நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

ஆரோக்கியம் தரக்கூடிய அறுசுவை உணவுகள் பகுதி-7

சித்தமருத்துவர் - அருண் சின்னையா நிறுவனர்- தமிழர் சித்த உணவியல் இயற்கை மருத்துவ சங்கம்

Dec 6, 2014

சிறகு இணையதள வாசகர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். நெடுநாட்களாக நாம் பலதரப்பட்ட மருத்துவம் சார்ந்த விசயங்கள், உடல் சார்ந்த விசயங்கள், உளவியல் பூர்வமான சில விசயங்கள், உணவு சார்ந்த விசயங்களை அலசி ஆய்ந்துகொண்டிருக்கிறோம். சென்ற முறை நாம் பல்வேறு மண்டலங்கள், அதனுடைய பணிகள், அந்த மண்டலங்களில் வரக்கூடிய குறைபாடுகள், அதற்கு ஏற்புடைய உணவுகள் எல்லாவற்றையும் மிக விரிவாக பார்த்து வந்திருக்கிறோம். அந்த அடிப்படையில் இன்று நாம் கழிவு மண்டலம் பற்றி பேசப்போகிறோம்.

கழிவுமண்டலம்:

arokkiyam8கழிவுமண்டலம் ஒரு மனிதனுக்கு மிக மிக முக்கியமான ஒரு மண்டலம் என்று நாம் சொல்லவேண்டும். ஒரு மனிதனுக்கு தன்னுடைய வாழ்நாளை நீட்டிக்க, ஆரோக்கியமாக வாழ எந்த அளவிற்கு செரிமான மண்டலம் மிகச் சிறந்த ஒரு விசயமாகப்படுகிறதோ அதே மாதிரி ஒரு மனிதனுடைய கழிவுகளும் ஒழுங்காக முறையாக வெளித்தள்ளப்படவேண்டும். ஆக என்னதான் சத்தான ஆகாரங்கள் சாப்பிட்டாலும் கூட அதாவது ஒரு நாளைக்கு விதவிதமாக குங்குமப்பூவிலிருந்து, ஆப்பிளிலிருந்து, பேரீச்சம்பழத்திலிருந்து, அன்னாசிபழத்திலிருந்து நல்ல உயர்வான உணவுப்பொருட்களைத் தொடர்ந்து ஒரு ஆணோ பெண்ணோ சாப்பிடலாம். அப்படி சாப்பிட்டாலும் கூட அந்த சத்தான உணவுகளில் உள்ள கழிவுகள் ஒழுங்காக முறையாக வெளியேறக்கூடிய நிலை இருந்தால்தான் ஒரு ஆணோ பெண்ணோ ஆரோக்கியமாக இருக்கக்கூடிய சூழல் இருக்கும். ஆனால் இன்றைக்கு நம்முடைய உடல் உறுப்புகளில் உள்ள பிரச்சனைகளிலேயே இந்த கழிவுமண்டலப்பிரச்சனை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அதற்கான காரணம்  நம்முடைய வாழ்வியல் சூழல் மாறிப்போன ஒரு விசயத்தை நாம் கண்டிப்பாக அடிக்கோடிட்டுக் காட்டியாக வேண்டும்.

arokkiyam1அந்த காலகட்டத்தில் பார்த்தோம் என்றால் உணவுகள் ஒழுங்காக முறையாக தரம் வாரியாக பிரிக்கப்பட்டிருந்தது. அன்றைய குடும்ப அமைப்பில் சிறுவர்களுக்கு என்ன உணவு?, வாலிபர்களுக்கு என்ன உணவு?, தோட்டம் மற்றும் காடுகளில் வேலைசெய்யக்கூடிய ஆண்களுக்கு என்ன உணவு?,வீட்டிலேயே குடும்பத் தலைவியாக இருக்கக்கூடிய பெண்களுக்கு என்ன உணவு? இப்படியெல்லாம் அவர்களுடைய வேலையின் திறன் அறிந்து உணவுகள் வகைப்படுத்தப்பட்டிருந்தது.

