நவம்பர் 21, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

ஆற்றலின் மறுபெயர் – அன்னை மணியம்மையார்!!

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Mar 2, 2019

siragu maniyammai 2

6.6.1946 முதல் 10.3.1978 வரை விடுதலை ஏட்டின் பொறுப்பாசிரியராக, அச்சிடுபவராக, வெளியிடுபவராக விளங்கியவர் அன்னை மணியம்மையார். ஒரு ஏட்டின் ஆசிரியர்களாக பலர் இருக்கலாம்; ஆனால் பொறுப்பாசிரியர் ஒருவர் தான். 32 காலம் ஒரு ஏட்டின் பொறுப்பாசிரியராக விளங்கியவர் அன்னை மணியம்மையார் அவர்கள். வெறும் பெயரளவில் மட்டுமல்லாது, அரசு விடுதலை ஏட்டின் மீது நெருக்கடி தரும் போதெல்லாம் அதனை ஏற்று சிறை சென்றவர் மணியம்மையார் அவர்கள்.

அது மட்டுமல்ல பெரியாரின் உரைகள் அனைத்தையும் நூல் வடிவில் கொண்டு வந்த பெருமை மணியம்மையாரையே சாரும். அய்யா அவர்கள் ஒரு மாதத்தில் இருபது நாட்களுக்கு மேல் மேடைகளில் பேசினார். அந்த பேச்சுகள் ஒவ்வொன்றையும் எழுத்து வடிவில் மக்களிடம் தவழவிட்டவர் மணியம்மையார் அவர்கள்.

இதனை அய்யா அவர்களே, “அம்மா என்னிடம் தொண்டராக வந்த பிறகு தான் என்னுடைய கருத்துகள் பல ஆயிரம் புத்தகங்களாக வெளிவர முடிந்தது”, என்று எழுதியுள்ளார்கள்.

அய்யாவிற்கு பின், அவரின் சீட்டாவும், கைத்தடியும்தான் என்று ஏளனம் பேசியவர்கள், ஏகடிகம் பேசியவர்கள் வெட்கித் தலைத்தாழும் வண்ணம், அய்யா அவர்கள் போட்டுத் தந்த பாதையில் எந்த வித சலனத்திற்கும் இடம் அளிக்காமல் இயக்கத்தை கட்டிக்காத்தவர்.

அம்மாவின் தொண்டினைப் பற்றி, தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டு காலங்கள் வாழ வைத்த பெருமையை பற்றி அறிஞர் அண்ணா அவர்களே கூறியிருக்கின்றார்கள். புரட்சி கவிஞர் பாரதிதாசன் அவர்கள் கூட, உடன் இருந்து கலன் ஏந்தி காக்கும் அந்தப் பெண்ணை அன்னை என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது என்று வினவி குயில் இதழில் ஒரு கட்டுரை எழுதியிருப்பார். அம்மாவின் தொண்டினை அறிந்தவர்கள் பலர். ஆனால் பலரும் அறியாதது அம்மாவின் எழுத்தாற்றல்.

குடியரசு இதழில் மணியம்மையார் அவர்கள் ராமாயணமும்- கந்தபுராணமும் ஒன்றே என்று பல ஒப்புமைகளை எடுத்துக்காட்டி ஒரு கட்டுரை எழுதியிருப்பார். பல ஆண்டுகள் கழித்தே அது நூலாக வெளிவரும் வாய்ப்பு பெற்றது.

அம்மாவின் பிற எழுத்துகள், பாரதி விழா, பிற சமயமும் நம் (இந்து)சமயமும், 12 வருடத்திற்கு முன் ஒரு இந்துப் பெண் எழுதியது (மணி தொகுத்தது), {அம்மா சிறு வயதில் தன் சிந்தனையின் தொடக்கத்தில் எழுதியது}

தேவர்களின் காமலிகாரம் ,தாழ்த்தப்பட்டோர் முன்னேற வழி -பெரியார் பேசி மணியம்மையார் தொகுத்தது. சீதையைப் பற்றி ஒரு நடுநிலைமை ஆராய்ச்சி.

