“ஆசிபா” (கவிதை)
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழிMay 5, 2018
குருதிக் குழம்பில்
உயிர் உறைந்து போன
கருவறை ஓவியம்
பால் மனம் மாறா
சிறு முத்து,
மதம் எனின்
என்னென்றே அறியாத
வெண்மனச் சிறுமி ;
மதம் பிடித்த வேழம்
காடுகளைக் கடந்து
ஊருக்குள் ஓடிவர
கண்டதுண்டு
ஊருக்குள் ஒளிந்திருக்கும்
மதம் கொண்ட மனங்கள்
கோயிலுக்குள் சிறுயிதழ்
மலரை கொடூரமாய்
புணர்ந்தது கேட்டு
கலங்கிற்று நெஞ்சு
நரிகளின் பாதையில்
பரி மேய்த்த
பாதங்களை
பீய்த்தெடுத்து
எரிய பரி ஓட்டி
வந்த கயவர்கள்
துணிந்தனர்;
நாடோடி கூட்டம்
அச்சமுற்று ஓடிடச்
செய்ததாம்
முன்பொரு நாளில்
சூழ்ச்சியால்
எம் மண் நுழைந்த
தறி கெட்ட நாடோடி
கூட்ட ஆண்டலைகள் ;
வல்லூறுகள் உறைகின்ற
இடமது இரக்கத்தின்
இல் என எவன் செப்பியது?
தேவநாதன்கள் மகளிரின்
மாண்பைச் சிதைத்தது
உலகை காப்போனின்
உறைவிடத்தில் தானே?
முனிகளும் ரிஷிகளும்
கடவுளர் அவதாரங்களும்
பெண்களை காமப்
பிண்டங்களாய் கருதியே
சிதைத்த கதைகளை
படிப்போன் நெஞ்சு
குறள் நெறியிலா
நடைபோடும்?
கோயில் இருக்கின்ற ஊரில்
குடியிருக்க கூடாதென
சட்டம் வரின்
குற்றங்கள் குறையலாமோ!?
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- ““ஆசிபா” (கவிதை)”