ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

அரசியல் அறக் கோட்பாடுகள்

முனைவர் மு.பழனியப்பன்

Jul 4, 2020

Siragu silappadhigaaram2

சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம் என்று தொ. பொ. மீனாட்சி சுந்தரனாரால் சுட்டப்பெறுகிறது. அரசர்களைப் பற்றிப் புலவர்கள் எழுதிய இலக்கியப் படைப்புகளுக்கு இடையில், அரச மரபினைச் சார்ந்த ஒருவர் குடிமக்களின் வாழ்வினைக் காப்பியமாக இயற்றிய நிலையில் சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம் எனப்படுகிறது. இருப்பினும் குடிமக்களாகிய கண்ணகியும், கோவலனும் அரசியல் அமைப்பினால் பாதிப்படையும் நிலையில், அப்பாதிப்புகளைக் கண்டு இரங்கும் நெஞ்சத்தினராக இளங்கோவடிகள் விளங்கி, முழுக்க முழுக்க அரசியில் காப்பியமாக சிலப்பதிகாரத்தைப் படைத்துள்ளார்.

சிலப்பதிகாரத்தின் பகுப்புகள் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்பனவாகும். இம்மூன்று காண்டங்களும் அந்த அந்த நகரங்களில் நடைபெறும் சிலப்பதிகார நிகழ்வுகளை அடிப்படையாக வைத்துப் பகுக்கப்பெற்றுள்ளன என்பது பொதுக் கருத்தாகும். மேலும்  இம்மூன்று காண்டப் பகுப்புகள் மூன்று அரசர்களின் நகரங்களைக் குறிக்கிறது. காவிரிப்பூம்பட்டினம் என்னும் நகரம் சோழ நாடு சார்ந்தது. மதுரை என்றும் நகரம் பாண்டியர்களுக்கானது. வஞ்சி நகரம் சேரர்களுக்கானது. தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களின் நகரங்களும் சிலப்பதிகாரப் பகுப்புப் பெயர்களின் பகுதிகளாக அமைந்துள்ள நிலையைக் கருதிப் பார்க்கையில் அரசியல் சார்ந்து சிலப்பதிகாரம் முப்பகுப்புகளாக ஆக்கப்பெற்றுள்ளது என்பதை உணரமுடிகின்றது. சிலப்பதிகாரத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன் ஆகியோர் கதை மாந்தர்களாகவே படைக்கப்பெற்றுள்ளனர். சிலப்பதிகாரம் சோழ மன்னர்களில் ஒருவரையும் குறிப்பாகச் சுட்டவில்லை என்றாலும் சோழ மன்னர்களின் அரசியல் திறத்தைப் பல இடங்களில் காட்டியுள்ளது. திங்களைப் போற்றும் நிலையில் திங்களானது  சோழனுடைய குடை போன்று குளிர்ச்சியைத் தருவதாக உள்ளது. சூரியனானது சோழனின் ஆட்சி தடையில்லாது எங்கும் செல்வதுபோல உலகமெங்கும் சென்று கொண்டிருக்கிறது. மழையானது சோழ மன்னன் கைமாறு கருதாது வழங்குதல்போல வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. புகார் நகரம் சோழ மரபினைப்போல புகழ் பெற்று விளங்குகிறது. இவ்வாறு இயற்கையை வணங்கும் நிலையிலேயே  சோழ மன்னனை, அவன் சிறப்புகளை, அவனின் கொடை மற்றும் ஆட்சிச்சிறப்பினை இளங்கோவடிகள் காட்டிவிடுகிறார்.

கண்ணகி தன்னை யார் என்று அறிமுகப் படுத்திக் கொண்டு மதுரை அரச சபையில் பேசும்பொழுது சோழ மரபு எடுத்துரைக்கப்பெறுகிறது.

            ‘‘எள்ளறு சிறப்பின்  இமையவர் வியப்ப

            புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்

            வாயிற் கடைமணி நடுநா நடுங்க

            ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்

            அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்”

என்ற நிலையில் சோழ மரபு கண்ணகியால் காட்டப்பெறுகிறது. மனுநீதிச் சோழன் வரலாறு இங்கு எடுத்துரைக்கப்பெற்று சிலப்பதிகாரத்தில் சோழ அரசனும் இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளான்.

தன் கன்றினை இழந்து அல்லலுற்ற பசுவிற்காக இரங்கிய நெஞ்சம் மனுநீதிச் சோழனின் நெஞ்சம் ஆகும். அல்லல்படும் உயிரினங்களைக் காத்தல் என்பது தலையாய அறமாக இளங்கோவடிகள் சுட்டப்பெறுவதற்கு இவ்வரலாறு அவர் மனதிற்குள் ஆழமாகப் பதிந்த நிலையே காரணமாகும்.

