அமெரிக்காவில் தமிழ்த் திருவிழா
ஆச்சாரிJun 28, 2014
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (www.fetna.org) 27வது ஆண்டுவிழா செயிண்ட் லூயிசு நகரில் சூலை 3, 4, 5 & 6 திகதிகளில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. 28 ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து தமிழ்ச் சங்கங்கள் (இலங்கை தமிழ்ச் சங்கம், வாசிங்டன் தமிழ்ச் சங்கம், டெலவர் பெருநகரத் தமிழ்ச் சங்கம், நியூ யார்க் தமிழ்ச் சங்கம் & ஹேரிஸ்பர்க் தமிழ்ச் சங்கம்) இணைந்து பேரவையைத் துவக்கி அதன் முதல் ஆண்டு விழாவை பிலடெல்பியா நகரில் நடத்தியது. அன்று முதல் அமெரிக்க நாடு விடுதலை அடைந்த சூலை 4 வாரக்கடைசியில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (பெட்னா) தமிழ் விழா எடுத்து வருகிறது. சிறிதாகத் துவங்கிய அந்த மாநாடுகள் இன்று ஈராயிரத்திற்கும் மேலான வட அமெரிக்கத் தமிழர்களை ஒருங்கிணைத்து வருகிறது. பேரவையின் குடைக்குள் 40-க்கும் மேலான தமிழ்ச் சங்கங்கள் உறுப்பினராகவுள்ளன. ஒவ்வொரு விழாவையும் ஒரு உறுப்பினர் சங்கம் பொறுப்பெடுத்து எடுத்து தமிழைக் கொண்டாடிவருகிறது. இந்த ஆண்டு (2014) மிசௌரித் தமிழ்ச் சங்கம் இந்த மாநாட்டை சிறப்பாக ஒழுங்கு செய்துள்ளது.
தமிழ் விழாவில் அனைத்து வயதினருக்கும் ஏற்ற நிகழ்ச்சிகள் இருப்பது இதன் பெரும்சிறப்பு. குழந்தைகள் நிகழ்ச்சிகள், இளையோர்கள் நிகழ்ச்சிகளுடன், தமிழகத்திலிருந்தும், இலங்கையிலிருந்தும் பல கலைஞர்கள் மற்றும் விருந்தினர்கள் வந்து கலை நிகழ்ச்சிகளையும், உரைகளையும் தந்து வட அமெரிக்கத் தமிழர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம்.
இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல. தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகள் பல நடைபெறவுள்ளன. அதில் சிறப்பானது என்றால் மின்னசோப்டா தமிழ்ச் சங்கத்தினரின் ‘சிலப்பதிகார தெருக்கூத்து நிகழ்ச்சி’ என்று கூறலாம். பல ஆண்டுகளாக ‘இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சி’ நடைபெற்றுவருகிறது. தரமான இலக்கிய கேள்விகளுக்கு இங்கு வாழும் தமிழர்கள் விடையளிப்பது தமிழகத்திலிருந்து வரும் விருந்தினர்களையே வியப்பளிக்கும். 50-க்கும் மேற்பட்ட நம்மவர்கள் கலந்து கொண்டு மாபெரும் வெற்றியை ஒவ்வொரு ஆண்டும் ஈட்டிவருகிறது இந்த நிகழ்ச்சி. அது மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறையினரை வைத்து தமிழுக்கு, தமிழினத்திற்கும் அவரவரின் தமிழ்ப் பணிகளை எடுத்துரைக்கும் புதிய முயற்சி இந்த ஆண்டு ‘அடுத்த தலைமுறையினரின் தமிழ்ப்பணி’ என்கிற பெயரில் அரங்கேறுகிறது. மேலும் இளம்சிறார்களின் ‘தமிழிசைப் போட்டி’ நிகழ்ச்சியில் புறநானூற்றுப்பாடலில் துவங்கி, இக்காலப் பாடல்வரை இசைக்கவுள்ளார்கள் நம் குழந்தைகள்.
தமிழகத்திலிருந்து பல கலைஞர்கள் வரவுள்ளார்கள். முதல் முறையாக அமெரிக்க மண்ணில் ‘தோல்பாவைக் கூத்து’ நிகழ்ச்சியை வழங்க அம்மாப்பேட்டை திரு.கணேசன் அவர்களும், திரு.ஹரிகிருஷ்ணன் அவர்களும் வருகை தரவுள்ளார்கள். தமிழகத்தின் தொன்மையான கலை வடிவங்களில் ஒன்று தோல்பாவை கூத்து. இதற்கான பொம்மை மிருகங்களின் தோலைக் கொண்டு வடிவமைக்கப் படுகின்றன.பின்புலத்தில் இருந்து ஒளி பாய்ச்சப்பட்டு அதன் பிரதிபலிப்பு முன்னே உள்ள வெள்ளை திரையில் விழுமாறு செய்யப்படுகிறது. இராமாயணத்தில் உள்ள அனுமன் தூது படலம், சூர்ப்பனகை படலம் அல்லது நாயன்மார்களின் வரலாறு என கருவாக எடுத்துக்கொள்ளப்பட்டு மிக சிறப்பாக காட்சிபடுத்தப்படுகிறது .இதை இயக்கும் கலைஞர்களின் குரலும் , குரல் மூலமாய் வெளிப்படும் பாவனைகளும் எள்ளல் மிகுந்த நகைச்சுவையும் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத அனுபவத்தை தருகின்றன.
