மே 30, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

ஆசீவகத்தின் வண்ணக் கோட்பாடும் வள்ளலாரின் ஏழுதிரைகளின் மறைப்பும்

முனைவர் மு.பழனியப்பன்

Feb 18, 2017

இந்திய மெய்ப்பொருளியல் பெரும்பரப்பு கொண்டது. பல்வேறு சமயக் கொள்கைகளை உள்ளடக்கியது. வேத மரபும், வேத மறுப்பு மரபும் இந்திய மெய்ப்பொருளியலின் முரண். அல்லது இணை வளர்ச்சி என்றே கொள்ளவேண்டும். ஆசீவகம், சமணம், பௌத்தம், பூதவாதம் போன்றன வேதமரபினை மறுத்த இந்திய மெய்ப்பொருளியல் தத்துவங்கள் ஆகும்.

Siragu-vallalaar6

இவற்றில் அசீவகம் தமிழகத்தின் தொன்மைச் சமயமாகக் கருதத்தக்கது. இந்திய அளவில் பூரணகாசிபர், மர்கலி கோசலர், பகுதகச்சானர் என்ற மூவரும் ஆசீவகக்கொள்கை பூரணகாசிபர், மர்கலி கோசலர், பகுதகச்சானர் என்ற மூவரும் ஆசீவகக்கொள்கையை வகுத்தவர் என்பது வரலாற்று அறிஞர்கள் முடிவு. பௌத்த மதத்தில் இருந்து வேறுபட்டு உருவாக்கப்பெற்றது அசீவகம் ஆகும்.

ஆசீவகத்தில் நிறக் கோட்பாடு அடிப்படையானது. அறுவகையான நிறக்கோட்பாடுகளை இது கற்பிக்கிறது. ஆசீவகத்தில் ஆன்ம ஈடேற்றம் கருதி மனிதர்தம் மெய்யியல் படிநிலைக்கு ஏற்ப வண்ண உடைகள் வழங்கப்பெறும். ஞானவளர்ச்சியின் குறியீடாக வண்ணங்கள் இச்சமயத்தில் கொள்ளப்பெறுகின்றன. இவ்வண்ணங்கள் கதிரவனின் உதிப்பு சார்ந்து அமைக்கப்பெற்றுள்ளன. ஆசீவகத்தில் இணையும் முதல் படிநிலை சார்ந்தவர்க்கு முதலாவதாக வழங்கப்பெறும் வண்ண உடை கருப்பு வண்ணம் சார்ந்ததாக அமையும். இது கதிரவன் மறைந்த இருள் நிலையைக் குறிக்கும் வண்ணம் ஆகும். அடுத்த நிலையில் வழங்கப்படும் ஆடை நீலம் ஆகும். இது இரவு முடிந்து விடியற்காலையில் கதிரவன் உதிப்பால் கிடைக்கும் வண்ணம் ஆகும்.. மூன்றாம் நிலையில் பசுமை வழங்கப்படுகிறது. இவ்வண்ணம் கதிரவன் உதிப்பதற்குச் சற்று முன்பு அதுவும் குறைந்த கால எல்லையில் அமையும் வண்ணம் ஆகும். நான்காம் நிலை செம்மை வண்ணமாகும். கதிரவன் உதித்த பிறகு ஏற்படும் வண்ணம் இதுவாகும். ஏறக்குறைய பாதி நிலையில் தத்துவப் பயிற்சி பெற்ற நிலைஇதுவாகும். நண்பகலுக்குச் சற்று முன்னதாகக் கதிரவன் கொள்ளும் மஞ்சள் நிறம் ஐந்தாம் நிலையில் தரப்பெறுகிறது. நண்பகலுக்கு உரிய வண்ணமான வெள்ளையே நிறைநிலை வண்ணமாகும். இவ்வாறு இருளில் இருந்து முற்றொளியை நோக்கிய பயணமாக ஆசீவகம் மெய்பொருள் நோக்கிப் பயணிக்கிறது. குறிப்பாக வானநூல் கற்றவர்கள் ஆசீவகர்கள் என்பதால் கதிரவனின் இயக்கத்தைத் தம் சமய இயக்கத்துடன் ஒப்பிட்டு இவ்வண்ணச் சேர்க்கையை ஆன்ம ஈடேற்றத்திற்கு அமைத்துள்ளனர்.

