சனவரி 18, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

ஆண்டாளை துணைக்கழைத்த இந்துத்துவம்.!

சுசிலா

Jan 20, 2018

siragu aandaal3

கடந்த சில வாரங்களாகவே தமிழக மக்களின் செவிகளில் தவறாமல் ஒலித்துக்கொண்டிருக்கும் சொற்கள், வைரமுத்துவும், ஆண்டாளும், அதனைப் பற்றிய சர்ச்சையும் தான் என்றால், மறுப்பதற்கில்லை. கவியரசு வைரமுத்து அவர்கள், தினமணியில் வெளிவந்திருக்கும் தன்னுடைய கட்டுரை ஒன்றில், ஆண்டாளைப்பற்றி பல செய்திகள் பெருமையாகத்தான் சொல்லியிருக்கிறார் என்பது அந்தக் கட்டுரையைப் படித்த வாசகர்களுக்கு நன்கு தெரியும். ஒரே ஒரு வரி மட்டும் தான், ஏழாம் நுற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள் நாச்சியார் என்பவர் தேவதாசி குலத்தில் பிறந்திருக்கலாம் என்பதை குறிப்பிட்டு இருக்கிறார். அதுவும் அவருடைய கருத்து அல்ல என்பதை மிகவும் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

“அந்த செய்தி 1975ம் ஆண்டு சிம்லாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ட்ஸ் ஸ்டடீஸ் என்ற அமைப்பு ஒரு கருத்தரங்கை நடத்தியது. அதில், 45 இந்திய வரலாற்று அறிஞர்கள் பங்கேற்று, 26 கட்டுரைகளை வெளியிட்டனர். அந்த கட்டுரைகளின் தொகுப்பு பின்னர் Indian movements: Some Aspects of dissent protest and reform என்ற பெயரில் புத்தகமாக வெளியானது.

அந்த செய்தியை எழுதியவர்கள் இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர்கள் எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவன். அதில்தான்,

Andal was herself a devadasi who lived and died in the Srirangam temple

என்ற வரி இடம் பெற்றுள்ளது. இதற்கு, History of sri vaisnavas என்ற பெயரிலான டி.ஏ. கோபிநாத் ராவ் என்பவரின் புத்தகத்தின் ஐந்தாம் பக்கத்தில் தான் இதற்கான ஆதாரம் இருப்பதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.”

உண்மை இவ்வாறு இருக்க, இந்த வைணவ ஆன்மீகவாதிகள், எவ்வித புரிதலுமின்றி, இந்த விசயத்தை எவ்வளவு பெரிதுபடுத்தி இருக்கிறார்கள் என்றால், இவர்களின் நோக்கம் என்னவென்பது வெட்ட வெளிச்சமாய் நமக்கு புரிகிறதல்லவா. அதிலும், ஒரு தேசியக்கட்சியான பாசக-வின் தேசிய செயலராக பதவி வகிக்கும் திரு.எச்.ராஜா அவர்கள் பேசிய அத்தனைப் பேச்சுகளும், வன்முறையைத் தூண்டும் விதமாக அல்லவா இருந்தது. மதக்கலவரத்தை நடத்திட திட்டம் திட்ட, இந்த ஆண்டாள் பிரச்சினையை கையில் எடுக்க எத்தனித்திருக்கிறது. இந்த ஆரிய, இந்துத்துவா ஆதிக்க சக்திகள் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக, தனிப்பட்ட வகையிலும், கவியரசு அவர்களை மிகவும் இழிவாகப் பேசி, நாகரீகம் என்றால் என்னவென்றே தெரியாத வகையில், ஒரு பொது மேடையில் எந்த அளவிற்கு கீழிறங்கி பேசியிருக்கிறார். இந்து மதத்தை இழிவாகப் பேசுபவர்கள் அனைவரையும் தாசி மக்கள் என்று தாக்கி பேசுகிறார் மற்றும் தேவையில்லாமல் இசுலாம் மதத்தை இதில் நுழைத்து மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்க முயற்சி செய்கிறார் என்றால், இதனுடைய உள்நோக்கம் என்னவென்று தெரியாத அளவிற்கு தமிழர்கள் என்ன, ஒன்றும் தெரியாதவர்களா… நமக்கென்று மிகச்சிறந்த வரலாறு இருக்கிறது. அறிவார்ந்த வாழ்வியல் இருக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, “யாதும் ஊரே … யாவரும் கேளிர்” என்றுரைத்த எம் சங்ககால புலவர்களைக் கொண்ட சிறப்புமிக்க தமிழினம் நம்முடைய இனம் என்பதை மறந்து, இது போன்ற மதத்தை வைத்து அரசியல் செய்யும் காவி அரசியல் இங்கு காலூன்றத்தான் முடியுமா.!

