ஆரோக்கியம் தரக்கூடிய அறுசுவை உணவுகள் – பகுதி-4
சித்தமருத்துவர் - அருண் சின்னையா நிறுவனர்- தமிழர் சித்த உணவியல் இயற்கை மருத்துவ சங்கம்Nov 1, 2014
இதுவரை நமது உடம்பில் தன்னுடைய பணியை செய்யக்கூடிய செரிமான மண்டலத்தை மேம்படுத்தக்கூடிய உணவுகள் பற்றி நாம் பேசிக்கொண்டிருந்தோம். அடுத்து இந்த செரிமான மண்டலத்தோடு தொடர்புடைய மற்றொரு மண்டலம் என்பது இரத்தஓட்ட மண்டலம். நாம் எடுக்கக்கூடிய உணவுகள், முறையானதாக, ஒழுங்கானதாக, ஆரோக்கியமானதாக, சமச்சீரானதாக சரியான உணவாக இருக்கும் பட்சத்தில் நம்முடைய இரத்த ஓட்ட மண்டலமானது நம் உடம்பில் இருக்கக்கூடிய ராஜ உறுப்புகள் என்று சொல்லக்கூடிய மூளை, கல்லீரல், நுரையீரல், இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகளை முறையாக மேம்படுத்தக்கூடிய வேலைகளை இரத்த ஓட்ட மண்டலம் செவ்வனே செய்யும்.
நம் உடல் திறனை மேம்படுத்தும், செயல் திறனை மேம்படுத்தும் ஒரு வேலையை செய்யவேண்டும் என்றால் கூட நம்முடைய இரத்த ஓட்ட மண்டலம் எந்த அளவிற்கு ஒழுங்காக முறையாக சுழல்கிறதோ அதைப்பொறுத்துத்தான் நம்முடைய வேலைத்திறனை நாம் கணக்கிட முடியும், கண்டறிய முடியும். இரத்த அளவை மிகுதிப்படுத்தக்கூடிய உணவுகளை ஒவ்வொரு மனிதனும் தொடர்ந்து சரியாக எடுக்கக்கூடிய ஒரு சூழல் உண்டாக வேண்டும். நாம் செரிமானமண்டலக் கோளாறுகளைப் பற்றிப் பேசும் பொழுது அதில் மந்தமான உணவுகளை சாப்பிடக்கூடாதென்று கூறியிருந்தேன். அவ்வகையான மந்தமான உணவான மாவுப்பொருட்களைத்தொடர்ந்து எடுக்கும்பொழுது கண்டிப்பாக உடம்பில் இருக்கக்கூடிய இரத்த அளவு குறையும். இரத்த அளவை குறைப்பதில் முக்கியமான உணவுப்பொருள் மாவுப்பொருள். இரும்புச்சத்துள்ள உணவுகள், புரதச்சத்துள்ள உணவுகள், சுண்ணாம்புச் சத்துள்ள உணவுகள், சில கனிமங்களான துத்தநாகம், பொட்டாசியம், குரோமியம் போன்ற உள்ளடக்கிய உணவுகள், தாதுக்கள் அதிகம் இருக்கக்கூடிய உணவுகளை நீங்கள் தொடர்ந்து சாப்பிடும்பொழுது மட்டும்தான் இரத்தப்பிணிகள் இல்லாத சூழல் உண்டாகும். இரத்தத்தில் அனைத்து சத்துக்களும் நிறைந்து இருக்கவேண்டும். அவ்வாறு இருக்கும் பொழுதுதான் நோயில்லாத சூழலை உருவாக்க முடியும்.
