ஆரோக்கியம் தரக்கூடிய அறுசுவை உணவுகள் பகுதி-3
சித்தமருத்துவர் - அருண் சின்னையா நிறுவனர்- தமிழர் சித்த உணவியல் இயற்கை மருத்துவ சங்கம்Oct 25, 2014
சில நேரங்களில் கிழங்கு சார்ந்த உணவுகளை மதியவேளையில் சாப்பிடுவோம், வெறித்தனமாக சாப்பிடுவோம். இதற்கு நமக்கு நாமே சப்பைக்கட்டு கூட கட்டிக்கொள்வதுண்டு. என்னவென்றால் காலையில் குறைவாக சாப்பிடலாம், மதிய வேளையில் வலுவாக சாப்பிடலாம் என்ற ஒன்று உண்டு.வலுவாக எதை சாப்பிடலாம் என்றால் நிறைய புரதம் இருக்கக்கூடிய உணவு, நிறைய சுண்ணாம்பு சத்துள்ள உணவுகள், நிறைய நார்ச்சத்துள்ள உணவுகள் இவற்றை மதியவேளைகளில் உண்பதால் உடல் என்ற தேகத்திற்கு நல்ல எரிபொருளாக இருக்கும். உடல் என்ற தேகம் ஒழுங்காக முறையாக இயங்குவதற்கு சரியாக இருக்கும். ஆனால் நாம் சில மதியவேளைகளில் நிறைய கிழங்குகள் சார்ந்த உணவுகள் அதாவது உருளைக்கிழங்கு, சப்பாத்தி, குருமா, கூடவே சிறிது சாப்பாடு உண்கிறோம். சில உணவக விடுதிகளுக்கு சென்றால் கிட்டத்தட்ட 20 வகையான உணவு பதார்த்தங்கள் ஒரே வேளையில் சிறப்பு சாப்பாடு என்ற போர்வையில் பரிமாறப்படும். அதெல்லாம் நாம் சாப்பிடுகிற பொழுது நாம் நச்சை காசு கொடுத்து வாங்கி சாப்பிடுவதற்குச் சமம். எப்படியென்றால் ஒரு வேளை உணவு என்பது ஒருபொருளாக இருக்கவேண்டும். பல்வேறு உணவுகளின் கூட்டு என்பது ஒரு உணவுக்கும் மற்றொரு உணவுக்கும் சில முரண்பாடுகளைக் கொண்டுவரக்கூடியதாக இருக்கும்.
நாம் சிறப்பு சாப்பாடு என்ற அடிப்படையில் சாப்பிடக்கூடிய இரண்டு சப்பாத்தி, அதற்கடுத்து சாதம், அதற்கடுத்து கூட்டு, இப்படி நிறைய ஒரே நேரத்தில் சேர்க்கும் பொழுது உணவு முரண்பட்டு குடல் சார்ந்த பிரச்சனைகள், செரிமானக்கோளாறு இப்படி வரக்கூடிய வாய்ப்பு நிறைய உண்டு. இந்த மாதிரி எல்லாம் வருகிற பொழுது நம்முடைய செரிமான மண்டலப் பிரச்சனை அதிகமாகும், கல்லீரல் சார்ந்த நோய்கள் வரும். குடிப்பவர்களுக்கு மட்டும் தான் கல்லீரல் சார்ந்த நோய் வரும் என்பது தவறு. மது என்பது கல்லீரலைக் கெடுக்கலாம், ஆனால் உண்மையான கல்லீரல் கோளாறு யாருக்கு வருகிறதென்றால் முரண்பாடான உணவு எடுப்பவர்களுக்கு, நொறுக்குத்தீனி சாப்பிடுபவர்களுக்கு, கடலைமாவு சார்ந்த உணவுப்பொருட்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு, துரித உணவுகள் நிறைய எடுப்பவர்களுக்கு இந்த கல்லீரல் சார்ந்த பிரச்சனைகள் வரும். கல்லீரல் சார்ந்த பிரச்சனை வந்தது என்றாலே செரிமானக்கோளாறு என்பது எழுதப்பட்ட சட்டமாக மாறிடும். செரிமானக்கோளாறு, பித்தம் அதிகமாவது, பித்தநீர் அதிகமாக சுரப்பது இப்படி நிறைய பிரச்சனைகள் வரும். ஆக மதிய உணவை மிக கவனமாக எடுக்கக்கூடியவர்களுக்கு இந்த பிரச்சனை வருவதற்கு எந்த ஒரு முகாந்திரமும் கிடையாது.
