மே 18, 2019 இதழ்
தமிழ் வார இதழ்

ஆதியன் என்னும் பழங்குடியினரின் 60 ஆண்டுகால வேதனையும் சோதனையும்

ஆச்சாரி

Oct 1, 2013

மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் பிரதான சாலையில் பயணப்பட்டால் சரியாக 5 கி.மீ தொலைவில் கருப்பாயூரணி என்ற இடம் உள்ளது. இங்கிருந்து சக்திமங்கலம் பஞ்சாயத்தில் உள்ள சேரியான(காலனி) சத்யா நகர் என்ற பகுதி உள்ளது. இதே சேரியில்(காலனி) தான் மூன்று தலைமுறையாக ஆதியன் என்ற பெயர் கொண்ட (பூம் பூம் மாட்டுக்காரர்கள்) பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இக்காலனியின் தெருவில் உள்ள இருபுறத்தில் உள்ள வீட்டுத் திண்ணைகளிலும், புளியமரங்களிலும் இவ்வின மக்கள் படுத்து உறங்கிக்கொண்டும், அம்மா மகள்களுக்குப் பேன் பார்த்துக் கொண்டும், மூக்கு ஒழுகிய சிறு குழந்தைகள் தட்டில் சோற்றைச் சிந்தியவாறு சாப்பிட்டுக் கொண்டும், இளைஞர்கள் குட்டிச் சுவற்றில் அமர்ந்து புகைத்துக்கொண்டும் இருந்த காட்சிகளைக் கண்டவாறே தெருவில் சென்ற நம்மை வேற்றுகிரகவாசி போல் பார்த்தனர் இம்மக்கள்.

சிறிது தூரம் சென்ற பின், பூம் பூம் மாட்டுக்கு அலங்கரித்துக் கொண்டிருந்த பெரியசாமி என்ற 45 வயதுடைய ஒருவரைச் சந்தித்து,  உங்கள் வாழ்வைப் பற்றியும், உங்கள் பிரச்சனை பற்றியும் அறிந்து ஒரு கட்டுரை எழுத, சிறகு இதழில் இருந்து வந்துள்ளேன் எனக் கூறியது தான் தாமதம் இம்மனிதர் என்னை வார்த்தைகளால்  பொரித்துத் தள்ளிவிட்டார்.

எதற்கு எங்கள் பிரச்னையை உங்களுக்குச் சொல்ல வேண்டும்? இப்படி அரசாங்கத்து அதிகாரிகள் பல பேர் வந்தார்கள், போனார்கள், எங்கள் பிரச்சனை எதுவும் தீரவில்லை, எங்கள் வாழ்வில் ஒரு மாற்றமும் வரவில்லை, உங்களுக்கு இதைச் சொல்லத்தான் நாங்கள் இங்கே இருக்கிறோமா? எனப் பலவாறான அவதூறு சொற்களை அள்ளி வீசினார். இவர் கத்திய இக்கூப்பாட்டில் 20 க்கும் மேற்பட்ட ஆதியன் பழங்குடி மக்கள் சுற்றித் திரண்டு விட்டனர்.

உணர்ச்சிவசப்பட்டு பேசிக்கொண்டிருந்த பெரியசாமியை ஆறுதல் படுத்தினோம். பத்திரிக்கையாளர் என்று விபரம் கூறியதும் அவர் கூறினார், “ மன்னிச்சிடுங்க, நாங்க அரசாங்க அதிகாரிதான் மறுபடியும் வந்து எங்கள் ஏமாத்த வந்திருக்காங்களோ? என்று நெனச்சிட்டேன். வாங்க உட்காருங்க என ஒரு புளியமரத்தடியில் கிழிந்து போன பாயை விரித்து அமர வைத்தார். ஆசையோடு ஓடிச்சென்று ஒரு சொம்புத் தண்ணீர் கொடுத்தார். பின்பு 25 மக்கள் சுற்றி அமர்ந்தனர். ஆதியன் குழுவிற்கு தலைவராக உள்ள இந்தப் பெரியசாமி அவர்களிடம் பேசத் தொடங்கினோம்.

உங்களின் பூர்வீகம் பற்றிக் கூறுங்கள்?

எனக்குத் தெரிந்து கடந்த மூன்று தலைமுறையாக நாங்கள் இங்கே தான் வசித்து வருகிறோம். மாடுகள் வளர்ப்பதும், மேய்ப்பதும் தான் எங்களின் பிரதான தொழிலாக இருந்தது. பிற்காலத்தில் இம்மாடுகளை நன்கு பழக்கப்படுத்தி, மக்களிடையே  வித்தை காட்டி பிழைத்து வந்தனர் எங்கள் முன்னோர்கள். இதுவே இன்று எங்களின் பிரதான தொழிலாக உருவெடுத்துள்ளது. நாங்கள் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசுவோம்.

