நவம்பர் 17, 2018 இதழ்
தமிழ் வார இதழ்

ஆன்மீக அரசியலும், ரஜினியும்.

சுசிலா

Jan 6, 2018

Siragu aanmeega arasiyal1
கடந்த வாரத்தில் நடிகர்  ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் கட்சி தொடக்கத்தைப் பற்றி அறிவித்தது நம் அனைவருக்கும் தெரியும்.  அதனைத் தொடர்ந்து பலரால் பல்வேறு விதத்தில் தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும்  விமர்சனங்கள்  வைக்கப்படுகின்றன. ஏன் இவ்வளவு விமர்சனங்கள் அவரை நோக்கி பாய்கின்றன என்பதை தமிழக மக்கள் நன்கு சிந்திக்க வேண்டும். மக்களுக்கு நன்மை செய்வது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்திக்கொண்டு தான் அரசியலில் நுழைகிறார் ரஜினிகாந்த். அவரின் பின்புலத்தில் யார் இயக்குகிறார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. மத்திய பா.ச.க அரசும், ஆர்.எஸ்.எஸ்.வும் இவரை முன்னிறுத்தி தமிழகத்தில் தங்கள் மத அரசியல் எனும் அறுவடை செய்ய துடித்துக்கொண்டிருக்கின்றன என்பது தான் உண்மை.

முதலில் மக்களும், ரஜினி ரசிகர்களும் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். திரு.ரஜினிகாந்த் மீது நமக்கு எந்த வன்மமும் கிடையாது. அவர் ஒரு நடிகர் என்பதாலோ, மராட்டியர் என்பதாலோ, கர்நாடகத்தில் வளர்ந்தவர் என்பதாலோ அல்ல இந்த நிலைப்பாடு. இந்தியா போன்ற ஒரு சனநாயக நாட்டில், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், தேர்தலில் நிற்கலாம். ஆனால் இன்று  தமிழக மக்களுக்கு நன்மை செய்யப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு, அரசியலுக்கு வரும் ரஜினி, இதுவரை இந்த மக்களுக்காக எதாவது செய்திருக்கிறாரா அல்லது ஏதேனும் அறிக்கையாவது வெளியிட்டு இருக்கிறாரா, கண்டனங்கள் தெரிவித்திருக்கிறாரா  என்பதை மக்கள் உணர வேண்டும்.

கூடங்குளம் பிரச்சினை, நியூட்ரினோ, கெயில் குழாய் பதிப்பு, கதிராமங்கலம், நெடுவாசல் மீத்தேன் பிரச்சினை, காவேரி பிரச்சினை, விவசாயிகள் தற்கொலை,  மீனவர்கள் பிரச்சினை, நெசவாளர்கள் பிரச்சினை, சல்லிக்கட்டு, கீழடி ஆய்வு நிறுத்தப்பட்டபோது, ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது   என எதாவது ஒன்றிற்காவது குரல் எழுப்பி இருப்பரா… இந்த ரஜினிகாந்த்.!
இவைகளை  கூட விட்டு விடுவோம்… சமீபத்தில் தமிழக மக்களை மிகவும் பாதித்த, நம் அனைவரையும் உலுக்கியெடுத்த  மாணவி அனிதாவின் மரணம் பற்றி,  அவரைப் பழிவாங்கிய நீட் தேர்வைப்பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாத இந்த ரஜினிகாந்த அவர்கள்,  இப்போது அரசியல் கட்சி ஆரம்பித்து என்ன நல்லது செய்துவிடப் போகிறார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

இந்த இந்திய நாடே தெருவில் நின்று 100 ரூபாய்க்காக திண்டாடிய போது இந்த பண மதிப்பிழப்பு திட்டம் வெற்றி பெற்றிருக்கிறது, கறுப்புப்பணம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்றும், நாடே தூய்மை ஆகிவிட்டது என்றும் கூறியவர் தானே இவர். கடந்த மாதத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தையே புரட்டிப்போட்ட, ஒக்கி புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்களையும், குமரி  மாவட்ட மக்களையும்,  விவசாயிகளையும் பற்றி ஏதேனும் ஒரு வார்த்தை கூறியிருப்பாரா இந்த ரஜினிகாந்த். சிஸ்டம் கெட்டுபோய் விட்டதாகக் கூறும் இவர், மத்திய  அரசின் செயல்பாடுகளைப் பற்றி ஏதேனும் விமர்சித்திருக்கிறாரா… நம் மாநில அதிமுக அரசு, தற்போது மத்திய பா.ச.க அரசிடம் கைகட்டி சேவகம் புரிந்து கொண்டிருக்கிறது என்று அரசியலில் ஆர்வம் உள்ளவர்கள்  அனைவருக்கும் தெரிந்திருந்தும், இவருக்கு மட்டும் தெரியவில்லையா… அப்படி தெரியவில்லையென்றால், இவர் அரசியலுக்கு வந்து என்ன பயன் ..?
மத்திய அரசைப்பற்றி எந்த விமர்சனமும் வைக்காமல், பொதுவாக கூறுவது எப்படி சரியாக இருக்க முடியும். அதுவும் மத்திய  பா.ச.க அரசு, தொடர்ந்து தமிழர்களின் மீதான விரோதப்போக்கை கடைப்பிடித்து வருகிறது. மாநில சுயாட்சியைப் பறிக்கும் விதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அமைச்சர்களை மிரட்டி, அவர்களை தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டு, ஆய்வு செய்வதாக ஆளுநரை அனுப்பி செயல்பட வைக்கிறது. இதைப்பற்றி எல்லாம் மூச்சுவிடாத ரஜினிகாந்த் எந்த சிஸ்டம் கெட்டுப்போய் விட்டதாக சொல்லிக்கொண்டிருக்கிறார். மத்திய அரசின் செயல்பாடுகள் தானே இன்றைய தமிழக அரசின் ஆட்சியாக இருக்கிறது.!