உதாரணமாக சிறுவர்களுக்கு சாதாரணமாக பருப்பு, அரிசி, மிளகு, சீரகம் சேர்த்து கஞ்சி மாதிரியான உணவுகளைக் கொடுத்து வந்தார்கள். அன்றைய காலகட்டத்தில் தமிழர்களுடைய வாழ்வியலில் பார்க்கிற பொழுது இந்த பருப்பு அரிசி கஞ்சி பிரதானமான காலை உணவாக குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட ஒரு சூழல் இருந்தது.

அதே போல் வாலிபர்களாக இளைஞர்களாக இருக்கக்கூடிய ஆண்களுக்கு அதை விட திடமான சில உணவுகள் அதாவது பருப்போடு கீரையும் கொடுத்து வந்திருக்கிறார்கள். சில பருப்புகளான மொச்சைக்கொட்டை, காராமணி போன்ற பருப்புகளையும் வாலிபவயதில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் உணவுகளாக அவர்கள் தந்து வந்திருக்கிறார்கள். அதேமாதிரி வேலைக்கு செல்லக்கூடிய ஆண்களுக்கு முப்பது வயது மற்றும் முப்பது வயதைக் கடந்தவர்களுக்கு களியை அதாவது கேழ்வரகு களி, கம்மங்களி, சோளக்களி, வெந்தயக்களி, உளுத்தங்களி இப்பேற்பட்ட களிகளை காலை உணவாகவும், மதிய உணவாகவும் வழங்கப்பட்டு வந்தது.

arusuvai5அதே காலகட்டத்தில் வீட்டில் இருக்கக்கூடிய பெண்களுக்கு திரவநிலையில் இருக்கக்கூடிய உணவுகள் வழங்கப்பட்டது அதாவது பழக்கப்படுத்தப்பட்டிருந்தது. களி என்பது திட உணவு. சிறுதானியங்களில் களி செய்வார்கள். ஆண்களுக்கு களியைக் கொடுத்தது போக மீதமுள்ள களியில் சாதம் வடித்த தண்ணீரில் அப்படியே போட்டு வைத்திருப்பார்கள். வீட்டிலிருந்து உணவு தயாரிக்கக்கூடிய பெண்கள், நிர்வாகம் செய்யக்கூடிய பெண்கள் அந்தக் களியை கரைத்து பழையசோறுடன் சேர்த்து கூழாகக் குடிப்பார்கள். ஆக வீட்டில் இருப்பவர்களுக்கு வேலைத் திறன் குறைவாக இருக்கும். அவர்களுடைய கலோரித்திறன் குறைவாக இருப்பதனால் அவர்களுக்கு கூழ் கொடுக்கப்பட்டது.

arokkiyam3வேலைக்கு செல்லக்கூடிய ஆண்களுக்கு திட உணவு தேவை. ஏனென்றால் மண்வெட்டி பிடித்து விவசாய வேலை பார்ப்பது, தோட்டவேலை பார்ப்பது, ஏர் உழுவது, சுமை இழுப்பது, சுமை சுமப்பது போன்ற கடினமான வேலைகள் செய்வதனால் அவர்களுக்கு கடினமான உணவு வழங்கப்பட்டது. அதே மாதிரி இளைஞர்களைப் பற்றியும் யுவதிகளைப் பற்றியும் பேசும் பொழுது பருப்போடு சேர்ந்து கீரையும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வந்தது. பருப்பில் இளைஞர்களுக்கு நல்ல ஊட்டம் தரக்கூடிய, ஊக்கம் தரக்கூடிய புரதச்சத்துக்கள் உள்ளன. பயறுகளான காராமணி, கொண்டக்கடலை, மொச்சைக்கொட்டை மற்றும் பருப்புகளான துவரம்பருப்பு, மொச்சை, பச்சை மொச்சை, பச்சை துவரை இவையெல்லாம் அன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு கொடுத்ததினால் அவர்களுக்கும் நல்ல ஊக்கம், வலிமையான உடல்நிலை அவர்களுக்கு இருந்தது. குழந்தைகளுக்கு வயிறைக் கெடுக்காத அளவிற்கு பருப்பு அரிசி போட்ட கஞ்சியை காலை உணவாக, மதிய உணவாக இரவுநேரத்தில் மெதுவான மெதுஅப்பம் என்று சொல்லக்கூடிய இட்லி, வார்ப்பப்பம் என்று சொல்லக்கூடிய தோசை இவை சிறுகுழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இப்படியெல்லாம் இருந்ததினால் அவர்கள் முழுமையாக ஆரோக்கியத்தோடு வாழ்ந்தார்கள்.