இவ்வாறு மூவேந்தர்களையும் சிலப்பதிகாரக் காப்பியத்திற்குள் கொண்டுவந்து அவர்களையும், பாத்திரங்களாக ஆக்கி அவர்களின் அரசியல் நடைமுறைகளை விளக்கி அவற்றில் இருந்து அரசியில் அறக்கோட்பாடுகளைப் பெற்றுக்கொள்ளும் நன்முறையை இளங்கோவடிகள் தன் படைப்பான சிலப்பதிகாரத்தில் அமைத்துள்ளார். இளங்கோவடிகள் காட்டும் அரசியல் அறக் கோட்பாடுகள் தமிழகத்தின் நீண்ட பாரம்பரியத்தின் அற அடையாளங்களாக விளங்குகின்றன.

siragu silappadhikaaram1

இதுமட்டும் அன்று. ஒவ்வொரு காண்டத்தின் முடிவிலும் இடம்பெறும் கட்டுரைப் பகுதியில் மூவேந்தர்களின் பெருஞ்சிறப்பினை இக்காண்டத்தில் இன்னபடி என்று வரிசைப்படுத்தி இளங்கோவடிகள் எடுத்துரைத்துள்ளார். இதனுள் அரச அறம் பெரிதும் வலியுறுத்தப்பெற்றுள்ளது. ஏறக்குறைய இம்மூன்று கட்டுரைப்பகுதிகளும் ஒன்றுபோலவே இருக்கின்றன. இவ்வொற்றுமையே இளங்கோவடிகள் விரும்பியது என்பதை இதன்வழி அறியமுடிகின்றது.

சோழனுக்கான கட்டுரைப் பகுதி

முடிஉடை வேந்தர் மூவ ருள்ளும்

தொடிவிளங்கு தடக்கைச் சோழர்க்குலத்து உதித்தோர்

அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்

பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும்

விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும்

ஒடியா இன்பத்து அவர்உறை நாட்டுக்

குடியும் கூழின் பெருக்கமும் அவர்தம்

தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும்

பொய்யா வானம் புதுப்புனல் பொழிதலும்

அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும்

பரந்துஇசை எய்திய பாரதி விருத்தியும்

திணைநிலை வரியும் இணைநிலை வரியும்

அணைவுறக் கிடந்த யாழின் தொகுதியும்

ஈர்ஏழ் சகோடமும் இடநிலைப் பாலையும்

தாரத்து ஆக்கமும் தான்தெரி பண்ணும்

ஊரகத் தேரும் ஒளியுடைப் பாணியும்

என்றுஇவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு

ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்

ஒரு பரிசா நோக்கிக் கிடந்த

புகார்க் காண்டம் முற்றிற்று”

என்ற பகுதி சோழ அரசனுக்கானது பெருஞ்சிறப்பினைக் கூறிய பகுதியாகும். இதே சாயலில் மற்ற இரு பெரு வேந்தர்களுக்கும் கட்டுரை உரைக்கப்பெற்றுள்ளது.

பாண்டியனுக்கான கட்டுரைப் பகுதி

முடிகெழு வேந்தர் மூவ ருள்ளும்

படைவிளங்கு தடக்கைப் பாண்டியர் குலத்தோர்

அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்

பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும்

விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும்

ஒடியா இன்பத் தவருடை நாட்டுக்

குடியுங் கூழின் பெருக்கமும் அவர்தம்

வையைப் பேரியாறு வளஞ்சுரந் தூட்டலும்

பொய்யா வானம் புதுப்பெயல் பொழிதலும்

ஆரபடி சாத்துவதி யென்றிரு விருத்தியும்

நேரத் தோன்றும் வரியுங் குரவையும்

என்றிவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு

ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்

வடஆரியர் படைகடந்து

தென்றமிழ்நா டொருங்குகாணப்

புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்

அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன்

நெடுஞ்செழியனோ டொருபரிசா

நோக்கிக் கிடந்த

மதுரைக் காண்டம் முற்றிற்று”

என்பது பாண்டியருக்கான பெருஞ்சிறப்பினைக் கூறும் கட்டுரைப் பகுதியாகும்.

சேரனுக்கான கட்டுரைப் பகுதி

முடியுடை வேந்தர் மூவ ருள்ளும்

குடதிசை யாளுங் கொற்றங் குன்றா

ஆர மார்பிற் சேரர்குலத் துதித்தோர்

அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்

பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும்

விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும்

ஒடியா இன்பத் தவருறை நாட்டுக்

குடியின் செல்வமுங் கூழின் பெருக்கமும்

வரியுங் குரவையும் விரவிய கொள்கையின்

புறத்துறை மருங்கின் அறத்தொடு பொருந்திய

மறத்துறை முடித்த வாய்வாள் தானையொடு

பொங்கிரும் பரப்பிற் கடல்பிறக் கோட்டிக்

கங்கைப் பேரியாற் றுக்கரை போகிய

செங்குட் டுவனோ டொருபரிசு நோக்கிக்

கிடந்த வஞ்சிக் காண்டமுற் றிற்று”

என்ற நிலையில் சேரனின் பெருஞ்சிறப்பு கட்டுரையாக அமைக்கப் பெற்றுள்ளது.

