சனவரி 28, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அறிவு (சிறுகதை)

மாதவன்

Jan 10, 2015

 

arivuடாக்டர் கைபேசியை துண்டித்துவிட்டு இவனைப்பார்த்து கேட்டார்.

“எஸ் சொல்லுங்க ”

இவன் தயக்கமாய் தொடங்கினான்,

“எப்படி சொல்றது டாக்டர். எண்ணங்கள்தான் என் பிராப்ளம்”

டாக்டர் கண்ணில் குழப்பம் தெரிந்தது.

இவன் தொடர்ந்தான்,

“அதாவது டாக்டர், எனக்கு எண்ணங்கள் தொடர்ந்து வந்துகிட்டேயிருக்கு. உதாரணத்திற்கு நீங்கள் போன்பேசின இந்த அரைநிமிடத்தில், எனக்குள்ள பல்லாயிரக்கணக்கான எண்ணங்கள் வந்துட்டு போயிடுச்சி. எப்பவும் ஏதாச்சும் தகவல்கள் மனசில ஓடிகிட்டேயிருக்கு. இதோ இந்த போர்டு, மனநல ஆலோசகர்னு எழுதியிருக்கிற இந்த போர்டுக்கு பயன்பட்டிருக்கிற பலகை முதன்முதலாய் எப்ப பயன்பாட்டுக்கு வந்தது. இந்த மேஜையின் நீள அகலங்கள் எத்தனை, உங்க கண்ணோரம் இருக்கிற சுருக்கங்கள் வச்சி உங்க வயசு, சுமாரா ஒருநாளைக்கு நீங்க சந்திக்கிற நோயாளிங்க எத்தனைங்கிற தோராயமான கணக்கு, இதுமாதிரி தொடர்ந்த தகவல்களா என் மனசில ஓடிகிட்டேயிருக்கு டாக்டர்”

டாக்டர் நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டார்.

“ஐசீ. எப்பயிருந்து உங்களுக்கு இந்தமாதிரி ஆரம்பிச்சிது ?”

“ரொம்பக்காலாமா இது இப்படித்தான் நடக்குது டாக்டர். ஆனா சமீபமா என்னால சமாளிக்கமுடியாத அளவுக்கு தொடருது.”

“இது பொதுவா எல்லாருக்கு இருக்கக்கூடியதுதான். இதுல பயப்பட ஒன்னுமில்ல. கொஞ்சம் ஹைப்பர் ஆக்டிவ்வா இருக்கிறவங்களுக்கு இது சகஜம்தான்.”

“இல்ல டாக்டர் உங்களுக்கு புரியல. என்னன்னா பார்க்குற எல்லா விஷயத்திலயிருந்தும் ஏதாச்சும் தகவல்கள் ஞாபகத்துக்கு வருது.”

அவன் மிகுந்த படபடப்பானான்.

“ஈசி ஈசி. ரிலாக்ஸ். மொதல்ல நாம ஒரு காஃபி சாப்பிடுவோம்.”

காஃபி குடிக்கும்போது அவன் சொன்னான், இந்தியாவில மொதமொத காஃபி பயிர்பண்ணது சிக்மகளுர்லதான் டாக்டர். கர்நாடகால இருக்கு.”

“இஸிட் ? இன்ட்ரஸ்டிங். என்ன வேல பார்க்கிறதா சொன்னிங்க ?”

“இன்னும் சொல்லலை. மத்திய உள்துறை அமைச்சகத்துல.”

“குட். வேற என்னவெல்லாம்.. ஐமீன், வேற எந்தத்துறை பத்தியெல்லாம் உங்களுக்குத்தெரியும் ?”

அவன் உற்சாகமானான்.

arivu2“நிறைய டாக்டர். சரித்திரம்னு எடுத்துகிட்டா, பன்னிரண்டாம் நூற்றாண்டுல பிசினஸுக்காக வந்த கப்பலை ஓட்டிக்கிட்டுவந்த ஒரு மாலுமி எழுதியிருந்த டைரிக்குறிப்புல, சென்னையப்பத்தின ஒரு விஷயத்தை படிச்சிங்கன்னா அசந்துடுவீங்க. சரி சரித்திரம் வேணாம். விஞ்ஞானத்தை எடுத்துகிட்டா, ஆர்க்கிமிடிஸ்ல இருந்து ஐன்ஸ்டைன் வரைக்கும், டார்வின்லயிருந்து கலிலியோவரை. ஏகப்பட்ட புத்தகங்கள் ஏகப்பட்ட தகவல்கள். என்னைத்தெரிஞ்சவங்க எல்லாருமே என்னை ஒரு நடமாடும் கம்ப்யூட்டர்னுதான் சொல்லுவாங்க டாக்டர்.”

