ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

ஆரோக்கியம் தரக்கூடிய அறுசுவை உணவுகள் பகுதி-10

சித்தமருத்துவர் - அருண் சின்னையா நிறுவனர்- தமிழர் சித்த உணவியல் இயற்கை மருத்துவ சங்கம்

Dec 27, 2014

arockkiyam1பிட்யூட்ரி சுரப்பியில் சுரக்கக்கூடிய ஹார்மோனில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறது என்றுசொன்னால் அதற்கேற்ற உணவுகளை சாப்பிடவேண்டும். அதில் விசேசமான உணவு என்று சொல்லவேண்டும் என்றால் அக்ரகாரம். பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டக்கூடிய அற்புதமான மூலிகைகளில் மூன்று மூலிகைகளைச் சொல்லலாம். அக்ரகாரம், வல்லாரை, பூனைகாளி இந்த மூன்றையும் தொடர்ந்து சாப்பிடக்கூடியவர்களுக்கு மூளை ஒழுங்காக முறையாக சிந்திக்கும், மூளை சார்ந்த எந்தப் பிரச்சனையும் வராது, நினைவாற்றல் அற்புதமாக இருக்கும், நினைவாற்றலில் எந்தக் குறைபாடும் இருக்காது. அக்ரகாரம், வல்லாரை, பூனைகாளி இம்மூன்றையும் சமஅளவு கலந்து காலை, இரவு இரண்டு வேளையும் சூடான பசும்பாலில் தொடர்ந்து சாப்பிடுகிற பொழுது 48 நாட்களில் அபாரமான நினைவுத் திறனைப் பெறமுடியும், உடலில் நல்ல வளர்சிதை மாற்றம் உண்டாகும், கெட்டுப்போன செல்கள் எல்லாம் போய் நல்ல செல்கள் உற்பத்தியாவதற்கு இது கைகொடுக்கும்.

கணையத்தில் சுரக்கக்கூடிய இன்சுலினைத் தூண்டுவதற்கு பல்வேறு உணவுகள் இருக்கிறது. அதில் விசேசமாக சொல்லவேண்டும் என்றால் பாகற்காய். பாகற்காயை அடிக்கடி சூப் செய்து சாப்பிடக்கூடியவர்களுக்கு கணையம் உற்பத்தி செய்யக்கூடிய இன்சுலினை அதிகமாக சுரக்கும். இன்சுலினைத் தூண்டக்கூடிய உணவுப்பொருட்களில் கருவேப்பிலை, லவங்கப்பட்டை, வெந்தயம், மாம்பருப்பு, ஓமம் இதெற்கெல்லாம் முக்கியமான பங்கு உண்டு. இதுமட்டுமல்லாமல் மருதம்பட்டை, ஆவாரம்பட்டை, இலவம்பட்டை, கருவேலம்பட்டை, நாவல்பட்டை இந்தப்பட்டைகளைத் தொடர்ந்து எடுக்க வேண்டும். கணையம் சார்ந்த இன்சுலினை முறைப்படுத்த, சீர்படுத்த, செழுமைப்படுத்த இந்தப் பட்டைகள் எல்லாமே நல்லது. இதெல்லாம் தொடர்ந்து எடுக்கிறபொழுது நல்ல பலன் கிடைக்கும்.