எல்லாவற்றிற்கும் மேலாக, தான் ஆன்மீக அரசியல் செய்யப்போவதாக கூறுகிறார். அதென்ன ஆன்மீக அரசியல்.? அரசியலுக்கும், ஆன்மீகத்திற்கும் என்ன தொடர்பிருக்கிறது? ஆன்மிகம் என்பது ஒருவரின் தனிப்பட்ட கருத்து. அவருக்கு ஆன்மீகம் பிடிக்கும் என்பதால், அரசியலில் நுழைத்து, மக்களை வலியுறுத்த முடியுமா. இந்த நாடு ஒரு மதசார்பற்ற நாடு. இங்கு வந்து ஆன்மீகம் என்ற பெயரில், மத அரசியல் செய்ய வேண்டிய தேவை என்ன வந்து  விட்டது. தமிழ்நாடு மத அரசியலை ஒதுக்கிய மாநிலம். சமூகநீதி பேசும் மாநிலம். தந்தை பெரியார்  சமத்துவம்  விதைத்த திராவிட மண்ணில் மத அரசியல், கலவரங்கள் உண்டாக்கிவிட முடியுமா.  இங்கு வந்து மத அரசியலை வளர்க்கும் பிற்போக்குத்தனம் எடுபடுமா. பெரியார் அவர்கள் நம் மக்களை மதம் என்ற ஒன்று இல்லாதபடி,  ஒற்றுமையுடன் கூடிய இனஉணர்வை ஊட்டி பண்படுத்தி வைத்திருக்கிறார். இங்கே வந்து ஆன்மீகம் என்ற பெயரில், இந்துத்துவத்தை வளர்க்க முயற்சி செய்வைத்து என்பது  தகிடுத்த வேலை அல்லவா.!

ரஜினிகாந்தின் அரசியல் வரவை புகழ்ந்து தள்ளும் பா.ச.க வினரின் செய்கையை கவனிக்கும்போதே, ரஜினிகாந்த் முழுக்க முழுக்க பா.ச.க, ஆர்.எஸ்..எஸ். இந்துத்துவவாதிகளின் முகமூடி தான் என்பது தெளிவாக விளங்கிவிட்டதே. பா.ச.க-வினர் கடந்த ஓராண்டாகவே திராவிடக்கட்சிகளை இல்லாமல் செய்து விடுவோம் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடு தான் இது. அதிமுகவை உடைத்து, அக்கட்சியைச் சேர்ந்த ஒரு பகுதியினரை தன்வசம் ஆக்கிக்கொண்டது பா.ச.க.  அதையும் மீறி திரு. டிடிவி தினகரன் அவர்கள் வளர்ந்து கொண்டிருக்கிறார்.  திமுக பலவீனம் அடைந்து விட்டது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்த முயல்கிறது. தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் உண்டானது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி, ரஜினி என்ற மாயமானை களத்தில் இறக்கிவிடும் பம்மாத்து வேலையைத்தான் செய்து வருகிறது இந்த சங்பரிவாரங்கள்.

தமிழகத்தில், திராவிடக்கட்சிகளை ஒன்றும் செய்ய முடியாது. திராவிடம் என்பது வெறும் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல… அது ஒரு வரலாற்று சிறப்புமிக்க இனம், இந்த இனத்திற்கென்று ஒரு அறிவுசார்ந்த  வாழ்வியல் இருக்கிறது…  திராவிடமும், தமிழும் ஒன்று தான். பிரிக்கவோ, அழிக்கவோ முடியாது என்பதை இந்துத்துவ சக்திகள் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை. நம் தமிழக மண்ணிற்குரிய போராடும் வல்லமையுடன், இது போன்ற சித்து வேலைகளை முறியடிப்போம். மதவாத சக்திகளை விரட்டியடிப்போம்.!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆன்மீக அரசியலும், ரஜினியும்.”

அதிகம் படித்தது