சனவரி 28, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆணின் மூளைக்கும் பெண்ணின் மூளைக்கும் அளவில் வேறுபாடில்லை

தேமொழி

Nov 7, 2015

brain1ஆணும் பெண்ணும் சிந்திப்பதில் மாறுபட்டவர்கள், ஒரு நிலைமையைக் கையாளுவதிலும் அவர்களிடம் வேறுபாடுகள் உண்டு என்று காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. ஆணுக்குத் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தவோ, தனது உணர்வுகளை வார்த்தைகளில் விவரிக்கவோ பெண்களைப் போல இயலுவதில்லை; தகவல்களை நினைவு கூர்வதிலும் பெண்கள் வல்லவர்கள் எனப் பெண்களின் குணநலன்களும், பழக்க வழக்கங்களும் பொதுமைப்படுத்தப்படுகிறது. பெண்ணின் இத்தகைய பண்புகளுக்குக் காரணம் அவர்களது மூளையில் நினைவுகளைத் தொகுக்கும் “ஹிப்போகேம்பஸ்” பகுதியின் அளவு ஆண்களைவிட அளவில் பெரிதாக இருக்கும் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, ஆண் பெண் மூளைகளின் “வடிவமைப்பில்” வேறுபாடுகள் உள்ளனவா என்றும் ஆய்வுகள் பல நடத்தப்பட்டதுண்டு.

brain4இது போன்றே, ஆண்களும் பெண்களும் அடிப்படையில் ஒரு சூழ்நிலைக்கு எதிர்வினையாற்றுவதில் வேறுபட்டவர்கள் என்றும், “உளவியல் அடிப்படையில்” அவர்கள் வெவ்வேறு கிரகத்தைச் சார்ந்தவர்கள் போன்று நடந்து கொள்வதாகவும் குறிப்பிடப்படுவதுண்டு. ஜான் க்ரே என்பவர் எழுதிய, ‘மென் ஆர் ஃப்ரம் மார்ஸ், விமென் ஆர் ஃப்ரம் வீனஸ்’ (Men Are From Mars, Women Are From Venus, John Gray) என்ற நூல் ஆண் பெண் இருபாலரது செயல்பாடுகளையும் விளக்க முற்பட்டது. தங்கள் துணைகளின் சிந்தனைப் போக்கை அறிய விரும்பியவர்களும், அவர்களது மனதில் இடம்பிடிக்க விரும்பிய இருபாலரும் போட்டி போட்டுக் கொண்டு இந்த நூலைப் படிக்க விரும்பியதால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் இந்த நூல் விற்பனையானது. இந்த முயற்சியின் விளைவாக எத்தனை மணவிலக்குகள் தவிர்க்கப்பட்டன என்பது ஆராயப்படவேண்டிய ஒன்று.

நமது ஊரிலும் தொன்று தொட்டு ‘பெண் புத்தி பின்புத்தி’ என்ற சொல்வழக்கு இருந்து வருகிறது. சமீபகாலத்தில் இது சரியான சொல்வழக்கு அல்ல, பெண்களைச் சிறுமைப்படுத்தும் சொல்வழக்கு என்ற குற்ற உணர்ச்சி கொண்ட அல்லது மனசாட்சி உள்ள ஒரு சிலர், ‘பின்விளைவுகளைக் கணக்கிட்டே பெண் புத்திசாலித்தனமாகச் சிந்திப்பாள்’ என்று புழங்கி வந்த கூற்றை காலப்போக்கில் தவறாகப் பொருள் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது என விளக்கம் கொடுக்கும் (காலத்திற்கேற்ற) முயற்சிகளும் தோன்றியுள்ளன. பெண்கள் நிலைமைகளை அணுகும் கோணம், அவர்களது சிந்தனைத்திறன், உணர்வுகளை வெளிப்படுத்தும் முறை வேறுபட்டிருந்தால் அதற்கு “பெண்களின் மூளையின் அமைப்பும் அளவும் காரணமா?” என்ற கேள்விக்கு புதிய ஆய்வுகள் என்ன பதில் சொல்கின்றன என்பதைப் பார்ப்போம்.

