்திரங்கள் அமைப்பு கன்ஃபெடரேட் கொடியை அடிப்படையாகக் கொண்டு இருக்கத்தான் செய்கிறது. அர்க்கன்சாஸ், அலபாமா, ஃபுளோரிடா, ஜியார்ஜியா ஆகிய மாநிலக் கொடிகளின் முத்திரைகள் கன்ஃபெடரேட் கொடி அமைப்பை உள்வாங்கியவை. அவற்றையும் இனி மாற்றி அமைப்பார்கள் என எதிர் பார்க்கலாம்.
சுதந்திரம் என்ற சிந்தனையில் புரட்சியால் உருவாக்கப்பட்ட அமெரிக்க நாட்டின் இந்த விடுதலை நாள், இனவாத மறுப்பு என்ற மாற்றத்தையும் மனிதநேயத்தையும் போற்றும் காலத்தில் ஒரு புதுத் துவக்கமாக அமைவதில் மகிழ்ச்சி, அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகள்.
தேமொழி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “அமெரிக்காவின் வரலாறு புரட்சிகளால் எழுதப்படுகிறது”