ஜூலை 4, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

அல்கட்ராஸ் தீவில் . . .(பகுதி-2)

தேமொழி

Oct 14, 2017

II. சிறைச்சாலை சுற்றுலா:

Siragu alkatraas2-1அல்கட்ராஸ் தீவிற்குச் சுற்றுலா செல்ல விரும்பினால் சில முன்னேற்பாடுகள் தேவை, கலிபோர்னியா மாநிலம் நல்ல தட்பவெப்பநிலை உள்ள இடம்தானே என நினைத்து சாதாரண உடைகளுடன் வர நினைத்தால் குளிரில் நடுங்க வேண்டிய நிலையும் ஏற்படலாம். வானிலை எப்படி இருக்கக்கூடும் என்று நிர்ணயிக்க முடியாத ஒரு பகுதி சான் பிரான்சிஸ்கோ நகர். “நான் அறிந்த மிகவும் குளிரான ஒரு காலம் சான் பிரான்சிஸ்கோவில் நான் வசித்த கோடைக்காலம்” என மார்க் ட்வைன்   (“The coldest winter I ever saw was the summer I spent in San Francisco”― Mark Twain) கூறியதாகவும் சொல்லப்படுகிறது. எனவே குளிராடை கைவசம் இருப்பதும், தேவையினால் நீண்ட நடைப் பயணம் செய்ய வசதியான காலணியும் இருப்பதும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவசியம். வாடகை ஊர்திகளையும், நகரப் பேருந்துகளையும் கொண்டு தீவுக்கான ‘படகுத்துறை எண் 33′ இருக்கும் புகழ்பெற்ற ‘ஃபிஷெர் மேன்ஸ் வார்ஃப்’ (Fisherman’s Wharf) பகுதிக்கு வருவதே சிறந்த வழி. சொந்த ஊர்தியில் பயணித்து சான் பிரான்சிஸ்கோ வந்த பிறகு அதை நிறுத்த இடம் தேடுவதோ மிகப்பெரிய தலைவலி.

மேலும், அல்கட்ராஸ் தீவு சுற்றுலாவுக்கான அனுமதிச் சீட்டை இணையம் வழி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். நாளொன்றுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிலேயே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதாலும், பார்வையாளர் கூட்டம் அதிகமிருப்பதாலும் முன்பதிவு செய்வது ஏமாற்றத்தைத் தவிர்க்கும். அரைமணி நேரத்திற்கு ஒரு முறை நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களுடன் படகுத்துறையில் இருந்து படகுகள் தீவை நோக்கிச் செல்லும். மேலும் படகில் அனுமதிக்கும் முன்னர் அரசு வழங்கிய அடையாள அட்டையையும் காட்டத் தேவை. தீவின் கடைசிப் பார்வையாளர் நேரம் வரை அங்கு எவ்வளவு நேரமானாலும் தங்கலாம். தீவைச் சுற்றிப்பார்க்க குறைந்தது மூன்று மணி நேரமாவது தேவை. அதனால் சுற்றிப் பார்த்து முடித்த பிறகு அவரவர் விருப்பம் போல கிடைக்கும் அடுத்த படகைப் பிடித்து சான் பிரான்சிஸ்கோ வரலாம். தீவில் மலர்களை இலைகளைப் பறிப்பது போன்ற செடி கொடி மரங்களுக்குத் தீங்கு செய்யும் நடவடிக்கைகளையும், பறவைகளுக்கு உணவளிப்பது போன்ற செய்கைகளையும் செய்ய அனுமதியில்லை.

Siragu alkatraas2-2

அல்கட்ராஸ் தீவில் பார்வையாளர்களைக் கவரக்கூடிய இடங்கள், கட்டிடம் 64 (Building 64) என்னும் ஊழியர் குடியிருப்பாக முதலில் கட்டப்பட்ட ஒரு தொடர் அடுக்குமாடிக் கட்டிடம், மூன்றடுக்குச் சிறைச்சாலை (Main Cellhouse), சிறைக்காவல் தலைமை அதிகாரியின் மாளிகை (Warden’s House), கலங்கரை விளக்கம் (Lighthouse), உயர்மட்டக் குடிநீர்த் தொட்டி (Water Tower), காவலதிகாரிகள் குடியிருப்பு (Officers’ quarters), அதிகாரிகள் சங்கம் (Officer’s Club/Social Hall), ஒரே ஒரு முறைகூட சவப்பரிசோதனையை மேற்கொள்ளாத ஒரு பிணவறை (Morgue), கைதிகளுக்கான பொழுதுபோக்குத் திடல் (Recreation Yard), புகைபோக்கியுடன் கூடிய மின் உற்பத்தி நிலையம் (Power House), பழைய மற்றும் புதிய தொழிற்கூடங்கள் (Model Industries Building and New Industries Building)எனப் பல பகுதிகள் அல்கட்ராஸ் தீவில் உள்ளன. பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் வரைபடத்தின் உதவியுடன் இப்பகுதிகளை அடையாளம் கண்டு பார்வையிடலாம்.

