நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

ஆரோக்கியம் தரக்கூடிய அறுசுவை உணவுகள்- பகுதி-5

சித்தமருத்துவர் - அருண் சின்னையா நிறுவனர்- தமிழர் சித்த உணவியல் இயற்கை மருத்துவ சங்கம்

Nov 8, 2014

arokkiyam5-2சிறுநீரகத்தில் கல் உண்டாவது, நீர்க்கட்டி உண்டாவது, சீழ் பிடிப்பது போன்ற வியாதிகள் வருவதற்குக் காரணம் என்னவென்றால் இரத்த சோகை. இந்த இரத்த சோகை பிரச்சனையை உணவுகள் மூலமாக சரிசெய்து கொள்ள வேண்டும். நிறைய கீரைகள், கிழங்குகள், பருப்புகள், காய்கறிகளை அவித்து சாப்பிடுவது இவை எல்லாமே நல்ல பலன் கொடுக்கும்.

arokkiyam5-3ஒரு கைப்பிடி முருங்கைக் கீரை மற்றும் பத்து மிளகு சேர்த்து நன்றாக அரைத்து சாறெடுத்து அதைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது இரத்த ஓட்ட மண்டலத்தில் இருக்கக்கூடிய அனைத்துப் பிரச்சனைகளும் சரியாகும். சில நேரங்களில் இரத்தத் தேக்கம் உண்டாகும், இரத்த ஓட்ட மண்டலத்தில் சில நேரங்களில் இரத்தக்குழாய்களில் ஏதாவது அடைப்பு உண்டாவது, இரத்த குழாய் சுருங்குவது மற்றும் விரிவது அதனால் வரக்கூடிய இதயத்துடிப்பு (palpitation) போன்ற நோய்கள் நிறைய இருக்கும். இரத்த குழாயில் சுருக்கம், அடைப்பு, தேக்கம், கொழுப்பு சேர்ந்து கொள்வது போன்ற பிரச்சனைகள் இருக்கிற பொழுது சித்தர்கள் சொன்ன சில பூக்களை கசாயம் செய்து சாப்பிடுகிற பொழுது இவையனைத்தும் முழுமையாக சரியாகும்.

arokkiyam5-4அதில் விசேசமான கசாயம் ஆவாரம்பூ தேனீர், துளசி மல்லி காபி, தாமரைப்பூ, செம்பருத்திப்பூ, மகிழம்பூ போன்ற பூக்களை கசாயமாக செய்து சாப்பிடுகிற பொழுது விசேசமான பலன் கிடைக்கும். அதில் மிகவும் விசேசமானது தாமரைப்பூ. தாமரைப்பூவில் வெள்ளைத்தாமரை, செந்தாமரை என்று இரண்டு கிடைக்கும். இந்த வெந்தாமரை அல்லது செந்தாமரையை சுக்கு மற்றும் ஏலக்காய் சேர்த்து இதனுடன் நத்திசூரி விதையை மிதமாக வறுத்து நன்றாக கசாயம் போல் கொதிக்க வைத்து விடாமல் தொடர்ந்து சாப்பிட்டு வரும்பொழுது இரத்தத்தில் இருக்கக்கூடிய இரத்த ஓட்ட மண்டலத்தில் வரக்கூடிய இரத்தத் தேக்கம், இரத்த அழுத்தம் (Blood Pressure), இரத்த அமுக்கம்(Low Pressure –மயக்க நிலைக்குக் கொண்டுபோகக் கூடிய ஒரு விதமான நோய்) இவையனைத்தையும் முழுமையாக சரிசெய்யக்கூடிய தன்மை இதற்கு உண்டு.

arokkiyam5-5எந்த ஒரு மனிதனுக்கு இரத்த ஓட்ட மண்டலப்பிரச்சனை அதிக நாட்கள் தொடர்ந்து இருக்கிறதோ அவர்கள் கண்டிப்பாக இரத்த அழுத்தம் போன்ற நோய்களுடன் இதயம் சார்ந்த நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. இதயக்கோளாறு உண்டாவதற்கும் இரத்த ஓட்ட மண்டலத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைதான் காரணம். இரத்த ஓட்ட மண்டலத்தை முறைப்படுத்த, இதயம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்க இரத்த அளவை அதிகப்படுத்தக்கூடிய உணவுகள் அதிகம் சாப்பிடவேண்டும்.