arockkiyam3அந்த காலகட்டத்தில் பார்த்தீர்கள் என்றால் இந்த நாளமில்லா சுரப்பிகளை ஒழுங்குப்படுத்தக்கூடிய தன்மை பருத்திக்கொட்டைக்கு உண்டு. கணையம் சுரக்கக்கூடிய இன்சுலினை முறைப்படுத்துவதில் பருத்திக்கொட்டைக்கு நிகர் எதுவுமே இல்லை என்று சொல்லலாம். அதனால்தான் பண்டைய தமிழ்ச்சமுதாயத்தில் ஒவ்வொரு வீடுகளிலேயுமே வாரத்தில் ஒருநாள் பருத்தி பாலை காய்ச்சக்கூடிய தன்மை இருந்தது. இன்றைக்கு எத்தனையோ பால் கிடைக்கிறது, எத்தனையோ விதவிதமான packing food எல்லாம் வந்திருக்கிறது ஆனால் பருத்திப்பால் ஒழுங்காக முறையாக கிடைத்தாலே வயிறு சார்ந்த பிரச்சனைகள், புண் ரணம் மாற்றக்கூடிய தன்மை எல்லாமே இந்தப் பருத்திப்பாலுக்கு உண்டு. ஹார்மோனைத் தூண்டக்கூடிய தன்மை பருத்திப்பாலுக்கு உண்டு. பருத்திக்கொட்டையை நன்றாக ஊறவைத்து அதை ஆட்டி பாலெடுத்து அந்தப் பாலுக்கு சமமாக தேங்காய் பால் சேர்த்து சுக்கு, ஏலக்காய் தட்டிபோட்டு சிறிது பச்சரிசி மாவையும் கரைத்து ஊற்றி இதமாக, பதமாக இந்தப் பருத்திப்பாலை செய்வார்கள். இன்றைக்கும் நீங்கள் மதுரைக்குச் சென்றால் இந்தப் பருத்திப்பாலை சாப்பிடமுடியும். இந்தப் பருத்திப்பாலைத் தொடர்ந்து சாப்பிடக்கூடியவர்களுக்கு கணையம் சுரக்கக்கூடிய இன்சுலின் பற்றாக்குறை வருவதில்லை, இன்சுலின் முறையாக சுரக்கும் இது உண்மை.

arockkiyam2இன்சுலின் குறைபாட்டால் அவதிப்பட்ட அந்தக் காலத்தில், விஞ்ஞானம் வளரக்கூடிய அந்தக்காலத்தில் நவீன மருத்துவம் இன்சுலினை கொண்டுவந்தது. செயற்கையாக இன்சுலின் மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. செயற்கையான இன்சுலின் எதிலிருந்து எடுக்கப்பட்டது என்றால் மாடுகளுடைய கணையத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஏனென்றால் மாடுகளின் பிரதான உணவு என்பது பருத்திக்கொட்டை. அந்தப் பருத்திக்கொட்டையைத் தொடர்ந்து மாடுகளுக்குக் கொடுத்துவந்த பொழுது மாடுகளுடைய கணையம் ஒழுங்காக இருந்தது அதனால்தான் மாடுகளுடைய கணையத்திலிருந்து இன்சுலின் எடுத்து மனிதனுக்கு அதை செயல்முறைப்படுத்திக் கொடுத்த காலம் உண்டு. அதன்பிறகுதான் human insulin என்று சொல்லக்கூடிய அந்த ஹார்மோன் கண்டறியப்பட்டது. அதற்கு முன்னாள் வரையிலும் பன்றிகளிலிருந்தும், மாடுகளிலிருந்தும் கணையநீர் உறிஞ்சப்பட்டு மனிதனுக்கு செலுத்தப்பட்டது உண்மையான வரலாறு. இந்தப் பருத்திக்கொட்டையை நாம் ஏன் பழக்கப்படுத்தக்கூடாது. கணைய பற்றாக்குறை நீரை நாம் ஏன் சரிசெய்யக்கூடாது. மறுபடியும் இந்தப் பருத்திப்பால் என்பது நமது வீடுகளில் வருகிறபொழுது கண்டிப்பாக கணையம் சார்ந்த நாளமில்லா சுரப்பு கோளாறுகளை முழுமையாக ஓடஓட நம்மால் விரட்ட முடியும்.