ஒரு சிலர் பார்த்தீர்கள் என்றால் நிறைய கிழங்கு சார்ந்த உணவுகளை சாப்பிட்டுவிட்டு ஒரு மணிநேரமாவது தூங்கினால்தான் அந்த உடம்பு சமச்சீரான நிலைக்கு வரக்கூடிய சூழல் மதிய உணவால் உண்டாகும். இவ்வாறு நம்முடைய உடம்பு ஆகிறது என்றால் நம்முடைய உடம்பில் கொழுப்பு சேருகிறது என்று அர்த்தம். நம் உடம்பில் நான்கு வகையான கொழுப்புகள் இருக்கிறது. எல்.டி.எல், டிரை கிளிசரைடு இந்த இரண்டும் அதிகமாவதற்குக் காரணமே மதியம் எடுக்கக்கூடிய முரண்பாடான உணவுகள் என்பதை நாம் அன்றாடம் யோசித்து வைத்துக்கொள்ள வேண்டும். மதியவேளையில் கிழங்கு சார்ந்த உணவுகள்நிறைய எடுக்கும் பொழுது சில நேரங்களில் இதயம் சார்ந்த நோய்கள் வரக்கூடிய வாய்ப்பு உண்டு. எண்ணெயில் வறுத்த உணவுகளை நிறைய எடுக்கிற பொழுது கண்டிப்பாக சில நேரங்களில் இரத்த தேக்கம் உண்டாகக்கூடிய சில வாய்ப்புகள் உண்டு. அக்காலத்தில் திரிமூலர் ஒரு பாடலில் சொல்லுவார்.
அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடகொடியாரொடு மந்தணம் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்ததே என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே
அதாவது தன்னுடைய கணவர் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வெளியூர் பயணத்தில் வணிக ரீதியாக சென்று வந்து தன் கையால் சாப்பிடவில்லை என்ற ஆதங்கத்தில் தன் கணவன் வந்த அன்றைக்கே தன் கணவனுக்கு இது பிடிக்கும், அது பிடிக்கும் என்று வாயு பதார்த்தம், கிழங்கு பதார்த்தம், இறைச்சி சார்ந்த உணவுகள் என்று நிறைய மனைவிமார்கள் செய்யக்கூடிய ஒரு காலம் உண்டு. பயணத்திற்கு சென்று வந்த பிறகு தன்னுடைய மனைவியை பத்து நாட்கள் கழித்து பார்க்கிற அந்த ஆசையில் தன்னுடைய கணவனும் மனைவியைப் பார்த்துக் கொண்டே, மனைவி பரிமாறக்கூடிய எல்லா உணவுப்பொருட்களையும் வேகவேகமாக சாப்பிடுவது, இறைச்சி எடுப்பது, கிழங்கு எடுப்பது, தேவையில்லாத வாயு பதார்த்தத்தை அதிகப்படுத்தக்கூடிய வாழைக்காய் போன்ற உணவுகளை அதிகம் எடுப்பது, இதெல்லாம் சாப்பிடுவதனால் என்ன வருகிறது என்பதை இதில் சொல்கிறார்.
அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார், மடகொடியாரொடு மந்தணம் கொண்டார் என்றால் எல்லா ஆகாரங்களையும் சாப்பிட்டு முடித்துவிட்டு மனைவியுடன் மகிழ்ச்சியில் ஈடுபட்டு இருக்கிற அந்த நேரத்தில் உடம்பில் வாய்வு அதிகமாகி செரிமானக்கோளாறு உண்டாகி, இடப்பக்கமே இறை நொந்ததே என்றார் இந்த வரிகளில் இடப்பக்கந்தான் இறை என்று சொல்லக்கூடிய இதயம் இருக்கிறது. இதயம்தான் இறை என்பது இந்தப் பாடலின் கருத்து. இடப்பக்கமே இறை நொந்ததே என்றார் என்றால் வலிக்கிறது என்று படுக்கிறார், கிடக்கப்படுத்தார் கிடந்தொழிந்தாரே என்றால் கையை இதயத்தின் பக்கமாக வைத்து படுக்கிறார், படுத்தவர் படுத்தவர்தான் அடுத்து விழிக்கவில்லை. இந்த இடத்தில் நாம் என்ன சொல்ல வேண்டியிருக்கிறது என்றால், உணவே நச்சாக மாறுகிறது. ஆக நாம் எடுக்கக்கூடிய உணவே மருந்தாகவும் மாறும், நாம் எடுக்கக்கூடிய உணவே நச்சாகவும் மாறும். ஆக உணவே மருந்து என்ற அடிப்படையை உருவாக்காத பட்சத்தில் இந்த மாதிரி செரிமான மண்டலம் சார்ந்த நோய்கள் வரும். எந்த ஒரு மனிதனுக்கு செரிமானமண்டலப்பிரச்சனை வருகிறதோ அந்த மனிதனுக்கு இதயம் சார்ந்த பிரச்சனைகள், இரத்த அழுத்த பிரச்சனைகள், சிறுநீரகப் பிரச்சனைகள், கல்லீரல் பிரச்சனைகள், சிறுநீரகத்தில் கட்டி உண்டாகக்கூடிய பிரச்சனைகள் எல்லாமே வரக்கூடிய வாய்ப்பு உண்டு. ஆக செரிமான மண்டலம் பாதிப்பு இல்லாத அளவிற்கு உணவுகளை வகைப்படுத்துகிற பொழுது நல்ல ஒரு பலன் கிடைக்கும். சித்த மருத்துவத்தில் செரிமான மண்டலக்கோளாறுகளுக்கு நிறைய மருந்துகள் உண்டு.
உதாரணமாக சொல்லப்போனால் ஒரு சிலருக்கு பசியே இல்லாமல் இருக்கும், இவர்களுக்கு பஞ்சதீபாக்கினி சூரணம். இந்த சூரணம் சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும். ஆக பசியில்லாமல் இருப்பவர்களுக்கு தீபஅக்கினியை உருவாக்கவேண்டும். ஜடராக்கினி, தீபாக்கினி என்றெல்லாம் சித்தமருத்துவத்தில் சொல்வார்கள். பசி தீயை உண்டாக்கி நன்றாக பசிக்க வைத்து, ஒரு மனிதனை நன்றாக சாப்பிட வைத்து அந்த சாப்பிட்ட உணவில் இருக்கக்கூடிய சத்தை உடலில் சேர்ப்பதுதான் இந்த பஞ்சதீபாக்கினி சூரணத்தின் வேலை.
ஒரு சிலருக்கு நன்றாக பசி எடுத்துவிடும், சாப்பிட்ட பிறகு வயிறு உப்புசம் ஆகிவிடும். இந்த உப்புசத்தைப் போக்குவதற்கும் சித்தமருந்துகள் கடைகளில் கிடைக்கிறது. இதில் சிறப்பானது அஸ்டச்சூரணம். இச்சூரணத்தில் சுக்கு, மிளகு, திப்பிலி, கருஞ்சீரகம், இந்துப்பூ போன்ற கலவைகளை கலந்து செய்யக்கூடிய எட்டுவிதமான பொருட்கள் சேர்த்து செய்யக்கூடிய ஒரு அற்புதமான கலவை. இந்தப் பொடியை சிறிது சாதத்தில் சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு அதன்பிறகு மற்ற குழம்பு பதார்த்தங்களை சாப்பிட ஆரம்பித்தோம் என்றால் அந்த உணவுகளினால் வரக்கூடிய வாய்வு தொல்லை முழுமையாக இல்லாத ஒரு சூழல் உண்டாகும். அதனால்தான் அந்த அஸ்டசூரணத்தை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள். இன்றைக்கும் சித்தமருத்துவ ஆர்வலர்கள், சித்த மருத்துவத்தில் ஈடுபாடு உள்ளவர்கள், சித்த மருத்துவர்கள் இந்த அஸ்டசூரணத்தைத்தான் மிகச்சிறந்த வாய்வு நீக்கியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சில நேரங்களில் செரிமானக்கோளாறு பிரச்சனையினால் மந்தம் உண்டாகும். மந்தம் எப்படி உண்டாகும் என்றால் எடுக்கிற உணவுதான் காரணம்.
