மே 14, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

அருவம் உருவம் அருவுருவம்! (பகுதி – 27)

முனைவர். ந. அரவிந்த்

Oct 9, 2021

உருவ வகைகள், வடிவம் என்பன யாவும் அருவம், உருவம், அருவுருவம் என்னும் மூவகையினுள் அடங்கும். புராண கால தமிழ் ஆகமங்கள் இறைவன் இம்மூன்று வடிவங்களாக திகழ்கிறான் என்று கூறுகின்றன. அருவம், உருவம், அருவுருவம் என்ற இறைவனின் இவ்வடிவங்களை மாசற்ற ஆவி, சுந்தரர், பரம்பொருள் என்றும் அழைக்கின்றோம்.

திருமூலர், திருமந்திரம் எண் 2763 பாடலில் அருவ நிலை, உருவ நிலை, அருவுருவ நிலை என்ற மூன்றும் இறைவனின் வெவ்வேறு வடிவங்கள் என்று பாடியுள்ளார்.

திருவழி ஆவது சிற்றம் பலத்தே
குருவடிவு உள்ளாக் குனிக்கும் உருவே;
உருஅரு ஆவதும் உற்றுஉணர்ந் தோர்க்கு
அருள்வழி ஆவதும் அவ்வழி தானே. (திருமந்திரம் 2763)

அருவம் என்பது கண்ணுக்கு புலனாகாது. இதற்கு இன்னொரு பெயர் மாசற்ற ஆவி என்று பொருள். இறைவன் ஒருவனே மாசற்ற ஆவியானவன். தண்ணீர் கொதிக்கும்போது எப்படி கண்ணுக்குத் தெரியாத நீராவியாகிறதோ அதுபோல்தான் அருவமும். நாம் ஏதாவது பிரச்சனையில் இருக்கும்போது இறைவனை வேண்டினால் அருகில் இறைவனும் இருக்க மாட்டார், இறைவனின் மரு வடிவான உருவமாகவும் இருக்க மாட்டார். ஆனால், நாம் வேண்டியது நிறைவேறும். அதற்கு காரணம் மாசற்ற அருவம்.

திருமூலர் மற்றொரு பாடலில் இவ்வாறு பாடியுள்ளார்.

உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்
குள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்
குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே

இதன் விளக்கம், இறைவனை நம்புகிறவர்களுக்கு அவன் அருவமாக உள்ளத்திற்குள் வசிக்கிறான். வெளியேயும் உருவமாக எழுந்தருளி அருள் புரிகிறான். ஆனால், அவனை நம்பாதவர்களுக்கு அவன் உள்ளேயும் இல்லை, வெளியிலும் இல்லை என்பதாகும்.

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் ஒரு பகுதி போற்றித் திருஅகவல். இதில் மாணிக்கவாசகர், அருவுருவாகிய இறைவனே! நீ அருவமும் உருவமும் ஆனாய்! என்று போற்றி பாடியுள்ளார்.

அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
மருகிய கருணை மலையே போற்றி!

உருவம் என்பது கண்ணுக்குப் புலப்படும். இது இறை அவதாரத்தைக் குறிக்கும் சொல். மனிதர்களிடையே உலகில் பாவம் பெருகியது. பாவத்தின் வேதனை தாங்காமல் இறைவனை மனிதர்கள் வேண்டினர். பாவம் செய்த மக்களை இறைவன் அழிக்க விரும்பவில்லை. மாறாக, மனிதர்களின் பாவங்களை நீக்கி அவர்களை காக்கவே விரும்பினான். ஏனென்றால் இறைவன் அன்பானவன். அதனாலேயே அவனுக்கு ‘சிவன்’ என பெயர் வந்தது. தன்னுடைய அன்பினால் அவன் மனித உடல் எடுத்தான்.