இக்கட்டுரைப் பகுதிகளில் கவனிக்கவேண்டிய ஒற்றைத் தன்மைகள் பல உள்ளன. முடியுடை மூவேந்தர், முடிகெழு மூவேந்தர் என்று மூவேந்தர்களும் ஒரே வரிசையில் எண்ணப்பெற்றுள்ள ஒற்றைத்தன்மை கண்டுக்கொள்ளத்தக்கது. இதுதவிர

 1. அறம்
 2. மறம்
 3. ஆற்றல்
 4. மூதூர் பெற்றிருத்தல்
 5. விழாக்கள்
 6. விண்ணவர் வரவு
 7. குடி
 8. கூழின் பெருக்கம்
 9. மழைவளம்
 10. அரங்கு
 11. ஆடல்
 12. தூக்கு
 13. வரி
 14. இசை

போன்றன அரசரின் அடையாளங்கள் என்றும் இக்கட்டுரைப்பகுதியில் காட்டப்பெற்றுள்ளது. எனவே மூவரசர்களும் மேற்குறித்த பதினான்கு பண்புகளில் சிறந்திருந்தனர் என்பது தெரியவருகிறது. இவைதவிர சோழனுக்கு உரிய காவிரி, பாண்டியனுக்கு உரியவையை, சேரனுக்கு உரிய பேரியாறு ஆகிய தனித்தன்மைகளும் இக்கட்டுரைப்பகுதியில் சுட்டப்பெற்றுள்ளன.

இம்மூவரசர்களும் அறன், மறம், ஆற்றல் சார்ந்தவர்கள். அறன் வழி மறம் சார்ந்தவர்கள். இவையிரண்டின் வழி ஆற்றல் பெற்றவர்கள் என்ற அடைமொழி அனைத்து மன்னர்களுக்கும் பொருந்துகிறது. எனவே அறம், மறம், ஆற்றல் சார்ந்த அரசே சிறந்த அரசு என்பது இளங்கோவடிகளின் அரசியல் அறக் கோட்பாடாக உள்ளது.

இதனையே நாட்டார் ‘‘இளங்கோவடிகள் மூவேந்தரையும் ஒரு பெற்றியே புகழ்வது போன்றே மூன்று காண்டத்தின் இறுதிக் கட்டுரைகளையும் ஒரே முறையில் அமைத்துள்ளார். மூன்றினையும் ஒத்து நோக்கில்  ஒரு கட்டுரையிற் காணப்படும் பொருள் பெரும்பாலனவும் ஏனைக் கட்டுரைகளில் இருத்தல் புலனாம். மூவரையும் சமனுறக் கொண்ட தம் உட்கோள் புலப்படும் பொருட்டே போலும் இக்காண்டத்தின் துன்ப நிகழ்ச்சிகளைக் கட்டுரையில் கட்டாது விடுத்துள்ளார்”  என்று குறிப்பிடுகின்றார். மதுரைக் காண்டத்தில் இச்செய்தியை உரையாசிரியர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் குறிப்பிடுகிறார். மதுரைக் காண்டத்தின் கட்டுரைப் பகுதியில் அக்காண்டத்துத் துன்ப நிகழ்ச்சிகள் எதுவும் கோடிட்டுக் காட்டப்படவில்லை. எனவே காண்டத்தின் நிறைவில் அமையும் கட்டுரைப் பகுதிகள் ஓரே திறத்தில் மூவேந்தரையும் வைத்து நோக்குகிறது என்பதை உணரமுடிகின்றது.

இதன்வழி மூவேந்தரும் அறம், மறம், ஆற்றல் ஆகியவற்றால் சிறந்திருக்க வேண்டும் என்பதைக் குறிப்பால் உணர்த்தும் இளங்கோவடிகள் அறம், மறம், ஆற்றல் ஆகியனவே அரசியல் அறக் கோட்பாடுகள் என்ற நிலைக்குத் தன் காப்பியத்தை நடத்திச் சென்றுள்ளார்.

