நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

ஆண்தகை (சிறுகதை)

முனைவர் ஆ.சந்திரன்

Jun 8, 2019

siragu aanthagai1

குறுக்கும் நெடுக்குமான கோடுகளுக்கு நடுவில் மங்களம் பாடுவதில் வல்லவர்கள். அவர்கள்தான் அவனை முதலில் வரவேற்றனர். பார்ப்பதற்கு தம்மைப் போன்ற தோற்றப்பொலிவுடன் இருந்ததால் முதல் சந்திப்பிலேயே கட்டித்தழுவி தங்களுடைய அன்பை வெளிப்படுத்தினர். தான் யார்? என்பதையும் ஏன் இந்த கோலத்தில் இந்தப் புள்ளியில் வந்து நிற்கிறேன் என்றும் அவர்கள் கேட்கத் தயாராக இல்லை என்பதை அவனால் அப்போது நம்பமுடியவில்லை. குறைந்த பட்சம் தன்னுடைய பெயரையாவது கேட்பார்கள் என்று மனதிற்குள் நினைத்தான். அவனுடைய கண்கள் எதிரிலிருந்த முகங்களை நோட்டம் விட்டன.

கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்த பெண் மீது அவனுடைய பார்வை சென்ற போது,“பயில்வான் பக்கிரிக்கு! தண்ணீர் கொடும்மா!” என்ற குரல் கனத்து ஒலித்தது.

அது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன்னுடைய பெயரை இவர்கள் எப்படி அறிந்து கொண்டார்கள் என்று யோசித்து முடிப்பதற்குள் விருந்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தான் பக்கிரி. இல்லை… இல்லை… பயில்வான் பக்கிரி.

உணவைக் கையால் எடுத்து வாயில் வைக்கும் சமயத்தில் லொல்! லொல்! என்ற சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் தன்னை நோக்கித்தான் வருகிறதோ! என்ற சந்தேகம் பயில்வான் பக்கிரியின் மனதிற்குள் இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாதவனாய் உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

ஒரு வழியாக ரசத்துடன் விருந்து உபசரிப்பு முடிவுக்கு வந்தது.

லட்சுமியின் வழிகாட்டுதலால் கை கழுவுவதற்காக வீட்டின் வடமேற்கு மூலையில் இருந்த கிணற்றின் அருகே அழைத்துச் செல்லப்பட்டான். அதுவரை லொல்! லொல்! என்று குரைத்துக்கொண்டிருந்த நாய் நாக்கைத் தொங்கவிட்டவாறே அவனைப் பார்த்து அமைதியானது. கிணற்றிற்கு பத்தடித் தள்ளி நின்றிருந்த அதன் பார்வையில் தனக்கான ஏதோ ஒன்றை மறைத்து வைத்துள்ளதாகத் தோன்ற அதை உற்றுப்பார்த்தான்.

“அது தெரு நாய்ங்க. அப்படித்தான் கொலைக்கும். நீங்க கை கழுவிட்டு வாங்க” என்ற வாசகத்தில் பயில்வான் பக்கிரியின் கவனம் திசை மாறியது. என்றாலும், அது தற்காலிகமான ஒன்றாகவே இருந்தது.

வெற்றிலைப்பாக்குப் போட்டுக்கொண்டு திண்ணையில் அமர்ந்த வீட்டின் தலைவன் பாக்கிரியைப் பார்த்து கேட்டார். “உங்களுக்கு இந்த மாதிரியான பழக்கம் ஏதும் இல்லதானே?” என்று.

ஆமாம்… என்பதாகத் தலையாட்டியவன் கவனம் மீண்டும் மெல்ல குரைக்கத் தொடங்கிய நாயின் மீது திரும்பியது.

