செப்டம்பர் 26, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

ஆசாரக்கோவை காட்டும் தீண்டாமை

தேமொழி

Jun 29, 2019

siragu aasaarakkovai1

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான “ஆசாரக்கோவை” (இதற்கு ‘ஒழுக்கங்களின் தொகுதி’ என்பது பொருள்) என்னும் நூல் ‘பெருவாயின் முள்ளியார்’ என்ற புலவரால் பாடப்பட்டது. கடைச்சங்க மருவிய காலத்து நூல்களுள் ஒன்று ஆசாரக்கோவை. நூலின் தற்சிறப்புப் பாயிரத்தால், அப்பாடலின் கருத்தினைக் கொண்டு இவர் சைவசமயத்தைச் சார்ந்தவர் என்பது பெறப்படுகிறது. மேலும், பாயிரம் மூலம் இந்நூலுக்கு மூலநூல் ஆரிடம் என்னும் வடநூலெனவும் தெரிகிறது. இந்நூல் தொகுக்கும் ஆசாரங்கள் யாவும் சுக்ர ஸ்மிருதி நூலின் பாடல்கள் என்று வடமொழிப் புலவர் கூறுகின்றனர் என்பதாக தி. செல்வக்கேசவராய முதலியார் கூறுகிறார். ஆனால், பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை அவரது ‘தமிழ் இலக்கிய வரலாறு’ நூலில், ஆபஸ்தம்ப கிருஹ்யசூத்திரம், ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம், போதாயனதர்ம சூத்திரம், கௌதம சூத்திரம், விஷ்ணு தர்ம சூத்திரம், வசிஷ்ட தர்ம சூத்திரம், மனு ஸ்மிருதி, உசனஸ ஸம்ஹிதா, ஸங்க ஸ்மிருதி, லகு ஹாரித ஸ்மிருதி ஆகிய பல நூல்கள் இந்நூலுக்கு அடிப்படையாய் அமைந்துள்ளன எனக்குறிப்பிடுவார்.

சிறப்புப் பாயிரம்:

ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி,

ஆரிடத்துத் தான் அறிந்த மாத்திரையான், ஆசாரம்

யாரும் அறிய, அறன் ஆய மற்றவற்றை

ஆசாரக்கோவை எனத் தொகுத்தான்-தீராத்

திரு வாயில் ஆய, திறல் வண், கயத்தூர்ப்

பெருவாயின் முள்ளி என்பான்.

வெண்பா பாடல்களாக அமைந்த ஆசாரக்கோவை நூலின் 100 பாடல்களில் மக்கள் வாழ்க்கையில் பின்பற்றப்படவேண்டிய ஒழுக்க நெறிகள் (ஆசாரங்கள்) எவையெவை எனக் கூறப்படுகின்றன. உண்ணல், உடுத்தல், உறங்கல், நீராடல் போன்ற நடைமுறை வாழ்க்கைக் கூறுகள் முதற்கொண்டு, யாரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ன செய்யவேண்டும் போன்ற வழிமுறைகளும் சொல்லப்பட்டுள்ளன. சுருக்கமாக அகத்தூய்மை புறத்தூய்மை என இரண்டுக்கும் வழிகாட்டும் முயற்சி எனக் கொள்ளலாம். எவை செய்தல் நன்மையுண்டாக்கும், எவற்றைச் செய்தால் தீமைகள் நேரும் என்பதை விளக்குவது நூலின் நோக்கம். இவை எல்லாம் முன்னோர் கண்ட ஒழுக்க நெறிகளே என்பதை  இந்நூலாசிரியரின் கீழ்க்காணும் ‘யாவரும் கண்ட நெறி’ (16) ‘மிக்கவர்கண்ட நெறி’ (27), ‘நல் அறிவாளர் துணிவு’ (17), ‘பேர் அறிவாளர்துணிவு (19), ‘நூல் முறையாளர் துணிவு’ (61) என்ற வரிகளின் மூலம் கூறுகிறார்.

தமிழகத்தில் கிறித்துவம் பரப்ப வந்த ஐரோப்பிய மறைபரப்பாளர் சீகன்பால்க் அவர்கள், 1700-களின் காலத்திய தமிழகத்தில் ஆசாரக்கோவை நூல் மக்களின் வாழ்வில் முக்கிய இடம்பெற்றிருந்ததை தமது நாட்குறிப்பில் ஆவணப்படுத்தியுள்ளார்.

