மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அம்பேத்கரை புறக்கணிப்போம்

தீபக் தமிழ்மணி

Apr 23, 2016

Dr.Ambedkar4ஏப்ரல் 14 அன்று நானும் எனது நண்பனும், இன்னொரு நண்பனைப் பார்க்க சென்றுகொண்டிருந்தோம். நாங்கள் சந்திக்க வேண்டிய நண்பன், முன்கூட்டியே வந்து காத்துக் கொண்டிருந்ததால், சற்று வேகமாகவே சென்று கொண்டிருந்தோம். எங்கள் நேரம், சாலையில் போக்குவரத்து நெரிசல். காரணம் அன்று அம்பேத்கர் பிறந்தநாள் என்பதால் மக்கள் பலர் மாலை அணிவித்துக் கொண்டிருந்தார்கள் இந்த வெயிலிலும். போக்குவரத்துக் காவலர்களின் ஒழுங்குபடுத்துதலால் போக்குவரத்து நெரிசல் அதிக நேரம் நீடிக்கவில்லை.

நான், என் நண்பனிடம் டாக்டர் அம்பேத்கருக்கு இத்தனை பேர் மாலை அணிவிக்க வந்தது மகிழ்ச்சி என்றேன். காலையில் நேரமாக வந்திருந்தால் ஒரு நிமிடமாவது மரியாதை செலுத்தியிருக்கலாம், திட்டமிடாமல் போய்விட்டோம். இப்பொழுது நேரமாகிவிட்டது, எனினும் சந்திக்க வேண்டிய நண்பனை அழைத்து ஒரு ஐந்து நிமிடம் அவகாசம் கேட்கலாமா? என்றேன்.

அதற்கு என் நண்பன், டாக்டர் அம்பேத்கர் சில சட்டம் இயற்றியதைத் தவிர பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. அதுமட்டுமல்லாமல் அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே உழைத்தவர் என்றான்.

நான் எதுவும் பேசவில்லை. சந்திக்க வேண்டிய நண்பனை சந்திக்க ஏற்பட்ட கால தாமதத்திற்கு அம்பேத்கர் மேலேயே பழியைப் போட்டுவிட்டு எங்களை நியாயப்படுத்திவிட்டான். அதைக் கேட்டதும், மற்றொரு நண்பன் ஏதோ அவர் பிறந்தநாளுக்கு விடுமுறை கிடைத்ததே போதும், அதற்கு அம்பேத்கருக்கு நன்றி என்றான்.

இனியும் என்னால் எதுவும் பேசாமல் இருக்க முடியாது. டாக்டர் அம்பேத்கர் மேல் ஏன் இவ்வளவு வெறுப்பு என வெறுப்புடன் கேட்டேன். இருவரும் போட்டி போட்டு காரணங்களை அடுக்கினர். அவற்றுள் முக்கியமானவை.

  1. அவரால்தான் இடஒதுக்கீடு முறை வந்தது. திறமைக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.
  2. அவர் தாழ்த்தப்பட்டோரின் தலைவர்.
  3. அவர் பலநாடுகளின் சட்டத்தை தொகுத்துக் கொடுத்தார். புதிதாக எதுவும் செய்துவிடவில்லை.

டாக்டர் அம்பேத்கரைப் பற்றி இந்த சமூகம் அதிலும் குறிப்பாக படித்த இளைஞர்கள் தெரிந்து வைத்திருப்பது இவ்வளவு தானா? என நினைத்தபொழுது மிக வருத்தமாய் இருந்தது.

Dr.Ambedkar2இனி அவர்களுக்கு நான் கொடுத்த பதில் இதோ,

1. டாக்டர் அம்பேத்கர் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வரவில்லை. கிறித்து பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன் வந்த மனு என்பவன்தான், பிறப்பின் அடிப்படையில் அவரவர் குலத்தொழிலை அவரவர்தான் மேற்கொள்ள வேண்டும் என்றார். இதுவே மனு தர்மம். மனு தான் முதன்முதலில் இடஒதுக்கீடைக் கட்டமைத்தான். ஆனால் அம்பேத்கரால்தான் இன்று தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்திருக்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு செய்தார் என்பதைத் தெரிந்து வைத்திருப்பவர்கள், ஏழை பிராமணர்களுக்கு இடஒதுக்கீடு, பிராமண பெண்களுக்கு இடஒதுக்கீடு என மேலும் விரிவுபடுத்த முயன்ற போது, “பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக Other Backward Class) என்று OBC Reservation-யைக் கொண்டு வர அரசமைப்புச் சட்டத்தில் உறுப்பு 340தனை சேர்த்தார் அம்பேத்கர்.

