செப்டம்பர் 18, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

ஆரேகாடு (Aarey forest)

இராமியா

Nov 2, 2019

siragu aarey forest4

ஆரேகாடு என்பது மும்பை மாநகரில் உள்ள ஒரு பெரும் திறந்த வெளிப்பகுதி. இது மும்பை நகரின் நுரையீரல் போல் அமைந்து மக்கள் சுவாசிக்க காற்றை அளிக்கிறது. மும்பை பெரு நகர இருப்புப் பாதைக்கழகம் (MMRCL – Mumbai Metro Rail Corporation Limited) இப்பகுதியில் தன் தொடர் வண்டிப் பெட்டிகளை நிறுத்திவைக்கத் (to park trains) திட்டமிட்டது. இதை செயல்படுத்துவதற்காக அங்கு உள்ள மரங்களை வெட்டுவதற்கு மும்பை மாநகராட்சி முனைந்தது. இதை எதிர்த்து சில தொண்டு நிறுவனங்கள் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.

உடனே மாநகராட்சியினர் தொண்டு நிறுவனங்களின் எதிர்ப்பை முறியடிக்க “நாங்கள் மரங்களை வெட்டவில்லை, அவற்றை வேரோடு பெயர்த்து எடுத்து வேறு இடங்களில் நடப்போகிறோம்” என்று கூறி, சுமார் 1800 மரங்களைப் பிடுங்கி விட்டனர். அவற்றில் சுமார் 800 மரங்கள் வேறு இடங்களுக்குக் கொண்டு போகும் முன்பே செத்துவிட்டன.

இதைக் கண்ட தொண்டு நிறுவனங்கள் மரங்களை வேருடன் பெயர்த்து எடுப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் 4.10.2019  வெள்ளிக்கிழமை அன்று பம்பாய் உயர்நீதிமன்றம் ஆரே பகுதி ஒரு காடு என்று “சட்டப்படி” அறிவிக்கப்படவில்லை என்றும், ஆகவே அங்கு உள்ள மரங்களை வெட்டுவதற்குத் தடை விதிக்க முடியாது என்றும் தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்பு வெளிவந்து ஒரு நாள் கழித்து, அதாவது 6.10.2019 ஞாயிறு அன்று மாநகராட்சியினர் முழுவீச்சில் மரங்களை வெட்டத் தொடங்கினர். மும்பை மாநகராட்சியின் இச்செயலுக்கு உள்ளூரில் இருந்து மட்டும் அல்லாமல் உலகெங்கிலும் உள்ள தொண்டு நிறுவனங்களிடம் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ரோஜர்ஹல்லம் (Roger Hallam) கெய்ல்பிரட்புரூக் (Gail Bradbrook) என்ற ஆங்கிலேயர்களால் உலகம் அழிவுப்பாதையில் செல்வதைத் தடுக்கும் பணிகளைச் செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் 31.10.2018 அன்று உருவாக்கப்பட்ட அழிவின் கிளர்ச்சி (XR – Extinction Rebellion) என்ற தொண்டு நிறுவனமும் உள்ளூர் தொண்டு நிறுவனங்களுடன் போராட்டத்தில் இறங்கியது. இப்போராட்டத்தை அமைதியான வழியில் நடத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மாநகராட்சியினர் வெட்ட முனைந்த மரங்களுக்கு அருகில் பிணங்களைப் போல் அசையாமல் படுத்துக்கிடக்க முடிவு செய்தனர்.

siragu aarey forest1

யாருக்கும் எந்தவித தொந்தரவும் செய்யாமல் பிணத்தைப்போலவே படுத்துக் கிடந்தவர்களைக் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கி அவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்தினர். அதன்பின் மாநகராட்சியினர் மரங்களை வெட்டத் தொடங்கினர்.

இதே போன்ற வேறு ஒரு போராட்டத்தை ஆதிக்க வர்க்கத்தினர் எதிர்கொண்ட / எதிர்கொள்ளும் விதத்தைப் பார்ப்போம்.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த கிரேட்டாதன்பெர்க் (Greta Thunberg) என்ற 16 வயது சிறுமி தன் சக மாணவ மாணவிகளின் துணையுடன் பருவநிலை மாற்றத்திற்கும், சூழ்நிலைக் கேட்டுக்கும், புவி வெப்ப உயர்வுக்கும் எதிராகப் போராடி வருகிறார்.  இன்றைய இப்பிரச்சினைகள் அனைத்துக்கும் பணக்கார நாடுகளே காரணம் என்று கடுமையாக குற்றம் சாட்டுகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நியூயார்க் நகரத்திற்குச் சென்று, அங்கு உள்ள மாணவ மாணவிகளைத் திரட்டி விழிப்புணர்வுப் போராட்டத்தில் ஈடுபட்டார். இவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு தீவிரமாகப் போராடும் இச்சிறுமிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று ஆதிக்க வர்க்கத்தினரே பரிந்துரை செய்து உள்ளனர்.