அவன் குரலில் பெருமையிருந்தது.

“வெரிகுட். இது நல்லவிஷயம்தானே? இவ்ளோ ஞாபகசக்தி இருக்கிறதும் நல்லதுதான். எதைப்பத்திக் கேட்டாலும் டக்குன்னு உங்களால பதில் சொல்லமுடியும். அப்புறம் என்ன பிரச்சனை?”

“ஒரு மனுஷன் கம்ப்யூட்டரா இருக்கிறது அத்தனை சுலபமாயில்லை டாக்டர்.”

டாக்டர் கொஞ்சம் சிரித்துவிட்டு சொன்னார்.

” இந்த உலகம் ரொம்பப்பெரிசு. இங்க உங்களுக்குத் தெரியாத பலவிஷயங்கள் இருக்கு”.

இப்போது அவன் சிரித்துக்கொண்டே சொன்னான்.

“ஆனா அதெல்லாம் என்னைத் தொல்லை பண்ணலியே டாக்டர். தூங்கும்போதுகூட… தூக்கம்னா என்ன? அப்ப நமக்கு என்ன ஆவுது? தூங்கும்போது நான்கிறது யாரு ? இப்படி எனக்குத் தெரியாததெல்லாம் கேள்விகளா வருது”.

டாக்டர் கொஞ்சம் பேசாமலிருந்தார். பிறகு,

“ஒன்னு பண்ணுங்க. உங்க மனசுல தோனுறதெல்லாம் ஒரு பேப்பர்ல எழுதுங்க. கொஞ்சநேரத்துல எல்லாம் சரியாகி அமைதியாகிடும்”.

“அய்யோ டாக்டர். ஆனா நான் அதையும் முயற்சிபண்ணிப் பார்த்துட்டேன். பேப்பர் பத்தின பேனா பத்தின தகவல்கள், எழுத்து வகைகள் வடிவங்கள் பத்தின தகவல்களா வந்து குவியுது. அரைப்பக்கம் கூட எழுதமுடியல”.

டாக்டர் அவனை விசித்திரமாக பார்த்தார்.

“உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா”?

“ஆச்சுங்க. நாலுவயசுல ஒரு பெண்குழந்தை. மீரான்னு பேரு. பழங்காலத்து மனுஷங்க நீளமா பேர் வச்சிக்கிறதுதான் நாகரீகம்னு நெனைச்சாங்க. ஆனா இப்பவெல்லாம்.. சாரி சார். பாருங்க டாக்டர் இப்படித்தான் “.

“இட்ஸ் ஆல்ரைட். நீங்க யோகா தியானமெல்லாம் ட்ரை பண்ணுங்க. நிச்சயம் ஒரு மாற்றம் வரும்.”

“தப்பா நெனைக்காதீங்க டாக்டர். இந்து மதத்துலயிருந்து பவுத்தம் சமணம் கிறிஸ்தவம்னு எல்லா மதத்து தத்துவம் கொள்கை கோட்பாடெல்லாம் மனப்பாடம் பண்ணிவச்சிருக்கேன். ஸென்பத்தி, தாவ் பத்தி, பதஞ்சலி சிவவாக்கியர், திருமூலர் பட்டிணத்தார் பாட்டெல்லாமே எனக்கு அத்துப்படி டாக்டர். இன்னும் சொல்லப்போனா நார்மலா இருக்கிறதைவிட, கண்மூடி தியானம்னு  உக்கார்ந்தா தாங்கமுடியாதபடி எண்ணங்களும் தகவல்களும் கேள்விகளும் அலையலையா வருது. காட்டில வேட்டையாடினப்பவோ, குகைமனுஷனா இருந்தப்பவோ கற்காலத்துலயோ யாருமே தியானம்லாம் செய்தமாதிரி செய்தியில்ல டாக்டர். நவீன நாகரீக உலகத்துல மனுஷங்களைத் துரத்தும் பொய்களும் சூழ்ச்சியும் அதால வற நீசத்தனங்கள்ல இருந்தும் தப்பிக்கத்தான், அதுக்கான புகலிடமாதான் இந்த தியானமையங்கள் ஆன்மீக கூடாரங்கள் எல்லாமேங்கிறது என் அபிப்பிராயம்.”