உறுப்பு 340ன் படி பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்நிலையைக் கண்டறிய ஆணையம் அமைக்க வேண்டும் என கூறுகிறது. ஆனால் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஓராண்டு ஆகியும், அரசு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்த ஆணையமும் அமைக்கவில்லை என பிரதமர் நேருவுக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

அதன் பின்னர்தான் 1953ஆம் ஆண்டு கவேல்கர் தலைமையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மேம்பாட்டிற்கு குழு அமைக்கப்பட்டது, அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

2. அம்பேத்கரால்தான் திறமைக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது என்று இன்று குற்றம்சாட்டப்படுகிறது.

இதற்கு முன்பு, ஒரு வேலையில் சேரவேண்டும் என்றால் சிபாரிசு வேண்டும். ஏற்கனவே உயர்பதவியில் வகித்தவர்கள் பிராமணர்கள். எனவே சிபாரிசின் பேரில் பிராமண இளைஞர்களுக்கே வேலை கிடைத்தது.

ஆனால் படித்தவர்கள் பதிவு செய்து வேலை கிடைக்க “தேசிய வேலைவாய்ப்பு நிறுவனம் (National Employment Agency)” கொண்டு வந்தவர் டாக்டர் அம்பேத்கர். இதுவே பின்னாளில் Employment Exchange ஆனது.

3. இந்தியாவின் கருவூலம் எனப்படும் ரிசர்வ் வங்கியை டாக்டர் அம்பேத்கர் வரையறுத்த வரைமுறைகள், சட்டதிட்டங்கள் மற்றும் நிர்வாக அமைப்பின்படி ஹில்டன்-யங் தலைமையிலான ராயல் கமிஷன் ஆன் இந்தியன் கரன்சி அண்ட் பைனான்ஸ் என்னும் குழு நிறுவியது. குழுவிலிருந்த ஒவ்வொருவரின் கையிலும் அவரின் ஆய்வுக் கட்டுரையான “ரூபாய் சிக்கல்கள்-தீர்வுகள்” இருந்தது.

4. 1923ல் டாக்டர் அம்பேத்கரின் “பிரிட்டிஷ் இந்தியாவின் மாகாண நிதியின் பரிமாணம்” என்ற ஆய்வின் அடிப்படையிலேயே இந்தியாவின் நிதி ஆணைக்குழு Finance Commission தோற்றுவிக்கப்பட்டது.

5. சைமன் குழுவிடம் 1928-லேயே வயதுவந்தோர் வாக்குரிமை வேண்டும் என்றார் டாக்டர் அம்பேத்கர்.

6. விவசாயிகளிடமிருந்து வரி வசூலிக்க பின்பற்றப்பட்ட வன்முறை வடிவிலான கோட்டி முறையை (Khoti) ஒழிக்க மசோதாவை முன்மொழிந்தார்டாக்டர் அம்பேத்கர். ஆனால் காங்கிரசுஅதை எதிர்த்தது. எனவே சனவரி 12, 1938-ல் 20,000க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்துப் போராடினார் டாக்டர் அம்பேத்கர். இதுவே சுதந்திரப் போராட்டத்தில் நடந்த மிகப்பெரிய விவசாயப் போராட்டம். கோட்டி முறையால் பாதிக்கப்பட்டவர்கள் 95 சதவிகிதத்திற்கும் மேல் பிற்படுத்தப்பட்டவர்களே.

7. தாய்மார்கள் அதிகம் குழந்தை பெறுவதால் வரும் உடல்நலக்குறையைப் போக்க குடும்பக் கட்டுப்பாடு வேண்டும் என்றார்.

8. மது அருந்தி வரும் கணவனுக்கு உணவளிக்காதே என்றார்1940ல். மதுவையும், பிற போதைப் பொருட்களையும் அரசு தடை செய்ய வேண்டும் என்பதற்காக அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறை கொள்கைகளில்(Directive Principle of space policy) உறுப்பு 47யைச் சேர்த்தார்.

9. பெண்களுக்கு கர்ப்ப காலங்களில் விடுமுறையுடன் கூடிய ஓய்வு வேண்டும் என்று மும்பை சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவந்தார் 1942-ல். ஆனால் இந்திய அரசு அந்த மசோதாவை 1961-ல்தான் நிறைவேற்றியது.

10. 1942-ல் தொழிற்சாலை சட்டத்தில் 14 மணி நேரமிருந்த பணி நேரத்தை 8 மணி நேரமாகக் குறைத்தார்.

11. ஆபத்தான பணிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வேலை செய்வதைத் தடுக்க சட்டம் கொண்டு வந்தார்.