திரிமூலர்,
“காணுமே மந்தம் கவளிக்கும் அன்னத்தால்
காணுமே மந்தம் கடுமா மிசம்மீறில்
காணுமே மந்தம் கலந்தமாப் பண்டத்தால்
காணுமே மந்தம் கடுமேதிப் பாலுக்கே” என்று கூறுகிறார்.
காணுமே மந்தம் கவளிக்கும் அன்னத்தால் என்றால் நாம் சாப்பிடக்கூடிய உணவால்தான் நம் உடம்பில் மந்தம் உண்டாகும். மந்தம்தான் மாந்தமாக மாறி அடுத்து நோயாக மாறும் என்பது திருமூலரின் கூற்று. ஆக காணுமே மந்தம் கவளிக்கும் அன்னத்தால்இ காணுமே மந்தம் கலந்தமாப் பண்டத்தால் என்றால் மாவு கலந்த உணவுப் பொருட்களை அதிகமாக எடுக்கிற பொழுது ஒரு மனிதனுக்கு மந்தம் உண்டாகும். மந்தம் அடிப்படையில் மாந்தம் உண்டாகும், மாந்தம் அடிப்படையில் கபம் உண்டாகும், கபநீர் அடிப்படையில் தான் சளி உண்டாகும், சளி அடிப்படையில் தான் உங்களுக்கு பீணிசம் உண்டாகும், பீணிசம் அடிப்படையில்தான் மூச்சிரைப்பு உண்டாகும், மூச்சிரைப்பு அடிப்படையில்தான் ஆஸ்துமா உண்டாகும். ஆக ஒரு மனிதன் ஆஸ்துமாவால் பீடிக்கப்பட்டு மூச்சிரைப்பால் அவஸ்தைபடுகிறான் என்றால் அதற்குக் காரணம் அவன் எடுத்த உணவுகள். இதைத்தான் திருமூலர் கூறுகிறார். காணுமே மந்தம் கடுமா மிசம்மீறில் என்றால் நாம் எடுக்கக்கூடிய மாமிசம் மிக அதிகமாக சாப்பிடும்பொழுது கண்டிப்பாக மந்தம் அதிகமாகும். மாமிசத்தில் புரதம் இருக்கிறது, நார்ச்சத்து இருக்கிறது, அப்படி இருந்தால் கூட மாமிசம் அதிகமாக எடுக்கிற பட்சத்தில் உடம்பில் மந்தம் உண்டாகும். அதன் அடிப்படையில் இதயம் சார்ந்த பிரச்சனைகள் வரலாம், இரத்த அழுத்தம் வரலாம், சர்க்கரை நோய் வரலாம், கொழுப்பு வியாதிகள் வரலாம்.