(1) “இன்றியமையாது நீராடுதல்” என்ற ஆசாரக்கோவை பாடல் எப்பொழுது நீராடவேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை

உண்டது கான்றல் மயிர்களைதல் ஊண்பொழுது

வைகு துயிலோ டிணைவிழைச்சுக் கீழ்மக்கள்

மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும்

ஐயுறா தாடுக நீர். (10)

பாடலின் பொருள்:  1. கடவுளை வணங்கும் முன், 2. தீய கனவைக் கண்ட பின்னர், 3. உடல் தூய்மையற்ற நிலையில், 4. உண்ட உணவை வாந்தி எடுத்துவிடும் பொழுது, 5. முடி வெட்டிய அல்லது மழித்த பிறகு, 6. உணவு உண்ணும் முன்னர், 7. தூங்கி எழுந்த பின்னர், 8. உடலுறவு கொள்ள நேரும்பொழுது, 9. கீழ் மக்கள் எனக் கருதப்படுவோர் உடலைத் தீண்டிவிட்டால், 10. சிறுநீர் மலம் கழித்த பிறகு ஆகிய இந்த (ஈரைந்தும்) பத்து செயல்களைச் செய்ய நேருமாயின் குளிக்க வேண்டுமா? என்ற ஐயம் சிறிதும் கொள்ளாமல் இன்றியமையாது நீராடல் வேண்டும் (கீழ் மக்கள் எனக் கருதப்படுவோர் உடலைத் தீண்டிவிட்டால் குளிக்க வேண்டும், அதாவது ‘தொட்டு முட்டு’, முட்டு என்றால் தீட்டு, கீழோரைத் தொட்டால் தீட்டு என்ற ஒரு மூட நம்பிக்கை).

siragu aasaarakkovai2

(2) “செய்யத்தகாதன” என்ற ஆசாரக்கோவை பாடல் எவற்றைச் செய்யக்கூடாது என்று அறிவுறுத்துகிறது.

நீருள் நிழற்புரிந்து நோக்கார் நிலமிராக்

கீறார் இராமரமுஞ் சேரார் இடரெனினும்

நீர்தொடா தெண்ணெ யுரையார் உரைத்தபின்

நீர்தொடார் நோக்கார் புலை. (13)

பாடலின் பொருள்: செய்யக் கூடாதவை என்பனவற்றைச் செய்ய விரும்பாத ஒருவர்,  நீருக்குள் தனது நிழலை விரும்பி நோக்க மாட்டார், தரையைக் கீற மாட்டார், இரவில் மரத்தின் பக்கம் இருப்பதைத் தவிர்ப்பார், நோய் கொண்ட நேரத்தில் எத்தனை இடையூறு என்றாலும் நீரைத் தொடாமல் எண்ணெய்யை உடலில் தேய்க்க மாட்டார், எண்ணெய் தேய்த்த பின்னர் நீராடாமல் புலையரை (கீழ்மக்கள் எனக் கூறப்படுவோர்) தனது கண்ணால் நோக்க மாட்டார் (அதாவது ‘கண்டு முட்டு’, புலையரைப் பார்த்தாலே தீட்டு வரும் என்ற மூட நம்பிக்கை).

நீரில் நிழல் பார்த்தால் செல்வம் குறைந்துவிடும், தோற்றவரே நிலத்தைக் கீறிக் கொண்டிருப்பார் என்பன போன்றவை அக்கால வழக்காறுகள்.

 (3)

“நன்னெறி” என்ற ஆசாரக்கோவை பாடலும் எவற்றைச் செய்யக்கூடாது என்று அறிவுறுத்துகிறது.

பெரியார் உவப்பன தாமுவவார் இல்லஞ்

சிறியாரைக் கொண்டு புகாஅர் அறிவறியாப்

பிள்ளையே யாயினு மிழித்துரையார் தம்மோ

டளவளா வில்லா விடத்து. (68)

பாடலின் பொருள்: பெரியோர்கள் விரும்புகின்றவற்றைத் தானும் அடைய விரும்பாமையும், தங்கள் வீட்டுக்குள் கீழ்மக்கள் என்போரை உள்ளே அழைத்து வராமலிருப்பதும், தனக்கு அறிமுகமில்லாதவர் ஒருவரை, அவர் அறியா வயது சிறு பிள்ளையாக இருப்பினும் இழிவாகப் பேசாமல் இருப்பதும் கடைபிடிக்க வேண்டிய நன்னெறிகளாகும்.

(4) “குரவர் பெயர் முதலியன கூறாமை” என்ற ஆசாரக்கோவை பாடலும் எவற்றைச் செய்யக்கூடாது என்று அறிவுறுத்துகிறது.