அரசியல் சுற்றமும் அறக் கோட்பாடும்

அரசன் ஒற்றை உயிரினம். அந்த உயிரினம் அறிவினாலும் இயங்கும். உணர்வுப் பெருக்காலும் இயங்கும். அரசனது அறிவும், உணர்வும் அவனின் தன்மையைப் பொறுத்து நன்மையைச் செய்யலாம். அல்லது தீமையைச் செய்யலாம். இவன் தானாக இயங்கினால் அவனின் அறிவும் உணர்வும் நன்மைக்கும் கொண்டு செல்லலாம். தீமைகளுக்கும் கொண்டு செல்லலாம். எனவே அவனுக்கு அரசியல் சுற்றம் ஒன்று அமைய வேண்டியிருக்கிறது. அந்த அரசியல் சுற்றம் அமைதி, தூய்மை வயப்பட்டு நிற்கும் நிலையில் அரசனை வழிப்படுத்த இயலும். இடிப்பாரை இல்லாத மன்னன் அவனைக் கெடுப்பவர்கள் இன்றியே கெட்டுப்போய்விடுவான். எனவே அரசியல் சுற்றம் என்பது தக்க  நேரத்தில் அரசனுக்குத் துணை செய்ய வேண்டும். சிலப்பதிகாரத்தில் சோழ நாட்டின் அரசியல் சுற்றம், பாண்டிய நாட்டின் அரசியல் சுற்றம், சேர நாட்டின் அரசியல் சுற்றம் தெளிவு பட விளக்கப்பெற்றுள்ளது. இவ்வரசியல் சுற்றத்தின்படி அரசன் இயங்கியுள்ளான். அரசியல் சுற்றம் காட்டும் அறம் சிறப்புற நடைபெற்றால் நாட்டில் நலம் பெருகும். இதனையே குன்றக்குடி அடிகளார் ‘‘அரசியல் அறம் முறைப்படி நிகழுமாயின் நாட்டில் வளம் பெருகும்; வறுமை இருக்காது; அமைதி நிலவும்: கலகங்கள் நடைபெறா: உழைப்பு, உயர்தவம் என்று போற்றப் பெறும்; உற்பத்தி பெருகும்: வல்லோராயினும் வரையறைக்கு. உட்படுத்தப்படுவர்: மெலியோர் நலியார் எங்கும் இன்பம் தழுவிய ஆக்க வழியிலான சமூக உறவுகள் நிலவும் கால்கொள்ளும். அரசு, மனித குலத்தின் அனைத்து சக்திகளையும் பயன்படுத்தி வளர்க்கும்; வழிப்படுத்தும். அரசின் கடமை, தவறுகள் குற்றங்கள் நிகழாத-செய்வதற்குரிய அவசியம் ஏற்படாத சமுதாயத்தைக் காண்பதேயாம். அரசு, சமுதாயத்தை வளர்க்கும் சாதனமேயாம். அதற்குத் தண்டனை வழங்கும் அதிகாரம் உண்டு. ஆயினும், அது கடைசி ஆயுதம்தான்”  என்று அறம் சார்ந்த ஆட்சியின் பாங்கினைக் காட்டுகிறார் குன்றக்குடி அடிகளார்.

அறம் சாராத ஆட்சியின் தீமையையும் தன்னுடைய நூலான சிலம்பு நெறியில் காட்டி நிற்கிறார்.

அறம் சாராத ஆட்சி தீமை பயக்கும் என்பதை அவர் ‘‘ஆட்சி இயற்றும் அரசியல் தலைவன், அரசியல் முறை தெரிந்த, நல்லாட்சி தவிர வேறெதையும் நாடாத நல்லோருடன் கலந்து செய்யாததால் எங்கும் முறைப் பிறழ்ச்சி! உழைப்பவர் வருந்துவர்; உறிஞ்சும் உலுத்தர்கள் வாழ்வர்: உழைப்புக்கு உரிய ஊதியம் கிடைக்காததால் உழைப்பாளர் வருந்துவர்; உற்பத்தி குறையும்; வறுமை வளரும்; ஆறலை கள்வர் தோன்றுவர் களவும் கலகமும் வளர்ந்து அமைதிச் சூழ்நிலையை கெடுக்கும்; அரசியல் என்பது இல்லாததுபோல நாடு காட்சி தரும்.

அரசியல் முறை பிறழ்ந்த நாட்டில் அவலம் பெருகும்; அந்த நாடு, பாலை நிலம் போல விளங்கும்; நிலத்தின் வகையில் பாலை நிலம் கிடையாது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நிலம் நான்கு வகை யினதே.

இயற்கையின் தலைமைக் கோள் ஞாயிறு தம் நிலை கெடுதலால், வளம் கொழிக்கும் குறிஞ்சிநிலம் வளம் குன்றுகிறது. முல்லை நிலம் முழுதும் கெடுகிறது. வளம் மிக்க தம் இயல்பைக் குறிஞ்சியும் முல்லையும் இழந்து விடுகின்றன. காதலுக்கும் களிப்புக்கும் உரியதாயிருந்த இந் நிலங்கள் மக்களுக்குத் துன்பம் தரும் பாலை நிலமாகி விடுகின்றன.

சிறந்த அரசியல் முறை இல்லாத நாட்டில் இன்பம் இல்லை; அமைதி இல்லை; பாதுகாப்பு இல்லை. இத்தகு இழிநிலை வயப்பட்ட அரசைப்பெற்றுள்ள நாடு, பாலை வனம் போன்றது. இதனை இளங்கோவடிகள் எடுத்துக் கூறுவதறிக.

‘கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி

வேத்தியல் இழந்த வியனிலம் போல

வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்

தான்லர் திருகத் தன்மையிற் குன்றி

முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்துநல்லியல்பு இழந்து

கடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்.”

(சிலம்பு 11:60-66) என்பது சிலப்பதிகாரம்”  என்று காட்டுகிறார்.  சிலப்பதிகாரத்தை முன்வைத்து அறமற்ற ஆட்சியின் தீமைகளைக் காட்டும் இப்பாங்கு குன்றக்குடி அடிகளார் சிறப்புற சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து பெற்றக் கருத்தாகும்.