ஏனென்றால் மாமிசம் என்பது அளவோடு இருக்க வேண்டும். மாமிசம் என்றால் சதை, அந்த சதையைத்தான் நாம் சாப்பிடுவோம். சதைகளில் நிறைய உப்பு, கிரையாட்டினைன் இவையனைத்தும் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும். அதனால்தான் சிறுநீரகம் சார்ந்த நோயாளிகள் மாமிசம் எடுக்காமல் இருந்தாலே சிறுநீரகத்தை பாதுகாக்க முடியும். ஆனால் சிறுநீரகம் சார்ந்த நோயாளிகளுக்கு நரம்பு சார்ந்த கோளாறுகள் இருப்பதால் நரம்பு மரத்துப் போகிறது இதனால் நரம்பு மிகவும் பலவீனமாக ஆகிறது. இக்காரணத்தினால் காரசாரமாக கடினமான சில உணவுகளை சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் வரும். சிறுநீரகத்தை பாதுகாப்பதற்கு மிகச்சிறந்த வழியே எளிமையான திரவநிலையில் இருக்கக்கூடிய உணவுகளை எடுக்க ஆரம்பித்தாலே தானாகவே சரியாகும். அதனால்தான் பாடலில் காணுமே மந்தம் கடுமா மிசம்மீறில் அடுத்த வரியில் காணுமே மந்தம் கடுமேதிப் பாலுக்கே இதில் பாலே மந்தமான பொருள் என்று கூறுகிறார். கடுமேதி என்றால் எருமைப்பால். இந்த எருமைப்பாலை தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வந்தால் கூட இந்த மந்தம் அதிகமாகும். இந்த மந்தம் அடிப்படையில் மாந்தம் அதிகமாகும் என்பது திரிமூலரின் கூற்று.
ஆக எந்த ஒரு மனிதனுக்கு உணவு அடிப்படையில் மந்தம் வருகிறதோ அவனுக்கு செரிமான மண்டலம் முழுமையாக பாதிக்கப்படும். அவனுடைய உடல் முழுமையாக மாறும். உடம்பு நிறைய பிரச்சனைகளுக்கு உள்ளாகும். உடம்பு நோய்களால் சீரழியக்கூடிய, அழியக்கூடிய தன்மை உண்டாகும் என்பதெல்லாம் இந்தப் பாடலின் உட்கருத்து. இதெல்லாம் சிறகு இணையதள நேயர்கள் மிக உன்னிப்பாக கவனித்து படித்து திரிமூலருடைய வழிப்படி சித்தர்கள் சொன்ன உணவியல் நெறி, சித்தர்கள் சொன்ன மருந்து நெறியை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
அடுத்து மந்தம் அடிப்படையில் கபம் வரும் என்று சொல்லியிருந்தேன். கபத்திற்கு நிறைய மருந்துகள், மருந்துப்பொருட்கள் சொல்லப்பட்டுள்ளது. அதில் விசேசமானது தாலிசாதி சூரணம். இந்த தாலிசாதிசூரணம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், சீரகம், கருஞ்சீரகம், காட்டுச்சீரகம், சடகோப்பை, சடாமாஞ்சில், சாதிக்காய், மாசிக்காய் இத்தனையும் சேர்த்து செய்யக்கூடிய ஒரு அற்புதமான சூரணம். இந்த சூரணத்தை தேனில் கலந்து காலை, மதியம் இரண்டு வேளையில் தொடர்ந்து சாப்பிடுகிற பொழுது செரிமானக்கோளாறினால் உண்டான மந்தம், மாந்தம், அதன் அடிப்படையில் உண்டான கபம், கபநீர் எல்லாமே சரியாகி நல்ல ஒரு ஒழுங்கான உடலமைப்பை உண்டாக்கக்கூடிய தன்மை இந்த தாலிசாதி சூரணத்திற்கு உண்டு. இந்த தாலிசாதிசூரணம் சித்தமருத்துவகடைகளில் தாலிசாதி வடக மாத்திரையாக கிடைக்கும். அக்காலத்தில் நம் முன்னோர்கள் இதே தாலிசாதியையும், பச்சரிசி, சுக்கு, ஏலக்காய் இவற்றை சேர்த்து மாவாக அரைத்து அந்த மாவை பிட்டாக அவித்து அதில் பனவெல்லம் சேர்த்து பிட்டாக அவித்து தாலிசாதிபிட்டு என்று நம் தமிழ்சமூகம் சாப்பிட்டு வந்திருக்கிறது. மிக அருமையான ஒரு உணவுப்பொருள். நல்ல சுவையாக இருக்கும்.