தமிழ்நாட்டில் உங்கள் இன மக்கள் வேறு எங்கெல்லாம் இருக்கிறார்கள்?

எங்கள் இன மக்கள் தமிழ் நாடெங்கும் பரவிக் கிடக்கிறார்கள். அதில் குறிப்பாக கிருஷ்ணகிரி, காவிரிப்பூம்பட்டிணம், கோயம்புத்தூர், சங்கரன் கோவில், திருச்செந்தூர், ராமேஸ்வரம், ராமநாதபுரம், மதுரை, திருவாரூர், செஞ்சி, வேதாரண்யம், வேலூர், தஞ்சாவூர், பூண்டி, பட்டுக்கோட்டை, கும்பகோணம், பூதலூர், தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், விருதுநகர், மேட்டூர், வாணியம்பாடி, சிவகாசி, அருப்புக்கோட்டை, காஞ்சிபுரம், வாலாஜா, திருவள்ளூர், தர்மபுரி ஆகிய தமிழ் நாட்டிலுள்ள பல மாவட்டங்களில் உள்ளனர். தவிர கர்நாடகாவிலுள்ள ஓசூரிலும் உள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று வரை எங்களின் பும் பும் மாடான குலத்தொழிலையே செய்து வருகின்றனர். ஆங்காங்கே வாழுகின்ற எங்கள் இனத்தவரிடம் இன்றும் எங்களுக்குத் தொடர்பு உள்ளது. ஆக தமிழ்நாட்டில் மொத்தம் எங்கள் இனத்தவர் 4 லட்சம் பேர் வாழ்கின்றனர்.

உங்கள் தொழில் பற்றிக் கூறுங்கள்?

எங்களை இங்கே பூம் பூம் மாட்டுக்காரர் என்றே கூறுவார்கள். அலங்கரிக்கப்பட்ட மாடுகளை ஓட்டிச்சென்று குறிசொல்வது, பாட்டுப்பாடுவது, குடுகுடுப்பை அடித்து வாக்குச் சொல்வது போன்ற இந்த வேலைகளை ஆண்களும், சுருக்குப்பை தயாரிப்பது, பழங்கதைகளை ஒப்பாரியாகப் பாடுவது, பழைய துணிகளைச் சேகரித்து விற்பது, சாலை ஓரத்தில் வீணாகக் கிடக்கும் பாலித்தீன் பைகளைச் சேகரித்து விற்பனை செய்வது எனப் பெண்கள் வேலை செய்து பிழைத்து வருகின்றனர்.

எங்கள் முன்னோர்கள் இந்த பூம் பூம் மாட்டை, அதாவது பசு மாட்டையும், காளை மாட்டையும் அலங்கரித்துக் கொண்டு மக்களிடையே இவ்விரண்டு மாடுகளைக் கொண்டு வித்தை காட்டிப் பிழைப்பு நடத்தினர். எப்படி என்றால் மக்கள் குழுமி இருக்கும் ஒரு பகுதிக்கு இவ்விரண்டு மாட்டையும் அழைத்துச் சென்று ஆண், பெண் மாட்டை தூரத் தூர நிற்க வைத்து, எனது தந்தை ஆண் மாட்டிடம் போய் சொல்லுவார். உனக்கு என்ன வேண்டும்? பெண் வேண்டுமா? என்றால் ஆண் மாடு தலையை ஆமா என்பது போல் மேலும் கீழும் ஆட்டும். மீண்டும் ஆண் மாட்டிடம் பெண் மாட்டைக் காட்டி “அதோ அதுதான் உன் மனைவி, போய் சேர்ந்து கொள்கிறாயா? என்றதும் ஆண் மாடு மீண்டும் ஆமா என்பது போல் தலையை ஆட்டும். பின்பு என் தந்தை பெண் மாட்டிடம் வந்து “வாம்மா கல்யாணி, அதோ நிற்கிறான் பார் அவன் தான் கணவன். உன் கணவன் உன்னைத் திருமணம் செய்துகொள்ள அழைக்கிறார்  போகிறாயா? என்றதும் பெண் மாடு தலையை ஆட்டிக் கொண்டு நடந்து போய் ஆண் மாடு அருகில் படுத்துக் கொள்ளும். இவ்வாறு பசு, காளைகளைத் தாங்கள் கூறுவதை கேட்குமாறு நன்கு பழக்கிய பின் இவ்வாறு மக்கள் மத்தியில் வித்தை காட்டுவார்கள். அதன் பின் பார்க்கும் மக்கள் தங்களால் முடிந்த சில்லறைகளை அள்ளி வீசுவார்கள் அதுதான் எங்களின் சம்பாத்தியம். இதை நிகழ்த்த மாடுகளிடம் பொறுமையாக இருந்து பழக்கப்படுத்த வேண்டும்.