எனவே அறம் சார்ந்த ஆட்சியே என்றைக்கும் மக்களுக்கு மகிழ்ச்சி தருவது. உயிர்களின் உன்னத காலம் அறம் சார்ந்த ஆட்சிக் காலமே ஆகும். இவ்வகையில் அறம் சார்ந்த ஆட்சியை நடத்துவிக்க சிலப்பதிகார ஆசான் இளங்கோவடிகள் முயன்றுள்ளனர் என்பதை உணர முடிகின்றது.

Siragu silappadhigaaram1

அரசனை நல்வழிப்படுத்தும் சுற்றங்கள் இனிது வாழ்ந்து அரசனை அவர்கள் அமைதியுடனும், இனிமையுடனும், வெற்றியுடனும் வாழவைக்க வேண்டும். இவ்வகையில்  அரச சுற்றத்தார் அரசியலில் முக்கிய இடம் வகிக்கின்றனர்.

சிலப்பதிகாரத்தில் இந்திரவிழவூரெடுத்த காதையில் புகார் நகரத்தில் அரசன், அவனின் சுற்றம் இருந்த இருக்கை விவரிக்கப்படுகிறது. ஊர்காண் காதையில் மதுரை நகரத்திற்குள்; கோவன் சென்று மதுரையைக் காணுகையில் அதன் அரசியல் சுற்றம் அழகானதாக இருக்கிறது. வஞ்சியில் நெடுஞ்செழியன் படையெடுக்கச்; செல்லும்போது தன் அரசியல் சுற்றத்தைக் கலந்து ஆலோசிக்கிறான். இவ்வகையில் காட்டப்படும் மூன்று அரசியல் சுற்றங்களையும் விரிவுடன் பின்வரும் பகுதி விளக்குகின்றது.

சோழ நாட்டு அரசியல் சுற்றம்

காவிரிப்பூம்பட்டிணத்து அரசியல் சுற்றம்

சிலப்பதிகார காலத்தில் சோழ நாட்டின் துறைமுகப் பட்டினமாக விளங்கியது காவிரிப் பூம்பட்டினம் ஆகும். இந்நகரம் இரு பகுதிகளாக அமைந்திருந்தது. அவ்விருபகுதிகளில் ஒருபகுதியின் பெயர் மருவூர்ப்பாக்கம் என்பதாகும். மற்றொரு பகுதியின் பெயர் பட்டினப்பாக்கம் என்பதாகும்.

மருவூர்ப் பாக்கம்

மருவூர்ப்பாக்கம் என்பது கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள பகுதியாகும். இப்பகுதியில் பல்வகை மக்கள் வசித்து வந்தனர். பற்பல மாளிகைகள் விளங்கின. இம்மாளிகைகளில் மானின் கண்கள் போன்ற சாளரங்கள் அமைக்கப்பெற்றிருந்தன. இம்மாளிகைகள் நிலா முற்றம், அணி செய்ய  பெற்ற அறைகள் n;காண்டு செல்வச் சிறப்புடன் விளங்கின.

இவற்றைத் தொடர்ந்து மருவூர்ப் பாக்கத்தில், காண்பவர்தம் கண்களை விட்டு அகலாத தன்மை உடைய யவனர் எனப்படும் வெளிநாட்டு மக்கள் வாழும் பகுதி அமைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து மரக்கலன்கள் கொண்டு கடல் வாணிபம் செய்யும் நிலையில் காவிரிப்பூம்பட்டினத்திற்கு வருகை புரிந்த புலம் பெயர் மக்கள் தற்காலிகமாகத் தங்கியிருந்தனர். இவர்கள் அனைவரும் வேறுபாடுகள் ஏதும் இன்றி ஒன்றி  தமிழக மக்களுடன் வாழ்க்கை நடத்தி வந்தனர்.

இவ்விருப்பிடத்தைத் தொடர்ந்து நறுமணப் பொருள்கள் விற்கும் வீதி அமைந்திருந்தது. தொய்யில் எழுதத் தேவைப்படும் வண்ணங்கள் விற்கும் கடைகளும்;, சுண்ணப்பொடிகள் விற்கும் கடைகளும், குளிர்ந்த சந்தனம் விற்கும் கடைகளும், விடுபூ, தொடுபூ போன்றனவற்றை விற்பனை செய்யும் கடைகளும் இருந்தன.

தொடர்ந்து விலைமதிப்பில்லா ஆடைகள் விற்கும் கடைகள் அமைக்கப்பெற்றிருந்தன. பட்டு, மென்மையான உரோமங்கள், பருத்தி போன்றவற்றால் ஆன ஆடைகளை ஊசிகள் கொண்டுத் தைத்து உருவாக்கும் தையல் கலைஞர்கள்  வாழும் பகுதி இதனைத் தொடர்ந்து அமைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து முத்து, மணிகள் விற்கும் கடைகள் அமைந்திருந்தன.

