சனவரி 16, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

அவசரகால நெருக்கடியை கொண்டுவர முயல்கிறதா, மத்திய மோடி அரசு.!

சுசிலா

Sep 1, 2018

Siragu avasara kaala2

பா.ச.க ஆட்சியமைத்திருக்கும், இந்த கடந்த நான்கு ஆண்டுகளாகவே நாம் அனைவரும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறோம். அனைத்து துறைகளிலும், தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. மக்கள்நல வளர்ச்சித் திட்டங்களுக்கு பதில், மக்களை பல வழிகளில் மிகவும் வாட்டிவதைத்துக் கொண்டுதானிருக்கிறது. பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்புகளிலும், பெண்கள் பாதுகாப்பிலும், சிறுபான்மையினரின் நலத்திலும், நாட்டின் வளர்ச்சி விகிதத்திலும், மதச்சார்பின்மை விசயத்திலும் மிகவும் பின்தங்கிய நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

இந்நிலையில், அரசை எதிர்த்துப் போராடுபவர்களை, குரல் கொடுப்பவர்களை ஒடுக்கப்பார்க்கிறது. உயிருக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. கைது செய்கிறது. வீட்டுக் காவலில் வைக்கிறது. ஊடகங்களை மிரட்டிப் பணிய வைக்கிறது. ஒரு சனநாயக நாட்டில் வாழும் மக்களுக்கு பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை இல்லையென்றால், அது சனநாயகத்திற்கு ஏற்படும் பெரும் ஆபத்து இல்லையா.! சில மாதங்களுக்கு முன், இதனை, உச்சநீதிமன்ற நீதிபதிகளே, நேரடியாக ஊடகங்களுக்கு தெரிவித்தார்களே. இந்த சர்வாதிகாரப்போக்கின் உச்சக்கட்டமாக அவசரநிலை பிறப்பிக்கப்படுமோ என்ற அச்சம் மக்களின் மத்தியில் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

இரு தினங்களுக்கு முன், நடந்த சம்பவங்களைப்பார்க்கும் போது நம்முடைய, இந்த சந்தேகம் மேலும் வலுக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். மகாராஷ்டிர மாநிலம் பீமாகோரேகான் என்னும் இடத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடந்த யுத்தத்தில் தலித்துகளின் மகர் ராணுவம் பெற்ற வெற்றியின் 200 ஆவது ஆண்டு விழா கடந்த ஜனவரி 1- ஆம் தேதி நடைபெற்றது. ஆங்கிலேயருக்கு ஆதரவாக அஞ்சலி செலுத்தப்படுவதாகக் கூறி, மராட்டிய மற்றும் உயர் சாதி ஆதரவாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே அஞ்சலி நிகழ்வின்போது கலவரம் வெடித்தது. இதன்பிறகு, புனே, மும்பை, அவுரங்காபாத் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் கலவரம் பரவியது அந்த நிகழ்வை தொடர்ந்து, நடந்த கலவரத்தைக் காரணம்காட்டி அதில் தொடர்பிருப்பதாக பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி தலித்துகளுக்கு ஆதரவான மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் மகாராஷ்டிர அரசின் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்சு, உள்ளிட்ட பலர் கண்டித்துள்ளனர். புகழ்பெற்ற வரலாற்றறிஞர் ரொமிலா தாப்பர் உள்ளிட்ட சிலர் உச்சநீதிமன்றத்தில், வழக்கு தொடுத்துள்ளனர். பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றமும் டெல்லி உயர்நீதிமன்றமும் இதில் இருவரது கைதுகளைத் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தியுள்ளன. பொது மக்கள் மத்தியிலும், கடுமையான கண்டனங்களை சமூக ஊடகங்களின் மூலம் பதிவு செய்யப்படுகின்றன. மத்தியில் ஆளும் பா.ச.க அரசு அப்பட்டமான தலித் விரோத போக்கைக் கடைபிடித்து வருகிறது. தலித்துகள் மீதான வன்கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இதற்காகவே, SC , ST மீதான வன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்தது மத்திய அரசு. இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவாகக் குரலெழுப்பும் மனித உரிமை ஆர்வலர்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. அவர்களையெல்லாம் மாவோயிஸ்டுகள் எனச் சொல்லி பொய் வழக்கு புனைந்து சிறையில் அடைத்ததன் மூலம் தலித்துகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க எவரும் முன்வரமுடியாதபடி தடுத்துவிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் செயல்படுகிறது, மோடி அரசு.