கபம் எப்பொழுது வரும் என்றால் தை, மாசி மாதங்களில் கபம் நோய் அதிகமாக இருக்கும். அதற்கான காரணம் என்னவென்றால் அது பனிகாலம். தை, மாசி மாதங்களில் தமிழ்நாட்டில் விளையக்கூடிய ஒரு முக்கியமான உணவுப்பொருள் பனங்கிழங்கு, மரவல்லிக்கிழங்கு. இந்த கிழங்குகள் எலும்பு, தசை, நரம்புகளை வலுப்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான உணவுப்பொருள். தைப்பொங்கலுக்குக்கூட இந்த பனங்கிழங்கை அதிகமாக அவித்து சாப்பிடக்கூடிய ஒரு சூழல் உண்டு. அதே நேரத்தில் கடுமையான பனி. உணவு அடிப்படையில் எலும்பு, நரம்பு ,தசையை வலுப்படுத்தக்கூடிய உணவுகளை சாப்பிடும்பொழுது சில நேரங்களில் முறையாக சரியாக செரிமானமாகாத சூழல் உண்டாகிற பொழுது இந்த மந்தம் உண்டாகும். இந்த மந்தம் உண்டாகிறபொழுது நாம் சொன்ன இந்த தாலிசாதிபிட்டை அவர்கள் அவித்து சாப்பிட்டு இருக்கிறார்கள். பனங்கிழங்கு, சக்கரவல்லிக்கிழங்கு இவற்றை சாப்பிட்டுவிட்டு செரிமானமாகாத அந்த நேரத்தில் அரிசிமாவுடன் சுக்கு, ஏலக்காய், தாலிசாதி எல்லாவற்றையும் கலந்து பிட்டாக அவித்து அதை ஒருவேளை உணவாக சாப்பிடும் பொழுது முழுமையான செரிமானத்தன்மையுடன், முழு ஆரோக்கியத்துடன், திடமான உடம்புடன் ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இன்று நாகரீகம் என்ற போர்வையில் நிறைய விசயங்களில் நாம் மாறியிருக்கிறோம். நிறைய மீறியிருக்கிறோம். இதனால் நிறைய பிணிகள், நிறைய உடல் தேய்வு போன்ற விசயங்கள் நடக்கிறது. திருமூலர் கூறியதுபோல் மந்தத்தால் நிறைய பிரச்சனைகள் வருகிறது. எனவே இவற்றையெல்லாம் நன்றாக கவனித்து நல்ல உணவுகளை, தேர்ந்தெடுத்த உணவுகளை சிறப்பான முறையில் எடுத்துக்கொள்ளும் பொழுது கண்டிப்பாக நம்முடைய செரிமான மண்டலக்கோளாறுகள் சரியாகும். இந்த செரிமானமண்டலக் கோளாறுகள் நகர்புறங்களில் வாழக்கூடியவர்களுக்கு கண்டிப்பாக இருக்கக்கூடாது. ஏனென்றால் செரிமான மண்டலக்கோளாறுகள் நகர்ப்புற வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு வர ஆரம்பித்துவிட்டது என்றால் பிற்காலத்தில் கண்டிப்பாக சிறுநீரக வியாதிகள், புற்று வியாதிகள், சர்க்கரை நோய்கள், இதய நோய்கள் இவையெல்லாம் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று அர்த்தம். ஆக மதிய உணவில் சிறுதானியங்களை எவர் ஒருவர் உணவாக சாப்பிட ஆரம்பிக்கிறார்களோ அவர்கள் இந்த சிறுநீரக வியாதியிலிருந்து முழுமையாக விடுபடலாம்.
-தொடரும்
மேலும் தொடர்புக்கு:
சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94 வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667
சித்தமருத்துவர் - அருண் சின்னையா நிறுவனர்- தமிழர் சித்த உணவியல் இயற்கை மருத்துவ சங்கம்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆரோக்கியம் தரக்கூடிய அறுசுவை உணவுகள் பகுதி-3”