அம்மாவின் முதல் நூலான இராமாயணமும் – கந்தபுராணமும் ஒன்றே என்ற நூல் அம்மாவின் எழுத்தாற்றலுக்கு தக்கச் சான்று. ஏனெனில் இதனை எழுதுவதற்கு ஆழ்ந்த புலமையும், பகுத்தறிவு சிந்தனையும் வேண்டும். மணியம்மையார் அவர்கள் தன்னை முன்னிலைப்படுத்தும் நோக்கம் இல்லாத காரணத்தினால், அவரின் இந்த ஆற்றல்கள் பற்றி பலர் அறிந்திருக்கவில்லை.

அதே போன்று சீதையைப் பற்றி நடுநிலைமை ஆராய்ச்சி என்ற கட்டுரையில் வால்மீக்கி இராமாயணத்தில் இருந்தே அவர் பல எடுத்துக்காட்டுகளை கொண்டு எழுதியிருப்பார். அந்தக் கட்டுரையின் சாரம்
1. சீதையின் கற்பு வால்மீக்கியால் இழித்து உரைக்கப்பட்டுள்ளது.
2. சீதையை வெகு நாள் வரை யாரும் மணக்க முன்வரவில்லை
3. சீதையின் குணத்தில் பரதன் அதிருப்த்தியடைந்துள்ளான்
4. சீதையை பரதன் வெறுத்திருக்கிறான்
5. என்னை வெறுக்கும் பாரதனிடத்தில் இருக்க மாட்டேன் என்று சீதை இராமனுடன் காட்டுக்குச் செல்கின்றாள்
6. காட்டில் இராமன் மீது வேறு பெண்கள் மோகித்து வசப்படுத்திக் கொண்டுவிடுவார்கள் என்று சந்தேகம் கொள்கிறாள்
7. லட்சுமண் கூட சீதையை கெட்ட நடத்தை உள்ளவள் என்று கூறுவதாக
8. ஆரண்ய காண்டத்தில் வால்மீக்கி குறிப்பிட்டுள்ளார்
9. லட்சுமண் தன் மீது ஆசை கொண்டு தன்னை அடைய நினைத்ததாக சீதை கூறுகிறாள்
இப்படி ஏராளமான செய்திகளை மூல நூலான வால்மீக்கி இராமாயணத்தில் இருந்தே எடுத்துக் காட்டுகின்றார்.

அதே போன்று 1944 இல் பாரதியார் பற்றிய கட்டுரை ஒன்றில் பாரதியின் ஆரியப் பற்றை வெளிப்படையாக அவரின் கவிதைகளில் இருந்தே எடுத்துக்காட்டி எழுதுகின்றார்.

எப்படி எழுத்தாற்றல் அன்னையிடம் இருந்ததோ அதே போன்று பேச்சாற்றலும் இருந்தது. அம்மா பேசுகிறார் என்று மணியம்மையாரின் உரைகளின் தொகுப்பே உள்ளது. 1946 இல் கருஞ்சட்டைப் படை மாநாடு நடைபெற்றபோது கழகக் கொடி பற்றிப் பேசியுள்ளார்கள். 1953 இல் கள்ளக்குறிச்சியில் அந்த வட்டத் திராவிட விவசாயத் தொழிலாளர் மாநாட்டுக்குத் தலைமை வகித்து தாம் விவசாயி இல்லை என்றாலும் ஒரு சில பேசுகிறேன் என்று கூறிப் பேசியுள்ளார்கள்.

1948 இரண்டாம் கட்ட இந்தி எதிர்ப்பு போர். 14-12-1948 ஆம் நாள் திராவிடர் கழக நிருவாகக் குழு தந்தை பெரியார் தலைமையில் கூடி இந்தியை எதிர்த்து மீண்டும் போராட்டம் என முடிவு செய்தது. முதல் கட்டமாக அரசு விதித்திருந்த 144 தடையை மீற முடிவு செய்யப்பட்டது. தடையை மீறிய போது உடல் நலம் இல்லாத தந்தை பெரியார் கைது செய்யப்பட்டார்கள். அவரைத் தொடர்ந்து 20 டிசம்பர் 1948 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் அன்னை மணியம்மையார் 144 தடையை மீறிய போது கைதானார்கள். குடந்தையில் கைது செய்யப்பட்டபோது துணை ஆட்சியர் அன்னையார் அவர்களிடம் விசாரணையின் போது கேட்ட கேள்விகளும் அதற்கு அன்னை மணியம்மையாரின் பதிலும் கொள்கையில் அன்னை மணியம்மையார் எவ்வளவு உறுதியாக இருந்தார் என்பதை எடுத்து இயம்பிடும்.