Siragu alkatraas2-3

சான் பிரான்சிஸ்கோ நகரின் படகுத்துறையில் இருந்து ஒரு மைலுக்கும் அதிக தூரத்தில் கடலில் இருக்கும் அல்கட்ராஸ் தீவுக்குப் படகில் சென்று இறங்கியதும், படகுத்துறையில் இருப்பது கட்டிடம் 64. இக்கட்டிடத்தில் சிறை, அதன் வரலாறு குறித்த நூல்களும், நினைவுப் பொருட்களும் விற்பனைக்கு உள்ளன. இதன் முகப்புப் பகுதியில் தீவைக் குறித்து அறிமுக உரை வழங்கும் பார்வையாளர்களை ஆற்றுப்படுத்தும் வழிகாட்டியின் உரைக்குப் பிறகு அனைவரும் முதலில் பார்க்க விரும்பும் இடம் சிறைச்சாலைதான்.

Siragu alkatraas2-4

மலைக்கோவில்களின் சரிவான, யானையடிப்பாதை என நாம் அழைக்கும் சாலை போன்ற மலைப்பாதையில் கால் மைல் தூரம் ஏறி தீவின் உச்சியில் அமைந்த சிறைக்குச் செல்லலாம். இது 130 அடி உயரம் அல்லது ஒரு 13 மாடிக் கட்டிடம் ஏறும் உயரம். இப்பாதையில் ஏறுவதற்குச் சிரமப்படுபவர்களுக்கு சிறிய ஊர்தியும் (Tram) உதவக் காத்துள்ளது.

சிறைச்சாலையில் நுழைந்தவுடன் ஒலிப்பதிவு செய்த வழிகாட்டி உதவியுடன் சிறையைச் சுற்றிப்பார்க்கலாம். ஒலிப்பதிவு பல மொழிகளிலும் கிடைக்கிறது. இதற்கான தனிக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை, அனுமதிக் கட்டணத்தின் பகுதியே ஒலிப்பதிவு சுற்றுலா சேவை. இதைப் பயன்படுத்தினால் சுற்றுலாப் பயணக் கும்பலின் பேச்சொலியில் விளக்கவுரைத் தகவல்கள் சரிவரக் கேட்காமல் போகுமே என்றக் கவலையின்றி, அவரவர் நடை வேகத்திற்கேற்ப சிறைச்சாலையைச் சுற்றிவரலாம். அதனால், முன்னாள் சிறைக் கைதிகள், சிறைக் காவலர்கள் சிலர் அளிக்கும் விளக்கங்களுடன் கூடிய ஒலிப்பதிவுக் கருவியை ஒரு வரவேற்பு மாலை போல நம் கழுத்தில் சுற்றுலாத்தல ஊழியர் நமக்கு மாட்டிவிடும் பொழுது ஏற்றுக் கொள்வது நல்லது. அந்த ஒலிப்பதிவில் கைதிகளின் சிறை வாழ்க்கை அனுபவங்களும், காவலர்களின் குறிப்புகளும், தப்பிக்கும் முயற்சிகள் நிகழ்ந்த இடங்கள், புகழ்பெற்ற கைதிகள் இருந்த அறைகள் பற்றிய குறிப்புகள் எனத் தேவையான தகவல்கள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வழிகாட்டப்படும்.