டாக்டர் கண்கள் மூடித்தலைகுனிந்து விரல்களால் புருவமத்தியில் தேய்த்து யோசித்தார். அவர் சந்தித்த கேஸ்களில் இவன் அதிக வித்தியாசமாயிருந்தான். ஒரு பேப்பரையெடுத்து மளமளவென எழுதினார்.

“இதுல இருக்கிற மருந்துங்களை எடுத்துக்கங்க. ஒருவாரம் கழிச்சி வந்து என்னை பாருங்க”.

அவன் அந்த காகிதத்தை சிரத்தையின்றி வாங்கிப்பார்த்தான். அதில் எழுதியிருந்த பெயர்களை படித்துவிட்டு அந்த மருந்துகள் பற்றிய விபரங்கள் தயாரித்த நிறுவனம்சார்ந்த தகவல்கள் வந்தன.

” பொதுவாக டாக்டர்கள் தரும் மருந்துகளால் தற்காலிகமாக குணமாவதுபோல தெரிந்தாலும் அது உண்மையில் ஒரு தோற்றமயக்கம் மட்டுமே அப்படின்னு ஒரு ஆர்ட்டிக்கிள்ல படிச்சது ஞாபகம் வருது டாக்டர்.”
என்றபடி அந்த ப்ரிஸ்க்ரிப்ஷனை டேபிளில் வைத்துவிட்டு அவரையே கூர்ந்து பார்த்தான். பிறகு சொன்னான்,

” எனக்குத்தேவை இந்த மருந்துகளல்ல டாக்டர். தீர்வு. தற்போதைய மருத்துவ விஞ்ஞானத்துல ஞாபகங்களை சுத்தமா தொடைச்செறியற மாதிரி வசதியிருக்கான்னு தெரிஞ்சிக்கதான் இங்க வந்தேன். உங்களுக்கு என் பிராப்ளம் புரியுதா ? ஒரு கடலைப்பார்த்து என்னால ஆச்சரியப்பட முடியல. கடல்சார்ந்த கப்பல்சார்ந்த தகவல்களா தலைக்குள்ள ஓடுது. ஒரு மலையை என்னால ரசிக்க முடியல. மலைகள்பத்தின விஷயங்களா மண்டையக்கொடையுது. உங்களுக்கு தெரியுமா டாக்டர். அசைவில்லாம இருந்தாலும் மலைகள் வளர்ந்துகிட்டேதான் இருக்குதாம். எங்கேயோ படிச்சேன். இப்படிப்பட்ட இடைஞ்சலெல்லாம் இல்லாம இந்த உலகத்தை, இப்பதான் பொறந்த குழந்தைமாதிரி எல்லாத்தையும் அதிசயமா பார்க்கவிரும்புறேன் டாக்டர். குழந்தைகள் எத்தனை பாக்கியசாலிங்க தெரியுமா, ஒரு பட்டாம்பூச்சியும் சில கிளிஞ்சல்களும் அவங்களை எவ்ளோ பரவசப்படுத்திடுது. அது மாதிரி ஒரு குழந்தையா நானும் மாற ஏதாச்சும் வாய்ப்பிருக்கா டாக்டர்? தெரிந்ததை பற்றிய அறிவும் தெரியாதை பற்றிய் கேள்விகளுமா நிரம்பியிருக்கிற என் மூளையை உங்களால சுத்தம் செய்யமுடியுமா டாக்டர். மூளைக்கு வலி உணர்ச்சியே இல்லைன்னு சொல்றாங்களே அது உண்மைங்களா? நான் படித்த புத்தகங்களிலிருந்தெல்லாம் எனக்கு விடுதலை கிடைக்குமா டாக்டர்?

அவன் க்ளினிக் வாசலிலிருந்த மரபெஞ்சில் காத்திருந்தான்.

எதிரில் ஒரு பெண் தன் குழந்தைக்கு இட்லி ஊட்டிவிட்டுக்கொண்டிருந்தாள்.

இந்த இட்லிமாதிரியே கிபி ஆறாம் நூற்றாண்டில் வேறொரு புளித்த தின்பண்டம் புழக்கத்தில் இருந்திருக்கிறது..


மாதவன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அறிவு (சிறுகதை)”

அதிகம் படித்தது