அதற்காக, ஆலகால விசத்தால் பூமி பாவத்திற்குள்ளானபோது இறைவன் தனது மறு வடிவமாகிய சுந்தரரை பூமிக்கு அனுப்பி அந்த விசத்தை எடுத்துக்கொண்டு வா என்றான். இந்த சுந்தரர்தான் உருவம். சைவ திருமறையின்படி, இது ஒரே ஒரு முறைதான் நிகழ்ந்துள்ளது. உருவ வடிவில் உள்ள இறை அவதாரத்தை மட்டுமே நாம் கண்டு அணுக முடியும். இதனையே, திரு. வி. கல்யாண சுந்தரனார் அவர்கள் “அன்பினால் யாக்கை ஏற்ற ஐயனே போற்றி” என குறிப்பிடுகிறார். யாக்கை என்ற வார்த்தைக்கு உடல்; தேகம்; மேனி என பல பெயர்கள் உண்டு. சுந்தரராகிய ஈசனே சிவனாகிய ஈசுவரனின் மரு உருவம்.

அருவுருவம் என்றால் இறைவன் இருக்கிறான் ஆனால் நம்மால் அவனை காண இயலாது. அதாவது, ‘இருக்கிறான் ஆனால் இல்லை’ என்பதாகும். அருவமும் உருவமும் கலந்த நிலையே அருவுருவம். இறைவனாகிய ஈசுவரன் ஒளியாக இருக்கிறான். அந்த ஒளியை நம் சாதாரண கண்களால் காண இயலாது. ஈசுவரன் ஆயிரம் சூரியனுக்கு சமம். அவனை ஒருவனும் கண்டதில்லை. காணவும் முடியாது. உயிருக்கும் உயிராக இருப்பவன் இறைவன். உடலுக்குள் இருக்கும் உயிரையே யாராலும் காணமுடியவில்லை. அப்படியிருக்க உயிரின் உயிராகிய அருவுருவத்தினை இவ்வுலகில் அறியவல்லவர் யார்? ஆனால், இறைவனின் அவதாரத்தை நம்மால் காண முடியும். கண்டவர்களும் பலருண்டு. தாயுமானவர் ‘கடவுள் வாழ்த்து’ பாடலில் சிவனை குறிப்பிடுவதற்காக அருவுருவம் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார்.

இறைவன் ‘அருவம் உருவம் அருவுருவம்’ என மூன்று வேறு வடிவமாக இருப்பதனால் அவனை ‘மும்மூர்த்தி’ அல்லது ‘திரிமூர்த்தி’ என்று குறிப்பிடுகின்றார்கள். இறைவனாகிய சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று வடிவங்களில் உள்ளார். அருவத்திருமேனி மாசற்ற ஆவி என்றும், அருவுருவத்திருமேனி பரம்பொருள் என்றும், உருவத்திருமேனி ஈசன் அல்லது சுந்தரர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இறைவன் மூன்று வடிவமாக இருக்கிறான் என்பதை நினைவுகூறவே நாம் நெற்றியில் முப்பட்டை அணிகிறோம்.

siragu aruvuruvam1

இதே கருத்தினை திருவிவிலியம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று கூறுகிறது. பிதா என்பது இறைவனை குறிக்கும் சொல்லாகும்.

இறைவன் தன்னுடைய உருவிலும் சாயலிலும் மனிதரைப் படைத்தார் என்று தொடக்க நூல் கூறுகிறது. பரம பிதாவாகிய இறைவனுக்கு உருவம் உண்டு என்பதனையே திருவிவிலியம் இவ்வாறு கூறுகிறது. இறைவனைப்பற்றி, ‘நீர் என்னைக் காண்கிற தேவன், என்னை கண்ணோக்கிப் பாரும், என் விண்ணப்பங்களுக்கு செவி கொடுத்து கேளும். நீர் சிங்காசனத்தின் மீது வீற்றிருக்கிறீர். எங்களுக்கு நன்மை செய்யாதபடி உம்முடைய கரங்கள் குறுகிப்போகவில்லை’ என்று பல இறை தொண்டர்கள் கூறியுள்ளனர். இவைகள் அனைத்தும் இறைவனுக்கு உருவம் உண்டு என்பதையே கூறுகின்றன. ஆனால் இறைவனை கண்டவன் ஒருவருமில்லை. இறைவன் தன்னுடைய பிம்பத்தினையே மனிதர்களுக்கு வெளிப்படுத்தினார்.