Siragu alkatraas2-5

அமெரிக்க சிறைத்துறை (Bureau of Prisons) வழங்கும் புள்ளி விவரங்களின்படி, சிறையின் கொள்ளளவு 336 கைதிகள் வரை ஏற்கும் என்றாலும், எந்த ஒரு காலத்திலும் சராசரியாக 260 வரை கைதிகள் அல்கட்ராஸ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். அதிக எண்ணிக்கையாக 302 கைதிகளும், குறைந்த அளவு 222 கைதிகளும் இருந்துள்ளனர். இது அனைத்து அமெரிக்க மத்தியசிறைச்சாலைக் கைதிகளின் எண்ணிக்கையில் 1% மட்டுமே. பல சிறைகளில் வாழ்ந்த அனுபவம் உள்ள கைதிகளின் கருத்துப்படி, அல்கட்ராஸ் சிறையின் அறைக்கு ஒரு கைதி என்ற தங்கும்வசதியும், உணவின் தரமும் பாராட்டப்பட்டுள்ளது. இச்சிறைச்சாலை மத்தியச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டதில் இருந்து செயல்பட்ட 29ஆண்டுகளில் 1,545 கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். இவர்களில் சிலர் ஓரிரு முறைக்கு மேலும் தண்டனை பெற்றுத் திரும்ப வந்துள்ளார்கள். அவர்களுக்கு அளித்த கைதி எண் புதிதாகவும் கொடுக்கப்பட வேண்டுமா, அல்லது பழைய எண்ணே கொடுக்கப்பட வேண்டுமா என்ற சரியான விதிமுறைகள் பின்பற்றப்படாததால் 1,576 பேர் இருந்தார்கள் என்ற எண்ணிக்கைக் குழப்பமும் உள்ளது. கைதிகள் சராசரியாக அல்கட்ராஸ் சிறையின் தண்டனைப் பெற்ற காலம் எட்டு ஆண்டுகள்.

Siragu alkatraas2-6

சிறையில் முகப்பு வாயிலுக்கு இருபுறமும் நிர்வாகப் பிரிவும், அதன் அலுவலக அறைகளும், கைதிகளைச் சந்திக்க வரும் பார்வையாளர் அறையும் அமைந்துள்ளன. நன்னடத்தை உள்ள கைதிகள் மாதம் ஒருமுறை அவர்களைக் காணவரும் பார்வையாளர்களைச் சந்திக்கலாம். கண்ணாடி ஜன்னல் வழியே, இண்டர்காம் உதவியுடன் உரையாடலாம்.ஆனால் சிறையைக் குறித்தோ, நடப்புலக செய்திகளையோ பேச அனுமதி கிடையாது. உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டன. இந்நாளில் சிறையின் அலுவலகம், அக்காலத்தில் சிறைச்சாலையாக இயங்கிய பொழுது இருந்த அதே அமைப்பில் காலத்தில் உறைந்த நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முகப்புக்கு அருகில் வெளியே கலங்கரை விளக்கமும், கடலும் சான் பிரான்சிஸ்கோ நகரும் பார்வைக்கு விருந்தாக அமையும். ஆனால் இதைக் காண வழியில்லாத வாழ்க்கைமுறையே சிறைக்கைதிகளின் நிலை.

அலுவலகப் பகுதியைக் கடந்த பின்னர் மிகப் பெரிய தளம் முழுவதும் 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு கம்பிகள் பதித்த சிறை அறைகள் வரிசையாக உள்ளன. இவற்றின் இடையே உள்ள நடை வழிகளுக்கு மிக்சிகன் அவென்யூ, பிராட்வே, பார்க் அவென்யூ என்ற அமெரிக்க சாலையின் பெயர்களைப் போன்ற பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இவை ஏ, பி, சி, டி என்ற நான்கு பிளாக்குகள் (A, B, C, D Blocks)என்ற பிரிவுகளைக் கொண்டது. பி, சி பகுதிகள் நீண்ட பகுதிகள். இவற்றின் மையப் பகுதிகள் அனைத்துப் பகுதிகளுக்கும் எளிதில் சென்று வர ஏதுவாக குறுக்குச் சந்துகளைக் கொண்டுள்ளன. ஒரு வரிசை சிறை அறைகளின் பின்சுவருக்குப் பிற்பகுதியில் மற்றொரு சிறை வரிசையின் பின்புறச் சுவர் அமைந்துள்ளது. இரு பின்புறச் சுவர்களுக்கும் இடையே மிகக் குறுகிய பராமரிப்பு இடைகழி (utility corridor) அமைக்கப்பட்டு அதன் வாசல் இரும்பாலான கதவுகளைக் கொண்டிருக்கிறது. சிறையில் பிராட்வே பகுதியே அதிகம் முக்கியத்துவம் பெற்ற பகுதி.