இரத்தத்தை அதிகப்படுத்தக்கூடிய உணவுகளில் பிரதானமானது பழங்கள்தான். ஆப்பிள் பழம், பேரீச்சம்பழம், அத்திப்பழம், பப்பாளிப்பழம், சில நேரங்களில் தக்காளியைக் கூட சாறாக செய்து சாப்பிடலாம். இரத்தத்தை ஓரளவிற்கு மிகுதிப்படுத்துவதில் தக்காளியும் உண்டு. வில்வப்பழம் என்பது நாட்டு மருந்து கடைகளில் தேனூரலாக கிடைக்கும். தேனில் ஊரவைத்த வில்வப்பழத்தை சாப்பிடலாம். தேனில் ஊரவைத்த கடுக்காய் முரப்பாய் சாப்பிடலாம், தேனில் ஊரவைத்த நெல்லிக்காய் முரப்பாயைத் தொடர்ந்து சாப்பிடலாம். இஞ்சியைத் தேனில் ஊரவைத்து அதையும் தொடர்ந்து சாப்பிடும் பொழுது இரத்த ஓட்ட அளவை நாம் மிகுதிப்படுத்த முடியும். எந்த ஒரு மனிதனுக்கு இரத்த அளவு மிகுதியாக இருக்கிறதோ, எந்த ஒரு மனிதனுக்கு இரத்த ஓட்டம் சீராக இருக்கிறதோ அவனுடைய மூளையின் சிந்தனைத்திறன் ஒழுங்காக இருக்கும், நினைவாற்றல் அதிகமாக இருக்கும். யார் ஒருவருக்கு நினைவுத்திறன் குறைகிறதோ, நினைவு இழப்பு இருக்கிறதோ அதாவது அடிக்கடி பார்த்திருக்கிறோம், பேசியிருக்கிறோம், ஆனால் தங்களது பெயர் மட்டும் சட்டென்று நினைவிற்கு வரவில்லை என்று சொல்கிறோம் என்றால் கண்டிப்பாக இரத்தம் தலைக்கு ஏறவில்லை, பித்தம் தலைக்கு ஏறிவிட்டது என்று அர்த்தம். ஆக ஒரு மனிதனுக்கு நினைவாற்றல் கோளாறு உண்டாவதற்குக் காரணம் இரத்தத்தில் பித்தம் அதிகமாவது. பித்தம் குறையக்கூடிய சூழல் எப்பொழுது வரும் என்றால் இரத்த அளவு அதிகமாகும்பொழுது இரத்தத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எல்லாம் நிறைந்து இருக்கும் பொழுதுதான் பித்தம் குறைய ஆரம்பிக்கும். இரத்தத்தில் பித்தம் அதிகமாகிவிட்டது என்றால் கல்லீரல் சோர்வாகிவிடும். கல்லீரல் சோர்வு அதிகமாகிவிட்டாலே எதிர்மறை எண்ணங்கள், நினைவாற்றல் குறைந்துபோவது, கழுத்து சார்ந்த நடுக்கு வாதம் உண்டாவது, parkinson disease என்று சொல்லக்கூடிய நோய்கள் உண்டாவது, முடக்குவாதம் உண்டாவது கை-கால் வலி, மூட்டில் நீர்கோர்வை உண்டாவது, இடுப்பு எலும்பு வலி உண்டாவது, விரல் கணுக்கலில் வலி உண்டாவது இது எல்லாவற்றுக்குமே காரணம் என்னவென்றால் இரத்த அளவு குறைந்து பித்த அளவு அதிகரிப்பதுதான். பித்த அளவு அதிகரிப்பதனால் வாய்வு அதிகரிக்கக்கூடிய தன்மைதான் இவையனைத்து நோயும் உண்டாவதற்கு காரணமாக அமைகிறது. வாய்வுதான் வலியாக உண்டாகக்கூடிய ஒரு சூழலை உண்டாக்கும். வலி என்றாலே வாய்வு, எனவே வாய்வுதான் வலியாக உண்டாகும். எனவே இரத்த ஒட்டத்தை அதிகப்படுத்தக்கூடிய உணவுகளை சாப்பிடவேண்டும்.