இப்பொழுது எங்களால் அவ்வாறு மாடுகளைப் பழக்கப்படுத்த முடியவில்லை. தற்போது நாங்கள் இம்மாடுகளை நன்கு அலங்கரித்து, எந்த மாவட்டம் செல்கிறோமோ, அதாவது எடுத்துக்காட்டாக திருச்சிக்குச் சென்றோமானால் “அங்குள்ள கிராமங்களிலுள்ள வீடுகளுக்குச் சென்று “அம்மா இது திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குப் போற  காமதேனும்மா உங்களால் முடிந்த காணிக்கையை போடுங்கம்மா’ என்போம். இதனால் மக்கள் இடும் காணிக்கையை வாங்குவதற்கென்றே  இப்பசுவின் இரு கொம்புக்கு நடுவே உள்ள நெத்தியில் ஒரு பணப்பையைத் தொங்க விட்டிருக்கிறோம். வருபவர்கள் பசு மாட்டின் முகத்தையோ, கொம்பையோ தொட்டு வணங்கிவிட்டு இந்தப் பையில் தங்களது காணிக்கையை இடுவர் பின்பு நான் அளிக்கும் திருநீற்றையோ, குங்குமத்தையோ பணிவுடன் வாங்கி நெற்றியில் பூசிக்கொண்டு செல்வர்.

இதே மதுரைக்குச் சென்றோமானால் “அம்மா இது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குப் போற காமதேனும்மா, உங்களால முடிந்த காணிக்கையை கொடுங்க” என்பேன். இவ்வாறு தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திற்குப் போனாலும் அம்மாவட்டத்திற்கு, அருகிலோ, கொஞ்சம் தூரமோ உள்ள மாவட்டத்திலுள்ள பிரபலமான கோவிலுக்குச் செல்கிறோம் எனக் கூறி மக்கள் கொடுக்கும் காணிக்கையை வாங்கிக் கொள்கிறேன்.

இப்படியாக மாவட்டம், மாவட்டமாக ஒரு மாத காலம் 5, 6 பேர்களாக அலைந்து திரிந்து சம்பாதிப்போம். எங்கள் குழுவில் எவரேனும் ஒருவர் மாதத்திற்கு ஒரு முறை வீட்டுக்குச் செல்வர். அவ்வாறு செல்லும் போது மற்றவர்கள் அவரிடம் இதுவரை சம்பாதித்த காணிக்கைப் பணத்தைக் கொடுத்து “இதை என் மனைவியிடம் கொடுத்துவிடு” என்போம், செல்கின்ற அவரும் அந்தப் பணத்தை பத்திரமாகக் கொண்டு அவரவர் மனைவியரிடம் சேர்த்து விடுவார். அதைக் கொண்டு தான் ஒரு மாத உணவு, உடை, மருத்துவச்செலவு, போக்குவரத்து, அத்தியாவசியப் பொருட்கள் என்று எங்கள் குடும்பத்தார் செலவழித்துக் கொள்வர்.

இந்தப் பசுவை அருகில் வைத்துக் கொண்டு எதை, எப்படிப் பேசி காணிக்கை வாங்குவீர்கள்?

(குடுகுடுப்பு நாயக்கர் இரவில் வந்து குறி சொல்லும் அந்தக் குரல் தொனியை மனதில் நினைத்துக் கொண்டு இவர் கூற இருப்பதைக் கூறிப்பாருங்கள் புரியும்)

எப்படிப் பேசுவோம் என்றால் “ அம்மா மக்களப்பெத்த மவராசி, புள்ளைகளைப் பெத்த புண்ணியவதி வாங்கம்மா வெளிய, சங்கரீஸ்வரி மாடு வந்திருக்கு (சங்கரீஸ்வரி- மாட்டுக்கு இவர் வைத்த பெயர்) கைப்பித்து, கால்பித்து, பருவக்காற்று, பத்து இருக்கிறவுக, உங்க வீட்டுல இருக்கிற மொளகு (மிளகு), உப்பு, 5 ½ ரூவா காணிக்கையை கொண்டு வந்து, இந்தச் சங்கரீஸ்வரி நெத்தியில முடிச்சா, உங்க உடம்புல இருக்கிற பருவு, பத்து, பிணி தீரும் சாமி” – என்று மூச்சு விடாமல் அந்த ஏற்ற இறக்கத்துடன் பேசுவோம் என்றார்.