இதன்பிறகு உணவுப் பண்டங்கள் விற்கும் கடைகள் அமைந்திருந்தன. இதன் தொடர்ச்சியாக எண்வகை பருப்புவகைகள் விற்கும் கூல வணிகர்கள் பலரும் அப்பகுதியில் கடைகள் வைத்திருந்தனர். மேலும் பிட்டு, அப்பம் போன்றன விற்பவரும் வரிசைபட நிறைந்திருந்தனர்.

இப்பகுதியின் நிறைவில் கள்விற்பவர்கள், மீன் விற்பவர்கள், உப்பு விற்பவர்கள், வெற்றிலை விற்பவர்கள், பஞ்ச வாசம் விற்பவர்கள்;, எண்ணெய் விற்பவர்கள், ஊண் விற்பவர்கள் என்று உணவின் பலவகைகளை விற்பவர்கள்  காவிரிப்பூம்பட்டினத்தின் மருவூர்ப்பாக்கத்தின் ஒரு புறத்தில் அமைந்திருந்தனர்.

இவர்களைத் தொடர்ந்து, செப்பு, வெண்கலம் போன்ற உலகோங்களால் ஆன பாத்திரங்கள் செய்வோர் தம் பொருள்களுடன் இருந்தனர். மரத்தை அறுத்துத் தொழில் செய்யும் தச்சர்களும், வலிய கைகளை உடைய கொல்லர்களும், சித்திரக்காரர்களும், சுதைப் பாவை செய்பவர்களும், பொன் செய் கொல்லரும், இரத்தினங்களில் அணி செய்யும் கலைஞர்களும், தோல் கொண்டு தையல் வேலை செய்பவர்களும், குற்றமற்ற பல்வகைக் கைத்தொழில் செய்பவர்களும் காவிரிப் பூம்பட்டினத்தில் வாழ்ந்து வந்தனர்.

குழல், யாழ் இசைத்து, குரல் முதல் எழு இசையமைப்புகளை வழுவின்றி வாசித்து செம்மையான பண்களைப் பாடவல்ல பெரும்பாணர்கள் வாழும் பகுதி அடுத்து அமைந்திருந்தது. இவ்வாறு மருவூர்ப்பாக்கம் அமைந்திருந்தது. இ;வ்வாறு அன்றாட வாழ்க்கை வாழும் மக்களின் இருக்கை கொண்ட பகுதி மருவூர்ப் பாக்கம் ஆகும்.

பட்டினப் பாக்கம்

பட்டினப் பாக்கம் என்பது முழுக்க முழுக்க அரசியல் சுற்றத்தால் சூழப் பெற்றதாகும். அங்கு தேரோடும் வீதிகள் இருந்தன. பெரிய இராச வீதிகள் சந்தித்துக்கொண்டன.  பெரிய வணிகர்களின் வீடுகள் அமைந்திருந்தன. வேதியர்கள் வாழும் இல்லங்கள் வரிசைபட இருந்தன. உழவர்கள், மருத்துவர்கள், சோதிடர்கள் என்று பல அரசியல் பணியாற்றுபவர்கள் அங்கு இருந்தனர்.

சாந்திக் கூத்தரும், காமக்கிழத்தியர், ஆடற் கூத்தியர், ஏவல் தொழில் செய்யும் பெண்களும், பல வாத்தியக்காரர்களும், விதூடகர்களும், புரவிகளைச் செலுத்தும் குதிரை வீரர்களும், யானைப் பாகர்களும், தேரினைச் செலுத்துவோர்களும், காலாட் படை வீரர்களும், அரசனின் இருப்பிடமும், அதனைச் சுற்றி அரசியல் சார்புடையவர்களின் இருக்கையும் அமைந்திருந்தது.

அங்காடிகள்

 பட்டினப் பாக்கத்தில் இருப்பவர்களும் மருவூர்ப் பாக்கத்தில் இருப்பவர்களும் பயன்கொள்ளத் தக்க வகையில் இவையிரண்டுக்கும் இடையில் அங்காடிகள் அமைந்திருந்தன. அவை இருவகைப்படும். ஒன்றின் பெயர் நாளங்காடி. மற்றதன் பெயர் அல்லங்காடி. நாளங்காடி என்பது பகலில் பொருள்கள் விற்கும் சந்தையாகும். அல்லங்காடி என்பது இரவு நேரத்தில் பொருள்கள் விற்கும் சந்தையாகும். இரு பெரு வேந்தர்களின் பாசறைகள் இருபுறம் இருக்க, இடையில் உள்ள போர்க்களம்போல எந்நேரமும் இயக்கமும் ஓசைப் பெருக்கமும் கொண்டு இப்பகுதி காணப்பட்டது என்று இளங்கோவடிகள் குறி;ப்பிடுகின்றார். அங்காடிகளின் சந்திப்பு  நிலையை உவமையாக்க ஓர் அரசியல் உவமையே இளங்கோவடிகளுக்கு உதவியுள்ளது. இதன்வழி இரு பாசறைகளுக்கு இடையில் போர்க்களம் உருவாக்கப்பட்டிருந்த சிலப்பதிகார கால நிலையை அறிந்து கொள்ள முடிகின்றது.