Siragu alkatraas2-7

ஏ, பி, சி பிரிவுகளின் சிறை அறைகள் வழக்கமான முறையில் முன்புறம் கம்பி வைத்த அறைகள். ஒருவர் மட்டும் தங்கும் இந்தச் சிறை அறையில், நீர் வரும் குழாயுடன் கூடிய கழுவும் தொட்டி ஒன்றும், கழிவுக்கலமும் (washbasin and toilet) பின்சுவரில் பதிக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டுச் சுவரை ஒட்டியபடி படுக்க நீண்டதொரு படுக்கையும், அதற்கு எதிரே எதிர் சுவருடன் இணைக்கப்பட்ட சிறிய மடக்கு மேசைகள் இரண்டும் உள்ளன. இந்தச் சிறிய அறைகள் (5 அடி அகலம், 9 அடி நீளம், 7 அடி உயரம்) அடுத்தடுத்து தொடராக அமைந்தவை. சிறையின் டி-பகுதி தனிமைச் சிறைகளைக் கொண்டது. அப்பிரிவில் 6 சிறு அறைகள் ஒளி புகாத வண்ணம் தடித்த இரும்புக் கதவுகளைக் கொண்டவை. கதவை மூடினால் அறை முற்றிலும் இருளாகிவிடும் இத்தகைய ஒளியற்ற தனிமையில், குறுகிய தனிமைச்சிறை அறையில், இடையில் உள்ள உள்ளாடை மட்டுமே அணிந்து, குளிரில் வெறும் தரையில் அமர்ந்திருக்கலாம், அல்லது படுத்திருக்கலாம். சுவரில் சாய்ந்தாலும் உலோகத்தினால் ஆன சுவரின் குளிர் தாக்கும். நாளின் 24 மணிநேரமும் அதே அறை, உணவும் அறைக்கே வரும். இரவா பகலா என அறிய முடியாத வகையில் நாட்கள் கடக்கும். சிறை விதிகளை மீறுபவர்களை, தப்ப முயல்பவர்களைத் தண்டிக்க இந்த அறைகள் பயன்பட்டன. இதிலிருந்து வெளிவரும்பொழுது வாழ்க்கையே வெறுத்து குற்றங்களை நினைத்துப் பார்க்கவும் விரும்பாத நிலை அனைவருக்கும் வரவேண்டும் என்பதே தண்டனையின் நோக்கம்.

Siragu alkatraas2-8டி-பகுதி அருகே ஒரு சிறிய நூலகமும் உள்ளது. அங்கே இராணுவம் இருந்த காலத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட நூல்களை சிறைக்கைதிகள் படிக்கலாம். ஒவ்வொரு கைதி சிறைக்கு வரும் பொழுதே நூல்களின் பட்டியலும் நூலக அட்டையும் கொடுக்கப்படும். தங்களுக்கு வேண்டிய நூலைக் குறிப்பிட்டு நூலக அட்டையுடன் இணைத்து காலை உணவிற்குச் செல்லும்பொழுது குறிக்கப்பட்ட பெட்டியில் போட்டுவிட்டால்,   நூலகர் அறைக்கே நூலைக் கொண்டு வந்து தருவார். பத்திரிக்கைகளும் தேவையானவற்றை வரவழைக்கலாம். ஆனால் அதில் உள்ள பாலியல், வன்முறை, குற்றங்கள், ஆயுதங்கள் குறித்த பகுதிகள் கிழிக்கப்பட்ட பின்னரே கொடுக்கப்படும். நூலகரின் முடிவே இறுதியானது. இதுவும் நன்னடத்தை கொண்டவருக்கு மட்டுமே கிடைக்கும் சலுகை.