ஆனால் இன்று மாறிவந்த காலச்சூழல், பணி, இடம்பெயர்வு போன்ற காரணங்களினால் நம்முடைய உணவு முறை மாறியுள்ளது. ஒரு குடும்பம் என்றால் ஒரே வகையில் பிரிக்கப்பட்டது. அதாவது சிறிய வயதிலிருந்து பெரியவயதுவரை எத்தனை வகைப்பட்ட ஆட்கள் இருந்தாலும் கூட எல்லோருக்கும் ஒரே வகையான உணவாகப் பிரிக்கப்பட்டது. சில உணவுகளை நாம் நிறைய எடுக்கக்கூடிய சூழலை உருவாக்கிக் கொண்டோம். நிறைய அரிசி கலந்த உணவுகள், மாவு கலந்த உணவுகள், எண்ணெய் கலந்த உணவுகள், செயற்கை உணவுகள், ஒரு உணவில் விரைவில் பூஞ்சை வராமல் இருக்கவேண்டும் என்பதற்காக ரசாயனப் பொருட்கள் சேர்க்கக்கூடிய சில உணவுகள் எல்லாமே எடுக்கக்கூடிய காலகட்டம் இருக்கிறதால் நம்முடைய கழிவுமண்டலம் ஒழுங்காக வேலை செய்கிறதா? என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் நாம் சொல்ல வேண்டும்.

கழிவு என்பது மிகக்குறைவாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய உணவுகளில் கழிவு என்பது மிக அதிகமாக இருக்கிறது. ஒரு ஆணோ பெண்ணோ மலச்சிக்கல் இல்லாமல் இருக்கிறபொழுதுதான் அவருடைய உடல் ஆரோக்கியமாக இருப்பதாக நாம் சொல்லலாம். அதாவது பழைய சித்த மருத்துவ நூல்களிலே சொல்வார்கள் மலம் என்பது புழுக்கை, புழுக்கையாக வெளியேற வேண்டும் என்று, அதாவது மலம் என்பது மலவாயில் ஒட்டக்கூடாது. இன்றைக்கும் பறவைகளைப் பாருங்கள், சில பறவைகள் எச்சம் இடுகின்றன. அந்த மாதிரி எச்சம் ஒட்டாது. ஆடு புழுக்கை போடும், வெறும் புல்லையும், இலை-தழைகளையும் சாப்பிடக்கூடிய ஆடு புழுக்கையாகப் போடும்போது மலவாயில் ஒட்டுவது கிடையாது. அதேமாதிரிதான் ஒரு மனிதனுக்கும் மலவாயில் ஒட்டக்கூடாது. எந்த மனிதனுக்கு மலவாயில் மலம் ஒட்டுகிறதோ அவனுக்கு கழிவுமண்டலப்பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். இன்றைக்கு நம்மை சார்ந்து இருக்கக்கூடிய நாயை எடுத்துக்கொண்டாலும் சரி, பூனையை எடுத்துக்கொண்டாலும் சரி, ஏன் காகம் எடுத்துக்கொண்டாலும் சரி, இவை அனைத்துமே நம்மைப்போலவே மலம் கழிக்க ஆரம்பித்துவிட்டன. ஏனென்றால் நம்மை சார்ந்து இருக்கக்கூடிய ஜீவராசிகளையும் மனிதன் கெடுத்துக்கொண்டிருக்கிறான் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்றே சொல்லலாம்.

