ஆகஸ்டு 8, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

ஆதரவற்றோரின் பசியைப் போக்கும் சென்னை பெண்

சா.சின்னதுரை

Oct 24, 2015

aadharavatrorin1சினேகா மோகன்தாஸ். வயது 23 தான். காட்சி தொடர்பியல் (Visual Communication) பட்டதாரி. மேற்படிப்புக்கும் வேலைவாய்ப்புக்கும் ஓடிக்கொண்டிருக்கும் தலைமுறைகள் மத்தியில் சமூகச்சேவையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார். அவரது பார்வையில் ஒரு சமூக அக்கறை தெரிகிறது. ‘உணவு வங்கி’ என்ற திட்டத்தைத் தொடங்கி, சென்னையில் உணவின்றி சிரமப்படுபவர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கி அவர்களின் பசியைப் போக்கி வருகிறார்.. அவருடன் ஒரு சிறிய நேர்க்காணல்:

உணவு வங்கி’ – எப்படி உதித்தது உங்கள் சிந்தனையில்?

சினேகா மோகன்தாஸ்:இந்திய மக்கள் தொகையில் 15%-க்கும் மேற்பட்ட மக்கள் போதிய உணவின்றி தவித்து வருகின்றனர். மூன்று வேளை உணவுக்கு வழியின்றி கூட பலர் தவித்து வருகிறார்கள். சென்னை மாநகர சாலையோரங்களில் இப்படி உணவின்றி சிரமப்படும் ஊனமுற்றோர், முதியவர்கள், ஆதரவற்றவர்களை எளிதாகக் காணலாம். இது எனது மனதில் பெரும் சுமையை ஏற்படுத்தியது. இந்த அவலத்தை மாற்ற என்ன வழி என்று யோசித்தபோது தோன்றியதுதான் இந்த ‘உணவு வங்கி’.

உணவு வங்கிசெயல்பாடுகள் என்னென்ன?

aadharavatrorin3சினேகா மோகன்தாஸ்:நண்பர்கள், உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் உணவு வங்கியின் தன்னார்வலர்களாக இணைந்து உதவி புரிந்து வருகிறார்கள். உங்கள் வீடுகள், நிகழ்ச்சிகள், கூட்டங்களில் உணவு மீதமிருந்தால் ( https://www.facebook.com/groups/1628237724087693/ ) என்ற முகநூல் குழுவில் தகவல் தெரிவிக்க வேண்டும். அந்தப் பகுதிக்கு அருகாமையில் இருக்கும் உணவு வங்கியின் ஆர்வலர்கள் நேரில் வந்து உணவை பொட்டலம் செய்து எடுத்துக்கொண்டு சாலைகளில் உணவின்றி வாடுவோருக்கு வழங்கி அவர்களின் பசியைப் போக்குவார்கள்.

சென்னை தியாகராய நகரில் மட்டும் ஒரு நாளைக்கு 55உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டுவருகின்றன. நுங்கம்பாக்கம், அடையாறு, பெரம்பூர், கீழ்ப்பாக்கம், அசோக் நகர், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சேத்துப்பட்டு ஆகிய இடங்களில் உணவு வங்கியின் ஆர்வலர்கள் தங்களின் உணவு சேவையை வழங்கி வருகிறார்கள். தற்போது சென்னை முழுக்க நாள் ஒன்றுக்கு 1200 உணவு பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

உணவுப் பொருட்கள் வீணாக்கப்படுவது பற்றியதான விழிப்புணர்வு மக்களை அதிகம் சென்றடையவில்லையே?

சினேகா மோகன்தாஸ்: உண்மைதான். உலகம் முழுதும் தினமும் 130கோடி டன் உணவு வீணாக்கப்படுகின்றது. உலக மக்கள் தொகையில் ஒன்பது நபரில் ஒருவர் உணவின்றி இருக்கின்றார் என ஆய்வுகள் கூறுகின்றன. 84 சதவிகித மக்களுக்கு உணவு வீணாகிறது, வீணாக்குகின்றோம் என்றகவலையும் இல்லை,புரிதலும் இல்லை. திருமணம், விழாக்கள் இவைகளில் ஆடம்பரம் என்ற பெயரில் அதிகம் வீணாக்குகின்றனர். பல லட்சம் மக்கள் பசியோடு இரவு தூங்கச் செல்கின்றனர் என்பது வேதனையான உண்மை. பலர் ஒருவேளை உணவு மட்டுமே பெறுகின்றனர்.

40 சதவீதம் உணவு ஏதோ ஒரு காரணத்தினால் வீணாவதாக ஆய்வுகள் கூறுவது ஒவ்வொரு தனி மனித பொறுப்பினை வலியுறுத்துகின்றது. உங்கள் குழந்தைகளுக்கு பசியால் வாடுபவர் பற்றி சொல்லி உதவும் மனப்பான்மையோடு வளருங்கள். கல்யாண விழாக்களில் கண்டிப்பாய் ஆடம்பரத்தினைத் தவிருங்கள். பக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் அன்று உணவளியுங்கள். உணவு கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் ஆவர்.

பசிப்பிணி இன்றைய நிலை என்ன?

aadharavatrorin2சினேகா மோகன்தாஸ்: உணவுப்பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா திகழ்கிறது. அதேசமயம், உலகிலேயே அதிகமான மக்கள் பசியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

சாதாரண விவசாயக் குடும்பத்தினர் பலர்கூட, ஒரு வேளை பட்டினிதான் கிடக்கின்றனர். கிடைக்கும் 2 வேளை உணவும் பசிக்குப் போதுமானதாகவும், உரிய சத்தானதாகவும் இருப்பதில்லை. ஒருவருக்கு எவ்வளவு கலோரி தேவையோ அந்த அளவு சத்துள்ள உணவுகள் கிடைக்க வேண்டும். குறிப்பாக, உழைப்பாளி மக்களுக்கு அவர்கள் பாடுபடும் அளவுக்குத் தெம்பூட்டக்கூடிய உணவுகள் கிடைப்பதில்லை. இந்தியாவில் 21 லட்சம் பேர் பெரும் பசிப்பிணியால் துன்புறுகின்றனர். இவர்கள் தினம் தினம் செத்துப்பிழைப்பவர்கள்..

அடுத்த இலக்கு?

சினேகா மோகன்தாஸ்:அடுத்த சில ஆண்டுகளில் சென்னையில் சாலைகளில் வசிப்போர் யாரும் 3 வேளை உணவின்றி வாடும் நிலை இல்லாமல், உணவுண்டு வயிறு நிறைந்து, பட்டினியை வென்ற மனிதர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதே எனது கனவு..


சா.சின்னதுரை

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆதரவற்றோரின் பசியைப் போக்கும் சென்னை பெண்”

அதிகம் படித்தது