arockkiyam4சிறுநீரகத்தில் இரண்டு விசேசமான நாளமில்லா சுரப்பிகளைப் பற்றி நாம் பேசியிருந்தோம். எரித்ரோபாய்டின், ரெனின் இவையிரண்டும் ஒழுங்காக முறையாக சுரந்தது என்றால் கண்டிப்பாக சிறுநீரக வியாதி வராது, சிறுநீரக செயலிழப்பு உண்டாகாது. ஒரு சிறுநீரகத்தின் முக்கியமானப் பணி என்பது இரத்தத்தில் தேவைக்கு அதிகமாக இருக்கக்கூடிய கிரையாட்டினைன் (ஒரு வேதிப்பொருள்), யூரியா, உப்பு, சோடியம், குளோரைடு, பாஸ்பரஸ் போன்ற பொருட்களைத் வெளியே சிறுநீர் மூலம் தள்ளி மறுபடியும் உடலை சமநிலைப்படுத்துவதுதான் சிறுநீரகத்தின் வேலை. அந்த வேலையை சிறுநீரகம் சரிவர செய்யவில்லை என்றால் நமது உடம்பானது மரத்துப்போய் நம்புமண்டலம் முழுமையாகக் கெட்டுப்போய் கல்லீரல் வீங்கி கடைசியில் மரணம் சம்பவிக்கக்கூடிய சூழல் உண்டாகும். அது வராமல் இருக்கவேண்டும் என்றால் இந்த எரித்ரோபாய்டின், ரெனின் ஹார்மோன் இவைகள் இருக்கக்கூடிய உணவுப்பொருட்களை நாம் தேர்ந்தெடுத்து சாப்பிடவேண்டும். இது எதில் இருக்கிறது என்று பார்க்கும்பொழுது துவர்ப்பான உணவுகளில் அது உண்டு. நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய், சிறுகன்பீழை (பீழைப்பூ என்று சொல்லுவோம்) இந்தப் பூவை பொங்கலுக்காக நாம் காப்பு கட்டுவோம். காப்பு கட்டக்கூடிய பூ பெரும்பாலும் பார்த்தோம் என்றால் கார்த்திகை தொடங்கி மார்கழி, தை, மாசி என்று கடும் பனி இருக்கிற அந்த காலத்தில் இந்தப் பீழைப்பூவை இயற்கை தானாகவே முளைக்க வைக்கும். பெரும்பாலும் சிறுநீரகம் சார்ந்த நோய் இருப்பவர்களுக்கு இந்த நான்கு மாதம்தான் அபாயமான மாதம். சிறுநீரம் செயலற்றுப்போயிருக்கும். இந்த சிறுநீரகத்தில் இருக்கக்கூடிய எரித்ரோபாய்டின் குறைந்துவிட்டது இனிமேல் எடிமா வந்துவிடும் என்று சொல்வார்கள் (எடிமா என்றால் உடம்பிற்குள்ளேயே நீர் கோர்த்து வீங்கி தர்பூசணி மாதிரி ஆகி கடைசியில் வெடிக்கக்கூடிய தன்மையைத்தான் எடிமா என்று சொல்வது). நீர் கோர்த்துவிட்டது, சிறுநீரகம் முழுமையாக செயலிழந்துவிட்டது என்ற வார்த்தைகள் எல்லாமே வருவதற்குக் காரணம் இந்த எரித்ரோபாய்டின்.

arokkiyamஇந்த எரித்ரோபாய்டின் மிக அதிக அளவில் கொண்ட இரண்டு மூலிகைகள் நெருஞ்சில் மற்றொன்று சிறுகன்பீழை. பெரும்பாலும் பார்த்தோம் என்றால் நெருஞ்சில் மற்றும் யானை நெருஞ்சில் என்று சொல்லுவோம். இது முழுமையாக காயாகக் கிடைக்கக்கூடிய பருவம் கார்த்திகை, மார்கழி, தை, மாசி. தென்தமிழ்நாட்டில் விருதுநகர் போன்ற இடங்களிலே நீங்கள் போய் பார்த்தீர்கள் என்றால் நெருஞ்சில் அமோகமாக விளைந்துகிடக்கும். எந்த நேரத்தில் எதன் தேவை அதிகமாக இருக்கிறதோ அதை உற்பத்தி செய்வதுதான் இறையின் தன்மை, சித்தர்களின் தன்மையும் அதுதான். சிறுநீரகம் சார்புடையவர்களுக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும். அவ்வாறு குறைவாக இருந்தது என்றால் அவர்களின் உடம்பில் உஷ்ணநிலை இருக்காது. குளுமையின் தன்மை மிக அதிகமாகும். கார்த்திகை, மார்கழி, தை, மாசி இம்மாதங்களில் குளுமை அதிகமாக இருப்பதினால் சிறுநீரக வியாதி இருப்பவர்களுக்கு இந்த மாதங்களில் மிகவும் குளுமையானத் தன்மையை அவர்கள் உணர்வார்கள். அந்த நேரத்தில் நெருஞ்சிலையும் சிறுகன்பீழையையும் சமஅளவு எடுத்து கொதிக்கவைத்து கசாயமாக செய்து தொடர்ந்து சாப்பிடுகிற பொழுது அவர்களுடைய சீதளத்தன்மையை விரட்டுவதற்கு வாய்ப்பு உண்டு. அவருக்கு எடிமா formation மரணம் சம்பவிக்காத நிலைக்குக் கொண்டு செல்வதற்கு நல்ல அற்புதமான வழியாகவும் இது உண்டு.