arokkiyam4மலச்சிக்கல் ஒரு மனிதனுக்கு இருந்தது என்றால் கண்டிப்பாக உடலில் பல பந்தம் வரும். அதனால்தான் நாம் சொல்வோம் மலபந்தம் மனபந்தம் என்று. ஆக ஒரு மனிதனுக்கு மலச்சிக்கல் இருக்கிறது என்றால் தீர்க்கமான சிந்தனைக்கு நாம் வரமுடியாது. ஆக மலம் சிக்கலில்லாமல் இருக்கவேண்டும் என்றால் உணவுகளை தேர்ந்தெடுத்து ஒழுங்காக முறையாக எடுக்கும் பொழுது மலச்சிக்கல் இல்லாத சூழல் உண்டாகும். மலச்சிக்கல் கழிவுமண்டலப் பிரச்சனையில் இருந்தது என்றால் நம்முடைய படைப்புத்திறன் அதிகமாக குறையக்கூடிய வாய்ப்பு உண்டு. நல்ல எண்ணம் எந்த மனதில் இருந்து உதிக்கும் என்றால் கழிவுமண்டலப் பிரச்சனை இல்லாத ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோதான் நல்ல எண்ணங்கள் உதிக்கக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டு. நிறைய காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு, பித்தம் அதிகரித்த நிலை, குழப்பமான மனநிலை, பதற்றமான நிலை, மன உளைச்சல் ஆகக்கூடிய நிலை, கோபப்படக்கூடிய நிலை எல்லாமே கழிவுமண்டலப் பிரச்சனை யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்குத்தான் இந்த மாதிரி விசயங்கள் ஏற்படுவதற்கான ஒரு சூழல் இருக்கிறது.

arokkiyam5-2பண்டைய காலத்தில் எடுக்கப்பட்டமாதிரியான உணவுகளை ஆணோ, பெண்ணோ சிறுவர்களோ, வயதானவர்களோ இவர்களெல்லாம் தனக்கேற்றமாதிரி உணவுகளைத் தேர்ந்தெடுத்து எடுக்கிறபொழுது செரிமான மண்டலம் ஒழுங்காக முறையாக வேலை செய்யும். செரிமானமண்டலம் ஒழுங்காக முறையாக வேலை செய்து முழுமையாக செரித்து அந்த உணவில் உள்ள சத்துக்களையெல்லாம் இரத்தத்தில் தாதுக்களாக பிரிக்கப்பட்டு இரத்தத்தில் சேர்ந்து ஒழுங்கான முறையில் உடலெல்லாம் நிரவப்பட்டது என்றால் கண்டிப்பாக பிரச்சனை இருக்காது. செரிமானமண்டலம்தான் கழிவுமண்டல வேலையில் முரண்பாடு உண்டாவதற்கு காரணமாக அமைகிறது. எவர் ஒருவருக்கு செரிமானக்கோளாறு பிரச்சனை இருக்கிறதோ அவருக்கு நரம்பு பிரச்சனை, வாய்வுத்தன்மை, அமிலத்தன்மை, மலப்பிரச்சனைகள் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் மூலம் எதுவென்று பார்த்தால் உணவை சரியான முறையில் தேர்ந்தெடுக்காமல் உண்பதுதான். ஆக எப்பொழுதுமே உணவில் மிதமான உணவை எடுத்துப் பழகவேண்டும்.

-தொடரும்

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா

எண்: 155, 94  வது தெரு,

15 வது செக்டார், கே.கே.நகர்,

சென்னை – 78

அலை பேசி: 98840 76667

இணைய தளம்: www.drarunchinniah.in

மருத்துவர் அருண் சின்னையாவின் சித்த மருத்துவம் தொடர்பான காணொளிகள் மற்றும் மின் புத்தகங்களைப் பெற அவரது இணையதளத்தைப் பார்க்கவும்.


சித்தமருத்துவர் - அருண் சின்னையா நிறுவனர்- தமிழர் சித்த உணவியல் இயற்கை மருத்துவ சங்கம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆரோக்கியம் தரக்கூடிய அறுசுவை உணவுகள் பகுதி-7”

அதிகம் படித்தது