சனவரி 16, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

அரசு மருத்துவமனைகளின் அலட்சியப்போக்கும், பாதிக்கப்படும் விளிம்புநிலை மக்களும்!

சுசிலா

Dec 29, 2018

siragu govt hospital2

கடந்த நான்கு நாட்களாக, நம் எல்லோரையும் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகிய ஒரு செய்தி என்னவென்றால், விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணிற்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரமாகத்தான் இருக்க முடியும். இந்த செய்தியை விட்டு வெளியே வரமுடியாத நிலையில், மேலும் மற்றொரு செய்தி வெளியாகி இருக்கிறது. சென்னை மாங்காடைச் சேர்ந்த ஒரு பெண்ணும் தற்போது, தனக்கும் இதுபோன்ற கொடுமை நிகழ்ந்ததாக தெரிவித்திருக்கிறார். அதுவும், தலைநகரத்திலேயே, மிகப்பெரிய, மிகசிறந்த அரசு மருத்துவமனையாகக் கருதப்படும் கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் இந்த மனித தவறு நடந்திருப்பதாகக் கூறுகிறார்.
எப்படி இப்படிப்பட்ட அலட்சியப்போக்கு அரசு மருத்துவமனைகளில் ஏற்படுகிறது என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஏற்றப்படும் ரத்தம் எவ்வித தொற்றுமில்லாமல் பரிசுத்தமானதா என்ற சோதனையைக் கூட எடுக்கவில்லை என்றால், இந்த துறையின் செயல்பாடுகள் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும்.!

சாத்தூரைச் சேர்ந்த எட்டு மாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு, ரத்தம் செலுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டதால், அந்த பகுதி அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டது. அதன்பிறகு, வீட்டிற்கு வந்த அந்த பெண்ணிற்கு உடல்நலம் பாதிப்பிற்கு உள்ளானது. வயிற்றுப்போக்கு, வாந்தி என சில உடல் உபாதைகளால், மீண்டும் அங்கே சென்றிருக்கிறார். அப்போது ரத்தப்பரிசோதனையின் போது அப்பெண்ணிற்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முந்தைய பரிசோதனைகளின் போது இல்லாத தொற்று, தற்சமயம் எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்தநிலையில், சிவகாசியைச் சேர்ந்த ஒரு இளைஞர் அளித்த ரத்தத்தில், இந்த தோற்று இருப்பது அறியப்பட்டது. இதில் மிகவும் கொடுமையான ஒரு விசயம் என்னவென்றால், ‘ரத்ததானம் செய்தபோது தனக்கு இந்த தொற்று இருப்பது தெரியாது. வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்தபோது, பரிசோதித்த ரத்தத்தில் தொற்று இருப்பது தெரிந்தவுடனே, மருத்துவமனைக்கு தெரிவித்து விட்டேன்.’ என்று அந்த இளைஞர் கூறியிருக்கிறார். மேலும், அந்த இளைஞர் தற்கொலைக்கு முயற்சி செய்து, தற்சமயம் சிகிச்சையில் இருக்கிறார் என்பதுவுமாகும்.

அந்த இளைஞரே, தாமாக முன்வந்து, தன்னுடைய ரத்தத்தை யாருக்கும் செலுத்திவிடாதீர்கள் என்ற உண்மையை தெரிவித்தபிறகும், ரத்தவங்கியோ, மருத்துவமனையோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருக்கின்றன. அது மட்டுமல்லாமல், அதை சாத்தூர் மருத்துவமனைக்கு அனுப்பியும் இருக்கிறார்கள். உயிர் காக்கும் மருத்துவத்துறையில், இந்தளவிற்கு ஒரு அலட்சியம், இவர்களுக்கு இருக்கிறது என்பதை நினைக்கும்போது நமக்கு மனம் கொதிக்கிறது.

இரண்டாவதாக, தற்சமயம் புகார் கூறியிருக்கும் பெண், தன்னுடைய இரண்டாவது குழந்தை பிரசவத்திற்கு, ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தபோது, மாங்காடு சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். அவருக்கும் ரத்தம் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டதால், மருத்துவமனையின் ஆலோசனையின் பேரில், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டிருக்கிறது. வீட்டிற்கு சென்ற சில தினங்களில் உடல்நிலை மோசமான நிலையில், மறுபடியும் மாங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்தபோது எச்ஐவி தோற்று இருப்பது தெரிய வந்திருக்கிறது. ஆனால், அந்த மருத்துவமனையில், ரத்தம் ஏற்றப்பட்டபோது தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அலட்சியமாக சொல்லப்பட்டது, அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள் என்று மருந்து, மாத்திரைகளை தனக்கும், குழந்தைக்கும் கொடுத்தார்கள் என்றும் கூறுகிறார். உடனே, சுகாதாரத்துறைக்கு அதாவது தொடர்புடைய துறையைச் சேர்ந்த அமைச்சருக்கும், ஆட்சியருக்கும் கடிதம் எழுதியதாகவும், ஆனால், இன்று வரை பதில் வரவில்லை எனவும், இந்த தவறு நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறுகிறார். இதனால், அவருடைய உறவினர்கள் கூட அவருடன் தொடர்பில் இல்லை, உதவுவதற்கு யாருமில்லை என்றும் கூறுகிறார். ஆனால், கீழ்ப்பாக்கம் மருத்துவமனை நிர்வாகம் இதில் உண்மையில்லை எனவும், அந்தப் பெண்ணிற்கு சுத்தமான ரத்தம் தான் ஏற்றப்பட்டது எனவும் கூறுகிறது. !