brain6அமெரிக்காவின் சிக்காகோவில் உள்ள, ரோசலின்ட் ஃபிராங்க்ளின் மருத்துவக் கல்லூரியின் நரம்பியல் பேராசிரியர் முனைவர் லிஸ் எலியட் (Lise Eliot, Associate Professor of Neuroscience at Rosalind Franklin University of Medicine and Science in North Chicago) அவர்களது தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையொன்று, ஆண் பெண் இருபாலருக்கும் மூளையின் அளவில் குறிப்பிடத்தக்க வேறுபாடு ஏதும் கிடையாது எனத் தெரிவிக்கிறது.

மூளையின் பெருமூளை புறணியின் (cerebral cortex) கீழ், பக்கத்திற்கு ஒன்றாக நினைவுகளைத் தொகுக்கும் செயலைச் செய்யும் ‘ஹிப்போகேம்பஸ்’ பகுதி உள்ளது. ஆண் மூளை, பெண் மூளை ஆகியவற்றின் சிந்தனைகளுக்கிடையே வேறுபாடுகள் உள்ளதாகக் கருதுபவர்கள் இந்த ஹிப்போகேம்பஸ் பகுதியின் அளவைப் பலகாலமாக ஆய்வு செய்து பல அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். பொதுவாகக் குறைந்த எண்ணிக்கையுள்ளோர் பங்கேற்ற இந்த ஆய்வுகளில் மூளையின் ஹிப்போகேம்பஸ் அளவுகளில் சில வேறுபாடுகளும் கண்டறியப்பட்டன. ஆனால் லிஸ் எலியட் அவர்களின் ஆய்வுக் குழு ‘மெட்டா அனாலிசிஸ்’ என்ற புள்ளியியல் ஆய்வு முறையைக் கையாண்டது.

மெட்டா-அனாலிசிஸ் என்பது புள்ளியியலில் ஒரு வகை பகுப்பாய்வு முறை. இந்த முறையில் பிற ஆய்வுகளின் தரவுகள் அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டு, அத்தரவுகள் தரும் தகவல்கள் ஒட்டுமொத்தமாக ஆராயப்படும். தற்காலத்தில் இந்த ஆய்வுமுறை மருத்துவத்துறையில் நோய்களைப் பற்றிய தெளிவான தகவல்களைப் பெறும் நோக்கில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பிற ஆய்வுகளின் தரவுகளின் மேல் நடத்தப்படும் பகுப்பாய்வு என்பதையே மெட்டா-அனாலிசிஸ் என்ற பதம் குறிக்கிறது.

brain7இம்முறையின் அடிப்படையில் ஆரோக்கியமானவர்கள் மூளைகளின் மீது நடத்தப்பட்ட 76 ஆய்வறிக்கைகள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் பங்கு பெற்ற 6,000 க்கும் அதிகமான ஆண் பெண் என இருபாலரின் மூளையின் அளவும், ஹிப்போகேம்பஸ் அளவும், அவர்களது ஹிப்போகேம்பஸ் அளவுக்கும் மூளையின் அளவுக்கும் உள்ள தொடர்பு பற்றிய தரவுகள் யாவும் ஒருங்கிணைக்கப்பட்டு, தரவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு ஆராயப்பட்டது. இந்த மெட்டா அனாலிசிஸ் முறையின் முடிவாக இருபாலரின் ஹிப்போகேம்பஸ் அளவும் மூளையின் மொத்த அளவுக்கேற்ற வகையில்தான் அமைந்துள்ளது, இருபாலர் மூளையின் ஹிப்போகேம்பஸ் அளவில் குறிப்பிடத்தக்க அளவில் எந்த வேறுபாடும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இது போன்ற மெட்டா அனாலிசிஸ் வேறுசிலவும் இதே முடிவுக்கு வருகின்றன என்று பேராசிரியர் லிஸ் எலியட் கூறியுள்ளார்.