arokkiyam5-6பேரீச்சம்பழத்தின் காயை கஜூர் காய் என்று சொல்லுவோம். இது மருந்து கடைகளில் கிடைக்கும். பத்து கஜூர் காய், நான்கு ஏலக்காய், சிறிது பனைவெல்லம், சிறிது சுக்கு தட்டிப்போட்டு நன்றாக கொதிக்கவைத்து இந்த கஜூர் காயை மட்டுமே கசாயம் செய்து சாப்பிட்டால்கூட இரத்தத்தில் இருக்கக்கூடிய ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்த முடியும். அதேபோல் இரத்த சோகையாக இருந்து மாதவிடாய் பிரச்சனை இருக்கிறது என்றால் அதையும் முழுமையாக இந்த கஜூர் காய் மூலம் சரிசெய்து கொள்ளமுடியும்.

இன்னும் சில நேரங்களில் பேரீச்சம்பழ கஞ்சி மாதிரி கூட சாப்பிடலாம். காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், சோம்பு, இதனுடன் பத்து பேரீச்சம்பழம் இதனுடன் அரிசி சேர்த்து கஞ்சி மாதிரி செய்து சாப்பிடலாம். இந்த மாதிரி சாப்பிடுகிற பொழுது இரத்த ஓட்டம் அதிகமாகும், இரத்தம் அதிகமாகும்.

கண்கள் சிலருக்கு வெளுத்துப் போயிருக்கும், கண்களைச் சுற்றி கருவளையம் இருக்கும், அந்த மாதிரி இருந்தது என்றால் அவர்களுடைய இரத்த ஓட்ட மண்டலம் சரியாக இல்லை என்று அர்த்தம். இரத்த அளவு குறைந்தவர்களுக்குத்தான் முகத்தில் தேமல், கருப்பு புள்ளி, கழுத்தைச் சுற்றி மரு வருவது, பரு வருவது என்று இவை எல்லாமே இருக்கும். இரத்த ஓட்டம் சரியில்லை, இரத்த சோகையாக இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு மலச்சிக்கலும் பிரச்சனையாக இருக்கும். நாம் சொன்ன மாதிரி செரிமான மண்டலமும் இரத்த ஓட்ட மண்டலமும் ஒன்றுக்கொன்று மிகுந்த நெருங்கிய தொடர்புடைய ஒரு மண்டலம். இரத்த ஓட்ட மண்டலத்தை சரிசெய்தாலே தானாகவே செரிமான மண்டலமும் முறையாகும். இரத்தத்தைப் பெருக்கி சுத்தமான ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இயற்கை அருளிய பழங்களை நிறைய சாப்பிடுங்கள். காய்கறிகளை சிறிது உப்பு, சிறிது புளிச்சாறு, மிளகாய்த்தூள் இவையெல்லாம் சேர்த்து இட்லி தட்டில் அவித்து காய்கறி அவியல் செய்து அதைத் தொடர்ந்து சாப்பிடுகிற பொழுது கண்டிப்பாக இரத்தத்தின் அளவை அதிகப்படுத்த முடியும். அதையும் தொடர்ந்து தாராளமாக மேற்கொள்ளுங்கள்.