siragu-aandaal2

இனி, கட்டுரையின் கருத்திற்கு வருவோம்.
ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆண்டாள் என்ற ஒரு பெண், பெருமாளை தன் கணவனாக வரித்துகொண்டு, அவருடன் தனக்கான பாலியல் இச்சைகளைத் தீர்த்து கொள்ளும் வண்ணம் பல காம பாடல்களை தன்னுடைய திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி ஆகிய இலக்கியங்களில் பாடல்களாக பாடியிருக்கிறார். பெருமாளை தன்னுடைய கணவனாகவே எண்ணி வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதுவும், தன்னுடைய 15 வயதில் இறைவனிடம் கலந்து விட்டதாகவும் எழுதிவைக்கப்பட்டுளள்து. இதற்கான ஆதாரங்கள் போதிய அளவு நமக்கு கிடைக்கவில்லை. பதினைந்து வயதிற்குள் ஒரு சிறிய பெண்ணால், இந்த அளவிற்கு காமத்தைப்பற்றி பாட முடியாது என்பது தான் பல ஆய்வாளர்கள் கருத்தாக இருக்கிறது. ஒன்று அவருக்கு வயது அதிகமிருக்க வேண்டும் அல்லது பாடியவர் வேறு ஒருவராகத்தான் இருக்க முடியும் என்பது தான் உண்மையாக இருக்க முடியுமே தவிர, இவர்கள் சொல்வது போல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பது தானே சரியாக இருக்க முடியும்.

மேலும் இவர்கள், மிகவும் மதிக்கும் திரு, இராஜகோபாலாச்சாரியார் அவர்களே, ஆண்டாள் ஒரு கற்பனைப்பாத்திரம் என்று சொல்லவில்லையா.!

“ஆண்டாள் என்னும் ஸ்திரி இருந்ததே இல்லை. நாலாயிர திவ்விய பிரபந்தம் ஆண்டாள் பாடியதாகச் சொல்லப்படும் பாசுரங்கள் அவர் பாடியவை அல்ல. பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங்களைப் பாடி அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப்படுத்தினார் என்று ‘‘திரிவேணி” என்னும் ஆங்கில மாதப் பத்திரிகையில் 1946ஆம் ஆண்டு செப்டம்பர் இதழில் இராஜகோபாலச்சாரியார் எழுதியுள்ளாரே.!

இன்று இவர்கள் இவ்வளவு இழிவாகப் பேசும் தேவதாசி என்ற முறையே, இந்து மதத்தின் உள்ளடக்கம் தானே. தேவதாசி என்பவர்கள் புனிதமானவர்கள் என்று தான் சொல்லப்பட்டிருக்கிறது. கடவுளுக்கு சேவை செய்ய படைக்கப்பட்டவர்கள். இவர்கள் நேராக மோட்சத்திற்கு செல்லக்கூடிய வாய்ப்பைப்பெற்றவர்கள். இவர்களுடைய கணவன் கடவுளர்கள் தான். கருவறைக்குள்ளும் செல்லக்கூடிய அளவிற்கு மதிக்கப்படுபவர்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறதே. அது மட்டுமா…. கல்வியும், கலைகளும் கற்க, அவர்களுக்கு மட்டுமே, அந்த காலத்திலேயே உரிமை இருந்திருக்கிறது என்றெல்லாம் வரலாறு சொல்கிறது. தேவதாசி என்பவர்கள் தேவர்களுக்கு அதாவது கடவுளர்களுக்கு அடியார்களாக இருக்கத்தான் பணிக்கப்பட்டிருக்கிறார்கள். தேவருக்கு பணிவிடை செய்ய விதிக்கப்பட்ட அடியார்கள் தான் தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், காலப்போக்கில், அவர்கள் செல்வந்தர்களுக்கும் , ஜமீன்களுக்கும் வைப்பாட்டிகளாக இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது என்பது தான் உண்மை. 90 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த தேவதாசி முறை, அந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு பெரும் அவமானத்தையும், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பல சங்கடங்களைத் தரும் விதமாகத்தான் இருந்திருக்கிறது. இதனை உணர்ந்த, அந்த சமூகத்தைச் சார்ந்த டாக்டர். முத்துலட்சுமி அம்மையார் அவர்கள் அதனை ஒழிக்க எண்ணி, அதற்கான முயற்சியை கையில் எடுத்தார்கள்.

1929- ல், நீதிக்கட்சி ஆட்சியின் போது, சட்டமன்றத்தில், தீர்மானம் போட முயன்ற போது, அதற்கும், திரு, சத்தியமூர்த்தி அய்யர்வாள், “இதனை ஒழிக்கப்படாது, மதத்தில் கைவைக்காதீர்கள், இது ஒரு புனிதமான ஒரு தொழில், இறைவனுக்கு பணிவிடை செய்யும் தொழில் ..” என்றெல்லாம் சத்தம் போடத்தானே செய்தார்.