இதற்கு உதாரணமாக திருவிவிலியத்திலிருந்து இரண்டு சம்பவங்களை கூறலாம்.

முதலாவதாக, இறைவன் மோசேயுடன் பேசுவதற்காக சீனாய் மலையின் மேலுள்ள கொடுமுடியில் அக்கினியில் இறங்கினார். அந்த சமயத்தில், அந்த இடம் முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது. எக்காள சத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது; மோசே பேசினான்; இறைவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார். அப்பொழுது இறைவன் மோசேயை நோக்கி: மக்கள் பார்க்கிறதற்கு எல்லையைக் கடந்து இறைவனிடத்தில் வராதபடிக்கும், அவர்களில் அநேகர் அழிந்துபோகாதபடிக்கும், நீ இறங்கிப்போய், அவர்களை உறுதியாக எச்சரி என்றார். இறைவன் சமூகத்தில் ஆராதனை செய்ய வருகிற ஆசாரியர்களும், தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார். இறைவனுடைய மகிமை சீனாய்மலையின்மேல் தங்கியிருந்தது; மேகம் ஆறுநாள் அதை மூடியிருந்தது; ஏழாம் நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார். இதன் மூலம், இறைவன் புவிக்கு வந்தால் என்னென்ன சம்பவிக்கும் என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது. இறைவன் மோசேயினை மட்டுமே மலைமேல் ஏறி வர அனுமதித்தார். இருந்தபோதிலும், மோசேயால் இறைவனை காணமுடியவில்லை. இறைவனின் சத்தத்தினை மட்டுமே கேட்க முடிந்தது. மற்றவர்களுக்கு மலைமேல் ஏறும் பாக்கியம்கூட கிடைக்கவில்லை. இறைவனின் கட்டளையினை மீறி ஒருவேளை அவர்கள் மேலே ஏறி வந்திருந்தார்களானால், இறையாற்றலை தாங்க முடியாமல் அவர்கள் நிச்சயம் இறந்திருப்பார்கள். மலையின் கொடுமுடியிலே ‘இறைவனுடைய மகிமையின் காட்சி அனைவரின் கண்களுக்குப் பட்சிக்கிற அக்கினியைப்போல் இருந்தது. மக்கள் அனைவரும் சேர்ந்துவந்து, மலையின் அடிவாரத்தில் நின்றார்கள்; அந்த மலையில் விண்ணைத் தொடும் அளவிற்கு அக்கினி எரிய, இருளும் மேகமும் சூழ்ந்தது. அந்த அக்கினியின் நடுவிலிருந்து இறைவன் மக்களோடே பேசினார்; அனைவரும் வார்த்தைகளின் சத்தத்தை கேட்டார்கள்; ஆனால் அவர்கள், ஒரு உருவத்தையும் காணவில்லை’ என்கிறது விவிலியம்.

அடுத்ததாக, இறைவன் எலியா தீர்க்கதரிசியிடம் பேசியதை காண்போம். இறைவன் எலியாவிடம், ‘எனக்கு முன்னால் மலையின் மேல் நில் அப்பொழுது நான் உன்னை கடந்து செல்வேன்’ என்றார். பிறகு ஒரு பலமான காற்று அடித்தது. அது மலைகளை உடைப்பதுபோல் இருந்தது. பிறகு நில அதிர்ச்சி உண்டாயிற்று. அதற்குப்பின், நெருப்பு உருவானது. ஆனால், இவை அனைத்தும் இறைவன் அல்ல! நெருப்புக்குப்பின், இறைவனிடமிருந்து அமைதியான மென்மையான சத்தம் வந்தது. எலியா அந்தச் சத்தத்தைக் கேட்டதும் தன் முகத்தை சால்வையால் மூடிக்கொண்டான். குகையின் வாசலுக்கு வந்து நின்றான். பிறகு அந்தச் சத்தம் அவனிடம், ‘எலியா, ஏன் இங்கிருக்கிறாய்?’ என்று கேட்டது. எலியாவோ, ‘சர்வ வல்லமையுள்ள இறைவா!’, என்றான். எலியா இறைவனின் மென்மையான குரலைக் கேட்டான் என்றால், இறைவன் எலியாவை நோக்கி நெருங்கி வந்துள்ளார் என்று அர்த்தம். ஆனால், அவன் இறைவனை காண முடியாமல் ஒரு துணியினால் தன்னுடைய முகத்தினை மூடியுள்ளான். இதன்மூலம், பரம பிதாவாகிய அருவுரு இறைவனை ஒருவனும் தம் கண்களால் காண முடியாது என்று தெள்ளத் தெளிவாக புரிகிறது.