siragu govt hospital1

அரசு மருத்துவமனைகளில், சிகிச்சை பெறுபவர்கள் யாரும் வசதி, வாய்ப்புள்ள செல்வந்தர்கள் அல்ல. அனைவரும் விளிம்புநிலை மக்கள். தங்களால், தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்க முடியாது என்ற நிலையில் தான் அரசு மருத்துவமனைகளை நாடி, நம்பி வருகின்றனர். அப்படிப்பட்ட ஏழை, எளிய மக்களுக்காக செயல்படும் அரசு மருத்துவமனைகள். அதிக கவனத்துடன் செயல்பட்டிருக்க வேண்டாமா? ஏழை மக்களின் உயிர் என்றால் அத்தனை அலட்சியமா? இனி எந்த நம்பிக்கையில் அவர்கள் அரசு மருத்துவமனைகளை நாடி வருவார்கள். சம்பந்தப்பட்டவர்களை பணிநீக்கம் செய்வது மட்டும் போதாது. உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் மக்களின் கருத்தாக இருக்கிறது.

சாத்தூர் மற்றும் சிவகாசியில் ரத்தவங்கி மற்றும் மருத்துவமனையில் பணிபுரிந்த, சம்பந்தப்பட்ட நபர்களை பணிநீக்கம் செய்திருக்கிறது அரசு. பாதிக்கப்பட்ட அப்பெண்ணிற்கும் உயரிய சிகிச்சை அளிக்க மதுரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றிருக்கிறார்கள், மேலும் அப்பெண்ணிற்கு அரசு வேலை அளிக்கப்படும் என பல உதவிகளை தற்போது அரசு தெரிவித்திருந்தாலும், அப்பெண்ணின் வாழ்க்கையை கெடுத்திருக்கிறார்கள் என்பது மட்டுமல்லாமல், உலகையே பாத்திராத அப்பச்சிளம் குழந்தையின் உயிரையும் அல்லவா பணயம் வைத்திருக்கிறார்கள். இழப்பீடுகள் என்று எவ்வளவு கொடுத்தாலும், பாதிக்கப்பட்ட பெண்களின் இழப்பிற்கு எதுவும் ஈடாகாது என்பதுதானே உண்மை. மேலும் இழப்பீடுகள் என்பது தவறுதலாக நடக்கும் விபத்துகளுக்கு வேண்டுமானால் பொறுந்தக் கூடியதாக இருக்கலாம். ஆனால், இவ்விசயங்களில் மருத்துவமனை மற்றும் ரத்தவங்கி ஊழியர்களின் அலட்சியப்போக்கே காரணம் என்பது தெரிய வருகிறது.

உய்ரநீதிமன்றம் தாமாக முன்வந்து இவ்வழக்கை விசாரிக்கிறது. ரத்தம் அனுப்பட்ட சிவகாசி மருத்துவமனை, ரத்தவங்கி ஆகியவற்றில் ஆய்வு நடத்த குழு அனுப்பியிருக்கிறது. விசாரணையின்போது உண்மைகள் வெளிவர வேண்டும். தற்போது புகார் கூறியிருக்கும் சென்னை மாங்காட்டைச் சேர்ந்த பெண்ணிற்கும் சேர்த்து, நேர்மையான விசாரணை நடந்தி, குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்போது தான் மக்களுக்கு அரசு மருத்துவமனைகளின் மீது மீண்டும் நம்பிக்கை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. இப்பெண்களுக்கு அரசின் சார்பில் கொடுக்கப்படும் இழப்பீடுகள் எந்த வகையிலும் ஈடாகாது என்ற போதிலும் சற்று ஆறுதலைக் கொடுக்கும் என்று நம்புவோம்.

மனிதவளம் என்பது ஈடு இணையில்லாத ஒன்று. ஒரு நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கக்கூடியது. அதனை ஆரோக்கியத்துடனும், அறிவுடனும் வளர்த்தெடுப்பதே நம் வருங்கால சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்ற பொறுப்புணர்ச்சி நம் எல்லோருக்கும் இருக்க வேண்டும். இதுபோன்ற தவறுகள் இனியாவது நடக்காதவண்ணம் அரசும், சுகாதாரத்துறையும், அதிகாரிகளும், ஊழியர்களும் மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அரசு மருத்துவமனைகளின் அலட்சியப்போக்கும், பாதிக்கப்படும் விளிம்புநிலை மக்களும்!”

அதிகம் படித்தது