brain3பெண்ணின் சிந்தனைப்போக்கை பொதுமைப்படுத்த விரும்பி, பாலின வேறுபாடு அதற்கு அடிப்படை என்ற முறையில் விளக்க முற்பட்டு, அதற்கான சான்றுகளுக்கு மூளையின் ஹிப்போகேம்பஸ் பெண்களுக்கு அளவில் பெரியதாக இருப்பதே காரணம் என்று நிறுவ முயன்ற ஆய்வுகளின் முடிவுகள் இப்பொழுது கேள்விக்குறியாகி உள்ளன. எண்ணிக்கையில் அதிக அளவில் பலரது மூளைகளின் அளவை ஒப்பிட்டதில் பாலின வேறுபாடுகளைக் காண இயலவில்லை என்பதே புதிய ஆய்வின் முடிவாக உள்ளது. அத்துடன் மூளையின் வலது இடது பகுதிகளை இணைக்கும், மூளையின் இருபகுதிகளின் தொடர்புக்கும் காரணமான வெண்மைநிற ‘கார்ப்பஸ் கொலோசம்’ (corpus collosum) பகுதி பெண் மூளையில் அளவில் பெரியதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் தவறு என்றும், கார்ப்பஸ் கொலோசத்தின் அளவிலும் பாலின வேறுபாடுகளைக் காண இயலவில்லை என்பதும் இந்த ஆய்வின் முடிவாக இருக்கிறது.

—–

மேலும் தகவல் பெற:

Lise Eliot, PhD

Dept. of Neuroscience, Rosalind Franklin University, 3333 Green Bay Rd., North Chicago, IL 60064, USA

http://www.rosalindfranklin.edu/faculty/Eliot_Lise.aspx

The human hippocampus is not sexually-dimorphic: Meta-analysis of structural MRI volumes

Anh Tan, Wenli Ma, Amit Vira, Dhruv Marwha, Lise Eliot, Dept. of Neuroscience, Chicago Medical School, Rosalind Franklin University of Medicine & Science, USA

NeuroImage, Volume 124, Part A, 1 January 2016, Pages 350–366

http://www.sciencedirect.com/science/article/pii/S1053811915007697

Male/female brain differences? Big data says not so much, Rosalind Franklin University of Medicine and Science

Public Release: 29-Oct-2015

http://www.eurekalert.org/pub_releases/2015-10/rfuo-mbd102915.php

Brains of Men and Women More Similar Than Different, October 30, 2015, Medical Research

http://medicalresearch.com/radiology/brains-of-men-and-women-more-similar-than-different/18923/

—–

தொடர்புள்ள தகவல்கள்:

Putative sex differences in verbal abilities and language cortex: A critical review

Mikkel Wallentin

Brain and Language, Volume 108, Issue 3, March 2009, Pages 175–183

http://www.sciencedirect.com/science/article/pii/S0093934X08000953

Sex differences in handedness, asymmetry of the Planum Temporale and functional language lateralization

Iris E. Sommer, André Aleman, Metten Somers, Marco P. Boks, René S. Kahn

Brain Research, Volume 1206, 24 April 2008, Pages 76–88

http://www.sciencedirect.com/science/article/pii/S0006899308000401

Men Are From Mars, Women Are From Venus, John Gray.

http://www.wikisummaries.org/Men_Are_From_Mars%2C_Women_Are_From_Venus

Meta-analysis in medical research, A B Haidich, Hippokratia. 2010 Dec; 14(Suppl 1): 29–37.

http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3049418


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆணின் மூளைக்கும் பெண்ணின் மூளைக்கும் அளவில் வேறுபாடில்லை”

அதிகம் படித்தது