சிதிலமடைந்த மயிர், பழுப்பேறிய நிறம், எலும்பும் தோலுமாய் மெலிந்த தேகம் என அதன் நிலைமை பார்க்க மிகவும் கவலைக்கிடமாகத்தான் தோன்றியது. என்றாலும், அது கம்பீராய் நின்று சற்றும் சலைக்காமல் குரைத்துக் கொண்டிருந்தது. உடலின் தோற்றத்திற்கு முற்றிலும் நேர் மாறாக இருந்த லொல்! லொல்! என்ற சத்தம் பக்கிரியின் கவனத்தை ஈர்த்ததில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை.

நாயின் அந்த கனத்த சத்தத்தைக் கேட்டு நன்றாகப் பால்குடித்துக் கொழுத்திருந்த பசுவின் கன்று பால்குடித்தலை மறந்து துள்ளி குதித்தது. ஓரிடத்தில் நிற்காமல் இங்கும் அங்குமாய் ஓடித் திரிந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்த பயில்வான் பக்கிரி மீண்டும் நாயைத் திரும்பிப் பார்த்தான்.

நாய் தன்னிடம் ஏதோ சொல்ல வருவதாக அவனுக்குத் தோன்றியது. என்றாலும் விருந்தாளியாக வந்திருக்கும் தான் வீட்டின் உரிமையாளரின் விருப்பத்திற்கு மாறாக ஏதும் செய்ய முடியாது. அத்துடன் அது முறையும் அன்று என்று அவனுடைய மனதிற்குப்பட்டது.

நாட்கள் நகர்ந்தன. பிறகுதான் அவனுக்குத் தோன்றியது. தான் யார்? வந்த நோக்கம் என்ன? இப்பொழுது செய்து கொண்டிருப்பது என்ன என்று.

சூரியனின் கதிர்களைத் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கொண்டிருந்தவர்களின் ஏவல் தன்னிடமிருந்து எவ்வாறு வெளியேறியது என்று யோசிப்பதற்குள் எல்லாம் மாறி இருந்தது.

தன்னுடைய பெயர், தோற்றம், பேச்சு என எல்லாம்…..

எப்படி இது சாத்தியமானது என்று அவனாலே நினைத்துப் பார்க்கமுடியாத அவளவிலான மாற்றம் நிகழ்ந்திருந்தது. அது எவ்வாறு நிகழ்ந்தது என்று உள்ளபடியே இன்றும் புரியாத ஒரு மர்மமாகவே உள்ளது.

ஆமாம்… பயில்வான் பக்கிரி என்ற தாய்மொழியின் மொழியாக்கம்  இப்போது “ஆண்தகை” என்று மாறியிருந்தது. மாறியிருந்தது என்பதைக் காட்டிலும் மாற்றிக் கொண்டிருந்தான் என்பதுதான் சரியாக இருக்கும். மாற்றப்பட்டிருந்தான் என்றும் சொல்லலாம்.

“அவன்” என்ற சொல் “அவர்” ஆனது. அவ்வாறான நிகழ்வின் போது அவர் மலையின் உச்சியில்தான் இருந்தார். அப்போது முதல் அவரது தோற்றம் பேச்சு எல்லாம் ஒரு துறவியைப் போல் மாறியது. அந்த இடம்தான் அவரை அந்த மண்ணுடன் கெட்டியாகப் பிணைத்தது. காலடியில் இருந்த மண்வாசம் அவருடைய சுவாசத்திலும் கலந்துபோக, தன்னுடைய புனித யாத்திரையைச் சூரியனும் கடக்க தயங்கி ஒதுங்கிச் செல்லும் உயரமான மலையில் இருந்து தொடங்கினார். எப்போதும் மேகம் விலகாதிருக்கும் அம்மலையில் வழக்திற்கு மாறாக நல்ல மழை பெய்தது. அது ஒரு நல்ல அறிகுறியாகப்பட்டது அவருக்கு. அந்தப் பயணம்  தன்னுடைய வாழ்வின் அர்த்தமுள்ள ஒரு பயணமாக அமையும் என்று திடமாக நம்பினார்.