siragu aarey forest2

அதென்ன வெறுமனே பிணம் போல் படுத்துப் போராட்டம் செய்தவர்களை வன்முறையால் கலைத்து விரட்டவும், உலக மக்கள் அனைவரும் கேட்கும் படியாக உரக்கக் கத்திக் கொண்டு போராடும் சிறுமிக்கு நோபல் பரிசு பரிந்துரை செய்யவும் காரணம் என்ன?

மும்பை நகரைப் பொறுத்த வரையில், அதற்கு தொடர் வண்டிப் பெட்டிகளை நிறுத்த வேறு இடம் இல்லை. பெரு நகர இருப்புப்பாதை சீராக இயங்கா விட்டால், இன்றைய போக்குவரத்து நெரிசல் சூழலில் தொழிலாளர்கள் தொழில் இடங்களுக்குச் சென்றுவர முடியாது.தொழிலாளர்கள் தொழில் இடங்களுக்குச் சென்று வர முடியாவிட்டால் தொழிலை நடத்த முடியாது.  தொழிலை நடத்த முடியாவிட்டால் மூலதனப் பயணம் தடைபடும். மூலதனப் பயணத்தில் சிறு இடர் ஏற்படுவதைக்கூட ஒரு முதலாளித்துவ அரசால் தாங்கிக் கொள்ள முடியாது. பெரு நகர இருப்புப்பாதை (Metro Rail) மூலதனப் பயணத்தில் உராய்வு ஏற்படாமல் இருப்பதற்கு அவசியம் தேவைப்படுகிறது.ஆகவே கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சுவீடன் சிறுமியைப் பொறுத்தமட்டில் “அப்படிச் செய்ய வேண்டும்,இப்படிச் செய்ய வேண்டும்” என்று கடுமையாகக் கூறுகிறார். அவ்வளவுதான். அது மூலதனப் பயணத்தில் சிறு உராய்வையும் ஏற்படுத்தவில்லை. ஆகவே அருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஆதிக்க வர்க்கத்திற்கு ஏற்படவில்லை. அது சரி! அச்சிறுமிக்கு நோபல் பரிசு தர ஏன் பரிந்துரை செய்ய வேண்டும்? ஒன்றும் இல்லை. அவ்வாறு செய்வதன் மூலம் அச்சிறுமியையும், அவர் பின்னால் திரண்டு இருக்கும் கூட்டத்தையும் முனை மழுங்கச் செய்யமுடியும். அவ்வளவு தான்.

முதலாளி வர்க்கத்தைப் பொறுத்தவரை மூலதனப் பயணத்திற்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதைத் தவிர வேறு ஒரு கவலையும் கிடையாது.

அப்படி என்றால் சூழ்நிலைக் கேட்டில் இருந்து உலகைக் காப்பது யார், எப்படி என்று கேட்கிறீர்களா? வேறு வழியே இல்லை. இந்த உலகில் இருந்து முதலாளித்துவ ஆதிக்கத்தை முற்றிலும் ஒழித்து விட்டு, சமதர்ம (சோஷலிச) முறையை அமைப்பதுதான் உலகைக் காக்கும் ஒரே வழியாகும். சமதர்ம அமைப்பில் தான் சூழ்நிலைக் கேட்டை உண்டாக்கும் பண்டங்களின் உற்பத்தியைத் தடுக்க முடியும். (முதலாளித்துவ அமைப்பில் இலாபம் தருகின்றன என்ற காரணத்தால் அவை ஊக்குவிக்கப்படும்) ஏற்கனவே ஏற்பட்டு இருக்கும் கேடுகளை களையும் பண்டங்களை உற்பத்தி செய்ய முடியும். (முதலாளித்துவ அமைப்பில் இழப்பு ஏற்படும் என்ற காரணத்தால் அவை தவிர்க்கப்படும்) ஆகவே இதற்கான தீர்வை அரசிடம் எதிர்பார்க்க முடியாது. மக்கள்தான் தீர்வைக் காண வேண்டும்.

நீங்கள் உலகைக் காக்க வேண்டும் என்ற பக்கத்தில் நிற்கப் போகிறீர்களா?அல்லது உலகம் அழிந்தாலும் பரவாயில்லை,மூலதனப் பயணம் தடைபடக் கூடாது என்ற பக்கத்தில் நிற்கப் போகிறீர்களா?


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆரேகாடு (Aarey forest)”

அதிகம் படித்தது