12. தொழிலாளர்களின் நலனுக்காக தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தைக் கொண்டு வந்தார்.

13. முதன்முறையாக தொழிற்சாலை சட்டத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம ஊதியம் கிடைக்க சட்டம் கொண்டு வந்தார்.

14. இரண்டாம் உலகப்போருக்குப் பின், நாட்டின் மறுகட்டமைப்பு மிகப்பெரும் சவாலாக இருந்தது. அதற்காக நிறுவப்பட்டதே மறுகட்டமைப்பு குழு மன்றம் (Reconstruction committee council). அம்பேத்கர் அம்மன்றத்தின் உறுப்பினர். அதன் மூலம் பாசனம் மற்றும் மின்சார கொள்கைக்கான குழுவுக்கு தலைவராய் இருந்தபோது அவர் முயற்சியால் கொண்டுவரப்பட்டதுதான் கீழ்காண்பவை.

  • 1944ல் மத்திய நீர்வழி மற்றும் பாசன ஆணையத்தைத் தோற்றுவித்தார். அதுவே தற்போதைய மத்திய நீர் ஆணையம் (Central Water Commission).
  • மத்திய மின்சார தொழில்நுட்ப வாரியத்தை (Central Technical Power Board) தோற்றுவித்தார். அதுவே பின்னாளில் தேசிய மின்சார இணைப்பு ஒழுங்குமுறை கழகம் (National Power Grid Corporation).

15. 1946-ல் நவம்பர் 26ஆம் தேதி, அம்பேத்கர் ஒரு புகழ்பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார். அதில் சட்டம் மூலம் அனைவரும் சமம், ஆனால் இது சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் சாத்தியமா? என்ற சந்தேகத்தை எழுப்பினார். அதன் பிறகு நாட்டின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு அமைக்கப்பட்டதுதான் – இந்திய திட்டக் குழு (Planning Commission of India).

16. தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் (Damodhar Valley Project), கிராகுட் அணைத் திட்டம் (Hirakud Project), சோன் பள்ளத்தாக்கு திட்டம்(Sone Valley Project) ஆகியவை எல்லாம் அம்பேத்கரின் முதன்மை பங்களிப்பில் உருவானதே.

சட்டத்தை புதிதாக எழுதவில்லை என்று விமர்சிக்கும் சிலருக்கு இதோ அவர் பதில், “பல மொழி, பல சாதி, பல்வேறு பழக்கவழக்கங்கள், சடங்குகள், மதங்கள் உள்ள இந்தியாவிற்கு இன்னும் நூறு வருடம் ஆனாலும் சட்டம் எழுத முடியாது” என்றார்.

பல நாடுகளின் சட்டத்தை நம் சட்டத்தில் தொகுத்திருந்தாலும், இந்திய சூழலுக்குத் தகுந்தவாறு மாற்றிய பிறகே சட்டத்தில் சேர்த்தார்.

மேற்கண்டவை அனைத்தும் அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் என்ற பாரபட்சம் இல்லாமல் அனைத்து மக்களின் நலனுக்காகவே செய்தார்.

Dr.Ambedkar31209ல் கட்டப்பட்ட உலகின் பழமையான பல்கலைக்கழகமான கேம்பிரிட்ஜ் கடந்த நூற்றாண்டில் மக்களுக்கு உழைத்த மாமேதை யார்? என்ற வாக்கெடுப்பில் முதல் இடத்தை பிடித்தவராக டாக்டர் அம்பேத்கராக இருக்கலாம். நவீன இந்தியாவின் சிற்பியாக இருக்கலாம்.

ஐ.நா, டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை சர்வதேச சமூகநீதி நாளாகக் கொண்டாடலாம்.

ஆனால் நம்மைப் பொறுத்தவரை அவர் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர். இன்று திறமைப்பற்றி மெச்சும் எவரும் அம்பேத்கரை ஏற்றுக் கொள்வதில்லை.

சமீப காலமாக தங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை கொல்ல வேண்டும், நாடு கடத்த வேண்டும் என்ற காட்டு மிராண்டித்தனமான கொள்கைகளும், செயல்களும் அதிகரித்திருக்கின்றன. டாக்டர் அம்பேத்கர் இங்கு நிலவிய ஒட்டுமொத்த பழமைகளையும் புறக்கணித்தவர். எனவே அவர் உயிரோடு இருந்திருந்தால் கொன்றிருக்கலாம். குறைந்தது புறக்கணிக்கவாவது செய்வோம். எனவே அம்பேத்கரை புறக்கணிப்போம்.


தீபக் தமிழ்மணி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அம்பேத்கரை புறக்கணிப்போம்”

அதிகம் படித்தது