இந்த ஆண்டு விழாவின் மற்றொரு சிறப்பு ‘தீரன் சின்னமலை’ நாட்டிய நாடகம் செயிண்ட் லூயிசு நகரில் வாழும் தமிழர்களால் அரங்கேற்றப்படுகிறது. இதை நடத்தவுள்ளவர் குரு நாகை பாலகுமார் அவர்கள். திருபுவனம் ஆத்மநாதன் அய்யா அவர்களின் இசையில், கவிமுகில் கோபாலகிருஷ்ணன் அவர்களின் பாடல்கள் இசைக்கவுள்ளன இந்த நாடகத்தில். இந்த நாடகம் கடந்த திசம்பர் திங்களில் சென்னையில் அய்யா ஆத்மநாதன் இசைப்பள்ளியுடன் இணைந்து பேரவை நடத்திய விழாவில் மேடையேற்றப்பட்டது.
கவிஞரும், சமூகப் போராளியுமான முனைவர் குட்டி ரேவதி அவர்களின் தலைமையில் ‘கவியரங்கம்’, மற்றொரு சமூகப் போராளியான மருத்துவர் எழிலன் நாகநாதன் அவர்களின் தலைமையில் ‘விவாதக் களம்’ போன்ற நல்ல நிகழ்ச்சிகளுடன், திரைப்பட நடிகர் திரு.நெப்போலியன் அவர்களும் நடிகை செல்வி திரிஷா அவர்களும் மேடையேறி மகிழ்விக்கவுள்ளனர். டைம்-100 விருது பெற்ற சமூக அக்கரையுள்ள தொழிலதிபர் திரு.முருகானந்தம், எக்ஸ்னோரா திரு.நிர்மல் போன்றோர் உரையாற்றவுள்ளனர். ஹாலிவுட் இயக்குநர் திரு.சுவாமி கந்தன் அவர்களின் திரைப்பட பயிற்சிப் பட்டரை, ஹீலர் பாஸ்கர் அவர்களின் மருத்துவ நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு இளைஞர்கள் புகழ்பெற்ற தொழிலதிபர்களை அழைத்து தொழில் ரீதியான நிகழ்ச்சியொன்றில் அவர்களுக்கு பெட்னா சார்பில் ‘Tamil American Pioneer’ என்கிற விருது அளிக்கவுள்ளார்கள். இது முழுக்க இந்த தலைமுறையினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் இவ்விழாவின் சிறப்பு பொழுது போக்கு, இலக்கிய, இசை போன்ற நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் தமிழ் மொழிச்சிக்கல்களுடன் தமிழினச் சிக்கல் குறித்தும் கருத்தரங்கங்கள் நடைபெறவுள்ளன. உலகத் தமிழ் அமைப்பு (WTO), அமெரிக்கத் தமிழர் அரசியல் செயலவை (USTPAC), நாடுகடந்த தமிழீழ அரசு (TGTE) போன்ற தமிழ் அமைப்புகளின் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
மேலும் கல்லூரி சந்திப்புகள், தமிழ்க்கல்வி குறித்த கருத்தரங்கம், இளைஞர்களுக்கான போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. அனைவரும் குடும்பத்துடன் வந்து இது போன்ற நிகழ்ச்சிகளை ஆதரிப்பது நம் அனைவரின் கடமை. உலகிலே தமிழுக்காக 4 நாட்கள் நடத்தும் விழா பெட்னா விழா மட்டும்தான். எந்த அரசின் உதவியோ, பெரும்நிறுவனங்களின் உதவியோ இல்லாமல் உலகத் தமிழர்களின் ஆதரவில் மட்டும் நடைபெறும் இவ்விழாவிற்கு நீங்கள் அனைவரும் வந்து தமிழைக் கொண்டாட வேண்டுகிறோம்.
மேலும் விவரங்களுக்கு www.fetna2014.org அல்லது www.fetna.org வலைத்தளங்களை பார்க்கவும்.
அடுத்த ஆண்டு 2015 சூலை 2, 3, 4 & 5 நாட்களில் பேரவையின் 28வது ஆண்டுவிழா சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதியில் நடைபெறவுள்ளது. அதன் ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. இவ்விழா சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றத்துடன் இணைந்து நடபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு அனுகவும் www.fetna2015.org என்கிற முகவரியைச் சுட்டவும்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “அமெரிக்காவில் தமிழ்த் திருவிழா”