அப்போது, டாக்டர். முத்துலட்சுமி அம்மையார் அவர்களுக்கே சற்று குழப்பம் மேலோங்கி, தந்தை பெரியார் அவர்களை சந்தித்து இதனைப்பற்றி விவாதித்தார். மறுநாள், சட்டமன்றத்தில், “சரி… இது புனிதமான தொழில் தான். மோட்சத்திற்கு செல்லும் வாய்ப்பெல்லாம் இருக்கிறது தான். ஆனால், எங்கள் சமூகப் பெண்களுக்கு போதுமான அளவிற்கு இந்த புனிதப்பட்டம் வந்துவிட்டது. இனி, உங்கள் சமூகப் பெண்களை, இதுபோல், தேவதாசி பணியை மேற்கொள்ள சொல்லுங்கள்.!” என்று கூறினாரே. அதற்குப்பிறகு தானே அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்த தேவதாசி என்ற ஒரு பெண்ணடிமை முறை ஒழிக்கப்பட்டது. அதற்கு மிகமுக்கிய காரணம் தந்தை பெரியார் அவர்கள் தானே.!

இன்று ஆண்டாளை சொல்லிவிட்டார்கள் என்று குதிக்கும் இந்த இந்துத்துவ சக்திகள், அன்று எங்கள் இனத்தைச் சார்ந்த, ஒரு சமூகப் பெண்களை எப்படியெல்லாம் இழிவாக நடத்தினீர்கள், அடிமைப்படுத்தி வைத்திருந்தீர்கள் என்பதெல்லாம் வரலாற்று உண்மைகள் இருக்கின்றனவே. என்றென்றும் நிலைக்கக்கூடிய சான்றுகள் அல்லவா அவைகள். ஆரியம் என்றைக்கும் மற்றவர்கள் முதுகில் ஏறி குதிரை சவாரி செய்யத்தானே எத்தனிக்கும். தனக்கு என்றால், குதியாட்டம் போடும் என்பது தெரிந்த விசயம் தானே. இப்போது ஆண்டாளை, தேவதாசி என்று சொல்லிவிட்டார்கள் என்பதால், என்ன ஒரு வெறித்தனம், வன்முறையை தூண்டக்கூடிய பேச்சு. அநாகரீக வார்த்தைகள். வைணவப்பெண்கள் முதற்கொண்டு, வீதியில் இறங்கி, வைரமுத்து அவர்களிடம் மன்னிப்பு கேட்கச்சொல்லி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று செய்கிறார்கள். இதில் என்ன கொடுமையென்றால், கவியரசு அவர்கள், ‘இது என்னுடைய கருத்து அல்ல, ஒரு ஆய்வில் சொல்லப்பட்டதைத்தான் குறிப்பிட்டேன், அது உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்’ என்று சொல்லியும் கூட, மன்னிப்பு கேள்.. என்று திருவரங்கம், திருவில்லிபுத்தூர், திருவல்லிக்கேணி, மைலாப்பூர் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி, பெரிதாக்கி, தமிழக மக்களிடம், ஏதோ, இந்து மதத்திற்கு இவர்கள் தான் பாதுகாவலர்கள் என்பது போன்ற ஒரு மாயையை உருவாக்கி, மதத்தின் பெயரால், மக்களை துண்டாட திட்டம் போடுகிறது ஆரியம். இது தான் இவர்களின் நோக்கமாக இருக்கிறது. ஆண்டாள் என்ற பெயரில், மதக்கலவரத்தைத் தூண்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. அதன் மூலம், தமிழ்நாட்டில், தன்னுடைய தேர்தல் வேட்டையை சாத்தியமாக்க முயல்கிறது என்பதை நாம் உணரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வட மாநிலங்களில் இதே உத்தியை கையாண்டு தான், தேர்தல் வெற்றியை தனக்கானதாக ஆக்கிக்கொண்டு வருகிறது ஆர்.எஸ். எஸ்., பாசக, சங் பரிவாரங்கள் மற்றும் இந்துத்துவ ஆதிக்க அமைப்புகள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.!

இன்றும் கூட இந்து மதத்தில் இருக்கும் படிக்கட்டு சாதிய முறையில், சூத்திரர்களாக பார்க்கப்படும், மனிதர்கள் அனைவரும் தாசி மக்கள் என்று தானே இருக்கிறது. அதைத்தானே, மனுதர்மம் என்ற அதர்ம நூலும், பகவத்கீதையும் சொல்கின்றன. இந்த உண்மையை நம் மக்கள் உணர வேண்டும். இளைஞர்கள், இந்த மதவாத சக்திகளிடம் சிக்காமல், நம்மின வரலாறும், நம்முடைய வாழ்வியலையும், ஆரியம் மீண்டும் நம்மை அடிமைப்படுத்த முயற்சிக்கும் சதியையும், திராவிடம், ஆரியத்திற்கான போராட்டங்கள் பற்றிய உண்மைகளையும், தெளிவாக அறிந்து, அதற்கான வழிமுறைகளை உண்டாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம். நம்மைச்சுற்றி பல வழிகளில், சதிவலைகள் பின்னப்படுகின்றன. அதற்கு, நம்மாநில அரசும் கைகட்டி, வாய் மூடி, அடிமை சேவகம் செய்துகொண்டிருக்கிறது என்பது தான் மிகவும் கண்டனத்துக்குரியது.!

மக்களே … நாம் சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். மதவாத சக்திகளின் உண்மை முகத்தை உணர்ந்து, அதனை முறியடிக்க முன்வாருங்கள்.!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆண்டாளை துணைக்கழைத்த இந்துத்துவம்.!”

அதிகம் படித்தது