அது இல்லாமல் இன்னும் சில மூலிகைகள் இருக்கிறது. அம்மான் பச்சரிசி, இதனை துவையலாக அரைத்து தொடர்ந்து சாப்பிடுகிற பொழுது சிறுநீரக செயலிழப்பை சரிசெய்ய முடியும். சிறுநீரகம் உற்பத்தி செய்யக்கூடிய அந்த எரித்ரோபாய்டின், ரெனினை ஈடுகட்டக்கூடிய தன்மை அம்மான் பச்சரிசிக்கு உண்டு. துளசி, வில்வம் இந்த இரண்டையும் சமஅளவு கலந்து கசாயமாக சாப்பிடுகிற பொழுது கூட அந்த எரித்ரோபாய்டினை உற்பத்தி செய்யக்கூடிய தன்மை இந்த மூலிகைகளுக்கு உண்டு. மன அழுத்தமாகட்டும், உடல் ரீதியான பிரச்சனையாகட்டும், இரத்தத்தில் ஏற்படக்கூடிய மாறுபாடுகளாகட்டும், உடம்பு சமநிலை இழந்த விசயமாகட்டும் இவை அனைத்துக்குமே காரணம் நம் உடம்பில் உற்பத்தியாகக்கூடிய நாளமில்லா சுரப்பிகள் என்று சொல்லக்கூடிய ஹார்மோன்கள்தான். அந்த ஹார்மோன்களை பலப்படுத்தக்கூடிய உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவது மிக மிக நல்லது. எப்பொழுதுமே ருசிக்காக சாப்பிடுவதை விட்டுவிட்டு பசிக்கான உணவாக இருக்கவேண்டும். அந்த உணவு என்பது உடலை போசிப்பதாக இருக்கவேண்டும், உடலை யோசிக்க வைப்பதாக இருக்கக்கூடாது, உணவு உள்ளே வந்திருக்கிறது இதை எப்படி செரிக்கவைப்பது என்று தடுமாறக்கூடாது.

arokkiyam4நிறைய நேரங்களில் நானே யோசிப்பது உண்டு, ஐயயோ இவன் இப்பதான் சாம்பார்சாதம் சாப்பிட்டான், மோர்சாதம் சாப்பிடுகிறான், அடுத்தது இதை சாப்பிடுகிறான் நான் இதை எப்படி செரிக்கவைப்பது என்று ஒவ்வொரு உடம்பும் தவியாய் தவிக்கிறது. நிறைய உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட சாப்பிட, பல்வேறுப்பட்ட உணவுகளை ஒரே நேரத்தில் சாப்பிடுகிற பொழுது இந்த உடம்பு ஐயயோ! என்னைக் கொல்கிறானே என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டதெல்லாம் அரைக்கிறது. இதை மட்டும் நீங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். உடம்பு என்றைக்கும் ஒழுங்காக முறையாக இருக்கவேண்டும், நல்ல ஆயுளோடு தீர்க்காயுளாக இருக்கவேண்டும் என்றால்நம் உடம்பில் உற்பத்தியாகக்கூடிய ஹார்மோன்கள் மற்றும் நாளமில்லா சுரப்பிகள் எல்லாம் ஒழுங்காக உற்பத்தியாகவேண்டும். ஒழுங்காக உற்பத்தியாகிறமாதிரியான உணவைத் தேர்ந்தெடுங்கள். இதனால்உயிர் நிலைப்புத்தன்மையுடன் நெடுநாள் நூறாண்டுகள் கூட வாழலாம்.

நன்றி.

-தொடரும்

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா

எண்: 155, 94  வது தெரு,

15 வது செக்டார், கே.கே.நகர்,

சென்னை – 78

அலை பேசி: 98840 76667

இணைய தளம்: www.drarunchinniah.in

மருத்துவர் அருண் சின்னையாவின் சித்த மருத்துவம் தொடர்பான காணொளிகள் மற்றும் மின் புத்தகங்களைப் பெற அவரது இணையதளத்தைப் பார்க்கவும்.


சித்தமருத்துவர் - அருண் சின்னையா நிறுவனர்- தமிழர் சித்த உணவியல் இயற்கை மருத்துவ சங்கம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆரோக்கியம் தரக்கூடிய அறுசுவை உணவுகள் பகுதி-10”

அதிகம் படித்தது