பயணத்தின் போது அவருடன் ஒரு வேட்டை நாயும் உடனிருந்தது. அதுதான் அவருக்குச் சரியானதொரு வழிகாட்டியாகச் செயல்பட்டது. மண்ணில் பதுங்கியிருந்த பொக்கிசங்களை அவருக்கு அடையாளம் காட்ட எதிர்கால சந்ததியினருக்குக் கொடுக்க அவர் ஏற்பாடுகள் செய்திருந்தார்.

அதுமட்டுமே அவருக்குத் திருப்தியைத் தரவில்லை. “இதை யார் வேண்டுமானாலும் செய்து முடிக்கலாம். ஆனால், தான் புதுசாக என்ன செய்தேன்? என்ற கேள்வி அவர் நெஞ்சைத் தைத்தது. அந்த வலியுடன் பல நாள் பேராடிக்கொண்டிருந்தார்.

ஒரு நாள் நடந்து போய்க் கொண்டிருந்தபோது, ஒரு குயவன் சட்டிப் பானைகளைச் செய்து கொண்டிருந்ததைப் பார்த்தார். வயதான பெரியவர் செய்து கொண்டிருந்த சட்டிப்பானைகள் அவரை ஈர்த்தன. அருகில் சென்று பார்த்தார். அதன் வடிவங்கள் அவர் மனதைக் கொள்ளைக்கொண்டன. ஆனால், அதே நேரம் இரண்டு மூன்று சட்டிகள் முழுவடிவம் பெறாமல் இருப்பது அவருக்கு மன வருத்தத்தையும் ஏற்படுத்தத்தான் செய்தது.

“ஏங்க பெரியவரே! இந்தச் சட்டிகள் மட்டும் ஏன் முழுசாக வடிவம் பெறாமல் இருக்கிறது” என்று கேட்க,“தனக்குத் தெரிந்து தங்கள் முன்னோர்கள் இப்படித்தான் ரொம்ப காலமாகச் செய்து வருவதாக” கூறிவிட்டு  தன்னுடைய வேலையில் மூழ்கிபோனார்.

அது அவருக்குச் சரியெனப்படவில்லை. அந்தச் சட்டிகளுக்குப் புது வடிவம் கொடுக்க முடிவு செய்தார். தொடக்கத்தில் பெரியவர் மறுத்தாலும், “ஆண்தகை” செய்து தந்த வடிவம் மிகவும் அழகாக இருந்ததைப் பார்த்துத் தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டார்.

பின்னர் பெரியருடன் சேர்ந்து “ஆண்தகை” மதிய உணவு சாப்பிட்டார்.

வீட்டின் முன் இருந்த புன்னை மர நிழலில் போடப்பட்டிருந்த கயிற்றுக்கட்டிலில் கொஞ்ச நேரம் இருவரும் இளைப்பாறினர். அப்போது பானைகள் பற்றி ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர். அருகிலிருந்த நாய் அவர்களுடைய உரையாடலைச் சிவனேன்னு கேட்டுக்கொண்டிருந்தது. நீண்ட நேரம் நாக்கைத் தொங்க போட்டுக்கொண்டிருந்ததால் வாயிலிருந்து வழிந்தோடிய உமிழ் நீரை தன்னுடைய நாக்கால் அவ்வப்போது நக்கியபடி இருந்தது.

வெயில் மேற்கில் சாய ஆரம்பித்ததும் பெரியவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார் “ஆண்தகை”.

“நம்ம வீட்டை அடைய இன்னும் ஒரு பர்லாங்கு தூரம் நடக்க வேண்டும்” என்று தன்னுடைய நாயிடம் கூறினார். அதைக்கேட்ட நாய் லொல்… லொல்… என்று குறைத்தது. ஏதோ புரிந்தவர்களாய் இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி பார்த்தவாறே நடந்தனர்.

வழியில் ஒரு நீண்ட சுவரில் தீட்டப்பட்டிருந்த அழகான ஒரு ஓவியம் அவர்களின் கண்ணில் பட்டது. அந்த ஓவியத்தைப் பார்த்த அவர் அதன் அழகில் தன்னை மறந்து போனார்.