Siragu alkatraas2-9

சிறைச்சாலையின் முன்பக்க பின்பக்க சுவர்கள் ஆயுதக்கிடங்குகள், துப்பாக்கிகள் கொண்டவை. கலவரம் ஏற்பட்டால் கண்ணீர்ப்புகை குண்டுகளைத் தொலைவில் இருந்து இயக்கி வெடிக்க வைக்கவும் வசதி அமைந்திருந்தது. சிறையை ஒலிப்பதிவு வழிகாட்டியுடன் சுற்றி வரும்பொழுது முன்னாள் சிறைக் கைதிகளும் காவலர்களும் தங்கள் அனுபவங்களைப் பகிரும் பகுதிகள் உண்டு. அதில் சி-பகுதியின் முடிவில் உள்ள அறையில் கைதியாக இருந்தவர், புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்கள் ஒரு மைல் தொலைவில் இருக்கும் சான் பிரான்சிஸ்கோ நகரில் கொண்டாடப்பட்டு விழா பாடல்கள், உற்சாகக் கூக்குரல்கள் போன்றவை காற்றில் மிதந்து வரும்பொழுது தனிமையாகச் சிறையில் அடைபட்டிருக்கும் நிலையைக் குறிப்பிடுவார். அவரது குரலில் தெரியும் வேதனை அது போன்று எண்ணியிருந்த சிறைக்கைதிகளின் நிலையக் குறித்து சற்றே கழிவிரக்கம் கொள்ளச் செய்யும்.

Siragu alkatraas2-10சிறைச்சாலையுடன் உணவுவிடுதியையும் சமையலறையையும் கொண்ட மற்றொரு பகுதியை இணைக்கும் குறுகிய வழி ‘டைம் ஸ்கொயர்’ (“Times Square”) என அழைக்கப்பட்டதாம். இந்த நுழைவாயில் மேலே ஒரு கடிகாரம் மாட்டியிருப்பதே இதற்குக் காரணம். நன்னடத்தை கொண்ட கைதிகளுக்குச் சிறைச்சாலையில் பணிபுரியும் வாய்ப்பும் சலுகையாகக் கொடுக்கப்பட்டது. சிறை மூடப்படுவதற்கு முன்னர் இறுதியாகத் தப்பிக்க முயன்ற கைதிகளும் சமையலறையில் பணிபுரிந்தவர்களே. மெழுகு தடவிய ஒரு சாதாரண நூலில் உராய்வை அதிகரிக்க வேதிப்பொருள் தூவி, தினமும் கிடைக்கும் கண்காணிப்புக் குறைவான நேரங்களில் ஜன்னலின் கம்பியை நூலில் செய்த இரம்பத்தினாலேயே சிறிது சிறிதாக அறுத்து வைத்திருந்து, வெளியேறும் நாளில் கம்பியை வளைத்துத் தப்பியோடிய கைதிகள் உள்ளனர். இவர்கள் பிறகு பிடிபட்டார்கள் என்பதும் வேறுகதை. இங்கு உணவு உண்ணும் வேளையில் யாரும் பேசுவது தடுக்கப்பட்டாலும், தப்புவதற்கான திட்டங்களும் இரகசியக் குரலில் உணவறையில் தீட்டப்பட்டது.

 Siragu alkatraas2-11Siragu alkatraas2-12

காலை மதியம் மாலை என மூன்று நேர உணவுகளும் சிறையின் குறிப்பிட்ட சட்ட திட்ட விதிகளின்படி வழங்கப்பட்டன. அவ்வாறே என்ன வகை உணவு பரிமாறப்படும் என்பதும் கட்டுப்பாட்டில் இருந்தது. இறுதியாகச் சிறை மூடப்பட்ட நாளான மார்ச் 21, 1963 ஆண்டு வழங்கப்பட்ட காலை உணவின் பட்டியல் அறிவிப்புப் பலகையில் இன்றும் இருப்பதைக் காணலாம். ஒரே நேரத்தில் 250 பேர்வரை அமர்ந்து உண்ணக்கூடிய பெரிய கூடம் இந்த உணவறை. சிறைக் காவலர்களும் கைதிகளும் ஒருங்கே அமர்ந்து உண்ணும் உணவறையாக இது இருந்தது. உணவறையை ஒட்டியே சமையல் அறையும் உள்ளது. கைதிகள் உணவு உண்ண 20 நிமிடங்கள் கொடுக்கப்பட்டன. அந்தக் குறிப்பிட்ட நேரத்திற்குள் எவ்வளவு சாப்பிட விருப்பமோ அதை உண்ணலாம், உணவின் அளவில் கட்டுப்பாடு இல்லை. உணவை வீணாக்கினால் வழங்கப்படும் சலுகைகள் பறிக்கப்படும். ஒவ்வொரு உணவுக்கும் பிறகு கரண்டி, கத்தி என யாவும் சேகரிக்கப்பட்டு எண்ணிக்கை சரிபார்க்கப்படும். கைதிகள் அவற்றை ஆயுதங்களாக பயன்படுத்துவதைத் தடுப்பதே இந்த வழக்கத்தின் நோக்கம் என்றாலும், இவற்றைக் கடத்திச் சென்று சுவரைச் சுரண்டி கன்னம் வைத்து வெளியேறிய கைதிகளும் உள்ளனர்.

