மே 8, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

அவளும் அவனும் (சிறுகதை)

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Apr 4, 2020

siragu coronavirus3

“டாக்டர், கொஞ்சம் சீக்கிரம் பாருங்களேன்” என்றாள் ரஞ்சித்தா. “இருங்க ஒவ்வொரு நோயாளியா தானே பார்க்க முடியும்”
“இல்ல டாக்டர் என் தோழிக்கு தலைல அடிபட்டிருச்சு ”
“சரி இருங்க வறேன் “

தலையில் பலமாக அடிபட்டிருந்தது பகுத்தறிவிற்கு. இரத்தம் வழிவதை ஒரு கைக்குட்டையால் அழுந்த பிடித்துக் கொண்டிருந்தாள். வலி அவள் கண்களில் தெரிந்தாலும் அதையும் தாண்டிய ஒரு துணிவு அவள் கண்களில் தெரிந்தது. வலியில் முனகவில்லை.

“எப்படி அடிபட்டது?” என்று கேட்டுக்கொண்டே பகுத்தறிவின் தலையில் வழிந்த இரத்தத்தைத் துடைத்து, மருந்திட்டான் முரசொலி.

“கூட்டத்துல பேசிட்டு இருந்தோம். நீட் எதிர்ப்பு மாநாடு. தீடிரென்று கலவரம். அப்போ யாரோ தலையில் அடிச்சுட்டாங்க” என்றாள் ரஞ்சித்தா.

“ஓ, போலீசிடம் சொல்லியாச்சா “

“ம்ம் “

“கட்டை கட்டும்போது தான் பகுத்தறிவைப் பார்த்தான்”

ஒரு நிமிடம் இருவரின் கண்களும் சந்தித்துக்கொண்டன.

“சரி, நான்கு நாட்கள் கழிச்சு வந்து மறுபடியும் கட்டை மாத்திட்டு போகனும், வலிக்கு மாத்திரை எழுதி தந்திருக்கேன் ”
“சரி வா பகுத்தறிவு”, என்று ரஞ்சித்தா அழைக்க, ஒரு நொடி அந்தப் பெயர் கேட்டு அவளை மீண்டும் பார்த்தான்.

இரவு ஒன்பது மணிக்கு தன் கிளினிக்கை மூடிக்கொண்டு கிளம்பினான். வீடு வந்து சேர்ந்ததும், குளித்து உடை மாற்றி வந்து இரவு உணவு உண்டான். அப்போது தொலைக்காட்சியில் நீட் தொடர்பாக நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தைப் பற்றி ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.

கண்மூடி யோசித்துக் கொண்டிருந்தான். நீட் இருந்திருந்தால் தன்னைப்போல கிராமத்தில் பிறந்த கூலித் தொழிலாளியின் மகன் மருத்துவர் ஆகியிருக்க முடியுமா?. அவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து, சத்துணவு தான் அவனுக்கு ஒருவேளை உணவு. அதில் தான் பள்ளிப்படிப்பைப் படித்து முடித்தான். கல்லூரிக்கு வரும்போது, அந்த ஆண்டு தமிழக அரசு கிராமப்புற மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு கொண்டு வந்திருந்தது. அதில் தான் அவனால் மருத்துவக் கல்லூரியில் சேர முடிந்தது.
இந்த கட்டமைப்பையே இந்த நீட் தகர்த்து விட்டதே. இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் போராடுவது? பாவம் குழந்தைகள். அனிதாவில் தொடங்கி எத்தனை மரணங்கள்? பெருமூச்சு விட்டு யோசித்துக் கொண்டிருந்தான்.
காலையில் தன்னிடம் கட்டுப் போட வந்த பெண்ணின் முகம் நினைவிற்கு வந்தது. தன் வயது தான் இருக்கும். ஆனால் சமூகத்தின் மீது அவள் கொண்டுள்ள அக்கறை அவனை வியக்க வைத்தது. அவளின் பெயரை மீண்டும் தனக்குள் சொல்லிப்பார்த்துக் கொண்டான். மெல்லியப் புன்னகையோடு உறங்கப்போனான்.

நான்கு நாட்கள் கழித்து இரவு 8 மணிக்குப் பகுத்தறிவை அவன் கிளினிக்கில் பார்த்தான். அன்று கூட்டம் குறைவாக இருந்தது. அதனால் கட்டுப் போடும் போது அவளிடம் பேச்சுக் கொடுத்தான்.

“நீங்க எதாவது இயக்கத்தில் இருக்கீங்களா?”

“ஆமாம் திராவிடர் இயக்கத்தில் இருக்கேன் “

“ஓ, அதனால தான் உங்களுக்குத் துணிச்சல் அதிகமா இருக்கு”

“ம்ம் “

“இப்ப வலி எப்படி இருக்கு?”

“பரவாயில்லை டாக்டர் “

“சரி அப்ப மாத்திரை எடுத்துக்க வேண்டாம்”

“சரி டாக்டர் , நான் வரேன் “

“சரிங்க “

இரண்டு நாள் கழித்து தன் வண்டியில் கிளினிக்கை மூடிவிட்டுச் செல்லும்போது, தன் வீட்டருகில் ஒரு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. பார்த்தவுடன் அவனுக்குப் புரிந்தது அது திராவிடர் இயக்க கூட்டம் என்று. சி ஏ ஏ சட்டத்தை எதிர்த்து, கூட்டம். மேடையில் பகுத்தறிவைப் பார்த்தான். தன் வண்டியை ஓரங்கட்டிக் கூட்டத்தைக் கவனிக்கத் தொடங்கினான். பகுத்தறிவும் பேசினாள். ஆழமான பேச்சு, தன் கருத்துக்களை அவள் கணீர் குரலில் எடுத்து வைக்கும்போது அது மக்களின் கவனத்தை ஈர்த்தது. கூட்டம் முடிந்தவுடன் பகுத்தறிவிடம் சென்றான்.

