செப்டம்பர் 19, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

அறிவியலே துணை (கவிதை)

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Mar 21, 2020

siragu corona1

 

புயலுக்குப் பின் அமைதி என்பர்

இங்கோ ஒரு பெரும் புயல்

மௌனமாகச் சுழன்றடிக்கிறது

வலியும் வேதனையும்

நாளை வரலாறு பதியும்

அதைப் படிக்க

நாம் இருப்போமா நாளை  ?

 

தேவையான பொருட்களனைத்தும்

தேவைக்கு மீறி அள்ளப்படுகின்றன

ஒரு சிறு குடும்பத்திற்கு எட்டு

லிட்டர் எண்ணெய்;இருபது கிலோ அரிசி

நவுட்டப்படுகிறது ;

 

ஒரு நுண் கிருமி நுரையீரலோடு

சண்டையிட்டு மரணம் தர -இங்கோ

வீதிகளில் மக்கள் துவக்கிகளோடு

மலம் துடைக்கும் காகிதத்திற்குச்

சண்டையிடுகின்றனர் ;

 

கைகளைச் சுத்தம் செய்யுங்கள்

என்றது தான் தாமதம்

கைகழுவும் வழலைகள்

கைக்கு அகப்படா விலையில் …

 

துப்புரவுத்  தொழிலாளர்கள்

மருத்துவர்கள்

செவிலியர்கள்

உறக்கம் மறந்து கொள்ளை

நோய் விரட்டப் போராட

சில அரசோ கைதட்டல்

விளையாட்டை அறிவித்து

வேடிக்கை காட்டுகின்றன

ராமநவமிகள் கண்டிப்பாக

நடந்தே தீருமாம்

ஒரு பெரும் மரண

அலைக்கு ஒரு நாடு தயாராகிறது

 

ஆறடிக்குள் மக்களைப் புதைக்க

அப்படியென்ன

ஆர்வமோ பாசிசவாதிகளுக்கு?

 

உலகம் கையளவில் என்றனர்

நுண்கிருமி பக்கத்துத் தெருவில்

ஒளிந்து விளையாடுவதைக்  கண்டு

உறைந்து நிற்கிறோம் ;

 

தும்மல்வரின் பிளேஸ் யூ

என்ற உதடுகள் இன்று வரும்

தும்மலைக் கேட்டு

அல்பாயுசு என பதறுகின்றன;

இருமலைக் கேட்டால்

இரண்டடி ஓடுகின்றன;

 

எல்லாவற்றுக்கும் எங்களையே

குற்றம் சொல்வீர்களா?

கோழி கூட்டங்கள்

“இதெல்லாம் ரொம்ப தப்புங்க”

என்று கொக்கரித்துக் கொண்டிருக்கின்றன ;

 

நுண் கிருமிக்கும்

அன்பேயென  காதல்

உரைகள் முகநூலில் உலாவரக்

காதல் உயிர்வாங்காமால் விடுமா ?

என்றலைகிறது கொரோனா

 

இன்னும் ஒரு இருபதாண்டுகள்

வாழ்ந்திருக்க வேண்டியவர்களைப்

பாடை கட்டி அனுப்பும் போது

நாலடியார் உரைக்கும்

நிலையாமை புலப்படுகிறது;

 

நிலையாமை எல்லாம் பொருளுக்கு

முன் நில்லாமையென

சவப்பெட்டி செய்வோர்

முனைப்பாய்;

 

ஆறுதலுக்கான கடைசி

புகலிடம் கடவுளாம்; அந்தக்

கடவுளர்கள் இப்போது விடுப்பில்;

அறிவியலும் விஞ்ஞானமும்

கொரோனாவை விட்டோமா

பாரென விடுப்பில்லாது

இயங்குகின்றன;

அறிவியலே துணை  !!

 

 

 

 

 

 

 


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அறிவியலே துணை (கவிதை)”

அதிகம் படித்தது