எவ்வளவு அழகு!…

உள்ளத்தைத் கொள்ளை கொண்ட அந்த அழகிய ஓவியத்தை வரைந்தவர் யார் என்பதை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அவரது பெயரை மட்டுமாவது அறிந்துகொள்ள முடிந்ததில் சிறு மகிழ்ச்சிதான் அவருக்கு. சரியாக அடையாளம் தெரியாத ஒருவரால் வரையப்பட்ட அந்த ஓவியத்தின் அழகைத் தன்னுடைய மனைவிக்கும் காட்ட வேண்டும், தான் அடைந்த இன்பத்தை அவளும் பெறவேண்டும் என்று விரும்பினார்.

கொஞ்சமும் தாமதிக்காமல் வீட்டிற்கு விரைந்தார்.

விளைவு: கொஞ்ச நேரத்தில் கணவன் மனைவியாய்  ஓவியத்தின் மயங்கி நின்றனர். அதன் அழகை வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசிக்க ஆரம்பித்தனர்.

பொழுது சாய்ந்ததால் வேறு வழியின்றி வீட்டிற்குக் கிளம்பினர்.

ஓவியத்தைப் பிரிய மனமின்றி வீட்டை நோக்கிச் செல்வதை அவர்களுடன் சேந்து பூமித்தாயும்  மட்டுமே நன்கு அறிவா்.

ஓவியரின் கைவண்ணத்தைப் புகழ்ந்து பேசிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தனர்.

 “என்ன ஒர் அழகு! இப்படி ஒரு பேரழகனை நான் இதுவரை கண்டதில்லை” என்று “ஆண்தகை” கூறினான்.

ஆமாங்க, “இப்படி ஒரு பேரழகியை நானும் கண்டதில்லை” என்றாள் திருமதி ஆண்தகை.

“கையில் வாளுடன் போரிடுவதுபோல் என்ன அற்புதமான ஒரு காட்சி” என்று இருவரும் ஒரே குரலில் ஓவியத்தைப் பற்றிப் புகழ்ந்துகொண்டிருந்தனர். அப்போது இருள் முழுமையாகத் தன்னுடைய சிறகை விரித்தது. அதனால் சூரியன் தன்னுடைய கதிர்களைப் படிப்படியாகச் சுருக்கிக்கொண்டிருந்தான்.

இரவு உணவை முடித்ததும் நீண்ட நாட்களாகத் தொடர்ந்து செய்துவந்த புதிய பொக்கிசங்களின் அழகுபடுத்தும் பணியைச் செவ்வனே முடிவுபெற்றது. அழகாகச் செய்து முடிக்கப்பெற்ற அதைக் கூர்ந்து பார்த்தார் ஆன்தகை. அது பார்க்க  மலைகளில் தேடி சேகரித்த பழைய பொக்கிசங்களைப் போலவே இருந்தது. ஆனாலும் அவற்றில் சின்ன சின்ன வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்தன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு செய்த பொக்கிசங்கள் அல்லவா? வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். சரியோ! தப்போ! எப்படியோ அவை ஒரு சின்ன மனத்திருப்தியைக் கொடுத்தன. அவற்றை உருவாக்கியதில் ஆனந்தம்தான் அவருக்கு. தன்னுடைய மகிழ்ச்சியை மனைவியுடன் பகிர்ந்து கொண்டார்.  அந்த மகிழ்ச்சியுடனே இருவரும் நன்றாக உறங்கினார்.

விடியற்காலை. சேவல் கூவியபோது அவர் காலைக்கடன்களை முடித்திருந்தார்.

சூரியன் மெல்ல கண்விழித்தபோது தன்னுடைய பயணத்தை வழக்கம்பேல் தொடர்ந்தார். அவருடன் நாயும் வாலாட்டிக்கொண்டே நிழல் போல் பின் தொடர்ந்தது…


முனைவர் ஆ.சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆண்தகை (சிறுகதை)”

அதிகம் படித்தது