நிறைய கீரைகள் எடுக்கக்கூடியவர்களுக்கு இரத்த ஓட்ட அளவு நன்றாக இருக்கும். அதில் சிறந்ததாக நாம் சொல்ல வேண்டும் என்றால் முருங்கைக்கீரை, பருப்புக்கீரை, மனத்தக்காளிக்கீரை, பாலக்கீரை, பசலைக்கீரை இந்த கீரைகளைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு இரத்த அளவு அதிகமாக இருக்கும். உணவில் இஞ்சி, சின்ன வெங்காயம், மலைப்பூண்டு போன்ற உணவுப்பொருட்களை அதிகம் எடுக்கக்கூடியவர்களுக்கு இரத்த அளவு அதிகமாக இருக்கும். இரத்த ஓட்ட மண்டலத்திற்கும் செரிமான மண்டலத்திற்கும் ஒழுங்கான தொடர்பு உண்டு, முறையான தொடர்பு உண்டு. உங்களுடைய செரிமான மண்டலம் ஒழுங்காக இருந்தால் கண்டிப்பாக இரத்த ஓட்ட மண்டலமும் ஒழுங்காக இருக்கும். ஏனென்றால் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. இரத்த ஓட்ட அளவை அதிகரிக்கவேண்டும், இரத்தத்தை அதிகப்படுத்தவேண்டும் என்றால் செரிமான மண்டலத்தை எவ்வாறு பேணிபாதுகாக்கக்கூடிய முறைகளை நான் இதற்கு முந்தைய கட்டுரையில் கூறியதில் எதையெல்லாம் தொடர்ந்து செய்கிறீர்களோ அதைவைத்துத்தான் உங்களுடைய இரத்த ஓட்ட அளவு இருக்கும். நம் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு என்பது மிக முக்கியமானது. ஆண்களுக்கு கிட்டத்தட்ட 16லிருந்து 17 மில்லிகிராம் அளவு இருக்க வேண்டும். அதேபோல் பெண்களுக்கு குறைந்தது 12லிருந்து 14 வரையிலும் இருக்க வேண்டும்.
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதைத்தான் இரத்த சோகை என்று சொல்லுவோம். சோகை வியாதி வந்தாலே உடல் மாறுபடக்கூடிய சூழல் உண்டாகும். இரத்த சோகை இருப்பவர்களுக்கு வாய்வுக்கோளாறு, வயிறு உப்புசம், மலச்சிக்கல், தலைவலி, தலைபாரம், தும்மல், மூக்கடைப்பு இப்படி பல்வேறு வியாதிகள் வரக்கூடிய வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு சோகை அதிகமாக இருந்தால் மாதவிடாய் தள்ளிப்போவது, தாய்மைக்கே அடையாளம் கருப்பைஅந்தக் கருப்பையில் கட்டி வருவது, கருப்பை சிதிலமடைந்துபோவது, கருப்பையில் சதை வளர்வது, ஒழுங்கான முறையாக மாதவிடாய் வராமல் போவது, அப்படியே மாதவிடாய் வந்தாலும்கூட தொடர்ந்து வருவது அதாவது 10 நாட்கள் அல்லது 15 நாட்கள் வருவது என்று இப்படி பல்வேறு பிரச்சனைகள் பெண்களுக்கு இரத்த சோகை அடிப்படையில் வரும். ஆக இரத்த ஓட்ட மண்டலத்தை ஒழுங்காக முறையாக சரிசெய்து கொள்ளும் பொழுதுதான் இந்தப் பிரச்சனை சரியாகும். எப்பொழுதுமே இரத்தத்தை மிகுதிப்படுத்தக்கூடிய உணவுகளை வயதறிந்து நோயின் தன்மையறிந்து விடாமல் தொடர்ந்து சாப்பிடவேண்டும். இந்த மாதிரி இரத்தத்தை அதிகப்படுத்தக்கூடிய மருந்துகளும் சித்தமருத்துவத்தில் நிறைய உண்டு.