வினா: கும்பகோணத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டு இருப்பது தெரிந்தும் அத்தடை உத்தரவை மீறி ஊர்வலம் நடத்திச் சென்றது சட்டப்படி குற்றமாகும்.
பதில்: எங்கள் மொழி காக்கும் உரிமைக்கு அமைதியாய்ப் போரிடுவது எனது கடமையாகும். மொழிப்பற்றை மறப்பது நாட்டிற்குத் துரோகம் செய்வது ஆகும்.

வினா: அதற்காக சட்டத்தை மீறுவதா?
பதில்: சட்டம் நாட்டின் மொழி வளர்ச்சியைக் கூட ஒழிப்பதாய் இருக்கிறது.

வினா: உங்கள் மதம் என்ன?
பதில்: எனக்கு எந்த மதமும் கிடையாது

வினா: உங்க சாதி?
பதில் : திராவிட சாதி

வினா: தடை உத்தரவை மீறிச் சட்டத்தை மீறியுள்ள தங்களை ஏன் தண்டிக்க கூடாது? சமாதானம் எதாவது சொல்கிறீர்களா?
பதில்: நான் சமாதானம் சொல்வதற்காக இங்கு வரவில்லை . சர்க்கார் சட்டத்தை நிறைவேற்றியிருக்கும் தாங்கள் என்ன தண்டனை விதித்தாலும் ஏற்கச் சித்தமாயிருக்கிறேன். தாராளமாய்ச் செய்யுங்கள்.

வினா : தங்களுக்கு இரண்டு மாதக் கடுங்காவல் தண்டனை அளிக்கிறேன்.
பதில்: மிக்க மகிழ்ச்சி.

தந்தை பெரியாரிடம் தயாரானவர் அல்லவா? சிறைக்கு அஞ்சாது, தண்டனை என்றதும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

அதே போன்று, சாதி ஒழிப்புப் போரில் சிறைப்பட்ட பல தோழர்களில் பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகிய இருவர் சிறைக்கொடுமைக்கு ஆளாகி இறந்தனர். வெள்ளைச்சாமியின் உடலை தர இசைந்த சிறை அதிகாரிகள், இராமசாமியின் உடலை தர மறுத்துவிட்டனர். சினம் கொண்ட அன்னையார், திருச்சியிலிருந்து சென்னை வந்தார்கள். அய்யா அவர்கள் சிறையில் இருக்கின்றார். அப்போது தமிழக முதல்வராக இருந்த காமராசரை சந்தித்து உள்துறை அமைச்சர் பக்தவத்சலத்தை சந்தித்து சிறை அதிகாரிகளை சந்தித்து ஆணை பெற்று உடலைப் பெறுவதற்குள் ராமசாமியின் உடலை புதைத்துவிட்டனர். இருந்தாலும் புதைத்த உடலை தோண்டி எடுக்கச் சொல்லி திருச்சி பெரியார் மாளிகையில் மக்கள் அஞ்சலிக்கு வைத்து, ஊர்வலம் நடத்தி தக்க மரியாதையோடு புதைத்தார்கள். அன்னை மணியம்மையாரின் தீரமிக்க உள்ளத்திற்குச் சான்று இந்த நிகழ்ச்சி. கழக வரலாற்றில் தந்தை பெரியார் அவர்கள் சிறைப்பட்ட காலத்தில் எல்லாம் இயக்கத்தை தொய்வில்லாமல் மாநாடுகள் நடத்தி கொண்டுச் சென்றவர் அன்னையார்.

அய்யாவின் மறைவிற்கு பின் அய்ந்து ஆண்டுகள் எவ்வாறு இயக்கத்தை கட்டிக்காத்தார் என்பதை யாவரும் அறிவர். வடபுலத்தை நடுங்கச் செய்யும் இராவண லீலா கண்டவர் அன்னை மணியம்மையார் என்பதை வரலாறு மறக்காது. திராவிட இயக்க வரலாற்றில் ஆற்றலின் மறு பெயராக அன்னை மணியம்மையார் திகழ்ந்தார் எனின் அது மிகையல்ல.

மார்ச் 10, 2019 அன்னையாரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா என்பது குறிப்பிடத்தக்கது.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆற்றலின் மறுபெயர் – அன்னை மணியம்மையார்!!”

அதிகம் படித்தது