இவர்கள் அனைவரும் அரசன் தலைவனாக விளங்கும் அரசியல் சுற்றம் ஆவர். இவர்கள் எந்நேரமும் அரசனுக்காக அவனின் வெற்றிக்காக பாடுபடுபவர்கள் ஆவர். இதனை

                        ‘‘மருவூர் மருங்கின் மறங்கொள் வீரரும்

                        பட்டின மருங்கின் படைகெழு மாக்களும்

                        முந்தச் சென்று முழுப்பலி பீடிகை

                        வெந்திறல் மன்னற் குற்றதை யொழிக்கெனப்

                        பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம்பாகென

                        கல்லுமிழ் கவணினர் கமழிப்பிணிக் கறை;தோற்

                        பல்வேற் பரப்பினர் மெய்யுறத் தீண்டி

                        ஆர்த்துக் களங்கொண்டோ ராரம ரழுவத்துச்

                        சூர்த்துக் கடை சிவந்த கடுநோக்குக் கருந்தலை

                        வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கென

                        நற்பலி பீடிகை நலக் கொள வைத்தாங்கு”

என்ற நிலையில் இருவரும் அரசனின் அரசியலில் பங்கேற்றுள்ளனர்.

மருவூர் பாக்கத்தில் மறத்தினை அடையாளமாகக் கொண்ட வீரர்களும், பட்டினப்பாக்கத்தில் இருந்த படைக்கலமுடைய வீரர்களும் மன்னற்கு உற்றதை ஒழிக்கெனப் பலிக் கொடை புரிந்தனர். இவ்வகையில் எந்நிலத்தில் வாழ்ந்தாலும் அரசனின் சொல்படி நடக்கும் அரசியல் சுற்றம் சோழ நாட்டில் இருந்துள்ளது.

ஐவகை மன்றங்கள்

காவிரிப்பூம்பட்டினத்தில் அறம் நிறுத்த ஐவகை மன்றங்கள் இருந்துள்ளன. அவை வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் மன்றம், பூத சதுக்கம், பாவை மன்றம் என்பனவாகும். இம்மன்றங்கள் அறத்தை நிலை நிறுத்தும் மன்றங்களாக விளங்கின. ஒவ்வொரு மன்றத்திற்கும் ஒவ்வோர் அறம் தலையாக நிற்கிறது. இவ்வமைப்பினை இந்திரன் காவிரிப்பூம்பட்டினத்திற்கு வழங்கினான் என்பது தொன்மச் செய்தியாகும்.

வெள்ளிடை மன்றம்

களவினை நீக்கும் மன்றம் இதுவாகும். காவிரிப் பூம்பட்டினத்திற்குப் பல பொதிகள் வந்து குவிந்துள்ளன. இவற்றில் அடையாள எழுத்துகள் இலச்சினையாகப் பொறிக்கப்பெற்றுள்ளன. பண்டக சாலைகளிலும் பொருள்கள் நிரம்பிக்கிடக்கின்றன. இவற்றைக் காவல் செய்வோர் ஒருபுறம் இருக்க, இக்காவலை மீறியும் களவாடுவோர் இருந்தனர். அவர்களை விசாரித்து அவர்களுக்கு அறம் தரும் மன்றமாக வெள்ளிடை மன்றம் விளங்கியது. களவாடிய பொருள்களை அக்களவு மேற்கொண்டவர்களுக்கே வழங்கி, அவர்களின் கழுத்து வலிக்க ஒரு பொதியினைச் சுமக்க வைத்து, ஊர் முழுவதும் அவன் களவாடியவன் என்பதைக் காட்டும்படியான தண்டனையைத் தரும் மன்றமாக இம்மன்றம் விளங்கியது. இம்மன்றத்தின் தலையாய அறக்கோட்பாடு களவினை நினைத்தாலே நினைத்தவரை நடுங்கச் செய்து அக்குற்றத்தை விலக்குவது என்பதாகும்.. ‘‘உள்ளுநர் பணிக்கும்” என்று களவினை மனதால் எண்ணாத அறக்கோட்பாட்டினை முன்வைத்து இம்மன்றம் இயங்கியுள்ளது.

இலஞ்சி மன்றம்

உடற்குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் பலரும், அழுகிய உடலைப் பெற்ற தொழுநோயாளர்களும் இலஞ்சி மன்றத்திற்கு வந்து அங்குள்ள நீர் நிலையில் நீராடி உடற்குறை நீங்கி நல்ல உடலினைப் பெறுவர். அவ்வளவிற்கு நலம் பயப்பதாக இருந்த மன்றம் இலஞ்சி மன்றம் ஆகும். இம்மன்றத்தில் நீராடியதால் நல்ல உடல் பெற்றவர்கள் அதனை வலம் செய்து வணங்கிச் செல்லுவர். இதன்வழி அல்லல் படுபவர்களுக்கு உதவும் நல்லறக்கோட்பாடு இலஞ்சி மன்றத்தில் இருந்துள்ளது.