Siragu alkatraas2-13உணவறையின் மாடியில் மருத்துவமனையாகவும், ஒரு காட்சி அரங்கமாகவும் பயன்பட்ட அறையில் வாரம் ஒருமுறை கைதிகளுக்குத் திரைப்படங்கள் காட்டப்பட்டன. இப்படங்கள் ஞாயிறு அன்று இரவு சிறை ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களுக்கும் காட்டப்பட்டன. சிறையில் மீந்து போன உணவை ஊழியர்கள் தங்கள் சங்கத்திற்கு எடுத்துச் சென்று, வார இறுதி சந்திப்புகளின் பொழுது படம் பார்த்தவண்ணம் உணவைப் பகிர்ந்துண்டு களித்தனர். சிறையில் இருந்து சிறை வாழ்க்கை முறைக்குப் பழகிவிட்டு, உறவுகளைத் தொலைத்துவிட்டு, காலத்தின் போக்கில் தனித்துப்போன கைதிகளை உனக்கு இன்று விடுதலை என்று கைகுலுக்கி அனுப்பி வைக்கும் பொழுது அவர்கள் திக்கு திசை அறியாது திகைத்துப்போய், வாழ்வில் இனி என்ன செய்வது என குழம்பிப் போய் நிற்பதை ஒரு முன்னாள் கைதி கனத்த குரலில் விவரிக்கும் பொழுது நமது மனதிலும் வெறுமை சூழ்வதைத் தவிர்க்க இயலாது. அங்கு அடைக்கப்பட்டிருந்த ஒவ்வொருவரும் ஒரு கைதி எண் அல்ல, திசைதப்பி தங்கள் வாழ்வைத் தொலைத்துவிட்டிருந்தாலும் அவர்களும் நம்மைப் போன்றவர்களே என்ற உண்மை மனதில் நெருடும்.

சிறையின் இப்பகுதியுடன் ஒலிப்பதிவு வழிகாட்டி நிறைவு பெறும், ஒலிப்பதிவு வழிகாட்டியை ஒப்படைத்துவிட்டு வெளியேறி தீவின் பிற பகுதிகளையும் கட்டிடங்களையும் பார்வையிட்ட பிறகு அடுத்துக் கிடைக்கும் படகில் ஏறி சான் பிரான்சிஸ்கோ நகரை அடையலாம்.

பயணத்தின் பொழுது இந்த நீர்ப்பகுதியை நீந்திக் கடப்பது அவ்வளவு சிரமமா என்ற எண்ணம் எழுந்தால் அதற்கு விடை, ஆம், நீந்திக் கடக்க முடியும் என்று நூறாண்டுகளுக்கு முன்னரே ஒரு சிறுமி செய்து காட்டியிருக்கிறார். இந்நாட்களிலும் 1980 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும்   ‘எஸ்கேப் ஃப்ரம் அல்கட்ராஸ் ட்ரையத்தலான்’ (Escape from Alcatraz Triathlon) என்ற போட்டியில் பங்கேற்று ஒன்றரை மைல் கடலில் நீந்தி, 18 மைல் மிதிவண்டி ஓட்டி, 8 மைல் ஓடி, பயிற்சியும் உடல் வலுவும் இருந்தால் தப்பிப்பதில் தீவிர உந்துதல் உள்ள கைதிகள் கடலைக் கடந்து தப்பிப்பது பெரிய காரியமல்ல எனக் காட்டி வருகிறார்கள். அல்கட்ராஸ் தீவில் இருந்து தப்பிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் வியக்க வைப்பவையே, அவற்றை அடுத்துக் காண்போம்.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அல்கட்ராஸ் தீவில் . . .(பகுதி-2)”

அதிகம் படித்தது