தெறுவந்துந் தங்குரவர் பேருரையா ரில்லத்து

உறுமி நெடிதும் இராஅர் – பெரியாரை

என்று முறைகொண்டு கூறார் புலையரையும்

நன்கறிவார் கூறார் முறை. (80)

பாடலின் பொருள்: எவை நன்மை தருபவை என நன்கு அறிந்த ஒருவர், சினம் கொண்டு வெகுண்ட நிலையிலும் மூத்தோரைப் பெயர் சொல்லிக் குறிப்பிடமாட்டார், வீட்டில் உள்ளோரிடம் சினம் கொண்டாலும் அதை நீட்டிக்க மாட்டார், தம்மிற் பெரியாரை முறைப் பெயர் கொண்டு இழிவுபட அழைக்க மாட்டார், கீழ்மக்களாகக் கருதப்படுவோரிடம் முறைமை பாராட்டி உறவு கொண்டாட மாட்டார்.

(5) “அந்தணர் வாய்ச்சொல் கேட்டல்” என்ற ஆசாரக்கோவை பாடலும் எவற்றைச் செய்யக்கூடாது என்றும், செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.

தலைஇய நற்கருமஞ் செய்யுங்கா லென்றும்

புலையர்வாய் நாள்கேட்டுச் செய்யார் – தொலைவில்லா

அந்தணர்வாய்ச் சொற்கேட்டுச் செய்க அவர்வாய்ச்சொல்

என்றும் பிழைப்ப திலை. (92)

பாடலின் பொருள்: அறிவுள்ளவர் முக்கியத்துவம் வாய்ந்த நற்செயல்களைச் செய்யும்பொழுது என்றும் புலையரிடத்து நாள் கேட்டுச் செய்யார், ஒழுக்கம் குறையாத ஐயர் ஒருவர் குறித்துத் தரும் நாளில் நற்செயல்களைச் செய்வார். ஏனெனில் அவர் சொல்வது என்றும் பிழையாத் தன்மை கொண்டது. அதுவே நன்மையும் தரும். இங்கு அந்தணர் ஒழுக்கம் குன்றாதவர் என்று காட்டும் பொழுது, புலையர் ஒழுக்கமற்றவர் என்பது சொல்லாமல் புரிந்து கொள்ள வேண்டிய கருத்து. மேலும், புலையர் என்று இப்பாடலில் குறிப்பிடப்படுபவர் வள்ளுவர் என்ற சோதிடங்கூறும் கீழ்வகுப்பார் என்று உரை நூல் விளக்கம் தருகிறது.

தமிழகத்தில் இனபேத உயர்வு-தாழ்வு, தீண்டாமை என்ற கருத்தாக்கங்கள் எக்காலத்தில் தோன்றின என்பதும், கீழ்மக்கள் என்று ஒரு சிலர் எப்பொழுது விலக்கப்பட்டனர் என்பதும் தொடர்ந்து நடக்கும் ஆய்வு. ஆசாரக் கோவையின் இப்பாடல் மூலம் கீழ்மக்கள்-தீண்டாமை என்ற கருத்தாக்கத்தைச் சங்கம் மருவிய காலத்துத் தமிழகம் அறிந்து இருந்தது என்பது உறுதியாகத் தெரிகிறது.

மேலும், இந்நூலில் கொடுக்கப்படும் ஆசாரங்கள் யாவும் வடமொழி ஸ்மிருதிகளின் மொழியாக்கம் எனக் கூறப்படுவதால், தீண்டாமை என்ற கருத்தாக்கம் தமிழருக்கும் முன்னரே சமஸ்கிருதம் பேசுவோர் இடையில் புழக்கத்திலிருந்ததையும் நாம் கணிக்கலாம்.

இத்தகைய இனபேத, உயர்வு தாழ்வு சிந்தனைகள், மூடநம்பிக்கைகள் ‘ஒழுக்க நெறிகள்’ என்ற பெயரில் மக்களிடம் திணிக்கப்பட்ட முயற்சி எத்தகைய மனிதநேயமற்ற செயல் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

உதவிய நூல்கள்:

ஆசாரக் கோவை, பெருவாயின் முள்ளியார், உரையாசிரியர் வித்துவான் திரு. பு. சி. புன்னைவனநாத முதலியார், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

http://www.tamilvu.org/node/74817

ஜெர்மன் தமிழியல் — நெடுந்தமிழ் வரலாற்றின் திருப்புமுனை, முனைவர் க. சுபாஷிணி, காலச்சுவடு பதிப்பகம், நவம்பர் 2018


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆசாரக்கோவை காட்டும் தீண்டாமை”

அதிகம் படித்தது