அடுத்து, இறை அவதாரம் பற்றி காண்போம். ஒளி தரும் நிலவின் ஒரு கல் பெயர்ந்து பூமியில் வந்து விழுவது போன்றது இறை அவதாரம். இறைவனின் ஒரு பகுதியான இயேசு இறை மகனாக புவியில் அவதரித்தார் என்கிறது விவிலியம். அந்த உண்மையான இறைவனின் உருவமாகிய இயேசு மனித உருவில் தோன்றியபோது, இறைவாக்குகளின் நிறைவைச் சுட்டிக்காட்டத் தம்மை ‘மானிட மகன்’ என்று வெளிப்படுத்தினார். இயேசு இறைவனுடைய உருவமாயிருந்தும், இறைவனுக்கு சமமாயிருப்பதை கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் உருவமெடுத்து, மனித சாயலானார். அவர் மனித உருவமாய்க் காணப்பட்டு, சிலுவையில் உயிரை விடும்வரை கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

அந்த இறைவனுக்குள் குமாரனும், பரிசுத்த ஆவியும் அடங்கும். இம்மூன்று வடிவம் உடைய ஒவ்வொருவரும் மாறாத்தன்மையையும், சர்வ வல்லமையையும் அழிவில்லாத நித்தியத்துவத்தையும் உடையவர். குமாரனும் பரிசுத்த ஆவியும் இறைவனின் ஒவ்வொரு பாகமாயிருக்கின்றார்கள் என்பது வேத வல்லுனர்களின் கருத்து. மூன்று பெயர்களில் பிரிந்திருந்தாலும் மூவருக்கும் இறை தன்மை, இறை தத்துவங்கள், இறை குணங்கள் யாவும் பொதுவானதாகும். இதனையே, இறைவனுக்கே உரித்தாகும் பண்புகள் இயேசுவுக்குரியன என்று விவிலியம் கூறுகிறது. எங்கும் வியாபித்திருக்கும் உரிமை இறைவனுக்கே உண்டு. அதாவது, இறைவனாகவும் இருப்பார், இறை அவதாரமாகவும் இருப்பார், பரிசுத்த ஆவியாகவும் இருப்பார். அதுபோல், பரிசுத்த ஆவியானவர் வல்லமை வாய்ந்த இறைவனாகவே இருக்கிறார்.

siragu aruvuruvam2

பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பது கூட்டல் கணக்கு அல்ல பெருக்கல் கணக்கு என்கிறது விவிலியம். 1 × 1 × 1 = 1.
பிதா × குமாரன் × ஆவி = ஒரே இறைவன்.

பிதா கணக்கில்லாத மக்களைத் தெரிந்துக்கொண்டார். குமாரன் அம்மக்களுக்காகத் தம் இரத்தஞ்சிந்தினார். பரிசுத்த ஆவியானவர் அவர்களை உயிர்ப்பிக்கிறார் அல்லது பிதா உலகின் தோற்றத்திற்குமுன் நம்மைப்பெயர் சொல்லி முன் குறித்தார். குமாரன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நமக்காக மாண்டார். பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது நமக்குள் கிரியை நடப்பித்துக்கொண்டு வருகிறார். இறைவன் எனும் மரத்தின் இரு கிளைகள் குமாரனும் பரிசுத்த ஆவியும்.

தொடரும்…


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அருவம் உருவம் அருவுருவம்! (பகுதி – 27)”

அதிகம் படித்தது