இத்தொழிலில் வருமானம் எப்படி?

கிராமத்திற்குச் சென்றோம் என்றால் ஒரு நாளைக்கு 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கிடைக்கும். இதில் எங்கள் சாப்பாட்டுச் செலவு மட்டுமே செலவு. மாட்டுக்குத் தீவனமாகக் அங்கு இருக்கும் கிராமத்து வயல்களில் மேயவிட்டு விடுவோம். இதே நகரம் என்றால் ஒரு நாளைக்கு 200 ரூபாய் கிடைக்கும். இதில் சாப்பாடு போக, மாட்டுக்கான தீவனத்தை நகரில் விலைக்கு வாங்கியே போடுவோம். இதில் எங்கள் வாயைக்கட்டி, வயித்தைக்கட்டிச் சம்பாதித்த பணத்தை மிச்சப்படுத்தியே வீட்டுக்கு அனுப்புவோம். எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊரில் உள்ள பொது இடத்திலோ, சாலை ஓரத்திலோ படுத்துக்கொள்வோம். நாடோடி வாழ்க்கை தான் எங்கள் வாழ்க்கை. ஆனால் ஒன்று எங்களுக்குச் சர்க்கரை நோயே வந்தது கிடையாது. ஏனென்றால்  நாங்கள் தான் பல இடங்களுக்கு நடந்து செய்கிறோமே” என்றார் வியாப்பாக இருந்தது.

உங்கள் இனத்தில் திருமண முறைகள் எப்படி?

எங்க ஆதியன் இனத்தில் மாப்பிள்ளை வீட்டார்கள் 10 பேர், பெண் வீட்டிற்குச் சென்று பெண் கேட்போம். சீர் செனத்தி, வரதட்சணை என்று எதுவும் கிடையாது. பெண் வீட்டார் தாங்கள் விரும்பியதைச் செய்து பெண்ணை அனுப்பலாம். மொய், விரும்பினால் போடலாம். திருமணச் செலவை மணமகன் வீட்டார் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்று 20 ஆயிரம் இருந்தால் போதும் எங்களின் திருமணத்தை வெகு விமரிசையாகச் செய்து முடிப்போம்.

மணமகனுக்கு 25 வயதும், மணமகளுக்கு 23 வயதும் இருக்கும் போதே திருமணம் நடக்கும். இதில் பெண்கள் 15 வயதாக இருக்கும் போதே இவள், இவனுக்குத்தான் என நிச்சயம் செய்து விடுவோம். நிச்சயம் பண்ணுதல் என்பது ஒரு தட்டில் வெற்றிலை பாக்கை வைத்து மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாருக்கு தருவதே நிச்சயம் பண்ணுதலாகும்.

தற்போது நீங்கள் இங்கு எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன?

இந்தக் கேள்வியைக் கேட்டதும் இவர் உட்பட, இங்கே அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த அனைவரின் முகமும் மாறியது. கோபத்துடன் பதில் கூறினார். தமிழ்நாடு முழுக்க எங்கள் இனத்தவர் இருக்கிறார்கள் ஆனால் இந்தக் காலனியில் 47 குடும்பங்கள் இருக்கின்றன. பல மாவட்டங்களில் எங்கள் இனத்தவரே இல்லை. ஆனால் எங்கள் இனத்தில் இதுவரை 98% சதவீதம் மக்கள் இன்னும் படிக்காத கைநாட்டுக்களாகவே உள்ளோம்.

இதில் சில மாவட்டங்களில் எங்கள் இனத்தவர்களுக்கு குடியிருப்பு, வீட்டுமனைப்பட்டாக்கள், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை வழக்கியுள்ளனர். பலருக்கு இன்னும் வழங்கப்படவில்லை. இதெல்லாம் கூட எங்களுக்குப் பெரிய பிரச்சனை இல்லை. 3 தலைமுறைகளாகப் படிக்காமலேயே வந்த எங்கள் இனத்தில், இன்று எங்கள் குழந்தைகள் படிக்கும் மேற்படிப்பு மறுக்கப்படுகிறது.