நெடுங்கல் மன்றம்

வஞ்சனையால் பிறரால் மருந்து ஊட்ட பித்தேறியவர்கள், நஞ்சினை ;அருந்தி அதனால் பர்திக்கப்பெற்றவர்கள், பாம்பின் பல் பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்கள், பேயினால் பற்றப்பட்டுத் துன்பமடைந்தவர்கள் போன்றோர் வந்து வணங்கி நின்ற அளவிலே நன்மைகளைத் தரும் மன்றமாக நெடுங்கல் மன்றம் விளங்கியுள்ளது. ஒளியைச் சொரியும் நெடிய கல்நாட்டி நிற்கும் மன்றமாக நெடுங்கல் மன்றம் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்துள்ளது. இவ்வகையில் இதுவும் அல்லல் உற்றோருக்கு உதவும் நிலைப்பாடு உடைய  அறக் கோட்பாடு உடையதாகும்.

பூதச் சதுக்கம்

தவவேடத்தில் இருந்து கொண்டு அவ ஒழுக்கங்களை மேற்கொள்ளும் பொய்த்தவ வேடத்தார்களையும், தீய நெறிகளில் ஈடுபடும் பெண்களையும்,  கீழ்மைகளைச் செய்யும் அமைச்சர்களையும், பிறர் மனைவியரை விரும்புவோரையும், பொய் சாட்சி சொல்பவரையும், புறங்கூறுவாரையும் தன் பாசத்தால் கட்டி அவர்களை நிலத்தில் புடைத்து அவர்களின் அலறல் ஊரின் நர்லாப்புறமும் கேட்கும்படிச் செய்யும் பூதம் உள்ள பூதச்சதுக்கம் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்துள்ளது. இதன்படி பொய்த்தவ வேடத்தார், தீய நெறிப் பெண்கள், பிறர் மனைவியை விரும்புவோர், பொய்சாட்சி சொல்பவர்கள், புறங் கூறுபவர்கள் அறத்தில் இருந்து விலகியவர்கள் என்பதும் அவர்கள் புகார் நகரில் வாழத் தகுதியற்றவர்கள் என்பதும் தெரியவருகிறது. பூதச்சதுக்கத்தில் மேற்காண்   குற்றங்கள் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டனர்.

பாவை மன்றம்

பாவை உடைய மன்றம் பாவை மன்றம் ஆகின்றது. அறத்திற்கு ஏதேனும் ஊறு வந்தால் அழும் தன்மையுடைய பாவையாக இப்பாவை இருந்துள்ளது. அரசனது செங்கோல் தன் செம்மைப் பண்பிலிருந்துச் சற்று மாறினாலும், அவையத்தவர்கள் உரைக்கும் உரையானது நடுவுநிலைமையில் இல்லாது சற்று திரிந்தாலும், இந்தப் பாவையானது தன் கண்களில் கண்ணீரைச் சிந்தும் என்ற அளவில் பாவை மன்றம் அமைக்கப்பெற்றிருந்தது. இதன் காரணாக அறம் தவறினால் துன்பம் ஏற்படும் என்பதை இப்பாவை மன்றம் பெரிதும் உணர்த்துகின்றது. இம்மன்றம் இருக்கும் ஒவ்வொரு ஊரினுள்ளும் நிறுவப்பட்டால் அறத்திறன் வழுவாது என்பதில் ஐயமில்லை.

இவ்வகை மன்றங்கள் புகார் நகரத்தில் நடைபெற்ற இந்திரவிழாவின்போது மக்களால் தொழப்பெற்றுள்ளன. இம்மன்றங்கள் அறத்தின் அடையாளங்களாகப் புகார் நகரத்தில் நின்றிருந்தன. இம்மன்றங்கள் வழி பெறப்படும் அறக்கோட்பாடுகள் பின்வருமாறு.

வெள்ளிடைமன்றம்

களவு ஒழிக்கப்பட வேண்டும்.

தண்டனை

ஊர் தோறும் தலைச்சுமையுடன் சுற்றி வரல்

இலஞ்சி மன்றம்

இயலாமை ஒழிக்கப்பட வேண்டும்

தீர்வு

பொய்கை நீராடல்

நெடுங்கல் மன்றம்

வஞ்சனை ஒழிக்கப்பட வேண்டும்

தீர்வு

தொழுதல்

பூதச் சதுக்கம்

பொய்த்தவம், தீய பெண்களின் தன்மை, அமைச்சின் கள்ளம், பொய்சாட்சி, புறங்கூறுதல் ஒழிக்கப்பட வேண்டும்.

தண்டனை

கசையடி

பாவை மன்றம்

கொடுங்கோண்மை ஒழிக்கப்பட வேண்டும் அடையாளம் பாவையின் கண்களில் கண்ணீர் வடிதல்

சோழ அரசர்கள் மக்களிடத்தில் அறத்தை நிலைநிறுத்த இவ்வகை மன்றங்கள் உதவின. எனவே சோழநாட்டில் அற நெறிகளைக் காப்பாற்ற தண்டனைகளைத் தர உரிய அமைப்புகள் இருந்தமையை உணரமுடிகின்றது.

- தொடரும்

 


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அரசியல் அறக் கோட்பாடுகள்”

அதிகம் படித்தது