இதில் சிறந்தது அன்னபேதி செந்தூரம். இது நாட்டுமருத்துவர்கள், சித்த மருத்துவர்கள், பாரம்பரிய மருத்துவர்கள் பக்குவமாக பயன்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான மருந்து. இந்த அன்னபேதி செந்தூரத்தை 200 மில்லி கிராம் அதாவது 4 சிட்டிகை அளவு தேனில் குழைத்து காலை, இரவு என்று இரண்டு வேளைகளில் தொடர்ந்து சாப்பிடும்பொழுது மிக அற்புதமான பலன் கிடைக்கும். உடம்பில் இரத்த ஓட்ட அளவு அதிகமாகும். அதேபோல் அயச்செந்தூரம், அயக்காந்த செந்தூரம், காந்த செந்தூரம். இவையெல்லாமே இரத்தத்தை அதிகப்படுத்தக்கூடிய செந்தூரங்கள். இன்னும் சில நேரங்களில் பஸ்பங்களையும் கையாளக்கூடிய தன்மை உண்டு. பஸ்பங்களில் விசேசமானது சிலாசத்து பஸ்பம், முத்துச்சிப்பி பஸ்பம், குங்கிலிய பஸ்பம் போன்றவை இரத்தத்தை அதிகப்படுத்தும். அதாவது எலும்பை வலுப்படுத்தி, எலும்புக்கு உள்ளே இருக்கக்கூடிய இரத்தத் தட்டுக்களை அதிகப்படுத்தி அதனடிப்படையில் இரத்த செல்களை அதிகப்படுத்தக்கூடிய தன்மையை பஸ்பங்கள் செய்யும். இந்த பஸ்பம், செந்தூரங்கள் போன்றவற்றை பக்குவமாக, பாரம்பரியமாக இருக்கக்கூடிய மருத்துவர்களின் மேற்பார்வையில் தனிநபர்கள் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
மேலும் மிகச் சாதாரனமாக இரத்தத்தை அதிகப்படுத்த ஒரு அற்புதமான விசயம் என்னவென்றால் வெட்பாலை விதை. இந்த வெட்பாலை விதை என்பது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த வெட்பாலை விதையை வாங்கி நன்றாக தண்ணீரில் அவித்தால் நெல் அவித்தது போல் இருக்கும். அதில் மேல் இருக்கக்கூடிய மேல் தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கக்கூடிய பருப்பை தேனோடு சேர்த்து நன்றாக காய்ச்சி வைத்துக்கொண்டு அதை சிரப் மாதிரி செய்து வைத்துக்கொண்டு அந்த வெட்பாலைத்தேனை காலை, இரவு என இரண்டு வேளை ஒரு வாரம் சாப்பிட்டால் போதும் ஹீமோகுளோபின் அளவு எவ்வளவு குறைவாக இருந்தாலும் ஒரே சீரான சமநிலைக்கு வந்துவிடும். அந்த அளவிற்கு அற்புதமான விசயம் சித்தர்கள் சொன்ன வெட்பாலை விதையில் இருக்கிறது. ஆக இந்த வெட்பாலை விதையை தேனாக செய்து சாப்பிடும் பொழுது இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த முடியும்.
இரத்த சோகை வரும்பொழுது சிறுநீரகம் சார்ந்த நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. நகர்புற வாழ்க்கையில் நிறைய நபர்களுக்கு கண்டிப்பாக இரத்த சோகை சார்ந்துதான் சிறுநீரக நோய்கள் வருகிறது.
-தொடரும்
மேலும் தொடர்புக்கு:
சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94 வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667
சித்தமருத்துவர் - அருண் சின்னையா நிறுவனர்- தமிழர் சித்த உணவியல் இயற்கை மருத்துவ சங்கம்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆரோக்கியம் தரக்கூடிய அறுசுவை உணவுகள் – பகுதி-4”