ஆசீவத்தின் அறுவகை வண்ணநிலையில் முதல், இடை, கடை என்ற படிநிலைகளும் உள்ளன. ஒரு வண்ணத்தின் முதல் படிநிலை என்பது நுழைதல் நிலையாகும். இடைப் படிநிலை தேர்ச்சி பெறுவதைக் காட்டுவது. நிறை படிநிலை அடுத்த வண்ணத்திற்குச் செல்லும் தொடர் நிலையாகும்.இவ்வகையில் இப்படிநிலைகள் பதினெட்டு ஆகின்றன. பதினெட்டு படிநிலைகளைக் கடக்க பதினெட்டு ஆண்டுகள் ஆகலாம் என்பது ஆசீவத்தின் கணக்கீடு. ஆறு வண்ண ஆடைகளில் முந்நிற பாகுபாடு கொண்டு வண்ணப் படிநிலைகளைக் கடந்து, நிறைவில் தென்னங்கன்றை வைத்து வழிபாட்டை நிறைவு செய்யும் முறை ஆசீவக மதத்தின் நிறைநிலையாகின்றது. தென்னங்கற்றை வைத்து வழிபாட்டை முடித்தல் என்ற நிலை தற்கால சாஸ்தா வழிபாட்டில் பின்பற்றப்பெறுகிறது. சாஸ்தா வழிபாடுகள் ஆசீவகம் சார்ந்தவை என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து.

ஆசீவகத்தின் குறியீடாகக் கொள்ளப்பெறுவது ஆண் யானையாகும். யானை பிறக்கும்போது கருமையாகப் பிறக்கும். வளர வளர அது சாம்பல் நிறம் கொள்ளும். அதன்பிறகு சற்று நீல நிறம் கொள்ளும். ஒரு படிநிலையில் இருந்து மற்றொரு படிநிலைக்கு மாறும் இயற்கை நிகழ்வு இதுவாகும். இதன் காரணாக அசீவகத்தின் வண்ணக் கோட்பாட்டிற்கு ஒத்துவரும் அடையாளமாக யானை என்ற விலங்கு அமைந்துள்ளது.

பல ஐயனார் கோவில்களில் வெள்ளை யானை நிறுவப்பெற்றிருப்பது இவ்வடிப்படையில்தான். வெள்ளை நிறைநிலைக்கானது. யானை ஆசீவகத்தின் குறியீடு. ஆக வண்ணமயமான சமயமாக விளங்குவது ஆசீவகம் ஆகும்.

இவ்வகையில் வண்ணங்கள், யானைகள் ஆகிய ஆசீவகக் கொள்கைகளில் முக்கியத்துவம் பெறுகின்றன. இது இந்திய மெய்யியலின் ஓர் இழை.

இந்திய மெய்யியலின் மற்றொரு இழையாகச் சென்ற நூற்றாண்டில் அமைந்து சிறந்து வருவது வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க நெறி ஆகும். அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் அருள்நிலை பெறுவதற்கான சமயமாக வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க நெறி அமைந்தது. இதற்கான வழிபாட்டிடமாக அமைக்கப்பெற்றது சத்திய ஞானசபை என்பதாகும். இது குறிக்கத்தக்க அடையாளமாக வள்ளல் பெருமானின் தத்துவங்களை விளக்கிவருகிறது.

தற்போது இச்சத்திய ஞானசபையில் ஏழு திரை நீக்கி சோதியைக் காணுதல் என்ற மரபு பின்பற்றப்படுகிறது. ஏழு திரைகளை வள்ளலார் அமைத்தாரா? அவற்றை நீக்கி சோதி தரிசனம் பெறவைத்தாரா? என்ற கேள்விகளுக்கு பதில்கள் ஆராய்ந்து கொள்ளப்படவேண்டும். ஆயினும் இவ்வேழு திரைக் கொள்கை வள்ளலாருக்கு உரியதாக ஆக்கப்பெற்றுள்ளது.

கரைவின் மாமாயைக் கரும் பெருந் திரையால்

அரைசது மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

பேருறு நீலப் பெருந்திரை அதனால்

ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

பச்சைத் திரையால் பரவெளி அதனை

அச்சற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

செம்மைத் திரையால் சித்துறு வெளியை

அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

பொன்மைத் திரையால் பொருளுறு வெளியை

அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை

அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

கலப்புத் திரையால் கருதனு பவங்களை

அலப்புற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !   (அகவல் 814-826)

Siragu vallalaar1

என்று அருட்பெருஞ்சோதி அகவலில் வள்ளலார் வண்ணத்திரைகளைப் பற்றிக் குறிப்பதைக் கொண்டு இவ்வழிபாடு அவரால் அல்லது அவருக்குப் பின் வந்தவர்களால் ஏற்றுக் கொள்ளப்பெற்று நடத்தப் பெற்றுவரலாம் என்பதை முன் எழுப்பப்பெற்ற வினாக்களுக்குப் பதில்களாகக் கொள்ள இயலும். இந்த ஏழுதிரை மறைப்பு என்பது ஆசீவ வண்ணக் கொள்கையுடன் பொருந்துவதாக அமைகிறது.