“என்ன டாக்டர் , இங்க என்ன பண்றீங்க?” என்றாள் சிரிப்புடன்

கிளினிக் முடித்து போகும்போது கூட்டத்தைப் பார்த்தேன். உங்க பேச்சக் கேட்டதில் நிறையக் கருத்துக்கள் சி ஏ ஏ பற்றித் தெரிந்துக் கொண்டேன்.
அவர்கள் நட்பு தொடர்ந்தது. இருவருக்கும் உள்ள பொதுவான கொள்கைப் பிடிப்புகள் நட்பைத் தாண்டிய அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றாலும் இருவருக்கும் பல சமூகக் கடமைகள் இருந்ததால் அதைப் பற்றிச் சிந்திக்காமல் கடந்தனர்.

வாழ்க்கை ஒரே சீராக எப்போதும் இருப்பதில்லை. சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகெங்கும் பரவிற்று. மருத்துவர் என்ற முறையில் முரசொலி தன் கடமையைச் செய்யப் பின்வாங்கவில்லை. பெருமளவில் கூட்டங்களுக்குச் செல்ல முடியவில்லை என்றாலும் மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைப் பகுத்தறிவு தன் தோழர்களோடு ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தாள்.

முரசொலி நள்ளிரவு வீட்டிற்கு வந்து பகுத்தறிவை அலைபேசியில் அழைத்தான்.

“அறிவு எப்படி இருக்க?”

“நான் கேட்கணும், நீ தான் மக்கள் பணியில் உயிரைப் பற்றிக் கூட கவலை இல்லாமல் வேலை செய்யற”

“ம்ம் இருக்கேன். எனக்கு ஒரு உதவி செய்வியா?” என்றான்.

“என்ன சொல்லு “

“இங்க மருத்துவர்களுக்குத் தற்காப்புக் கவசங்கள் சரியா கிடைக்கிறது இல்ல, செவிலியர்கள் மற்ற மருத்துவமனை ஊழியர்களுக்கும் போதுமான முகம், மற்றும் கை கவசங்கள் இல்ல, உனக்கு தெரிஞ்ச தன்னார்வலர்களை ஒருங்கிணைச்சு வாங்கித் தர முடியுமா?”, என்றான்.
“கண்டிப்பாக செய்யறேன் “

தன் தோழர்களிடம் பேசி, இணையத்தில் கொஞ்சம், கடைகளிலிருந்து கொஞ்சம் என்று ஓரளவிற்கு மருத்துவர்களுக்கும் மற்ற ஊழியர்களுக்கும் தேவையான கவசங்களை அனுப்பி வைத்தாள் அறிவு.

மருத்துவர்களுக்குத் தேவையான அடிப்படை கவசங்களை அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என்று ஒரு இதழிலும் கட்டுரை எழுதினாள்.

ஒரு வாரம் கழித்து முரசொலியிடம் இருந்து அழைப்பு வந்தது.

“ரொம்ப நன்றி அறிவு”
“இதுக்கெல்லாம் நன்றியா? நீங்க செய்யறது தான் உண்மையில் பெரிய உதவி, உங்கள் உயிரைக் கூட பொருட்படுத்தாமல் மக்களுக்காகப் போராடுறீங்க” என்றாள்

“ம்ம்”

“சரி இந்த கொரோனா எப்போ முடிவுக்கு வரும்”

“The Atlantic என்ற இதழில் ஒரு கட்டுரை வந்திருக்கு , How the pandemic will end? அப்படின்னு படிச்சு பாரு. அவங்க சொல்றதப் பார்த்த 2022 வரைக்கும் போகும் போல”

“அய்யோ அவ்வளவு நாள் ஊரடங்கு இருந்தால் எப்படி மக்கள் சமாளிப்பார்கள்?, ஏற்கனவே கடுமையான பொருளாதார வீழ்ச்சி இந்த அரசால் இங்க இருக்கு, இப்ப இது வேற, பழியை கொரோனா தலையில ஏற்கனவே போட்டாச்சு “

“இதே போல சமூக விலக்கம், கூட்டங்கள் கூடாமல் இருப்பது , திருமணம், காதுகுத்துன்னு கூடாமல், கோயில், தேர்ன்னு கூடாமல் ஒரு இரண்டு வருடங்கள் தள்ளினால் கொஞ்சம் கட்டுப்படுத்த முடியும், அதுக்கு முன்னாடி எதாவது தடுப்பூசி வரலாம்”

“ம்ம், கஷ்டம் தான்”

“சரி அறிவு, எனக்கு காலைல கொரோனா வார்டில் டூட்டி இருக்கு, நேரம் கிடைக்கும்போது கூப்பிடுறேன்”

“சரி உடம்ப பாத்துக்கோ , கவனம்” என்றாள்.

ஏதோ சொல்ல வந்தவன், அதைச் சொல்ல இது நேரமில்லை என்று கருதி, “நீயும் கவனமாக இரு” எனக்கூறி அலைபேசி அணைத்தான்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அவளும் அவனும் (சிறுகதை)”

அதிகம் படித்தது