arokkiyam5-8இரத்த ஓட்ட மண்டலத்தில் பிரச்சனைகள் இல்லாமல் இருக்கவேண்டும், இரத்தத்தின் அளவை அதிகப்படுத்த வேண்டும் என்றால் சுவாச மண்டலத்திற்கான சில பயிற்சிகளை செய்ய வேண்டும். அதே மாதிரி சுவாச மண்டலத்தை நீங்கள் மேம்படுத்தும்பொழுது நரம்புகளில் இரண்டு வகையான நரம்பு உண்டு. அதில் ஒன்று உணர்வு நரம்பு. எந்த ஒரு மனிதனுக்கு நுண்ணறிவு நரம்புகள் ஒழுங்காக முறையாக இருக்கிறதோ, நரம்புகள் அடிப்படையில்தான் அவனுடைய இரத்த ஓட்டம் ஒரே சீராக இருக்கும். கண், காது, மூக்கு, நாக்கு, பல், தலை சார்ந்த இடங்களில் நுண்ணறிவு நரம்புகள் அதிகமாக இருக்கும். அதேபோல் நம் உடம்பில் இருக்கக்கூடிய முக்கியமான உறுப்புகளாக இருக்கக்கூடிய மூளை, இதயம், கல்லீரல், கணையம், சிறுநீரகம், நுரையீரல் இந்த இடங்களில் இருக்கக்கூடிய நரம்புத் தொகுப்பு எல்லாமே மிக நுட்பமானதாக இருக்கும். நுட்பமான நரம்புகள் ஒழுங்காக முறையாக இயங்கும் பொழுது மனிதனுடைய இரத்த ஓட்டம் ஒழுங்காக இருக்கும், முறையாக இருக்கும், ஒரே சீராக இருக்கும். அதனடிப்படையில் அவனுடைய சிந்தனை ஒரே மாதிரி லயமான சிந்தனையாக இருக்கும். அவனிடம் தெளிவான செயலை நாம் எதிர்பார்க்க முடியும். ஆக இந்த நுண்மையான நரம்பு தொகுப்புகளை சரிசெய்யக்கூடிய உணவு எதுவென்றால் இயற்கை உணவுகள்.

arokkiyam5-10இதில் முதன்மை வகிக்கக்கூடிய கீரைகள் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை சாறாக எடுத்து சாப்பிடலாம். கீரையை உலரவைத்து பொடியாகவும் செய்து சாப்பிடலாம். விசேசமான கீரை தூதுவலை கீரை. நுண்நரம்பு தொகுப்புகளை ஒழுங்குபடுத்துவதில் தூதுவளைக்கு அபாரமான பங்கு உண்டு. தூதுவளை கீரையை பொடியாக செய்து வைத்துக் கொண்டு காலை இரவு இரண்டுவேளையும் தேனில் கலந்து சாப்பிடும் பொழுது விசேசமான பலனைப் பெறலாம்.

arokkiyam5-11தூதுவளை பூவையும் கண்டங்கத்திரி பூவையும் சமஅளவு கலந்து பொடி செய்து வைத்துக்கொண்டு அதே அளவிற்கு அக்ரகாரத்தையும் சேர்த்து இந்த மூன்றையும் சேர்த்து தேனில் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வரும்பொழுது நுட்பமான பார்வை தீட்சினியமான பார்வை உண்டாகும். சுவாச சக்தி நல்ல நுட்பமாக இருக்கும். காது கேட்கக்கூடிய தன்மை அதிகமாகும். பேச்சில் நல்ல தெளிவு கிடைக்கும். இது எல்லாமே நுண் நரம்பு தொகுப்புகளை தூண்டக்கூடிய, பாதுகாக்கக்கூடிய போசாக்கு கொடுக்கக்கூடிய தன்மை இந்த மாதிரி பூக்களுக்கும் உண்டு. அது சார்ந்த உணவுகளையும், அது சார்ந்த மருந்துகளையும் தொடர்ந்து சாப்பிடக்கூடிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் இரத்த ஓட்ட மண்டலம் மிகச் சிறப்பாக இருக்கும். இன்னும் இரத்த ஓட்ட மண்டலத்தை முறைப்படுத்த சீர்படுத்த அடுத்து சுவாச மண்டலம் நோக்கி பயணிப்போம்..

-தொடரும்

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா

எண்: 155, 94  வது தெரு,

15 வது செக்டார், கே.கே.நகர்,

சென்னை – 78

அலை பேசி: 98840 76667

இணைய தளம்: www.drarunchinniah.in

மருத்துவர் அருண் சின்னையாவின் சித்த மருத்துவம் தொடர்பான காணொளிகள் மற்றும் மின் புத்தகங்களைப் பெற அவரது இணையதளத்தைப் பார்க்கவும்.


சித்தமருத்துவர் - அருண் சின்னையா நிறுவனர்- தமிழர் சித்த உணவியல் இயற்கை மருத்துவ சங்கம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆரோக்கியம் தரக்கூடிய அறுசுவை உணவுகள்- பகுதி-5”

அதிகம் படித்தது