எங்கள் குழந்தைகளைப் பள்ளியில் இன்று 12 ம் வகுப்பு வரை படிக்க வைக்கிறோம். 12 வது தேர்ச்சி பெற்ற எங்கள் பிள்ளைகள் மேற்படிப்பைத் தொடரச் சாதிச்சான்றிதழ் கேட்கின்றனர். நாங்களும் இதற்காக கடந்த 60 வருடமாக எங்கள் தாத்தா, பாட்டி காலத்தில் இருந்தே பல்வேறு விதத்தில் போராடி வருகிறோம். இதுவரை எந்த அரசும் எங்களுக்குச் சாதிச்சான்றிதழ் வழங்கவில்லை. எங்களில் பலருக்குக் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, சாதிச்சான்றிதழ், அரசு குடியிருப்பு என்று எதுவும் இல்லாமல் எங்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதால் சொந்த நாட்டிலேயே அகதிகளாகவும், வறுமையிலும், பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறோம்.

எங்கள் குழந்தைகள் மேற்படிப்பைத் தொடரச் சாதிச்சான்றிதழ் இல்லாத காரணத்தால் எங்கள் குலத்தொழிலையே, எங்கள் பிள்ளைகளும் பார்த்து வருகின்றனர். நாங்கள் தான் படிக்காமல் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தோம். எங்கள் பிள்ளைகளாவது நன்கு படித்து சமூகம் மதிக்கும் வகையில் வேலை செய்ய வேண்டும் என நாங்கள் நினைத்ததை இந்த அரசு பொய்யாக்கி வருகிறது. அன்று முதல் இன்று வரை தமிழ்நாடெங்கும் இருக்கும் எங்கள் இனத்தவர் அனைவரும் பல்வேறு இடங்களில் பல்வேறு போராட்டங்களை இந்தச் சாதிச்சான்றிதழைப் பெறப் போராடி வருகிறோம். இதுவரை எந்தப் பயனும் இல்லை. இந்த அரசும் இதுவரை எங்களை கண்டுகொள்ளவே இல்லை. என இவர் கொதித்துக் கூறி அமைதியானார்.

அதுவரை அமைதியாக இருந்த இவ்வின மக்கள் இறுதியில் என்னிடம் “நீங்க தான் சாமி எப்படியாவது இந்த சாதிச்சான்றிதழைப் பெற ஏற்பாடு பண்ணணும். இந்தப் பிரச்சனையை நல்லா எழுதி இந்தச் சர்க்காரு கவனத்துக்கு நீங்கதான் கொண்டு போகணும் சாமி” என என்னைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு நின்றதை என்னால் மறக்க முடியாத நிகழ்வாகவே இன்றுவரை உள்ளது.

ஒரு குழந்தை பிறந்தவுடன் பள்ளியில் சேர்ப்பது முதல் இறப்புச் சான்றிதழ் வரை சாதியைத் தவறாமல் கேட்டும் இதே அரசு தான், இப்பழங்குடி மக்களுக்கு சாதிச்சான்றிதழைக் கொடுக்க மறுக்கிறது. இதற்கு இம்மக்கள் போராட்டம் நடத்தினாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே செயல்படுகிறது.

தமிழகத்தில் குருமன்ஸ், காட்டு நாயக்கர், இருளர், கோத்தர், ஆதியன், மலைக்குறவர், மலையாளி, படுகர், தோடர் என்று 36 வகையான பழங்குடி மக்கள் உள்ளனர். இவர்களின் பண்பாடு, கலாச்சாரம், சமயம், வாழ்வியல் முறைகள் அனைத்தும் தனித்துவமானது.

முற்படுத்தப்பட்ட, பிற்ப்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான கேள்வியும் இல்லாமல் சாதிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால் பிறப்பிலேயே பழங்குடி இனத்தைச் சார்ந்த இம்மக்களுக்கு மட்டும் பழங்குடியினருக்கான சான்றிதழை வழங்க மறுக்கிறது அரசு. அதாவது இவர்களது சாதியை அரசே ஏற்க மறுக்கிறது. இப்பிரச்சனை கடந்த 60 வருடமாக இப்படியே மாறாமலும், அரசால் அமுக்கப்பட்டும் வரும் உள்நோக்கம் இதுவரை எவருக்கும் புரியாத புதிராகவே உள்ளது.

மரபு சார்ந்து இன்று வரை தலைமுறை தலைமுறையாக வாழ்க்கை நடத்தும் இந்த இனத்தவரின் வருங்காலத் தலைமுறையாவது கல்வி உட்பட்ட அனைத்து ஜனநாயக உரிமைகளைப் பெற்றிட அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் பலத்த எதிபார்ப்பாகும்.

Her marginal comments on a paper www.justbuyessay.com/ are designed to create a dialogue with her students, raising questions about ideas

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆதியன் என்னும் பழங்குடியினரின் 60 ஆண்டுகால வேதனையும் சோதனையும்”

அதிகம் படித்தது