சமூக செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான அருந்ததி ராய், “வழக்கறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், தலித் உரிமை ஆர்வலர்கள் மற்றும் புத்திஜீவிகள் வீடுகளில் போலீஸ் ரெய்டுகள் நடந்துள்ளன. பட்டப்பகலில் மக்களை கூட்டாக சேர்ந்து கொலை செய்தவர்களை விட்டுவிட்டு, இவர்களை நோக்கி காவல்துறை திருப்பிவிடப்பட்டுள்ளதை வைத்துப் பார்க்கும்போது இந்தியா எங்கே சென்று கொண்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. கொலையாளிகளுக்கு பாராட்டுகொலையாளிகள் கவுரவிக்கப்பட்டு, பாராட்டுதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். நீதிக்காக பேசுவோர் அல்லது இந்துத்துவாவுக்கு எதிராக பேசுவோர் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். வரும் பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தான் இவையெல்லாம். இப்படி நடப்பதை அனுமதிக்க முடியாது. நாம் அனைவரும் ஒன்றாக சேர வேண்டிய நேரமிது. இல்லையென்றால், நாம் பெற்றுள்ள, அனுபவித்துவரும் சுதந்திரங்களை ஒவ்வொன்றாய் இழக்க வேண்டி வரும். இப்போது நடப்பது ஏறத்தாழ எமர்ஜென்சி காலத்திற்கு ஈடானது.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இடதுசாரி எழுத்தாளர் வரவர ராவ் ஹைதராபாத்தில் வைத்து, கைது செய்யப்பட்டிருக்கிறார். இதே போல பீமா கோரேகான் சம்பவம் தொடர்பாக எழுதும், பேசும், பல எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சமூக ஊடகங்களான, முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் முதலியவைகளையும், தங்கள் அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பதிவுகளை, நபர்களை கண்காணித்து வருகிறது. அவர்களின் கணக்குகளை முடக்குகிறது. அச்சுறுத்துகிறது. இது மட்டுமல்லாமல், ஆதார் மூலம், தனி மனித தகவல்களை முழுவதும் அறிந்துகொண்டு, மேலும் அதனை தனியார் நிறுவனங்களுக்கு தெரிவிக்கும் ஒரு இழிவான நிலையும், தற்போதைய ஆட்சியின் சர்வாதிகாரப்போக்கின் நீட்சிகளாக தான் தோன்றுகின்றன. காங்கிரசு ஆட்சியின் அவசரநிலையை விமர்சித்துக்கொண்டே, அதை விட அதிபயங்கர எமர்ஜென்சியை கொண்டுவர முயல்கிறது மத்திய மோடி அரசாங்கம்.

மதச்சார்பற்றக் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கி, மதவாத பா.ச.க ஆட்சியை ஒழித்துக்கட்ட வேண்டும். அதற்கு மக்களாகிய நாம், முழு ஆதரவு கொடுக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் சனநாயகம் பாதுகாக்கப்படும்.

நாம் எல்லோரும், மற்ற கருத்து வேறுபாடுகளை களைந்து, ஓரணியாக ஒன்று சேர்ந்து, இந்தியநாட்டின் சனநாயகத்தை பாதுகாக்க உறுதி ஏற்போம்.!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அவசரகால நெருக்கடியை கொண்டுவர முயல்கிறதா, மத்திய மோடி அரசு.!”

அதிகம் படித்தது