வள்ளலார் காட்டும் வண்ணங்கள் ஏழு, அசீவகம் காட்டுவது ஆறு. கருமை, நீலம், பச்சை, சிவப்பு, பொன், வெண்மை, கலப்புத்திரை என்பது வள்ளலார் காட்டும் வண்ணத்திரைகள். இவற்றில் ஆசீவகம் காட்டும் வண்ணங்கள் அப்படியே முதல் ஆறும் ஆகும். கலப்பு வண்ணம் என்று எல்லாவற்றையும் கலந்த வண்ணம் என்ற ஒன்றே வள்ளல் பெருமானால் சுட்டப்பெறும் புது வண்ணமாகும். அசீவகத்தில் சுட்டப்படும் யானைவடிவமும் அகண்ட தீப பீடத்தைச் சூழ்ந்து வைக்கப்பெற்றுள்ள எட்டு யானை வடிவங்களில் பிரிதிபலிக்கிறது.

இவ்வகையில் வண்ணங்கள் கலந்த வழிபாட்டு முறை ஆசீவகத்திலும், வடலூரிலும் செயல்படுத்தப்படுவதில் ஒற்றுமை இருக்கிறது. தமிழகத்தில் ஆசீவகம் ஓரளவிற்கு வளர்ந்து வந்த சமயமாக இருப்பதான் காரணமாக இந்த வண்ண வழிபாட்டில் ஆசீவகத் தாக்கம் இருக்க வாய்ப்புண்டு.

வள்ளல் பெருமான் இவ்வேழு திரைகளைக் கடந்து, அருட்பெருஞ்சோதி ஆண்டவரைக் கண்டுள்ளார். ஆருயிராம் ஒருமையை அவர் கண்டடைந்தார். பரவெளி முழுக்க உள்ள ஆற்றல்களை அவர் கைவரப்பெற்றார். எல்லாம் வல்ல சித்தைப் பெற்றார். சிவம் உள்ள வெளியைக் கண்டுற்றார். உலக உயிர்களின் பிறவி ரகசியத்தைக் கண்டடைந்தார். இவ்வாறு அவரின் ஞானத் தேடலுக்கு வழிவகுத்தவை இவ்வேழு திரைகள் ஆகும்.

                                “திரைமறைப்பெல்லாம் தீர்த்தாங் காங்கே

                     அரசுறக் காட்டும் அருட்பெருஞ்சோதி” ( அகவல் 832)

என்று அருட்பெருஞ்சோதி அரசைக் கண்ட நிலையை வள்ளலார் காட்டுகிறார். வள்ளலார் கொண்ட திரை விலக்கம் வடலூரில் சத்திய ஞானசபையில் ஒரு குறியீடாக இன்று நடைமுறைப்படுத்தப்பெற்று வருகிறது. இந்தக் குறியீடு ஆன்மாக்களுக்கு ஏற்படும் தடைகளைக் காட்டி மெய்ப்பொருள் தேட ஊக்குவிக்கின்றது.

ஆசீவகத்தின் வண்ணக்கோட்பாடும், வள்ளலார் உணர்த்தும் எழுதிரை மறைப்பு நிலையும் ஒரு புள்ளியில் சந்திப்பதாகத் தத்துவங்களை ஆராய்கின்றபோது படுகின்றது. இத்தொடர்பினை இன்னும் நுணுகி ஆராய வேண்டியிருக்கிறது. இருப்பினும் வேதச் சார்பற்ற நெறி சார்ந்த இரண்டு ஞான வழிப் பாதைகள் ஒத்தமைகின்றன என்பதே அதுவாகும்

மெய்ப்பொருள் வரலாற்றில் ஒரு சமயக் கருத்துகள் மற்ற சமயக் கருத்துகளில் ஆளுமை அல்லது சார்பு படுவது உண்டு. அவ்வகையில் வடலூரில் நிகழ்த்தப்படும் திரை விலக்கல் ஆசீவக வண்ணக்கோட்பாட்டுடன் ஒத்து அமைகிறது. இவ்வொற்றுமை கொண்டு இன்னும் பல நிலைகளில் வள்ளலார் காட்டும் வழிபாட்டைப் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆசீவகத்தின் வண்ணக் கோட்பாடும் வள்ளலாரின் ஏழுதிரைகளின் மறைப்பும்”

அதிகம் படித்தது